Thursday, February 18, 2021

6. பூட்டும்...சாவியும்.. (நீதிக்கதை)

6 - பூட்டும்-சாவியும்


ராமனாதன் தன் குடும்பத்துடன் சில மாதங்கள் வெளியூர் சென்றுவிட்டு  அன்றுதான் வீடு திரும்பினார்.

வீட்டின் வாசலில் நின்றிருந்த ராமனாதன் தன்மனைவியிடம் 'பூட்டைத் திறக்கும் சாவியைக் கொடு என்றார்'. ராமனாதனின் மனைவியோ சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்து தன் கைப்பையை நோண்டிக் கொண்டிருந்தாள்.

சாவி கிடைக்காததால்...பக்கத்தில் இருக்கிற வீட்டிலிருந்து ஒரு சுத்தியை வாங்கி பூட்டை உடைக்க ஆரம்பித்தார்.சுத்தியால் வாங்கிய அடி பூட்டிற்கு மிகவும் வலித்தது.அந்நேரம் சாவியை மனைவி கண்டுபிடித்து விட...அதனால் பூட்டை எளிதாக திறந்து விட்டார் ராமனாதன்.

அப்போது  சுத்தியல்  சாவியை பார்த்து . ' பூட்டின்  தலையில் என்னை  அவ்வளவு பலமாக அடித்தவர் உன்னை உபயோகித்து உடனே திறந்துவிட்டாரே.....அது எப்படி 'என்றது..

அதற்கு சாவி சொன்னது...' நீ பூட்டை திறக்க அன்புடன் செயல்படாது வன்முறையை உபயோகித்து அதன் தலையில் அடித்தாய்,அதனால் அது திறக்கவில்லை,ஆனால் நானோ அன்பாக அதன் இதயத்தில் நுழைந்து திறக்க முயற்சித்தேன்,என்  அன்புக்கு கட்டுபட்டு அது திறந்தது.'

எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும் ..தன் இதயப்பூர்வமான அன்பினைச் செலுத்தினால் ...அவர்களை மாற்றிவிட முடியும் என்பதை உணரவேண்டும்.

Tuesday, February 9, 2021

5. பேராசை... (நீதிக்கதை)

5- பேராசை 


55

ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால்  எப்படி நிற்காதோ..அது போல திருப்தியற்ற மனம் உள்ளவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காமல் அவர்கள் மனம் சோக மயமாகவே இருக்கும்.

குமரனின் மாமா கந்தசாமி...குமரனுக்கு சொத்துகளை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அதனால் மிகவும்  சோகமாக இருந்த குமரனிடம் ' உன் மாமாவிற்கு வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.வயது மூப்பின் காரணமாகவே இறந்துவிட்டார்.மரணம் இயற்கையல்லவா..ஆனால் அதேநேரம் அவர் அவரது சொத்துக்களை உனக்கு எழுதி வைத்ததற்காக சந்தோஷப்படு" என்றான்ஒரு நண்பன்.

'என் சோகம் உனக்கு தெரியாது...இப்படித்தான் போன வாரம் என் சித்தப்பா பத்து லட்சம் சொத்தை என் பெயருக்குஎழுதி வைத்துவிட்டு அமரராகி விட்டார் 

உனக்கு தெரியாது.' பணக்காரர்களக இருந்து என் மாமாவும் சித்தப்பாவும் இறந்துவிட்டார்கள்.இனிமேல் என் பேரில் சொத்துஎழுதிவைக்க உறவு யாருமில்லை' என்றான்

.ஆசைக்கு அளவு வேண்டும். பேராசை கொண்டவன் எப்போதும் திருப்தி அடையமாட்டான்.

எப்போதும் திருப்தி அடையாதவன் எந்நாளும் சந்தோஷமாக இருக்கமுடியாது.

Friday, February 5, 2021

4.ஆணவம் வேண்டாம் ...(நீதிக்கதை)

   4- ஆணவம் வேண்டாம்


 ஓரு ஊரில் மெத்தப்  படித்தவன் ஒருவன் இருந்தான்.மற்றவர்கள் எல்லாம் அவனைவிட ஏட்டுக்கல்வியினை குறைவாகவே படித்தவர்கள்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் உண்டு.அதனால் அவன் அனைவரையும் அலட்சியம் செய்து வந்தான்.

அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு துறவி வந்தார்.ஊர் மக்கள் அவரை வரவேற்று..வணங்கி மகிழ்ந்தனர்.

அவரைக்காண அந்த அறிவாளியும் வந்தான்.அவனைப்பற்றி துறவி முன்னரே கேள்விபட்டிருந்தார். அவருக்கு  முன்னால் கால் மீதுகால் போட்டு அமர்ந்து ஆணவத்துடன் ...'உங்களை மக்கள் மதிக்கிறார்கள்' ஆனால் உண்மையில் உங்களை விட நான் அதிகம் அறிந்தவன்' என்றான்.

அதற்கு துறவி..' இந்த உலகில்  அனைத்தும் அறிந்தவன் எவனும் இல்லை.கற்றது கைம்மண் அளவு தான்.உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.நமது அறிவு என்பது ஓர் எறும்பு போல ...நமக்கு தெரியாத விஷயங்கள் யானையைப் போல....யானையின் காலுக்கு அடியில் கிடக்கும் எறும்பால்....என்றுமே யானையை முழுமையாக பார்த்து விட முடியாது.யானையின் ஒரு பகுதியைத் தான் பார்க்கமுடியும்.எறும்பின் பார்வையைப் போல உங்களது அறிவு கூர்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை யானையை போல . இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு என்று வருகிறதோ அன்று தான் உங்கள் ஆணவம் குறையும்' என்றார்.

