Monday, November 24, 2014

141-சமாதானம் அவசியம் ( நீதிக்கதை),



காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன.

கரடி, "நான் தான் முதலில் மானைப் பார்த்தேன்..ஆகவே அது எனக்குச் சொந்தம் 'என்றது.

ஆனால் சிங்கமோ. "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம்' என்றது.

இரண்டும், செத்துக் கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன.அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின.அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும்.கரடியையும் பார்த்தது.இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன."நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப் போட்டு உண்டிருக்கலாம்.நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே" என வருந்தின.

நாமும் அவர்களைப் போல் இல்லாமல்..எல்லாரிடமும் போரிடும் குணத்தைவிட்டு சமாதானமாய்ச் சென்றால் இழப்பு .எதுவும் ஏற்படாது.

Friday, November 21, 2014

140-நமது மகிழ்ச்சி பிறருக்கு துன்பம் ஆகலாமா? (நீதிக்கதை)




அன்று பள்ளி விடுமுறை என்றதால் சில சிறுவர்கள் சேர்ந்து, அந்த ஊரில் இருந்த ஒரு குளக்கரைக்கு வந்தனர்.

அந்தக் குளத்தில் பல தவளைகள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அதைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சி மேலிட..அந்தத் தவளைகள் மீது யார் அதிகம் கல் எறிகிறார்கள் பார்க்கலாம் என்று போட்டி போட்டுக் கொண்டு, கரையில் இருந்த கற்களை எடுத்து தவளைகள் மீது வீச ஆரம்பித்தார்கள்.இதனால் பல தவளைகள் காயம் அடைந்தன.அப்போது, தைரியமாக ஒரு தவளை..அவர்களிடம் வந்து..

"கல்லெறிவதை நிறுத்துங்கள்.உங்கள் விளையாட்டால் சற்று முன் வரை மகிழ்வோடு விளையாடிக் கொண்டிருந்த எங்களில் பலர் காயமடைந்து வேதனையில் உள்ளனர்.நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென..எங்களை வேதனைப் படுத்தலாமா?:"என்றது.

சிறுவர்களும் தங்களது தவறை உணர்ந்து தவளையிடம் மன்னிப்புக் கேட்டனர்.

நமது மகிழ்ச்சி..இன்னொருவர் வேதனையால் ஏற்படக்கூடாது

Tuesday, November 18, 2014

139.இறைவனுக்கு நன்றி சொல்வோம் (நீதிக்கதை)



ஒரு ஊரில் காகமொன்று இருந்தது.அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது.

ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது.

அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்த காகம்' அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே' என வருந்தியது.
அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே....அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது.தன் இறகுகளை தேய்த்து ..தேய்த்து பார்த்தது.அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் ' இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம்,நிறம் பெற்றவை.அதை மாற்ற நினைத்தால் நடக்காது' என அறிவுரை கூறியது.மேலும்,' கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்.' என்றது.

ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு.அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.

Sunday, November 16, 2014

138- செய்நன்றி மறவேல்!

                 

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது.அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது.சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது.
மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில்..புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது.

அப்போது அச்செடி, "மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ..எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய்.தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும்" என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான்..செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது.அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான்.அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது.

நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

Friday, November 14, 2014

137- அன்னை சொல் கேள்! ( நீதிக்கதை,)

                               


எலி ஒன்று குட்டி போட்டிருந்தது.

இரவு நேரம்.தாய் எலி குட்டி எலியிடம், "இந்த பொந்தை விட்டு வெளியே வராதே! நான் வெளியே சென்று, யார் வீட்டிலிருந்தாவது நமக்கான உணவை கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டுச் சென்றது...

தாய் எலி சென்றதும், குட்டி எலி வெளியே வந்து..வெளியுலகைக் காண ஆசைப்பட்டது.

அது பொந்தை விட்டு வெளியே வந்து, சிறிது தூரம் ஓடியது.அங்கு இருந்த வீடுகளை எல்லாம் பார்த்து வியந்தது.

அப்போது சற்று பெரிய நாலுகால் பிராணி ஒன்றைப் பார்த்து.அது குட்டி எலியைக் கவ்வ ஓடியது.பயந்த குட்டி எலி படுவேகமாக ஓடி வந்து பொந்திற்குள் நுழைந்தது.

சிறிது நேரம் கழித்து, தாய் எலி வந்ததும், குட்டி எலி" அம்மா! உன் சொல்லைக் கேட்காமல் நான் வெளியே சென்றேன்.அப்போது நாலு கால் பிராணி ஒன்று என்னைக் கவ்வ வந்தது" என்றது.

