Monday, April 30, 2018

28- யார் பலசாலி



நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது.
அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது.
இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.
அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது.
அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு.
அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.
பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.
நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.
மனிதன் அதைக் கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான்.
அந்தக் காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.
அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே.
"ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை
கடவுள் படைத்துள்ளார்"

27 - தவறை உணர்ந்தால் மன்னிப்பு உண்டு


ஒரு நரியும், ஒட்டகமும் நண்பர்களாக இருந்தன.ஒருநாள் ஒட்டகத்திடம் நரி சொல்லியது, "நண்பா..இந்த நதிக்கு அக்கரையில், ஒரு பெரிய கரும்புத் தோட்டம் உள்ளது.நாம் இருவரும் நதியைக் கடந்து அங்கே சென்றால் இனிப்பான கரும்பை சாப்பிட்டு வரலாம்"

அதைக் கேட்ட ஒட்டகம், "நரியே! நீ இனிப்பைச் சாப்பிட்டால் ஊளையிடுவாய்.அப்போது கரும்புத் தோட்டக்காரன் நம்மைப் பிடித்து அடித்து விடுவான்" என்றது.

நரி ,தான் ஊளை இடமாட்டேன் என வாக்குறுதி இட்டதால், இரண்டும் கிளம்பின.

ஒட்டகத்தின் மீது ஏறிக் கொண்டு நரி நதியைக் கடந்தது.

இரண்டும் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று இனிமையான கரும்பை சுவைத்தன.

மகிழ்ச்சியில் நரி ஊளையிடத் தொடங்கியது.அதைக் கேட்டு அங்கு வந்தான் கரும்புத் தோட்ட முதலாளி.நரி உடனே ஒடிப் போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.

ஒட்டகமோ அடியை வாங்கிக் கொண்டு, வலியுடன் நதிக்கரைக்கு வந்தது.அப்போது நரி புதரிலிருந்து ஓடி வந்து, "ஒட்டக நண்பா..எனக்கு மகிழ்ச்சி அதிகமானால் ஊளையிடுவேன்.அது என் வழக்கம்.வழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை." என்றது.

ஒட்டகத்தின் மீது ஏறிக்கொண்டு நதியைக் கடந்தது நரி.பாதி வழியில்,நதியின் ஆழமான பகுதி வந்ததும், ஒட்டகம் ஆற்றில் புரண்டது.

நரி தண்ணீரில் விழுந்து தத்தளித்தது.ஒட்டகம் நரியினிடம், "அதிகமாக யாரேனும் அடித்தால் உடல்வலி தீரநீரில் புரள்வது என் வழக்கம்" என்றது.

நரி தன் தவறை உணர்ந்து, தன்னைக் காப்பாற்றும் படி ஒட்டகத்திடம் கெஞ்சியது.

ஒட்டகமும், நரியின் தவறை மன்னித்து, அதை மீண்டும் முதுகினில் ஏற்றி இக்கரைக்குக் கொண்டு சேர்த்தது.

தவறு செய்தவர்,தவறை உணர்ந்து வருந்தினால் மன்னிக்க வேண்டும்   

Sunday, April 29, 2018

26 - நல்ல நண்பர்கள் வேண்டும்



வயல்களில் பறவைகள் வந்து தானியங்களை நாசம் செய்தன.அதனால், வயல்களுக்கு சொந்தக்காரனான விவசாயி பறவிகளைப் பிடிக்க வலையைக் கட்டினான்.

வலையில் பல பறவைகல் மாட்டிக்கொண்டன. அவற்றோடு ஒரு கொக்கும் மாட்டிக் கொண்டது.

விவசாயி வந்து, வலையில் அகப்பட்டிருந்த பறவைகளைப் பிடித்தான்.தன்னை விடுவிக்குமாறு கொக்கு மன்றாடியது.