சிறிது யோசித்த அறிவாளி,துறவி சொன்னது உண்மை என உணர்ந்து...அவரிடம் மன்னிப்பு க்கேட்டான். அன்று முதல் ' அனைத்தும் தனக்கு தெரியும்' என்ற ஆணவத்தைவிட்டான்.

உலகத்தில் எல்லாம் அறிந்தவன் என்று யாருமில்லை என்பதைஉணர்ந்தால் ..யாருக்கும் ஆணவம் ஏற்படாது.

Tuesday, February 2, 2021

3. பிரச்சனையை தீர்க்கும் வழி...(நீதிக்கதை)

3-பிரச்னையை தீர்க்கும் வழி





 ஓரு நாட்டின் அரசன் தனக்கு சமயோசித புத்தியுள்ள முதலமைச்சர் ஒருவரை தேர்ந்தெடுக்க எண்ணினான்.

அவரது அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் இருந்தனர்.அவர்களை அழைத்து அரசன் 'என்னிடம் ஒரு பெரிய பூட்டு இருக்கிறது.கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட  அப்பூட்டை திறக்கவேண்டும்'. நாளை உங்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பு தரப்படும்.யார் பூட்டை  குறைவான நேரத்தில் திறக்கிறார்களோ அவரே முதலமைச்சர் ஆவார்.' என்றார்.

முதலமைச்சர் ஆகும் ஆசையில்,அவர்கள் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும்,கணிதம் பற்றிய எல்லா குறிப்புகளையும் தேடினார்கள்.எதுவும் கிடைக்கவில்லை.ஒரு அமைச்சர் மட்டும் ' இந்த அறிவிப்பில் ஒரு மர்மம் இருப்பதாக எண்ணினார்;. அதைப்பற்றி மட்டும் யோசிக்கலானார்.

அடுத்த நாள் அரசவையில் அந்த பூட்டை சேவகர்கள் தூக்கி வந்து மையப்பகுதியில் வைத்தனர்.பூட்டின் பிரம்மாண்டம் அமைச்சர்களுக்கு படபடப்பை அதிகரித்தது.ஆனால் மூன்று அமைச்சர்களுக்கு பூட்டை எப்படி திறப்பது என்று புலப்படவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

நான்காவது அமைச்சர் பூட்டின் அருகே வந்து பூட்டை பார்த்தார்.பூட்டு பூட்டப்படவில்லை. சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை திறந்தார். அரசர் அவரை அமைச்சர் ஆக்கினார்.

பிரச்சனையை தீர்க்கவேண்டுமானால் முதலில் பிரச்சனையை புரிந்துகொள்ளவேண்டும்.மனம் பதட்டமில்லாமல் ஆற அமர சிந்திக்கவேண்டும்.அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வானது கிடைக்கும்.


Friday, January 29, 2021

2. அறிவுடைமை

 2- அறிவுடைமை

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பூனை ஒன்று வகுப்பில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தது.

ஆனாலும் ....ஆசிரியர் அதைப்பற்றி கவலைப்படாது  பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.ஆனால் மாணவர்களின் கவனம் பாடத்தில் செல்லாமல்...பூனையின் மீதே இருந்தது.

அதனால் அவர்...அந்த பூனையை பிடித்து பக்கத்தில் இருந்த ஒரு தூணில் கட்டச்சொன்னார்.பூனையும் கட்டப்பட்டது.

அடுத்த நாள் முதல்..அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு செய்யக்கூடாது என பாடம் நடத்தும்போது தவறாமல் பூனை தூணில் கட்டப்பட்டது.

சில மாதங்கள் கழித்து ஆசிரியர் வெளியூர் சென்றுவிட   வேறு ஒரு ஆசிரியர் வந்தார்..ஆனாலும் மாணவர்கள்...வகுப்பு ஆரம்பிக்கும் முன் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.

புது ஆசிரியர் வந்து....மாணவர்களிடம் ....பூனையை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டார்.

மாணவர்களும்...முந்தைய ஆசிரியர் தினமும் பூனையை தூணில் கட்டிவிட்டுத் தான் வகுப்பில் பாடத்தை நடத்துவார், என்றனர்.

புது ஆசிரியருக்கோ இது ஆச்சிரியத்தை தந்தது.பின்னர் அவர் மாணவர்கள் சொன்னதிலிருந்து ,பூனை வகுப்பில் பாடம் நடக்கும் போது  இங்கும் அங்கும் நடந்தது தான் பூனையை கட்டி வைக்க காரணம் என்பதைபுரிந்து கொண்டார்.

பின் மாணவர்களிடம் அவர்களின் அறியாமையை விளக்கி...எந்த ஒரு செயலுக்கும்...அது ஏன் செய்யப்படுகிறது என்பதை அறிந்து செயல்படவேண்டும் எனவும்...அதை அறியாமல்....இயந்திரத்தனமாக...சிந்திக்காமல் நடக்ககூடாது என்று கூறினார்.

இதையே திருவள்ளுவர்'

எப்பொருள் யார்யார்வாய்க்  கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

என்றார்.

இதற்கானப் பொருள்...'எந்த ஒரு பொருள் குறித்தும் எவர் எதைச்சொன்னாலும் (செய்தாலும்)ஆதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல் உண்மை என்ன என்பதை ஆரய்ந்து தெளிவது தான் அறுவுடைமையாகும்.



