Thursday, February 18, 2021

6. பூட்டும்...சாவியும்.. (நீதிக்கதை)

6 - பூட்டும்-சாவியும்


ராமனாதன் தன் குடும்பத்துடன் சில மாதங்கள் வெளியூர் சென்றுவிட்டு  அன்றுதான் வீடு திரும்பினார்.

வீட்டின் வாசலில் நின்றிருந்த ராமனாதன் தன்மனைவியிடம் 'பூட்டைத் திறக்கும் சாவியைக் கொடு என்றார்'. ராமனாதனின் மனைவியோ சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்து தன் கைப்பையை நோண்டிக் கொண்டிருந்தாள்.

சாவி கிடைக்காததால்...பக்கத்தில் இருக்கிற வீட்டிலிருந்து ஒரு சுத்தியை வாங்கி பூட்டை உடைக்க ஆரம்பித்தார்.சுத்தியால் வாங்கிய அடி பூட்டிற்கு மிகவும் வலித்தது.அந்நேரம் சாவியை மனைவி கண்டுபிடித்து விட...அதனால் பூட்டை எளிதாக திறந்து விட்டார் ராமனாதன்.

அப்போது  சுத்தியல்  சாவியை பார்த்து . ' பூட்டின்  தலையில் என்னை  அவ்வளவு பலமாக அடித்தவர் உன்னை உபயோகித்து உடனே திறந்துவிட்டாரே.....அது எப்படி 'என்றது..

அதற்கு சாவி சொன்னது...' நீ பூட்டை திறக்க அன்புடன் செயல்படாது வன்முறையை உபயோகித்து அதன் தலையில் அடித்தாய்,அதனால் அது திறக்கவில்லை,ஆனால் நானோ அன்பாக அதன் இதயத்தில் நுழைந்து திறக்க முயற்சித்தேன்,என்  அன்புக்கு கட்டுபட்டு அது திறந்தது.'

எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும் ..தன் இதயப்பூர்வமான அன்பினைச் செலுத்தினால் ...அவர்களை மாற்றிவிட முடியும் என்பதை உணரவேண்டும்.

Tuesday, February 9, 2021

5. பேராசை... (நீதிக்கதை)

5- பேராசை 


55

ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால்  எப்படி நிற்காதோ..அது போல திருப்தியற்ற மனம் உள்ளவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காமல் அவர்கள் மனம் சோக மயமாகவே இருக்கும்.

குமரனின் மாமா கந்தசாமி...குமரனுக்கு சொத்துகளை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அதனால் மிகவும்  சோகமாக இருந்த குமரனிடம் ' உன் மாமாவிற்கு வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.வயது மூப்பின் காரணமாகவே இறந்துவிட்டார்.மரணம் இயற்கையல்லவா..ஆனால் அதேநேரம் அவர் அவரது சொத்துக்களை உனக்கு எழுதி வைத்ததற்காக சந்தோஷப்படு" என்றான்ஒரு நண்பன்.

'என் சோகம் உனக்கு தெரியாது...இப்படித்தான் போன வாரம் என் சித்தப்பா பத்து லட்சம் சொத்தை என் பெயருக்குஎழுதி வைத்துவிட்டு அமரராகி விட்டார் 

உனக்கு தெரியாது.' பணக்காரர்களக இருந்து என் மாமாவும் சித்தப்பாவும் இறந்துவிட்டார்கள்.இனிமேல் என் பேரில் சொத்துஎழுதிவைக்க உறவு யாருமில்லை' என்றான்

.ஆசைக்கு அளவு வேண்டும். பேராசை கொண்டவன் எப்போதும் திருப்தி அடையமாட்டான்.

எப்போதும் திருப்தி அடையாதவன் எந்நாளும் சந்தோஷமாக இருக்கமுடியாது.

Friday, February 5, 2021

4.ஆணவம் வேண்டாம் ...(நீதிக்கதை)

   4- ஆணவம் வேண்டாம்


 ஓரு ஊரில் மெத்தப்  படித்தவன் ஒருவன் இருந்தான்.மற்றவர்கள் எல்லாம் அவனைவிட ஏட்டுக்கல்வியினை குறைவாகவே படித்தவர்கள்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் உண்டு.அதனால் அவன் அனைவரையும் அலட்சியம் செய்து வந்தான்.

அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு துறவி வந்தார்.ஊர் மக்கள் அவரை வரவேற்று..வணங்கி மகிழ்ந்தனர்.

அவரைக்காண அந்த அறிவாளியும் வந்தான்.அவனைப்பற்றி துறவி முன்னரே கேள்விபட்டிருந்தார். அவருக்கு  முன்னால் கால் மீதுகால் போட்டு அமர்ந்து ஆணவத்துடன் ...'உங்களை மக்கள் மதிக்கிறார்கள்' ஆனால் உண்மையில் உங்களை விட நான் அதிகம் அறிந்தவன்' என்றான்.

அதற்கு துறவி..' இந்த உலகில்  அனைத்தும் அறிந்தவன் எவனும் இல்லை.கற்றது கைம்மண் அளவு தான்.உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.நமது அறிவு என்பது ஓர் எறும்பு போல ...நமக்கு தெரியாத விஷயங்கள் யானையைப் போல....யானையின் காலுக்கு அடியில் கிடக்கும் எறும்பால்....என்றுமே யானையை முழுமையாக பார்த்து விட முடியாது.யானையின் ஒரு பகுதியைத் தான் பார்க்கமுடியும்.எறும்பின் பார்வையைப் போல உங்களது அறிவு கூர்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை யானையை போல . இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு என்று வருகிறதோ அன்று தான் உங்கள் ஆணவம் குறையும்' என்றார்.

சிறிது யோசித்த அறிவாளி,துறவி சொன்னது உண்மை என உணர்ந்து...அவரிடம் மன்னிப்பு க்கேட்டான். அன்று முதல் ' அனைத்தும் தனக்கு தெரியும்' என்ற ஆணவத்தைவிட்டான்.

உலகத்தில் எல்லாம் அறிந்தவன் என்று யாருமில்லை என்பதைஉணர்ந்தால் ..யாருக்கும் ஆணவம் ஏற்படாது.

Tuesday, February 2, 2021

3. பிரச்சனையை தீர்க்கும் வழி...(நீதிக்கதை)

3-பிரச்னையை தீர்க்கும் வழி





 ஓரு நாட்டின் அரசன் தனக்கு சமயோசித புத்தியுள்ள முதலமைச்சர் ஒருவரை தேர்ந்தெடுக்க எண்ணினான்.

அவரது அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் இருந்தனர்.அவர்களை அழைத்து அரசன் 'என்னிடம் ஒரு பெரிய பூட்டு இருக்கிறது.கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட  அப்பூட்டை திறக்கவேண்டும்'. நாளை உங்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பு தரப்படும்.யார் பூட்டை  குறைவான நேரத்தில் திறக்கிறார்களோ அவரே முதலமைச்சர் ஆவார்.' என்றார்.

முதலமைச்சர் ஆகும் ஆசையில்,அவர்கள் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும்,கணிதம் பற்றிய எல்லா குறிப்புகளையும் தேடினார்கள்.எதுவும் கிடைக்கவில்லை.ஒரு அமைச்சர் மட்டும் ' இந்த அறிவிப்பில் ஒரு மர்மம் இருப்பதாக எண்ணினார்;. அதைப்பற்றி மட்டும் யோசிக்கலானார்.

அடுத்த நாள் அரசவையில் அந்த பூட்டை சேவகர்கள் தூக்கி வந்து மையப்பகுதியில் வைத்தனர்.பூட்டின் பிரம்மாண்டம் அமைச்சர்களுக்கு படபடப்பை அதிகரித்தது.ஆனால் மூன்று அமைச்சர்களுக்கு பூட்டை எப்படி திறப்பது என்று புலப்படவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

நான்காவது அமைச்சர் பூட்டின் அருகே வந்து பூட்டை பார்த்தார்.பூட்டு பூட்டப்படவில்லை. சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை திறந்தார். அரசர் அவரை அமைச்சர் ஆக்கினார்.

பிரச்சனையை தீர்க்கவேண்டுமானால் முதலில் பிரச்சனையை புரிந்துகொள்ளவேண்டும்.மனம் பதட்டமில்லாமல் ஆற அமர சிந்திக்கவேண்டும்.அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வானது கிடைக்கும்.