Wednesday, July 28, 2010

35.உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)


கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான்.

அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார்.

ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றான் கந்தன்.

ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க..சற்றே தள்ளி அமர்ந்திருந்த கந்தன் 'புலி வருது புலி வருது காப்பாத்துங்க...' எனக் கத்தினான்.

அருகாமையில் பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் அவனைக் காக்க ஓடி வந்தனர்.ஆனால் வந்ததும்தான் கந்தன் பொய் சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்தனர்....ஏமாந்த அவர்களைப் பார்த்து கந்தன் சிரித்தான்.

அடுத்த நாளும்..கந்தன் முந்தைய நாள் சொன்னது போல 'புலி வருது புலிவருது..'எனக் கத்த ஓடி வந்த மக்கள் ஏமாந்தனர்....கந்தனும் அவர்களைப் பரிகசிப்பதுபோல சிரித்தான்.

மூன்றாம் நாள் ..ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க ...உண்மையிலே புலி வந்து விட்டது. கந்தன் கத்த ...மக்களோ அவன் தங்களை மீண்டும் ஏமாற்றவே கத்துகிறான் என நினைத்து போகவில்லை.

புலி..சில ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு அவன் மேலும் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்தது.

அப்போது தான் கந்தன் ....தான் முன்னர் பொய் சொன்னதால் ...தான் கூறும் உண்மைகளையும் மக்கள் பொய்யாக எண்ணியதை எண்ணி மனம் வருந்தினான்.

இனி எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது என்று எண்ணியதுடன் நில்லாது....அடுத்த நாள் முதல் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான்.

Friday, July 23, 2010

34. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)




ஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார்.

பின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சுள்ளி விறகுகளைக் கொண்டு வரச் சொன்னார்.

பின்னர் ஒவ்வொரு பையனிடமும் அந்தக் கட்டைக் கொடுத்து அதை துண்டுகளாக உடைக்கும்படியாகக் கூறினார்.மகன்கள் நால்வரும் தனித்தனியாக தங்கள் பலத்தை உபயோகித்து சுள்ளிக் கட்டை உடைக்க முயன்றனர்.

ஆனால்...அதை அவர்களால் உடைக்க முடியவில்லை...

பின்னர் தந்தை அந்தக் கட்டை அவிழ்த்து.....சுள்ளிக் குச்சிகளைத் தனித்தனியே எடுத்து ஒடிக்கக் கொடுத்தார்.....அவர்கள் சுலபமாக ஒடித்து விட்டனர்.

தந்தை தன் புதல்வர்களைப் பார்த்து 'பார்த்தீர்களா..முதலில் இருந்த சுள்ளிக் கட்டு போல நீங்கள் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்ந்தால் உங்களை யாரும் அசைக்க முடியாது.அதனால் உங்களுக்கு எப்போழுதும் துன்பம் வராது....ஆனால் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக பிரிந்தீர்களானால் இந்த சுள்ளிக் குச்சிகளைப் போல எளிதில் உடைபட்டு அழிந்து விடுவீர்கள்'.என்று புத்திமதி கூறினார்.

அதைக் கேட்ட புதல்வர்கள்...ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையாக இருந்தனர்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

Friday, July 16, 2010

33.கரடியும் இரு நண்பர்களும்


இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து காட்டுப் பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது....

அவர்கள் போகும் வழியில் ...எதிரே திடீரென ஒரு கரடி வர..மரம் ஏறத்தெரிந்த நண்பன் மற்றவனை விட்டு விட்டு சட்டென்று பக்கத்தில் இருந்த மரத்தில் தாவி ஏறிவிட்டான்.

என்ன செய்வது என பயந்த மற்றவன் அப்படியே கீழே படுத்து ..மூச்சை அடக்கி செத்த பிணம் போலக் கிடந்தான்.

உயிரற்ற உடலைக் கரடி பார்க்காது என்பதற்கிணங்க ...அக்கரடி அவனிடம் வந்து மோப்பம் பிடித்து விட்டு அகன்றது.

கரடி சென்றதும் மரத்திலிருந்த நண்பன் இறங்கி..'கரடி உன்னை நெருங்கி உன் காதில் என்ன சொல்லிற்று' என்றான்.

அதற்கு மற்றவன்..'ஆபத்து காலத்தில் உன்னை உதறி விட்டு தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மரம் ஏறிய சுயநலமிக்க நண்பர்களை நம்பாதே என்று சொல்லிற்று' என்றவாறே..அவனை விட்டு
பிரிந்து தனியே நடக்கலானான்.

ஒருவருக்கு ஆபத்து வரும் நேரத்தில் உதவுவது நண்பர்களின் செயலாக இருக்கவேண்டும்.

Monday, July 12, 2010

32. நண்பனாகும் தகுதி




சுண்டெலி ஒன்று .....தவளை ஒன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.தவளையோ பெரும்பாலும் தண்ணீரிலேயே வசித்து வந்தது.....அது ஒரு நாள் சுண்டெலிக்கு ...தான் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக்
கூறி ...சுண்டெலியின் காலை தன் காலுடன் ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டிக் கொண்டது.

அப்போது மேலே பறந்த பருந்து ஒன்று இவற்றைப் பார்த்து கொத்த வந்தது.

உடனே தவளை ...சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.தண்ணீரில் சுண்டெலி மூழ்கி மூச்சு திணறி இறந்தது...அதன் உடல் மேலே மிதந்தது...ஆனால் கால்கள் இன்னமும் தவளையுடன் சேர்த்து
கட்டப்பட்டிருந்தது....

அந்த சமயம்...தண்ணீரில் செத்த சுண்டெலி மிதந்ததைப் பார்த்த பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.பருந்து தவளையையும் கொன்று தின்றது.

நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன்..அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.இல்லையேல் தவளைக்கு ஆன கதியே!