Wednesday, January 27, 2021

சிறுவர் உலகம் - பாகம் 4.

 1. ' இதுதான் உலகம் 

-------------------------------------------



ஒரு அழகிய கிராமத்தில் ஏரிக்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ' என்னைக்காப்பாற்று...என்னை காப்பாற்று' என ஆற்றினுள் வலைக்குள் சிக்கிக்கொண்ட முதலை ஒன்று இவனைப்பார்த்து கதறியது.

' உன்னை வலையிலிருந்து காப்பாற்றினால் நீ என்னை விழுங்கிவிடுவாயே ' என்றான் சிறுவன்.

முதலையோ' உன்னை சத்தியமாக சாப்பிடமாட்டேன்' என்றது.

முதலையின் சத்தியத்தை நம்பி சிறுவன் வலையை அறுக்க ஆரம்பித்தான்.வலையிலிருந்து முதலில் முதலையின் தலை வெளியே வர..உடன் சிறுவனின் காலைப்பற்றியது முதலை.

'பார் முதலையே..இது நியாயமா' என சிறுவன் கதறிக்கொண்டு கேட்க.'இதுதான் உலகம்' என்றது முதலை.

முதலையின் வாய்க்குள் போய் கொண்டிருந்த சிறுவன்.' மரத்தில் இருந்த பறவைகளிடம் கேட்டான்,' முதலையை காப்பாற்றியதற்கு எனக்கு இந்த தண்டனையா.' என கேட்டான்.பறவைகளும் உடனே' இதுதான் உலகம்' என்றன.

இப்படி யாரைக்கேட்டாலும் சிறுவனுக்கு உதவாது' இதுதான் உலகம்'..இதுதான் உலகம்' என்றனர்.

அப்போது அங்கு ஒரு முயல் வந்தது.அது முதலையைப் பார்த்து உனக்கு உதவியவனை நீ இப்படி செய்வது தர்மமா? என்று கேட்டது.முதலைக்கு கோபம் ஏறியது.சிறுவனின் காலை பிடித்தபடியே ....முயலிடம் ஏதோ சொல்ல ..முயல் ' நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை..சரியாக வாயைத்திறந்து சொல்'.

முதலை உடனே,'நான் வாயைதிறந்து சொன்னால் சிறுவன் ஓடி விடுவானே' என்று ஒரு மாதிரி வாயை கோணி சொல்லி முடித்தது.

உடன் முயல்,' உன் வாலை மறந்து விட்டாயா.நீ வாயை திறந்ததும் சிறுவன் தப்ப முயன்றால்...வாலால் அடித்து வீழ்த்தலாமே'.

அப்போதுதான் தன் வாலின் திறமையை அறிந்த முதலை சிறுவனை விட்டது.உடன் முயல் சிறுவனை நோக்கி ' தம்பி ஓடி விடு..ஓடி விடு' என்றது.

சிறுவன் ஓட ...முதலை அவனை தன் வாலால் அடிக்க முயன்றது.அப்போதுதான் தன் வால் பகுதி இன்னமும் வலைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை முதலை உணர்ந்தது. அப்போது முதலை முயலிடம் 'நீ செய்தது நியாயமா?' என்றது.

அதற்கு முயல் ' இது தான் உலகம்' என்று சொல்லியபடியே தாவி ஓடி மறைந்தது.

எளியோரை..வலியார் துன்புறுத்தக் கூடாது.






Monday, January 11, 2021

61- முட்டாளுக்கு புத்தி சொல்லி பயன் இல்லை

 




குளிர் காலம்.ஒருநாள் மிகவும் குளிராக இருந்தது.காட்டில் இருந்த குரங்கிகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.


கொஞ்சம் நெருப்புக் கிடைத்தால் சருகுகளைப் போட்டு தீமூட்டி குளிர் காயலாம் என குரங்குகள் எண்ணின.நெருப்புக்கு என்ன செய்யலாம் என அவை யோசித்த போது..சில மின் மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டன.உடனே குரங்குகள் மரத்திலிருந்து தவைத்தாவி அப்பூச்சிகளியப் பிடித்தன.


மற்ற குரங்குகள் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களைச் சேகரித்தன.அக்குப்பையில் பிடித்த  மின்மினிப் பூச்சிகளைப் போட்டன. பின்..நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.


குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடு பட்டன.மரத்தின் மீது அமர்ந்து அந்தக் குரங்குகளின் கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பறவை சிரித்தபடி கீழே வந்து அமர்ந்தது.


பின் பறவை குரங்குகளைப் பார்த்து "நண்பர்களே! மின்மினிப் பூச்சியை நெருப்பு என எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீணாக முயலுகிறீர்கள்.மின்மினிப் பூச்சியிலிருந்து நீங்கள் எவ்வளவு ஊதினாலும் நெருப்பு வரவே வராது.வீண் வேலையை விடுங்கள்" என புத்தி சொல்லியது.


"உனக்கு ஒன்றும் தெரியாது ..நீ உன் வேலையைப் பார்"   எனக் கூறிவிட்டு குரங்குகள் மீண்டும் தீ மூட்ட ஊதத் தொடங்கின.


பறவை ,குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணி..மீண்டும் புத்திமதி சொன்னது.இதனால் கோபமடைந்த குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைத் தரையில் மோதிக் கொன்றன.


முட்டள்களுக்கு புத்தி சொல்வது வீண்.. 