" நீ பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டாய்.நான் பறவை அல்லவே! என்னை விடுவிப்பதுதானே நியாயம்?" என்றது

அதற்கு விவசாயி, "நீ சொல்வது முற்றிலும் உண்மை,ஆனால், நீ கெட்டவர்களோடு அகப்பட்டாய்,கெட்டவர்களின் கூட்டுறவு உனக்கு இருக்கிறபடியால் அவர்களுக்கு க் கிடைக்கிற தண்டனை உனக்கும் கிடைக்க வேண்டியதுதான்" என்று சொன்னான்

ஒவ்வொருவரும், அவர்கள் நண்பர்களைக் கொண்டே மதிப்பிடப்படுவார்கள்

Thursday, April 26, 2018

25 - மானும்..நரியும்



ஒரு நரி கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து விட்டது.
மேலே வர முடியாமல் தவித்தது.
அந்தப் பகக்மாக வந்த மான் ஒன்று, கிணற்றுக்குள் ஏதோ சப்தம் கேட்பதைக் கேட்டு, கிணற்றை எட்டிப் பார்த்தது.

அதனுள், நரி இருப்பதைப் பார்த்து விட்டு, "நரியாரே! கிணற்றினுள் என்ன செய்கிறீர்கள்? " என வினவியது.

மான் இப்படிக் கேட்டதும், தந்திரக்கார நரி, "இந்த கிணற்று நீர் இளநீர் போன்று மிகவும் சுவையானது.எனக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம், இக்கிணற்றினுள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வேன்" என்று பொய் சொல்லியது.

மானிற்கும், உடனே அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.உடனே, அதுவும் கிணற்றினுள் குதித்தது.

நல்ல சமயத்தை எதிர்ப்பார்த்திருந்த நரி, அந்த மானின் கொம்புகளைப் பிடித்து, அதன் மீது ஏறி வெளியே குதித்து தப்பி ஓடியது.

அப்போதுதான் நரியின் தந்திரத்தை உணர்ந்தது மான்.இப்போது கிணற்றினுள் இருந்து தன்னால்வெளியே
 வர முடியாது, "யாராவது என்னக் காப்பாற்றுங்கள்" எனக் கதற ஆரம்பித்தது.

நாம் யாருக்கு உதவி செய்தாலும், அந்த உதவிக்கு அந்த நபர் தகுதியானவர்தானா என யோசித்து செய்ய வேண்டும்.

Wednesday, April 25, 2018

24- மோசம் செய்பவன் நாசம் ஆவான்



ஒரு நதியின் ஒரு பக்கம் செல்வம் மிகுந்த நகரமும், மறுபக்கம் ஒரு செழிப்பான கிராமமும் இருந்தது.
அந்த கிராமத்தில் ஒரு பால்காரன் இருந்தான்.
அவன் தன் பசுக்களிலிருந்து பாலைக் கறந்து படகின் மூலம் நதியைக் கடந்து நகரத்திற்குக் சென்று பால் விற்பனை செய்து வந்தான்

அவன், எப்படியாவது விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என எண்ணினான்.அனவே, பாலில் பாதி தண்ணீரைக் கலந்து விற்றான்.

கொஞ்ச நாளில் அவனது வீட்டில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.

பால்காரன், நகரத்திற்குச் சென்று, பணத்தை வசூலித்துக் கொண்டு,திருமணத்திற்கான பொருள்கள்,நகைகள், துணிமணிகள் வாங்கிக் கொண்டு படகில் ஏறி தன் கிராமத்திற்கு வந்தான்

நதியில்பாதி தூரம் வந்த போது, படகு பாறை ஒன்றில் மோதி,அவன் வாங்கி வந்த பொருள்கள் பாதி நதியில் வீழ்ந்து மூழ்கியது.

மீதம் கிடைத்த பொருள்களுடன் அவன் நீந்தி தன் கிராமம் வந்து சேர்ந்தான்.

கோவிலுக்குச் சென்று, "இறைவா! எனக்கு ஏன் இப்படி நடந்தது" என அழுதான்.

