Monday, August 22, 2011

83-தெரியாததில் ஈடுபடக்கூடாது (நீதிக்கதை)




ஒரு அழகிய கிராமம்.அந்தக் கிராமத்திற்கு வெளியே பெரிய ஏரி ஒன்று இருந்தது.ஏரியின் கரைகளில் பழ மரங்கள்.அவற்றுள் குரங்குகள்..கிளைக்குக் கிளை தாவி பழங்களைப் பறித்துத் தின்று தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தன.
அக்குரங்குகளில் குட்டிக் குரங்கு ஒன்றும் இருந்தது.போவோர் வருவோர் ..என அனைத்து பேருடன் அதனுடைய சேட்டை அதிகமாக இருந்தது.

ஒருநாள் மீனவன் ஒருவன் ..அந்த ஏரிக்கு வந்து மீன் பிடிக்க வலையை வீசினான்.நிறைய மீன்கள் வலையில் சிக்கின.அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, வலை ஈரமாய் இருந்ததால்...கரையில் அதைக் காயப்போட்டுவிட்டுச் சென்றான்
.
அந்தக் குட்டிக் குரங்கு அவன் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் சென்றதும்..அவன் உலர்த்திச் சென்ற அவ்வலையின் மையத்தில் அமர்ந்துக் கொண்டு..வலையை எடுத்து ஏரியில் வீசப் பார்த்தது.
ஆனால் வலை இறுகி..அதன் மையத்தில் அமர்ந்துக் கொண்டிருந்த குரங்குக் குட்டி வலையில் வசமாக சிக்கிக் கொண்டது.பயத்தால் அலற ஆரம்பித்தது.மற்ற குரங்குகள் வந்து அதைக் காப்பாற்றப் பார்த்தன.ஆனால் அது நைலான் வலையானதால் அவற்றால் அதைக் கடிப்பது கூட சிரமமாய் இருந்தது.
அப்போது வலையை எடுத்துப் போக மீனவன் வந்தான்.குரங்கு மாட்டிக் கொண்டு அவதிப்படுவதைக் கண்டு வருந்தி அதை விடுவித்தான்.பின் குட்டியிடமும், மற்ற குரங்குகளிடமும்  'தெரியாத காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் அவதிப்பட நேரிடும்.எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும்..அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஈடுபட வேண்டும்.அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்' என்று அறிவுரைச் சொன்னான்.

Wednesday, August 17, 2011

82. சிங்கமும்,மானும்,முயலும்....(நீதிக்கதை)



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காததால் மிகவும் பசியுடன் இருந்தது.

அப்போது...அருகில் இருந்த புதர் ஒன்றில் முயல் ஒன்று தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தது.அதை பிடித்து உண்ணலாம் என்று நினைத்தபோது ....
சிறிது தூரத்தில் கொழுத்த மான் குட்டி மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
உடனே முயலை பிடிப்பதை விட்டுவிட்டு ...மான் குட்டியை பிடிக்க விரைந்தது.முயலும் முழித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தது.
சிங்கம் ஓடி வந்த சப்தத்தைக்க்கேட்டு மான்குட்டி விரைந்து ஓடியது.
நெடுந்தூரம் ஓடியும் மானை பிடிக்க முடியாத சிங்கம் முயலையாவது சாப்பிடலாம் என எண்ணித் திரும்பியது.
முயலோ...சிங்கம் திரும்பி வந்தால் தான் இறப்பது உறுதி என அறிந்து அங்கிருந்து ஓடிவிட்டிருந்தது.

முயலும் போய்...மானும் போய் சிங்கம் பசியால் தவித்தது.
"கைப்பிடியில் இருந்த முயலை விட்டுவிட்டு ...பேராசையால் தூரத்தில் இருக்கும் மானை நாடிச் சென்றதால்....உள்ளதும் பறிபோனது' என வருந்தியது சிங்கம்.

நாமும் நம் கையில் உள்ளதை வைத்து திருப்திக் கொள்ளவேண்டும். கிடைக்காததற்கு ஆசைப்படக்கூடாது.

Sunday, August 14, 2011

81. " ஆண்டவன் யார்.." (நீதிக்கதை)



ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு ஒரு நாள் கடவுள் என்பது யார்? அவரது ஆற்றல் எஎன்ன? என்ற சந்தேகம் எழுந்தது
அந்த சந்தேகத்தை தீர்க்க அவனது அமைச்சர்கள் யாராலும் முடியவில்லை.
அதனால் கோபம் அடைந்த அரசன்,தன் தலைமை அமைச்சரிடம் " என் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு... நாளை வரை அவகாசம் தருகிறேன்'
என்றான்.
தலைமை அமைச்சரும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார்.அவர் வருத்தத்தை அறிந்த அவரது பத்து வயது மகள் 'நான் நாளை வந்து அரசரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் ' என்றாள்.
அடுத்த நாள் அரச சபையில் அரசனிடம் அவள் ' அரசே ஒரு குடுவையில் பால் வேண்டும்' என்றாள்.
பால் கொண்டு வந்து தரப்பட்டது.
பால் கொண்டு வந்தவனைப் பார்த்து அவள்...'இந்தப் பாலின் நிறம் என்ன ' என்றாள்.
'வெள்ளை நிறம்'  என்றான் அவன்.
'இப்பாலைக் கறந்த மாடு என்ன நிறம்' என்றாள்.
'கருப்பு நிறம்'
'அந்த கருப்பு நிற மாடு எதைத் தின்று இந்த பாலைத் தந்தது'
'பசும் புல்லை'
இப்போது அவள் அரசரைப் பார்த்து ...'யார் பச்சைப் புல்லை கருப்பு மாட்டிற்குத் தந்து வெள்ளைப் பாலை உருவாக்குகிறாரோ அவர் தான் கடவுள்....
ஆண்டவன் விந்தையன செயல்கள் அனைத்தும் செய்யும் ஆற்றல் பெற்றவர்' என்றாள்..
அரசனும் மனம் மகிழ்ந்தான்.