60.அனைத்தும் அறிந்தவர் யாருமில்லை...(நீதிக்கதை)

 


ஓரு ஊரில் படித்த அறிவாளி ஒருவன் இருந்தான்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தது.

ஒரு நாள் அவன் ஒரு ஆற்றைக்கடக்க ஒரு படகில் ஏறினான்.படகு ஓட்டி அவனை வணங்கினான்.படிப்பாளி ஆணவம் தலை தூக்க' நீ எவ்வளவு படித்திருக்கிறாய்?' என்றான்.

'ஐயா...எனக்கு படிக்க வசதியில்லை.என் குடும்பம் ஏழ்மையானது.சிறு வயது முதலே நான் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தில்தான் குடும்பமே நடந்துவருகிறது.' என்றான்.

உடனே அறிவாளி,..'அடடா..உன் வாழ்வையே வீணாக்கிவிட்டாயே...என்னைப்பார்..என்னைப்போன்று எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை' என்றான்.

படகு ஆற்றில் செல்ல செல்ல...காற்றின் வேகத்தால் படகு சரியத்தொடங்கியது.'ஐயா..அலைவீச்சு மோசமாகிவிட்டது.படகு கவிழப்போகிறது.உங்களால் நீந்த முடியுமா ?' என்றான்.

உடனே அறிவாளி பயத்துடன் ' எனக்கு நீந்தத்தெரியாதே' என்றான்.

ஐயா,படிக்காமல் நான் என் வாழ்வைவீணாக்கி விட்டேன்.ஆனால் நீங்கள் நீந்தத்தெரியாததால் ...வாழ்க்கையையே இழக்கப்போகிறீர்களே' என்றான்.

பின் படகு ஆற்றில் மூழ்க ...அறிவாளியையும்  சேர்த்து இழுத்து ...நீந்தியபடியே கரைக்கு வந்து சேர்ந்தான் படகோட்டி.

அப்போதுதான் அறிவாளிக்கு புத்தி வந்தது.'இந்த உலகில் கற்றது கைமண் அளவு.எல்லாம் தெரிந்தவர்களும் கிடையாது.எதுவும் தெரியாதவரும் கிடையாது.எனவே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை விட்டொழிக்கவேண்டும் என உணர்ந்தான்.

நாமும் எவரையும்'  இவருக்கு என்ன தெரியப்போகிறது' என ஒதுக்கிவிடக்கூடாது.

Saturday, January 9, 2021

59. ' நாம் நாமாக இருக்கவேண்டும்..(நீதிக்கதை)



 கழுதை ஒன்று வழி தெரியாமல் காட்டிற்குள் வந்துவிட்டது. வரும் வழியில் பல மிருகங்கள் எதிரே பயத்துடன் ஓடி வந்தன.அவற்றில் ஒன்றான மானைப் பார்த்து' ஏன் அனைவரும் இப்படி பயந்து ஓடி வருகிறீர்கள்' என்று  கேட்டது கழுதை

இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது.அதைக் கண்டு பயந்து ஓடுகிறோம் என்றது மான்.

சிங்கத்தை நினைத்தபடியே நடந்து சென்ற கழுதை ஆறு ஒன்றைப் பார்த்தது.

அதில் தண்ணீர் குடிக்கச்சென்றபோது ...வேட்டையாட வந்த சிலர் தாங்கள் வேட்டையாடிய ...புலி. சிங்கம்,மான்  ஆகிய விலங்குகளின் தோல்களை பாறைகளின் மேல் உலர்த்தி வைத்திருந்தனர்.

அதைப்பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது.உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்து போர்த்திக்கொண்டது.இப்போது அது பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்தது.மற்ற மிருகங்களும் கழுதையை சிங்கம் நினைத்து பயந்து ஓடின.இதைப் பார்த்த கழுதைக்கு கர்வம் அதிகமானது.

சிறிது தூரம் சென்ற கழுதை வழியில் ஒரு நரியை பார்த்தது.நரியும் பயந்துகொண்டே 'சிங்க ராஜா..நான் தெரியாமல்  இந்த பக்கம் வந்துவிட்டேன்.இனி நான் உங்கள் பக்கம் வரமாட்டேன்' என்றது.

இப்போது கழுதைக்கு சிங்கம் போல கர்ஜிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது.' ங்கே,,,ங்கே' என கத்தியது.உடனே நரிக்கு அது கழுதை எனத்தெரிய அது அதனை மதிக்கவில்லை.

"ஏய் கழுதையே நீ  சிங்கத்தோல் போட்டாலும் உன் உண்மையான குரலை மாற்ற முடியாது' எனக்கூறியது நரி.இதனிடையே எல்லா மிருகங்களும் அங்கு வந்து கழுதையைக் கேலி செய்தன.

எப்போதுமே நாம் பிறரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது.நாம் ...நாமாகவே இருக்கவேண்டும்.

Friday, January 8, 2021

58. ' வினை விதைத்தவன் வினை அறுப்பான்... (நீதிக்கதை)

 



ஒரு யானை தினமும் ஒரு தெரு வழியே ஆற்றுக்கு சென்று தண்ணீர் குடித்து வருவது வழக்கம்.

அந்த தெருவில் தையல்காரன் ஒருவன் கடை நடத்தி வந்தான்.யானை ஆற்றுக்கு போகும்போது ஒரு வாழைப்பழத்தை வழக்கமாக தினமும் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் அவன் மனைவியிடம் சண்டையிட்டதால் மிகவும் கோபமாக இருந்தான்.