அப்போது இறைவன் அவன் முன் தோன்றி, "நீ மோசடி செய்து, பாலில் பாதி தண்ணீரைக் கலந்து விற்றாய்,அந்தத் தண்ணீரின் விலையுள்ள பாதிப் பொருள்கள் நதியின் தண்ணீரோடு போய்விட்டன" என்றார்

மோசம் செய்தால் மோசம் அடைவோம் என அவன் உணர்ந்தான்


Monday, April 23, 2018

23-நமக்குள் ஒற்றுமை தேவை



இரண்டு பூனைகள் ஒரு வீட்டில் அப்பம் ஒன்றினைத் திருடின.அதனைப் பங்குப் போடுவதில், இரண்டினுக்கும் சண்டை வந்தது.

குரங்கு ஒன்றிடம் மத்தியஸ்தம் செய்ய சென்றன.
குரங்கு ஒரு தராசினைக் கொணர்ந்து, அப்பத்தை இரு துண்டுகளாக்கி இரண்டு தட்டுகளிலும் போட்டன.தராசைத் தூக்கிப் பார்த்த போது ஒரு தட்டு கீழே சாய்ந்தது.அதிலிருந்த அப்பத்துண்டை ஒரு கடி கடித்து விழுங்கியது.
இப்போரு, மற்றொரு தட்டு கீழே சாய்ந்த்து.அதிலிருந்து அப்பத்தை எடுத்து ஒரு கடி கடித்து விழுங்கியது.
இப்படி மாற்றி, மாற்றி செய்தது,இப்போது,அப்பத்துண்டுகளின் அளவு குறைந்து வருவதை பூனைகள் கண்டன
.
கடைசியில் தங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என உணர்ந்து, கிடைத்த வரை போதும் என,குரங்கிடம் "மத்தியஸ்தம் வேண்டாம்.அப்பங்களைக் கொடுத்து விடு:" என்றன.

குரங்கு ஒப்புக் கொள்ளவில்லை.கடைசியில் இருந்த அப்பத் துண்டுகளை தன் கையில் எடுத்துக் கொண்டு"நியாயம் சொல்வது மிகவும் கடினம்.அதில் உங்களுக்காக நான் ஈடுபட்டதால்..மீதமுள்ள இரண்டு அப்பத்துண்டுகளை நான் என் வேலைக்குக் கூலியாக எடுத்து கொள்கிறேன்" என்றவாறு வாயில் போட்டு விழுங்கியது

எதுவாயினும் நமக்குள் சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாததால் நஷ்டம் நமக்குத்தான் என பூனைகள் உணர்ந்தன .நமக்குள் ஒற்றுமை தேவை என்றும் உணர்ந்தன

Friday, April 20, 2018

22- விட்டுக் கொடுத்தல்




காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.
அங்கு சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் வந்தன.இரண்டுமே மானைத் தின்ன ஆசைப்பட்டன.

சிங்கம் கரடியைப் பார்த்து,"கரடியே! நான் தான் இந்த மானை முதலில் பார்த்தேன்.ஆகவே நான் தான் அதைத் தின்பேன்.நீ போய்விடு என்றது.
ஆனால், கரடியோ சிங்கத்திடம், "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே மான் எனக்கெ உணவு.நீ போய்விடு" என்றது.

இரண்டிற்கும் வாக்குவாதம் முற்றி,  ஒன்றுக் கொன்று சண்டையிடத் தொடங்கின.நீண்ட நேரம்
சண்டையிட்டதால், இரண்டும் காயமடைந்து, சோர்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தன.

அவ்வேளையில் நரி ஒன்று அங்கு வந்தது.இறந்து கிடந்த மானையும், வீழ்ந்து கிடந்த கரடியையும், சிங்கத்தையும் பார்த்ததுசூழ்நிலையைப் பயன்படுத்தி , இறந்து கிடந்த மானைத் தின்று சென்றது.

சோர்வு நீங்கி, சிங்கமும், கரடியும் எழுந்து பார்த்த போது நரி மானைத் தின்றுவிட்டு சென்றதைப் பார்த்தன.

"நாம் இப்படி வீணாக சண்டையிட்டதால் ஏமாந்துவிட்டோமே!" என சொல்லி வருந்தின.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கிடைப்பதை பகிர்ந்து உண்ண வேண்டும் என உணர்ந்தன.

