Thursday, December 30, 2010

57.மரத்தின் அவசியம்..(நீதிக்கதை)




ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.

அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.

மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.

'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது.

எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்' என்றான் அவன்.

உடனே மரம்..'என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்' என்றது.

'சரி' என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் சென்றான்.

பின் அவன் மரத்தையே மறந்துவிட்டான். அவன் பெரிய மனிதனாக வளர்ந்தான் .பின் ஒருநாள் மரத்திடம் வந்தான்,

மரம் அவனை விளையாட அழைத்தது.

'எனக்கு என் குடும்பத்தை பார்க்கவே நேரமில்லை.எனக்கு வீடு ஒன்று வேண்டும்.அதற்கு உன்னால் உதவ முடியுமா' என்றான்'.

மரம் தன் கிளைகளை உடைத்து இவற்றை வீட்டிற்கு உபயோகப்படுத்திக்கொள் என்றது.

அவனும் பல மரக்கிளைகளை எடுத்து சென்றான்.

மீண்டும் பல நாள் அவன் மரத்திடம் வரவில்லை.வயது முதிர்ந்து கிழவனாக ஒரு நாள் மரத்திடம் வந்தான்.

மகிழ்ந்த மரம் 'இப்போது முன் போல் என்னிடம் விளையாடு' என்றது.

எனக்கு வயதாகிவிட்டது .என்னால் விளையாட முடியாது.ஆனால் எனக்கு உட்கார்ந்து இளைப்பாற ஒரு சாய்வு நாற்காலி வேண்டும் என்றான்.

மரமும் தன் கிளைகளில் ஒன்றை அவனிடம் கொடுத்து நாற்காலி செய்து கொள்ளச் சொன்னது.

சிறிது காலம் கழித்து அவன் மீண்டும் வந்தான். இப்போது மரம் 'எனக்கும் வயதாகி விட்டது.என்னிடம் இப்போது பழங்கள் கூடக் கிடையாது..' என்றது.

'என் வாழ் நாள் முழுவதும் உதவினாய் நீ...ஆனால் ,உன்னைப் பற்றி இதுவரை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே ''என்று வருந்தினான் அவன்.

மரமோ 'அதற்காக வருத்தப்படாதே .யாரோ நட்ட செடியான நான் வளர்ந்து உனக்கு பலனளித்தேன். நீ ஒரு செடியை நடு அது மரமாகி வேறு யாருக்கேனும்

பலனளிக்கும். எங்கள் வம்சமும் வளரும்' என்றது.

நாமும் நம்மால் முடிந்தால் நம் வீடுகளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

மரத்தினால் சுத்தமான காற்று கிடைக்கிறது. மழை வர மரங்களும் காரணமாக அமைகின்றன் என்பதை நாம் உணர வேண்டும்.

Monday, December 27, 2010

56-செயலில் கவனம்..... (நீதிக்கதை)


ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தாள்.

அவள் தன்னிடமிருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.

ஒருநாள் அப்படிச் செல்லும் போது..இன்று பாலை விற்று வரும் பணத்தில்..சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன்.அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்..அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்..அது பால் கறக்கையில் சண்டித்தனம் பண்ணினால் அதை தலையில் பால் எடுத்துப் போகும் குடத்தால் இப்படி வீசுவேன்....என தன்னை மறந்து..தலையில் இருந்த குடத்தை எடுத்து வேகமாக வீச, அதில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது.குடமும் உடைந்தது.

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க வேண்டும்.இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும்.

Tuesday, December 21, 2010

55-மூன்று மீன்கள் (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் ஆழமற்ற குட்டை ஒன்று இருந்தது.

அதில் பல மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.அவற்றில் ஒரு மீன் அதிக புத்திசாலி,மற்றொன்று ஆழ்ந்த சிந்திக்கும் திறன் கொண்டது.மூன்றாவது மக்கு .