அப்போது யானை வழக்கம் போல் வந்தது.கோபத்தில் இருந்த கடைக்காரன்' உனக்கு தினமும் இது வழக்கமாகி விட்டது' என்று கூறி வாழைப் பழத்தில் தையல் ஊசியை செருகி யானைக்கு கொடுத்துவிட்டான்.

அதை கண்டுபிடித்த யானை ஒன்றும் சொல்லாமல் அந்தப் பழத்தை தூக்கி எறிந்துவிட்டு அந்த தையல் காரனுக்கு புத்தி புகட்டவேண்டும் என்று எண்ணி ஆற்றுக்கு சென்றது.

தண்ணீரை குடித்துவிட்டு தன் தும்பிக்கை நிறைய சேற்று நீரை உறிஞ்சு கொண்டு அந்த தையல் கடைக்கு வந்து....சேற்று நீரை அவன் கடையில் வைத்திருந்த புதிய துணிகளில் பீச்சி அடித்தது.அனைத்து துணிகளும் வீணாயின.தையல்காரன் மக்களிடம் திட்டும் அடியும் வாங்கினான்.

நம்மால் முடிந்தால் பிறர்கு உதவவேண்டும்.நம்மால் முடியாவிடின் அவர்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது.

நாம் ஏதேனும் தீங்கு செய்தால் நமக்கு ஒரு தீங்கு வந்து சேரும்.

Thursday, January 7, 2021

57. தவளையும் எலியும்..(நீதிக்கதை)

 


ஓரு அழகான குளம். 'குளத்தின் கரையில் இருந்து ஒரு பெரிய மரப்பொந்தில் எலி ஒன்று வசித்து வந்தது.அந்த எலிக்கு குளத்தில் வாழ்ந்து வந்த தவளையின் நட்பு கிடைத்தது. தினமும் அவை இரண்டும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்.

ஒரு நாள் எலி தவளை நீரில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து  தனக்கும் தவளை நீச்சல் கற்றுத் தரமுடியுமா?' என்று கேட்டது.

'சரி'என ஒப்புக்கொண்ட தவளை தன்னுடைய காலை எலியின் காலுடன் சேர்த்து 

ஒரே கயிற்றினைக் கட்டிக்கொண்டு  தண்ணீரில் இறங்கியது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவர்களைப் பார்த்து தாக்க வந்தது. அதைப்பார்த்த தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள  சுண்டெலியுடன் தண்ணீரில் மூழ்கியது.தண்ணீரில் மூழ்கிய எலி மூச்சு திணறி இறந்து போனது.இறந்த உடல்மேலே மிதந்த போது அதனுடைய கால்கள் தவளையையும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

தண்ணீரில் எலி செத்துக் கிடப்பதைப்பார்த்த கழுகு ...அதைக்கொத்திக்கொண்டு பறந்தது.அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் கழுகின் பிடியில் சிக்கியது.

கழுகு தவளையயும் கொன்று தின்னது.

நாம் ஒருவரை நண்பனாக தேர்ந்தெடுக்கும் முன் ....அவர்கள் நமக்கு தகுதியானவர்களா என யோசித்து ஒட்டிக் கொள்ளவேண்டும்.

Tuesday, January 5, 2021

56.யானையும் பூனையும் ...(நீதிக்கதை)

 


யானையும் பூனையும்  நண்பர்களாக பழகி வந்தன.

யானையின் மீது பூனை ஏறி உட்கார்ந்து கொள்ள யானை அழகாக தும்பிக்கையை ஆட்டியபடி நடந்து வரும்.

யானையை பார்த்த விலங்குகள் பயந்து,யானயை வணங்கி வழி விடும்.ஆனால் பூனைக்கோ தன்னைக் கண்டுதான் விலங்குகள் பயப்படுகின்றன என்று எண்ணி ஆணவம் இருந்தது.

அதனால் ...யானைக்கு பயந்து ஓடும் விலங்குகளைப் பார்த்து கேலி செய்தது பூனை.

ஒரு நாள் யானையிடமே ' என்னைக் கண்டால் விலங்குகள் எல்லாம் எவ்வளவு பயப்படுகின்றன என்று தெரியுமா?' என்றது.

அதற்கு யானை...'அட முட்டாள் பூனையே உன்னைக் கண்டால் எலிகள் தான்  பயப்படும்.விலங்குகள் என்னைகண்டு தான் பயப்படுகின்றன.உனக்கு பயப்படும் அளவு அவைகள் கோழைகள் அல்ல' என்றது.

'யானையே..உனக்கு புத்தி மழுங்கிவிட்டது.எல்லா விலங்குகளும் எனக்குத்தான் பயப்படுகின்றன.நாளை 

நிரூபித்துக் காட்டுகிறேன்' என்றது பூனை.

யானைக்கு  கோபம் வந்து 'என் முன்னால் நிற்காதே...உன்னை மிதித்து நசுக்கி விடுவேன்' என்றது.

பூனை பயந்து ஓடியது.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வேட்டை நாய் ஒன்று...எல்லா விலங்குகளிடமும் சென்று  பூனை,யானையிடம் சண்டையிட்டதை கூறிவிட்டது.

'யானை இருக்கும் தைரியத்தில் ...இந்த பூனை எவ்வளவு முறை நம்மை கேவலப்படுத்தியுள்ளது.அதற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும்' என அவை திட்டமிட்டன.

'மறுநாள்  பூனை தனியாக கம்பீர நடை போட்டு வந்தது.எந்த விலங்கும் பயந்து ஓடவில்லை.' ஆனால் நேற்று வரை நம்மை மதிக்காதவனை நாம் தாக்குவோம்' என ஓடி வந்து பூனையை தாக்க ஆரம்பித்தன.

