Monday, March 28, 2011

68. முயற்சி இனிமை பயக்கும்...(நீதிக்கதை)


கோபி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞன்.

அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை...அதனால் மனம் சோர்ந்தான்.

வருத்தத்துடன் காணப்பட்ட அவனை அவன் தந்தை அழைத்துக் காரணம் கேட்க அவனும் சொன்னான்.

உடனே அவன் தந்தை பக்கத்திலிருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் கொடுத்து ...அதை கத்தியால் வெட்டச்சொன்னார்.

அவனும் அப்படியே செய்தான்.

இரண்டாகப் பிளந்த ஆப்பிளைக்காட்டி ..'இதனுள் எவ்வளவு விதைகள் இருக்கிறது பார்..' என்றார்.

'நான்கைந்து விதைகள் இருக்கும்' என்றான். கோபி.

'இந்த விதைகளில் ஒன்றோ....அல்லது பலவோ வேறு ஆப்பிள் மரங்கள் உருவாகக் காரணமாய் இருக்கப் போகின்றன....அல்லது எல்லா

விதைகளும் நம்மால் தூக்கி எறியப்படப் போகின்றன.ஆனாலும்.. ஒவ்வொரு ஆப்பிளுக்குள்ளும் விதைகள் உருவாகிக் கொண்டுதானே இருக்கின்றன.

பல வீணாகிப் போனாலும் ஏதேனும் ஒன்று ஆப்பிள் மரமாக ஆகத்தானே போகிறது.அதுபோலத்தான் நம் முயற்சிகளும்...

வெற்றி கிடைக்காததால் ....அது பெரிய தோல்வியாக எண்ணாமல் ..அடுத்த முயற்சியில் ஈடுபடு...அப்போது என்றேனும் வெற்றி உனக்கு கிட்டும்'

என்றார் கோபியின் தந்தை.

கோபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

இதையே வள்ளுவர்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் ...  என்றார்.

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை.முயற்சியே சிறந்த செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் என்பது பொருள்.

Monday, March 14, 2011

67. கைகளால் பலன்...(நீதிக்கதை)




ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்....

" இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.

ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.

மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.

மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.

நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.

புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.

தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ...

"நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.

ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம் உள்ளதை

பிறருக்கு வழங்கி வாழ்தலுமே நன்மை பயக்கும்" என்றார்.

Tuesday, March 8, 2011

66.கடவுள் பக்தி (நீதிக்கதை)



ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.

நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.

ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.

என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.

அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.

நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.

நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.

இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.

அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.

பசியை எப்படி காட்டமுடியும்.

அதன் நிறம்.

பசிக்கு ஏது நிறம்.

அதன் குணம்.

குணம் இல்லை.

உன்னால் உன் பசியைக் காட்டமுடியவில்லை.ஏன்.?

அது வந்து....அது வந்து..

எப்படி பசி என்று ஒன்று இருந்தும் உன்னால் அந்தப் பசியை காட்டமுடியவில்லையோ அது போன்று தான் கடவுள் என்று ஒருவர் இருந்தும் அவர் புற உருவத்தைக் காட்டமுடிவதில்லை.

கடவுள் மீது பக்தி உள்ளவர்கள் மட்டுமே அந்த இறைவன் இருப்பது உணரமுடியும் என்றான் முருகன்.

நாதனுக்கும் கடவுள் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.