Thursday, October 27, 2011

91.ஓநாயும் அணிலும் (நீதிக்கதை)



ஒரு மரத்தில் இரு அணில்கள் இங்கும் அங்கும் தாவி குதித்து சந்தோஷத்துடன் விளையாடிக்கொண்டிருந்தன.அப்போது ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்துவிட்டது.

அணில் மேலே விழுந்ததும் விழித்தெழுந்த ஓநாய் அதைப் பிடித்துக்கொண்டது.

ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் 'என்னை விட்டுவிடு ' என கெஞ்சியது.

அதற்கு ' நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உன்னை விட்டுவிடுகிறேன்' என்றது ஓநாய்.'
'சரி' என்று சொன்னது அணில்
'அணில்களாகிய நீங்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருக்கிறீர்கள் ,ஆனால் வலிமை மிகுந்த நாங்கள் சோகத்துடன் இருக்கிறோமே?'ஏன்" என்று கேட்டது ஓநாய்.

'என்னை விடுவித்து மரத்தின் மீது ஏற அனுமதித்தால் உங்களின் கேள்விக்கு பதில் சொல்கிறேன்' என்றது அணில்.

ஓநாயும் அணிலை விட்டுவிட்டது. உடனே தாவிக்குதித்து மரமேறிய அணில் 'நீங்கள் எப்போதும் என்னைப்போன்றவற்றிற்கு கொடுமையே செய்கிறீர்கள். நீங்கள் செய்யும் கொடுமை செயல் உங்களை அரித்துக் கொண்டே இருக்கிறது.அதனால் நீங்கள் சோகத்துடன் இருக்கிறீர்கள்.ஆனால் நாங்கள் உணவுக்காக யாரையும் அழிப்பதில்லை.மரங்களில் விளையும் கனிகளை மட்டுமே உண்கிறோம்.அதனால் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்றது.

பிறருக்கு துன்பம் செய்யும் யாரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை ஓநாய் உணர்ந்தது.

Monday, October 24, 2011

90. ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )



வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.

அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.

வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.

அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால் பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.

அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த பறவைகள் ஒவ்வொன்றும் தன் கூடு இருக்கும் பக்கமே பிடிக்கவேண்டும் என அதனதன் திசையில் வலையை இழுத்தன....இதனால் வலை கிழிந்து வலையுடன் அவை கீழே விழுந்தன.

வேடனும் தான் நினைத்தது நடந்தது என மகிழ்ந்து பறவைகளை பிடித்து சென்றான்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பதை பறவைகள் பின்னரே உணர்ந்தன..

Sunday, October 16, 2011

89.' உணவை வீணாக்கக்கூடாது ' (நீதிக்கதை)



வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படியும் அம்மா சொன்னார்.

அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது குட்டிக்கண்ணனும் சென்றான்.

அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க....அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.

அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின.அம்மா பையை மடித்து வைத்து..அதற்குரிய இடத்தில் வைக்கச்சென்றார்.

அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த குட்டிக்கண்ணன் துடைப்பத்தை எடுத்து சிந்திய அரிசியை குப்பையில் தள்ள பெருக்கினான்.

வேகமாக ஓடி வந்த அம்மா...அவனிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப்போட்டுவிட்டு அரிசி மணிகளை பொறுக்கினாள்.

' அப்பா.. அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்....நீ சில அரிசிகள் சிந்தியதை பொறுக்குகிறாயே' என்றான் குட்டிக்கண்ணன்.

அதற்கு அம்மா ' கண்ணா ...இந்த அரிசியை கடவுள் பூமியில் நம்மை போன்றவர்கள் உயிர் வாழ படைத்திருக்கிறார்.
அதனால் அதை சிறிதளவும் வீணாக்கக்கூடாது....கீழே விழுந்த அரிசி நமக்கு வேண்டாமென்றால் அதை எடுத்து பறவைகளுக்கும்,எறும்புகளுக்கும் போடலாமே.
அவை அதை உண்ணும்.நாமும் எப்பொழுதும் எங்கும் உணவை வீணாக்ககூடாது என்றாள்

குட்டிக்கண்ணனும் அது முதல் ஒழுங்காக வீணாக்காமல் உணவை உண்ணத்தொடங்கினான்.