அப்போதுதான் பூனைக்கு அறிவு வந்தது.நம்மை விட வலிமை மிக்கவர்களின் வலிமையை மதித்து நடந்தால் கேடு எதுவும் விளையாது என்று உணர்ந்தது.

Monday, January 4, 2021

55. புத்தியில்லாத செயல்....(நீதிக்கதை)

 


ஓரு தோட்டக்காரன், தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான்.அவன் தண்ணீர் ஊற்றுவதை சில குரங்குகள் பாத்துக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தன.

இது தினசரி வழக்கமானது.

பல வருடங்கள் அப்படியே நடந்ததால் ...தோட்டக்காரனும்., குரங்குகளும் நண்பர்கள் ஆயினர்.தோட்டக்காரன் செய்யும் காரியங்களுக்கு அவனுக்கு உதவி புரிந்தன.

ஒரு முறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்கு போகவேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தை சொன்னான்.பின் தான் திரும்பி வரும்வரை செடி,கொடிகளுக்கு தண்ணீர் விடும் பொறுப்பை அவர்களுக்கு தந்தான்.

ஆனால் அவற்றுக்கு ஒரு பிரச்சனை...எந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

'அது ஒன்றும் பிரச்சனை இல்லை.வேர் பெரிதாக இருந்தால் அதிக  தண்ணீரும், சிறிய வேராக இருந்தால் குறைவான தண்ணீரும் ஊற்றுங்கள்' என் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினான்.

பின் ஊரிலிருந்து  அவன் திரும்பி வந்து தோட்டத்தைபார்த்தபோது.' அனைத்து செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன.'குரங்குகளிடம் ' என்ன ஆச்சு' என வினவினான்.

'வேர் பெரிசாக இருக்கா,சின்னதாக இருக்கா என்று பார்க்க செடிகளைப் பிடுங்கினோம்' என்றன அவை.

தோட்டக்காரனும் புத்தியில்லாதவகளிடம் பொறுப்பை கொடுப்பது புத்தியில்லாத செயல் என்று உணர்ந்தான்.

 

54 - வேடனும்..இரு பறவைகளும்

 


எப்பொழுதும் சேர்ந்தேத் திரியும் இரண்டு பறவைகள் மிகவும் நட்புடன் இருந்து வந்தன.

அந்தப் பறவைகளைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன் தரையில் வலையை விரித்து தானியங்களை வலையின் மீதுத் தூவி இருந்தான்.


தானியங்களைக் கொத்த வந்த இரு பறவைகளும் வலையில் சிக்கின.


தூரத்திலிருந்து பறவைகள் சிக்கிவிட்டதைக் கண்ட வேடன்..அவற்றைப் பிடிக்க வந்தான்.


எப்போதும்..எங்கும்..ஒன்றாய்ச் சுற்றித் திரிந்த பறவைகள்,வேடன் வருவதைப் பார்த்து விட்டன.அவை வலையுடன் சேர்ந்து பறக்கத் தொடங்கின.வேடன் திடுக்கிட்டு அந்தப் பறவைகளின் பின்னாலேயே துரத்திச் சென்றான்.


வழியில் ஒருவர்,"ஆகாயத்தில் பறவைகளைப் பிடிக்க தரையில் ஓடிக்கொண்டு இருக்கிறாயே..அவை எப்படி சிக்கும்?" என்றார்.


"அந்தப் பறவைகள் இரண்டும் என் வலையில் சிக்கி வலையுடன் ஒற்றுமையாகப் பறந்து கொண்டிருக்கின்றன.அவற்றின் ஒற்றுமை அழிந்து ,எப்போது விவாதம் தோன்றுமோ அப்போது என் கையில் அவை சிக்கி விடும்" என்றான் வேடன்.


ஒரு சில வினாடிகள் கைழ்ந்ததும்..பறவைகள் ஒற்றுமை இழந்தன.


"இந்தப் பக்கம் போகலாம்"என்றது ஒரு பறவை


"இல்லை..இல்லை..அந்தப் பக்கம் போகலாம் "என்றது மற்றது.


இரு பறவைகளும் இதில் ஒன்றுபடாது..ஒரு பறவை இந்தப் பக்கம் இழுக்க..மற்றொன்று அந்தப் பக்கம் இழுக்க..இரண்டும் வலையோடு கீழே விழுந்தன.வேடன்..இரு பறவைகளையும் வலையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டான்.


ஒற்றுமையை இழந்ததால்..பறவைகள் வேடனிடம் சிக்கின.

வேடனின் விடாமுயற்சியால் அவன் வெற்றி அடைந்தான்.


இக்கதையினால் அறியப்படும் இரு நீதிகள்..

நாமும் ஒற்றுமையாய் இருந்தால் யாராலும் நம்மை அழிக்க முடியாது.

அடுத்து...வேடனைப் போல விடாமுயற்சி செய்தால் விரும்பியதைப் பெறலாம்.  

Sunday, January 3, 2021

53. 'எறும்பும் வெட்டுக்கிளியும் ..(நீதிக்கதை)



 மாலை நேரம் வெட்டுகிளை ஒன்று இங்கும் அங்கும் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை இழுத்துக் கொண்டு சென்றது.அதைப்பார்த்த வெட்டுக்கிளி....எப்போதும் அரிசி எங்கு கிடைக்கும்...அதுகிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு உன் இல்லத்தில் வைத்துக் கொள்கிறாயே..கொஞ்சம் என்னுடனும் விளையாடலாமே' என்று எறும்பை கேலி செய்தது.