நாமும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும் 

Thursday, April 19, 2018

21- முடியாத செயலில் ஈடுபடக்கூடாது



ஒரு பாழடைந்த வீட்டில் ஏராளமான எலிகள் வாழ்ந்து வந்தன.ஒருநாள் பூனை ஒன்று அந்த வீட்டில் புகுந்தது.பூனை தினமும் எலிகளை வேட்டையாடித் தின்றது.எலிகள் மிகவும் பயந்தன.அவைகள் ஒன்றுகூடி இந்த அபாயத்திலிருந்து தப்புவது எப்படி? என யோசித்தன.

அப்போது ஒரு பெரிய எலி ஒரு பெரிய மணியைக் கொண்டு வந்து எலிகளை நோக்கி,"நண்பர்களே! நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புது யோசனையுடன் வந்துள்ளேன்.இந்த மணியை பூனையின் கழுத்தில் கட்டிவிட்டால், பூனை வரும்போது மணியோசை முன்னதாகக் கேட்கும்.அப்போது உடனே நாம் தப்பித்துவிடலாம்" என்றது.இதைக் கேட்ட எலைகள் அனைத்தும் மகிழ்ந்தன.மிகவும் அற்புதமான யோசனை என பெரிய எலியைப் பாராட்டின.

சிறிது நேரம் கழித்து ஒரு எலி, "இந்த மணியை யார் பூனையில் கழுத்தில் கட்டுவது?" என்றது
இதைக் கேட்டதும் அனைத்து எலிகளின் உற்சாகமும் குறைந்து போனது.யாரால் மணியை தைரியமாகச் சென்று பூனையின் கழுத்தில் கட்டமுடியும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே,"மியாவ்" என பூனை வரும் சப்தம் கேட்டது.அனைத்து எலிகளும் பயந்து எல்லா திசையிலும் ஒடி ஒளிந்தன.

இயலாத, முடியாத செயலில் நாம் இடுபடக்கூடாது என்பதே இக்கதையின் மூலம் நாம் அறியும் செய்தியாகும்  

Wednesday, April 18, 2018

20- பாத்திரமறிந்து உதவு



ஒரு ஆட்டு மந்தையினுள் புகுந்து ஆடுகளைஅடித்துக் கொல்ல முயன்றது ஓநாய் ஒன்று.

அந்த ஆட்டு மந்தையின் காவலாக இருந்த நாய்கள் ஓநாயைத் துரத்திப் பிடித்து நன்றாக அடித்துப் போட்டு விட்டன.

படுகாயம் அடைந்த ஓநாய் நடக்க முடியாமல் வேதனையுடன் ஓரிடத்தில் படுத்திருந்தது.அதற்குக் கடுமையான பசி வேறு.
அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு ஆடு சென்றுக் கொண்டிருந்தது.

ஓநாய் அந்த ஆட்டைக் கூப்பிட்டது.

அதனிடம், "நண்பா! எதிரிகளால் நான் காயப்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றேன்.தண்ணீர் தாகமாக உள்ளது.எனக்குக் கை கொடுத்து நீரோடை வரை அழைத்து செல்.நான் தாகத்தை தணித்துக் கொள்வேன்" என உருக்கமாகக் கேட்டது

ஓநாயின் கபட நாடகத்தை அறியாத ஆடு, அதன் மீது அனுதாபம் கொண்டு ,அது நடப்பதற்கு உதவ அதன் அருகே சென்றது.

கைக்கு எட்டும் தொலைவில் ஆடு வந்ததும் ஓநாய் அதன் மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்து கொண்டது

பிறர் துன்பப்படும் போது நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.

ஆனால், அதே நேரம், யாருக்கு உதவுகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

Monday, April 2, 2018

19- அச்சமின்மை


அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

நாம் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், அச்சத்தை மட்டும் நம்மை அணுக விடக்கூடாது

அச்சமின்மையே ஆரோக்கியம்!