Tuesday, October 11, 2011

88. காரணமில்லாமல் ஏதும் படைப்பதில்லை (நீதிக்கதை)




ஒரு நாள் எலி ஒன்றைப் பூனை ஒன்று துரத்த ...தன் உயிரைக் காத்துக்கொள்ள எலி வேகமாக தன் வலைக்குள் புகுந்தது.எலியைக் காணாத பூனை திரும்பிச் சென்றது.வெளியே வந்த எலி நத்தை ஒன்று  மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தது.

நத்தையை கேலி செய்த எலி ....'நத்தையே உன் முதுகில் வீட்டை சுமந்து செல்கிறாயே ஏன்?நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன்.அதனால் ஆபத்திலிருந்து என்னால் தப்பிக்கமுடிகிறதுஆனால் அப்படி ஆகும்போது உன்னால் என்ன செய்ய முடியும் என்றது.

அதற்கு நத்தை ...'நீ உயிருக்கு பயந்து வேகமாக ஒடுகிறாய்..ஆனால் சமயத்தில் பூனையிடம் மாட்டிக்கொண்டால் உன் சாவு நிச்சயம்.ஆனால் நானோ....கூட்டை முதுகில் சுமந்து செல்வதால்...எப்போழுது ஆபத்து வந்தாலும் ...அந்த கூட்டுக்குள்ளையே பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வேன்..என்றது.

அப்போதுதான் எலிக்கு ஆண்டவன் காரணமில்லாமல் எதையும் படைப்பதில்லை என புரிந்தது.

Sunday, October 2, 2011

87. நரியின் புத்திசாலித்தனம் (நீதிக்கதை)




ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது.
அதனால் தனித்து அதற்கான உணவைத் தேடமுடியவில்லை.
அது தனக்கான உணவு தன்னை நாடி வர வேண்டும் என்பதற்காக ஒரு தந்திரம் செய்தது.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தியைப் பரப்பி..தன் குகையிலேயே இருந்தது.அதன் நலன் விசாரிக்க வரும் மிருகங்களை குகைக்குள்ளேயே அடித்துக் கொன்று உண்டு வந்தது.
ஒரு நாள் நரி ஒன்று சிங்கத்தின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க வந்தது.அது குகையின் வாயிலில் நின்று, 'சிங்க ராஜாவே! எப்படியிருக்கிறீர்கள்?" என வினவியது.
இந்த நரிதான் இன்றைய என் உணவு என்று தீர்மானித்த சிங்கம்,'நரியாரே!..என்னால் எழக் கூட முடியவில்லை..நீங்கள் குகைக்குள் வாருங்கள்' என்றது.
அதற்கு புத்திசாலியான நரி கூறியது,'சிங்க ராஜாவே! உங்கள் குகைக்குள் மிருகங்கள் வந்த தடயங்கள் தெரிகின்றது..ஆனால் அவை திரும்பிய தடயங்கள் இல்லை..அதனால் அம்மிருகங்களுக்கு என்ன ஆகியிருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.அதனால் நானும் உள்ளே வந்தால் திரும்ப முடியாது என உணர்கிறேன்'
இப்படிக் கூறிவிட்டு நரி அகன்றது.சிங்கம் தனது கெட்ட எண்ணம் நரியிடம் நடக்கவில்லையே என ஏமாந்தது.
இதற்கிடையே..நரியும் ,மற்ற மிருகங்களிடம் சென்று சிங்கத்தைப் பற்றி கூறி,'இனி யாரும் அதன் குகைக்குச் செல்ல வேண்டாம்' என்றது.

நம்மைச் சுற்றி நடைபெறுவதை உன்னிப்பாகக் கவனித்து...தீமைகளை உணர்ந்து, அதற்கேற்றார் போல புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டும்.