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் வந்துவிடும்.அப்போது வெளியே செல்ல முடியாது.ஆகவே இப்போதே நான் அதற்காக சேமித்துக் கொள்கிறேன்' என்றது.

சில நாட்கள் கழித்து ..மழைக்காலமும் வந்தது. தான் சேகரித்த உணவை  உண்டு தன் வீட்டிலேயே எறும்பு இருந்தது.ஆனால் வெட்டுக்கிளியோ உணவு எதுவும் கிடைக்காமல் உணவைத் தேடி மழையில் சுற்றி திரிந்தது.

வெட்டுக்கிளிக்கு பசி அதிகமாக எறும்பைத்தேடி போய் ' எனக்கு மிகவும் பசிக்கிறது..ஏதாவது உணவு கிடைக்குமா/..என்று கேட்டது.

எறும்பும், தான் சேர்த்து வைத்திருந்த உணவில் சிறிது வெட்டுக்கிளிக்கு கொடுத்துவிட்டு...அன்று என்னை கேலி செய்தாயே...அப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று உனக்கும் உதவுகிறது.இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல் வெயில் காலத்திலேயே...மழைகாலத்திற்கு வேண்டியதை சேகரித்துக்கொள்.' என்றது.

காலம், நேரம் பார்க்காது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என வெட்டுக்கிளியும் உணர்ந்தது.

கடின உழைப்பு உடனடி பலனை தராதது போல இருக்கும்.பின்னாளில் கண்டிப்பாக பலன் தரும்.

52 - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை


 

பிரசாத் ஒரு சோம்பேறி.அவனை திருத்த நினைத்த அவனது தந்தை, அவனது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று, "இவன் சோம்பேறியாய் இருக்கிறான். நான் என்ன சொன்னாலும் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டேன் என சொல்கிறான்.நீங்கதான் அவனைத் திருத்தணும்" என்றார்.


ஆசிரியரும் அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்,அங்கு இருந்த ஒரு சிறு செடியை பிடுங்கச் சொன்னார்.மிகவும் எளிதாக பிரசாத் அச்ச்செடியைப் பிடுங்கி எறிந்தான்.


பின்னர், கொஞ்சம் வளர்ந்த பெரியச் செடி ஒன்றினைப் பிடுங்கச் சொன்னார்,சற்று முயற்சி செய்து அதைப் பிடுங்கினான்.


அதைவிடச் சற்று பெரியச் செடியிடம் அழைத்துப் போய்..:அதை பிடுங்க முடியுமா? எனப் பார்" என்றார்.அவனும் மிகவும் கஷ்டப்பட்டு அதைப் பிடுங்கினான்.


பிறகு, நன்கு வளர்ந்த ஒரு மரத்தைக் காட்டி ,அதையும் பிடுங்கி எறி என்றார்.


"மரததை எப்படி பிடுங்க முடியும்?" என்றான் பிரசாத்.


அப்போது ஆசிரியர் சொன்னார், "அது போலத்தான்..நம் பழக்க..வழக்கமும்.நீ சின்னப் பையனாய் இருக்கும் இப்போது உன் சோம்பேறித்தனத்தையும், கெட்ட பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.இப்போது முயன்றால் சின்ன செடியை பிடுங்கியது போல எளிதாக உன்னால் முடியும்.இல்லையேல்..நீ பெரியவனானதும் அப்பழக்கங்களை..பெரிய மரத்தை எப்படி பிடுங்க முடியாதோ.அது போல உன்னால் அவற்றை மாற்றமுடியாது.உன் அப்பா சொல்வதைக் கேள்.நீ சுறுசுறுப்பாய் மாறி நன்றாக இருப்பாய்"என்றார்.


பிரசாத்தும், ஆசிரியர் அறிவுரைப்படி..தந்தையின் சொல்படி சுறுசுறுப்பானவனாக மாறினான்.


தந்தை சொல் மந்திரமில்லை என்பதை நாமும் உணர்ந்து நம் பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும்.

Saturday, January 2, 2021

51. கெடுவான் கேடு நினைப்பான்..(நீதிக்கதை)

 



ஓரு அழகிய காட்டில் தேள் ஒன்று இருந்தது.அந்த காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்த தேளுக்கு இக்கரையிலிருந்து அக்கரைக்கு போய் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.

அந்த நீரோடையில் இருந்த தவளையை நண்பனாக்கிக்கொண்டு தன் ஆசையைக் கூறியது.பின் ஒருநாள் ' தவளையாரே'நான் அக்கரை செல்ல வேண்டும்.என்னை கொண்டுபோய் விடுகிறீர்ககளா' என்றது.

தவளையும்,' என் முதுகில் ஏறிக்கொள்,நான் அக்கரையில் விட்டு விடுகிறேன்' என்றது.

தேளும்,தவளையின் முதுகில் ஏறிக்கொள்ள, தவளை நீரில் நீந்திச் செல்ல ஆரம்பித்தது.அப்போது தேள்,' நான் நிறைய பேரை கொட்டியிருக்கிறேன்,அவர்கள் வலியால் துடித்ததைக்கண்டு ரசித்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு தவளையைக் கூட கொட்டியதில்லை.இப்போது கொட்டிப்பார்த்தால் என்ன? என்று எண்ணி  தவளயின் முதுகில் கொட்டியது.ஆனால் தவளை பேசாமல் சென்றது.

