Monday, June 27, 2011

78.வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)




ஒரு வெயில் நாளில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து ஆடிக்கொண்டிருந்தது.


அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் புற்றுக்குச் சென்றுகொண்டிருந்தது.அதைப் பார்த்த வெட்டுக்கிளி ...'இப்போது என்ன அவசரம்...சிறிது நேரம் என்னைப்போல நீ வெயிலில் விளையாடலாமே' என்றது.

அதற்கு எறும்பு...மழைக்காலத்தில் வெளியே எவரும் செல்லமுடியாது...அதனால் அந்நேரம் தேவையான உணவை இப்போதே நான் என் புற்றில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்' என்றது.

'மழைக்காலம் வர இன்னும் நாள் இருக்கிறது'என்று கூறிக்கொண்டே...வெட்டுக்கிளி நடனமாட ஆரம்பித்தது.

மழைக்காலமும் வந்தது.

'தான் சேகரித்த உணவை உண்டு ..தன் புற்றுக்குள்ளேயே இருந்தது எறும்பு....

அப்போது உணவு ஏதும் கிடைக்காததால் எறும்பிடம் வெட்டுக்கிளி வந்து ..சிறிது உணவளிக்க வேண்டியது.

தன்னிடமிருந்த அரிசியில் சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு ....'அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. அப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று எனக்கும் ஏன் இன்று உனக்கும் உதவியது...இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல்..வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்' என்றது.

சோம்பலில்லாமல் கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

Tuesday, June 21, 2011

77. நாமே முடிவு செய்யவேண்டும். (நீதிக்கதை)



ராமன் தனது மனைவியுடனும்,அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனது நண்பன் முருகன்...நீயாவது...மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான்.

உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான்.

அப்போது ராமனின் மற்றொரு நண்பன் கணேசன் வந்தான்....ராமா..உன் மனைவியை விட நீ வயதானவன்..ஆகவே நீ குதிரையின் மீதேறிச் செல்லலாமே என்றான்.உடன் மனைவியை குதிரையிலிருந்து இறக்கிவிட்டு விட்டு ராமன் குதிரை மீதேறி அமர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும்..கந்தன் வந்தான்...அவன் ராமனைப் பார்த்து..'குதிரை இரண்டு பேரையுமே சுமக்குமே..இருவரும் குதிரையில் ஏறிச் செல்லலாமே' என்று சொல்ல ராமன் தன் மனைவியையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

அப்போது அவன் மற்றொரு நண்பன் சரவணன் வந்தான்.'ராமா..உனக்கு மூளை இருக்கா..குதிரை வாயில்லா மிருகம்.அதில் இருவர் ஏறி அதன் சுமையை ஏற்றலாமோ ..என்றான்.'

எப்படிச் செய்தாலும் யாரேனும் ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்..ஆகவே நாம் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் மதிப்பளித்தால் முட்டாள் பட்டம் தான் கிடைக்கும்.
ஆகவே மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு நம் மூளையை உபயோகித்து நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யவேண்டும் என ராமன் உணர்ந்தான்

Wednesday, June 8, 2011

76.' முட்டாள்களுக்கு விளக்க முடியாது " (நீதிக்கதை)



கந்தனும் சரவணனும் நண்பர்கள்....

ஆனால் கந்தன் புத்திசாலி...சரவணனனோ மூடனாக இருந்தான்.என்ன சொன்னாலும் அவனுக்கு புரிவதில்லை.

குளிர்காலத்தில் ஒருநாள் நல்ல குளிர்..குளிரால் நடுங்கியபடியே கந்தனும் சரவணனும் இருந்தனர்.அப்போது கந்தன் தன் கைகளை தன் வாயால் ஊதிக்கொண்டிருந்தான்.

சரவணன் ' ஏன் அப்படி செய்கிறாய்' என்றான்.' என் கை விரல்கள் குளிரால் மரத்துப் போயுள்ளன.சூடு ஏற்றுவதற்காக ஊதுகிறேன்' என்றான்' கந்தன்.

பின் கந்தனின் தாய் சூடான காஃபியைக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார்.

காஃபி சூடாக இருந்ததால் ...கந்தன் அதை வாயால் ஊதியபடி உறிஞ்ச ஆரம்பித்தான்.

'ஏன் இப்போது ஊதுகிறாய் ...காஃபி சூடாக இல்லையா' என்றான் சரவணன்..

அதற்கு கந்தன் ' காஃபி சூடாக உள்ளது...ஆகவே சூட்டை குறைக்க வாயால் ஊதுகிறேன் ' என்றான்.

உடனே சரவணன் கோபமாக ' முன்னே குளிர்ச்சிக்காக ஊதுகிறேன் என்றாய்...இப்போது உஷ்ணத்திற்காக ஊதுகிறேன் என்கிறாய். ஒரே வாயிலிருந்து உஷ்ணம்,குளிர் காற்று எப்படி படும்...? என்னை மூடன் என எண்ணி விட்டாயா? நீ பொய்யன்' என்றான்.

கந்தன் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவனுக்குப் புரியாது என உணர்ந்தான்.

முட்டாள்களிடம் பேசும்போது கவனமாய் இருக்க வேண்டும்.

ஏனென்றால் நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு புரியாது.