Monday, April 8, 2013

123. உனக்கான கடமையைச் செய் (நீதிக்கதை)



ஒரு நாள் நல்ல வெயில்...

சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான்.

வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான்.

அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.' நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்' என்றது.

செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.

அடுத்த நாள் நல்ல மழை....வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட...குடை செருப்பைப் பார்த்து சிரித்தது..

உடன் செருப்பு சரவணனைப் பார்த்து,' சரவணா...உன் பாதங்களை வெயிலிருந்தும்....குப்பை...மணல்..கல் ஆகியவற்றிலிருந்தும் நான் காக்கிறேன் .. ஆனால்  என்னை வீட்டிற்கு வெளியே விட்டு விடுகிறாய்.. தலையை மட்டும் காக்கும் குடையை உள்ளே எடுத்து செல்கிறாயே? என வருந்தியது.

உடனே சரவணன்,' செருப்பே..இதோ பார்...மழையில் குடை நனைந்ததால் அதையும் இன்று வெளியில் வைத்துள்ளேன்.ஆண்டவன் படைப்பில் எந்தப்பொருளும் சரி...எந்த உயிரினங்களும் சரி...அவற்றில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை.ஒவ்வொன்றும் அதற்கான கடமையைச் செய்கிறது.இதை உணராது ..நீங்களும் சரி..மக்களும் சரி ஒருவருக்கொருவர்..இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசுகிறீர்கள்.உன் கடமையை ஒழுங்காக செய்வதை நினைத்து பார்.உனக்கு திருப்தி ஏற்படும். தவிர்த்து, குடை மனிதனுக்கு சில தினங்களுக்கு மட்டுமே பயன் படும்.ஆனால்,நீயோ மனிதர்கள் வெளியே கிளம்பும் போதெல்லாம் உன்னை வருத்திக் கொண்டு, அவர்களுக்காக உழைத்துத் தேய்கிறாய்.பிறருக்கு உதவுவதே நோக்கமாகக் கொண்ட நீ வருந்த வேண்டிய அவசியமே இல்லை.' என்றான்.

நாமும், பிறருக்கு பிரதிபலனை எதிர்பாராது உதவி செய்து, நம் கடமையை ஆற்ற வேண்டும்.தவிர்த்து..நமக்குள் நீ உயர்ந்தவன்..நான் உயர்ந்தவன் என்ற சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது.

ஒவ்வொருவரும்...ஒவ்வொரு விதத்தில் உயர்ந்தவர்களே!

Monday, April 1, 2013

122. தீங்கு செய்யக்கூடாது ...(நீதிக்கதை)






பாஸ்கர் என்ற குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் இருந்தான்.அவன் பிறரை துன்புறுத்தி அவர்கள் படும் வேதனையைக் கண்டு மிகவும் சந்தோஷப்படுவான்.

அவனது வீட்டில் வளர்க்கும் பூனையைத் தூக்கி தூர எறிவான்...விழுந்த வலியுடன் சிறிது நேரம் எழுந்திருக்காது படுத்திருக்கும் பூனையின் வலியைக் கண்டு சிரிப்பான்.

அவனது வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.அந்தக் குளத்தில் அவன் வீட்டில் வளர்த்து வரும் ' டாமி ' என்ற நாயைத் தூக்கிப் போடுவான்.நாய் மூச்சிரைக்க நீந்தி கரைக்கு வரும்போது ...மீண்டும் தூக்கிப் போட்டு ...நாய் அல்லாடுவதைக் கண்டு சிரிப்பான்.

ஒரு நாள்...அப்படி செய்து கொண்டிருந்தபோது ...கால் வழுக்கி குளத்தில் அவன் வீழ்ந்து விட்டான்.அவனுக்கோ நீச்சல் தெரியாது...தண்ணீர் கால்களை இழுத்தது...'ஐயோ...யாரேனும் உதவுங்கள்' என கத்தினான்.

சுற்று வட்டாரத்தில் எந்த மனிதருமே இல்லை. ஆனால் பாஸ்கரின் குரலை எங்கேயோ இருந்த 'டாமி' கேட்டது...உடனே ஓடி வந்தது.அவன் இருக்கும் நிலை அறிந்து ...அதுவும் குளத்தில் குதித்து...பாஸ்கரின் சட்டையை பிடித்து இழுத்தவாறு...அவனையும் கரைக்கு இழுத்து வந்து அவனது உயிரைக் காப்பாற்றியது.

தான் நாயை துன்புறுத்தியிருந்தாலும் ...அது தன் உயிரைக் காத்தது நினைத்து ...பாஸ்கர் நாயை அன்புடன் அணைத்துக்கொண்டான். அது முதல் அவன் யாரையும், எதையும் துன்புறுத்துவதில்லை.

நாமும் பிறரை துன்புறுத்தக்கூடாது.அப்படி செய்தால் நமக்கே கேடு விளையும்.

இதையே திருவள்ளுவர்
     பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
     பிற்பகல் தாமே வரும்.
என்றார்.