Thursday, January 31, 2013

117.செய் நன்றி மறவாமை (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.

ஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது,உச்சாணிக் கொம்பில் இருந்து தவறி விழுந்து படு காயமடைந்தது.
அதனால் எழுந்து நடக்க முடியவில்லை.உணவு தேடவும் வழியில்லை.மரத்தின் அடியிலே  படுத்துக் கிடந்தது.

அம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்தக் குரங்கைப்பார்த்து மனம் வருந்தி அதை தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண  உணவும் கொடுத்தான்.

நாளடைவில் குரங்கு குணமானது.அப்போதுதான் அந்த குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது.அதன் வழியே வெய்யிலும்,மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழுவது தெரிந்தது.

குரங்கு உடனே வெளியே வந்து,மரத்தில் ஏறி,இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து,குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது,

இப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை,வெய்யிலோ,அல்லது மழையின் பாதிப்போ இல்லை.

அந்த ஏழை தனக்கு செய்த உதவியை குரங்கு எண்ணி,தன்னால் முடிந்த பிரதியுபகாரத்தை செய்தது பாராட்டுக்குரியது.

நாமும் நமக்கு யாரேனும் சிறு உதவி செய்தாலும் அதை மறக்காமல் பெரிதாக எண்ணி ,நம்மால் முடிந்த நல்ல காரியங்களை
உதவியவர்களுக்கு செய்ய வேண்டும்

Monday, January 21, 2013

116. ஒன்று படுவோம்..(நீதிக்கதை)




காடு ஒன்றில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தினமும் மற்ற மிருகங்களைக் கொன்று பசியாறி வந்தது.நாளாக ஆக அதற்கும் வயதாகி, வலுவிழந்தது.அதனால் தனக்குத் தேவையான உணவை வேட்டையாட அதனால் அலைய முடியவில்லை.

ஒருநாள் அது நரி ஒன்றைக் கூப்பிட்டு, தனக்கு அன்றாடம் தேவைக்கான உணவிற்கான மிருகத்தை, நயமாகப் பேசி அழைத்து வருமாறும், அப்படி அது அழைத்து வரும் மிருகத்தை அடித்து தான் தின்றது போக , மீதத்தை நரி உண்ணலாம் என்றும் கூறியது. நரியும், அதற்கு ஒப்புக் கொண்டது.

காட்டை ஒட்டி இருந்த நகரில் நான்கு பசுக்கள் தினமும் ஒற்றுமையாய் புல் மேய்ந்து வந்தன.அவற்றைப் பார்த்த நரிக்கு நாவில் எச்சில் ஊறியது.இப்பசுக்களை சிங்கத்திடம் அழைத்துச் சென்றால் தினமும் தனக்கு உணவு கிடைக்கும் என எண்ணி அவற்றிடம் சென்று பேசியது.ஆனால் ஒற்றுமையாய் இருந்த பசுக்கள் நரியை விரட்டி அடித்தன.

நரி ஒரு தந்திரம் செய்தது..பசுக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடிவெடுத்தது.

முதலில் ஒரு பசுவிடம் சென்று..'எனக்குத் தெரிந்து..மற்ற பசுக்களை விட நீ இளைத்து இருக்கிறாய்.உனக்குத் தேவையான புல் கிடைக்கவில்லை என எண்ணுகிறேன்.அருகிலேயே..ஒரு புல்வெளி உள்ளது.பசுமையான புற்கள்.நீ தனியே வந்தால் அவற்றை உண்டு ருசிக்கலாம்.ஆனால் உன் நண்பர்கள் உன்னுடன் வந்தால், உன் பங்கு சிறிதாகிவிடும்' என்றது.

பச்சைப் பசேல் என்றிருக்கும் புல்லைத் தின்ன ஆசைப்பட்ட அந்த பசு..மற்ற மூன்று பசுக்களிடமும் சொல்லாது, நரியுடன் சென்றது.நரி அப்பசுவை, சிங்கம் இருக்குமிடம் அழைத்துச் சென்றது.சிங்கமும், தனியே வந்த அப்பசுவைக் கொன்று உண்டது.

அப்படியே, மற்ற பசுக்களையும் பிரித்து நரி அழைத்துச் சென்று சிங்கத்திற்கு உணவாக்கியது.

பசுக்கள் ஒற்றுமையாய் இருந்தவரை அவற்றை அணுக முடியாத நரி, அந்த ஒற்றுமையைக் குலைத்து, அவற்றைப் பிரித்து அழித்துவிட்டது.

நாமும், நம் குடும்பம், சுற்றம், சூழலுடன் ஒற்றுமையாய் இருந்தால்..நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.