உடனே தேள்,தவளையாரே...உனது உடலில் வலியே வராதா?' என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தை புரிந்துகொண்ட தவளை ; என் முதுகு வழவழப்பானது.அதனால் எனக்கு வலி தெரியாது.என் கழுத்து மென்மையானது,அங்கு வலி தெரியும்' என்றது.

முதுகில் இருந்து தவளையின் கழுத்துக்கு வந்தது தேள்.தேள் கொட்ட வந்ததை அறிந்த தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது.தேள் தண்ணீருக்குள் விழுந்து இறந்தது.

தனக்கு உதவிய தவளைக்கு கேடு நினைத்த தேள் அழிந்தது.

'கெடுவான் கேடு நினப்பான்' அதாவது ஒருவருக்கு தீங்கு செய்ய எண்ணுபவர்கள் தாங்களே அழிந்து போவார்கள்.

50 - ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

 



மாடசாமி என்பவன் தன் மனைவியுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.


அந்த ஏக்கத்தைப் போக்க ஒரு கீரிப்பிள்ளையை வளர்த்து வந்தனர்.


சிறிது காலம் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.குழந்தையைச் செல்லமாக வளர்த்து வந்தனர்.


ஒருநாள் மாடசாமி வேலைக்குக் கிளம்பியதும், அவன் மனைவி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவர குடத்துடன் புறப்பட்டாள்.கீரிப்பிள்ளை தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்துடன்.


குழந்தையின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தது கீரி.அப்போது ஒரு கருநாகம் குழந்தையின் தொட்டிலில் ஏறியது.அதைக் கண்ட கீரி பாய்ந்து..அந்த கருநாகத்தைக் கடித்து துண்டுத் துண்டாக்கியது.


பின் வாசலில்..தன் செயலை மாடசாமியின் மனைவி பாராட்டுவாள் என வந்து காத்திருந்தது.தண்ணீர்க் குடத்துடன் வந்த மாடசாமியின் மனைவி.. வாயில் ரத்தத்துடன் காத்துக் கொண்டிருந்த கீரியைப் பார்த்தாள்.தன் குழந்தையைத்தான் அந்தக் கீரி கடித்து விட்டது என்ற எண்ணத்தில் அழுகையும், கோபமும் மீறிட தண்ணீர்க் குடத்தைக் கீரியின் தலையில் போட்டாள்.கீரியும் வலி தாங்காமல் கத்தியவாறே உயிர் நீத்தது.


உள்ளே வந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி.துண்டாகிக் கிடந்த பாம்பைப் பார்த்ததும்..தன் குழந்தையைக் கடிக்க வந்த பாம்பைக் கொன்ற கீரியைத் தவறாக எண்ணிக் கொன்று விட்டோமே என வருந்தி அழுதாள்.


எந்தப் பிரச்னையையும் தீர ஆராயாது அவசப் புத்தியில் முடிவெடுத்தால் தவறாகிவிடும் என உணர்ந்தாள்.


அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. 



Friday, January 1, 2021

49 - கொக்கும் ..ஆமையும்..(நீதிக்கதை)

 


ஏரி ஒன்றில் ஆமை ஒன்று தன் இரு கொக்கு நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது.


பல வருடங்களாக மழை இல்லாததால், ஏரி வறண்டு வந்தது.அப்போது அந்த கொக்குகள் ஆமையைப் பார்த்து,"இன்னமும் சில நாட்களில் நீர் முற்றிலும் வற்றி விடும்.ஆகவே நாங்கள் இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஏரிக்கு சென்று விடலாம் என்று இருக்கிறோம்.அங்கு தண்ணீர் இருப்பதால், மீன்களும் இருக்கும்..எங்களுக்கு உணவும் கிடைக்கும்" என்றன. 


"என்னை விட்டுச் செல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது?என் மீது அன்பு இருக்குமானால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்" என்றது ஆமை.

உன்னால் பறக்கமுடியாதே' உன்னை எப்படி அழைத்து போகமுடியும்?' எனச்சொன்ன கொக்குகள் சிறிது நேர யோசனைக்கு பின்'ஒரு நீண்ட குச்சியை எடுத்துக்கொண்டு நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கிக்கொள்கிறோம்,நீ குச்சியின் நடுவில் குச்சியை பற்களால் கெட்டியாய் பிடித்துக்கொள்.ஆனால் நாங்கள் உயர பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்றன.'

நீங்கள் பறக்கும்போது ' நான் வாய் பேசாமல் இருக்கிறேன்' என்றது ஆமை.

அடுத்து இரு கொக்குகளும் இரு பக்கமும் குச்சியை பிடித்து பறக்க ஆமை குச்சியின் நடுவில் பற்றிக்கொண்டு அதுவும் பறந்தது.

வழியில் கொக்குகளுடன் ஆமையும் பறந்து   செல்வதை ப் பார்த்த மக்கள் .. சந்தோஷத்தால் கூச்சல் போட்டனர்.அவர்களின் கூச்சல் ஆமையின் காதுகளில் விழ ' மக்கள் ஏன்  இப்படி கூச்சலிடுகிறார்கள்' என கேட்க வாயைத்திறந்த ஆமை பிடி விட்டு கீழே விழுந்து உடல்  சிதறி இறந்தது.

கீழே விழுவோம்  என தெரிந்தும் அறிவில்லாத ஆமை வாயைத் திறந்து தன் உயிரை இழந்தது.

அறிவில்லாத செயல்களைச் செய்தால் இழப்பினை சந்திக்க நேரிடும்.