ஒருநாள் சில மீனவர்கள் குட்டை நீரை கால்வாய் அமைத்து பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டு பயந்த ஆழ்ந்த சிந்தனை உள்ள மீன் 'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் விரைந்து கால்வாய் வழியே தப்பி வேறு இடம் சென்றிடுவோம்' என்றது.

ஆனால் மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.புத்திசாலி மீன்'சமயம் வரும்போது புத்திசாலித்தனமாக தப்பி விடுவோம்' என்றது.

ஆனால்..ஆழ்ந்த சிந்தனைக் கொண்ட மீன் அந்த இடத்தை விட்டு..கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.

தண்ணீர் வடிந்ததும் மீனவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்தனர்.

மக்கு மீன் மற்ற குட்டையில் இருந்த மீன்களுடன் சேர்ந்து வலையில் சிக்கியது.

புத்திசாலி மீனோ வலையின் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

வலையை எடுத்துச் சென்று குளத்தில் கழுவும் போது புத்திசாலி மீன் வலையிலிருந்து தன் பிடியை விட்டு விரைவில் குளத்தில் நுழைந்து தப்பித்தது.

மக்கு மீனோ வலையில் சிக்கி இறந்தது.

சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

Wednesday, December 15, 2010

54-புத்திசாலி காகம் (நீதிக்கதை)


வெயில் காலம்

வெயில் மக்களை பறவைகளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது
பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அவதியுற்றன.
அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது.அது தண்ணீருக்காக அலையும் போது..ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை ஒன்றின் அடியில் கால் பாகத்திற்கு தண்ணீர் இருந்ததைப் பார்த்தது.அது, உடன் குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது.ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை.

அந்தக் காகம் புத்திசாலியானதால்..என்ன செய்வது..என யோசித்தது.

பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது.ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து..அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து..தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு.நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.

Thursday, December 9, 2010

53-உப்பு வியாபாரியும்..கழுதையும் (நீதிக்கதை)




ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான்.அவனிடம் ஒரு கழுதை இருந்தது.அவன் ஊரில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.பக்கத்து ஊருக்குச் செல்லக் கூட ஆற்றைக் கடக்க வேண்டும்.

அவன் தினமும் அடுத்த ஊருக்குச் சென்று உப்பு மூட்டையை கழுதையின் முதுகில் ஏற்றி ஆற்றைக் கடந்து தன் ஊருக்கு வந்து உப்பு வியாபாரம் செய்து வந்தான்.

அப்படி செய்கையில், ஒரு நாள் உப்பு மூட்டையுடன் கழுதையை ஆற்றில் இறக்கி நடந்து வந்த போது..ஆற்றின் நீர் மட்டம் உயர..உப்பு மூட்டை நனைந்து அதில் இருந்த உப்பு சற்று கரைய..கழுதைக்கு சுமந்து வந்த சுமை சற்று குறைந்தது.இதனால் மனம் மகிழ்ந்த கழுதை..அடுத்தடுத்த நாட்களில் உப்பை சுமந்து வரும்போது..வேண்டுமென்றே தண்ணீரில் அமிழ்ந்து உப்பைக் கரைத்தது.

இதனால்..வியாபாரத்தில் நஷ்டமடைந்த வியாபாரி..ஒருநாள் கழுதை செய்யும் தந்திரத்தை அறிந்தான்.உடன் கழுதைக்கு பாடம் கற்பிக்க எண்ணினான்.

அடுத்த நாள் அவன் கழுதையை கட்டிப் போட்டுவிட்டு..உப்புக்கு பதில்..பருத்தி பஞ்சை ஒரு மூட்டை வாங்கி வந்து கழுதையின் முதுகில் கட்டினான்.

வழக்கம் போல ஆற்றைக் கடக்கையில் கழுதை தண்ணீரில் அமிழ்ந்தது.பஞ்சு மூட்டை தண்ணீரில் நனைய ..மூட்டையின் சுமை ஏறியது.கழுதையும் கடக்க முடியாமல் ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது.இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும்..நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது.அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும்.அன்று அவமானம் அடையும் நிலை வரும்.அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.