Saturday, June 6, 2015

150- மூட நம்பிக்கை

                       

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர்.

அவர் ஒருநாள் தனது நண்பர் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் கரடி ஒன்றை வைத்துக் கொண்டு, அதன் முடி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்து கொண்டிருந்தால் பணக்காரராகிவிடலாம் என்று கரடியின் முடியை விற்று கொண்டிருந்தான்.

கரடியின் முடியை வாங்கக் கூட்டம் அலை மோதியது.அம்பேத்கரின் நண்பரும் முடியை வாங்கச்  சென்றார்.அவரை தடுத்து நிறுத்திய அம்பேத்கர், "நீ அந்த முடியை வாங்கினால் என்ன ஆவாய்?" என்றார்.

நண்பர், "நானும் பணக்காரனாக ஆவேன்" என்றார்.

உடன் அம்பேத்கர், :நீ கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரன் ஆவாய். சரி, நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் அந்த வியாபாரி அந்தக் கரடியையே வைத்திருக்கின்றானே...அவன் ஏன் பணக்காரன் ஆகாமல் இப்படித் தெருவில் அதன் முடியை விற்று பிழைத்துக் கொண்டிருக்கின்றான்?" என்றார்.

அப்போதுதான் நண்பரும் தான் அப்படி நினைத்தது மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தார்.

நாமும் , ஒருவர் சொல்வதைக் கெட்டு, அதைப் பற்றி சிந்திக்காமல் மூட நம்பிக்கையுடன் செயல் படக் கூடாது.நம் அறிவைப் பயன்படுத்தி அதற்கேற்ப நடக்க வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றார்.

(எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடமை ஆகும்.)

Friday, June 5, 2015

149-ஓட்டைப்பானையின் சாதனை

                         

சரவணன் தோட்ட வேலை செய்பவன்.

ஒரு நீளமான கம்பின் இரு முனைகளிலும் பெரிய பானைகளைக் கட்டித் தொங்க விட்டு, அதில் தொலை தூரத்திலிருந்து தண்ணீர் சுமந்து வந்து தன் செடிகளுக்கு ஊற்றி வந்தான்.

அந்த கம்பின் இரு முனைகளில், ஒரு முனையில் இருந்த பானையின் அடியில் ஒரு  ஓட்டை இருந்தது.அதனால் சரவணன் தூக்கி வருன் நீரில் பாதி வழியிலேயே சிந்தி வந்தது,.

இதனால், அந்த ஓட்டைப் பானையைப் பார்த்து அடுத்த முனையில் இருந்த நல்ல பானை கேலி செய்து வந்தது.

ஒருநாள், சரவணனிடம் அவனது நண்பர் ஒருவர் "ஓட்டைப் பானையை மாற்று" என்றார்.

அதற்கு சரவணன், "ஐயா...நானும் அது பற்றி சிந்தித்தேன்.ஆனால் நான் தண்ணீர் கொண்டு வரும் வழியில் அழகிய பூச்செடிகள் உள்ளன.பானையில் இருந்து சிந்தும் நீர் அப்பூச்செடிகளில்தான் விழுகிறது. அதனால் அச்செடிகள் வளமாக வளர்ந்து, அழகாக பூத்திருக்கின்றன.இந்த ஓட்டைப் பானைத்தான் அதை சாதித்திருக்கிறது" என்றான்.

இது கேட்டு...ஓட்டைப் பானை செய்து வந்த நற்செயலை எண்ணி நல்லப் பானை அதைக் கேலி செய்வதை நிறுத்தியது.

நாமும், ஒருவரது அருமை, பெருமைகள் தெரியாது யாரையும் எடை போடக்கூடாது.

Thursday, June 4, 2015

148- நம்பிக்கை

                     

கந்தனுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்க நெருங்க பயம் அதிகரித்தது.

"அம்மா! நான் நன்கு படித்திருந்தாலும்...பரீட்சை எழுத பயமாய் இருக்கிறது" என்றான்.

அதற்கு அம்மா, "பயப்படாதே! நீ நன்றாகவே தேர்வு எழுதுவாய்.வேண்டுமானால் என் கையிலுள்ள இந்த நாணயத்தினால் டாஸ் போடலாம்.தலை விழுந்தால், நீ நல்ல மதிப்பெண்களைப் பெறுவாய்" என்று சொல்லியபடியே, தன் கையிலிருந்த நாணயத்தை சுண்டி டாஸ் போட்டார்.

தலையே விழுந்தது.

அதைக் கண்ட கந்தன் மகிழ்ந்து, முழு தைரியத்துடன் தேர்வுகளை எழுதினான்.

ரிசல்ட் வந்தது..எல்லா பாடங்களிலும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தான் அவன்."அம்மா! அன்று டாஸில் தலை விழுந்ததால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்றான்.

அதற்கு அம்மா,  அந்த நாணயத்தை அவனிடம் காட்டினார். நாணயத்தின் இரு பக்கமுமே தலை இருந்த அதிசய நாணயம் அது."கந்தா ! நீ வென்றது டாஸால் அல்ல.தலை விழுந்த நம்பிக்கையால்.வாழ்வில் வெற்றி பெற கடின உழைப்புடன் நம்பிக்கை வேண்டும்." என்றார்.

கந்தனும் நம்பிக்கையின் அவசியத்தைப் புரிந்து கொண்டான்.

நீங்களும் அப்படித்தானே!

Tuesday, June 2, 2015

147 - குற்றம் பார்க்கின்....

                               

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று நன்கு தழைத்து வளர்ந்து, கனிகளுடன் காணப்பட்டது.அம்மரத்தில், பல பறவைகள் கூடு கட்டி, தனது குஞ்சுகளுடன் சந்தோசமாக அக்கனிகளை உண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

அதே காட்டில், வஞ்சக நரி ஒன்று இருந்தது.அது எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லியே வாழ்ந்து வந்தது.

ஒரு சமயம், மழையே இல்லாததால், தண்ணீர் இல்லாது அக்காட்டில் விலங்குகளும், பறவைகளும் தவித்தன.அந்த மரமும் தனது இலைகளையெல்லாம் இழந்து..எலும்புக் கூடாய் வாடிக்காணப்பட்டது.
அதனால், அம்மரத்தில் வசித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிச் சென்றன...

இதுதான் சமயமென்று, நரி மரத்திடம் வந்து, "பார்த்தாயா?  நீ வளமாய் இருந்த போது உன்னையே சுற்றி வந்த பறவைகள், நீ வாடியதும் உன்னை விட்டுச் சென்று விட்டன.அவை திரும்பி வந்தால் அடைக்கலம் கொடுக்காதே" என்றது.

ஆனால், அந்த மரமோ, நரியைப் போல குறுகிய நோக்கம் கொண்டது அல்ல..அது நரியிடம், " நரியாரே! எல்லாவற்றிலும் குறை காணக்கூடாது.மழை இல்லாவிடினும், எனது ஆழமான வேர்கள் எனக்கு வேண்டிய தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பூமியிலிருந்து பெற்றுத் தந்து விடும்.அதுபோன்ற வசதி, அந்தப் பறவைகளுக்குக் கிடையாது.ஆகவே..அவை உயிர் வாழ வேண்டுமாயின் வேறு இடம் தேடித்தான் செல்ல வேண்டும்" என்றது.

மரத்தின் குணத்தைப் பாருங்கள்.

நாமும் அந்த நரியைப் போல இல்லாமல், நமது சுற்றத்தினர், நட்பு ஆகியோரிடம் தேவையின்றி குறைகளைக் கூறி வெறுக்கக்கூடாது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர வேண்டும்.