அதற்கு தாய் எலி,"அந்த பிராணியின் பெயர்தான் பூனை.நமது எதிரி அது.அதற்காகத்தான் உன்னை வெளியே வர வேண்டாம் என்றேன்.தாயான என் அறிவுரையைக் கேட்காமல் வெளியே சென்றதால் ஆபத்தில் மாட்ட இருந்தாய்.இனியாகிலும் பெரியவர்கள் சொல்படிக் கேட்டால், நமக்கு எந்த ஆபத்தும் வராது..என அறிந்து கொள்" என்றது

நாமும், நம்மை பெற்றவர்கள், பெரியோர்கள் கூறும் அறிவுரையை மதித்து நடக்க வேண்டும்.

Children's Day


Happy Children's Day






குழந்தைகள் அனைவருக்கும் எனது இனிய 'குழந்தைகள் தின நல் வாழ்த்துகள்

Wednesday, November 12, 2014

136- காட்டெருமையின் முன்னேற்பாடு (நீதிக்கதை)

                 

ஒரு காட்டில், காட்டு எருமை ஒன்று தன் கொம்புகளை மரத்தில் உரசியபடியே தீட்டிக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட நரி , "எதற்கு தேவையில்லாமல் இப்போது கொம்புகளை கூராக்க தீட்டிக் கொண்டிருக்கிறாய்" என்றது.

"திடீரென சிங்கமோ, புலியோ என்னைத் தாக்க வந்தால், அதனிடமிருந்து தப்பிக்கலாம் அல்லவா? ஆகவேதான் கூர் தீட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றது எருமை.

"வேலையற்ற வேலை செய்கிறாய்.அதற்கு நொண்டிச் சாக்கு ஒன்றும் சொல்கிறாய்" என நரி கிண்டல் செய்தது.

அந்த சமயம், சிங்கம் ஒன்று பெரும் கர்ஜனை செய்தபடியே காட்டெருமையின் மீது பாய்ந்தது.நரி சிங்கத்தைக் கண்டதும் ஓடி ஒளிந்தது.

தன் மீது பாய்ந்த சிங்கத்தை காட்டெருமை கூரிய தனது கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது.காயமுற்ற சிங்கம் ஓடிவிட்டது.

திரும்பி வந்த நரி எருமையைப் பார்த்து, "ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ள நீ செய்த முன்னேற்பாடு போற்றுதலுக்குரியது" என பாராட்டியது.

நாமும் எந்த ஒரு வேலையையும், பிறகு செய்து கொள்ளலாம் என தள்ளிப் போட்டால், அதனால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆகவே, எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடக்கூடாது. 

Tuesday, November 11, 2014

135. ' நரியின் சாதூர்யம்' (நீதிக்கதை)




ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது.
அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன.அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன.
மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.

கோடைகாலம் வந்ததது...நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது.தண்ணீர் குறைந்ததால்,முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவ்தில்லை.
உண்ண எதுவும் இல்லா நிலையில்,ஒரு நாள்,முதலை நண்டிடம்,நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய ......நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து "முதலை செத்தது போலத்தெரியவில்லையே ! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே " என்றது.

இதக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது.அதைப் பார்த்த நரி,நண்டிடம் 'செத்த முதலை எப்படி வாலை ஆட்டும்.நீங்கள் இருவரும் போய் சொல்கிறீர்கள்' என கூறிவிட்டு ஓடியது.

அறிவில்லாத முதலையும் நண்டும் ஏமாந்தது.

நாமும் யாரேனும் ஏதேனும் கூறினால் அதை உடனே நம்பாது நம் அறிவை பயன்படுத்தி உண்மையை கண்டறியவேண்டும்.

Friday, November 7, 2014

134. கழுதை சிங்கமாகுமா..(நீதிக்கதை)



கழுதை ஒன்று தனது சலவைத்தொழிலாளியான முதலாளியிடமிருந்து தப்பி காட்டுக்குள் புகுந்தது.

காட்டில் புலி,சிங்கம்,யானை போன்ற மிருகங்களைப் பார்த்து பயந்து ....அவற்றிடம் இருந்து எப்படி தப்புவது என புரியாது விழித்தது.

அப்போது சிங்கத்தின் தோல் ஒன்று கழுதைக்குக் கிடைத்தது.அதை எடுத்து போர்த்திக்கொண்டு காட்டிற்குள்.. தானும் ஒரு சிங்கம் போல உலாவியது.

அது தெரியாத மிருகங்கள் கழுதையை சிங்கம் என நினைத்து பயந்து ஓடின.

அதைக் கண்டு மகிழ்ந்த கழுதை ....மீண்டும் நகரத்திற்குள் நுழைந்தது.மனிதர்கள் சிங்கம் நகரத்திற்குள் இருப்பதைப் பார்த்து பயந்தனர்.

கழுதைக்கு மகிழ்ச்சி அதிகமாகியது...திடீரென கத்த ஆரம்பித்தது.காணாமல் போயிருந்த தன் கழுதையைத் தேடிக் கொண்டிருந்த சலவைத்தொழிலாளி ...தன் கழுதையின் குரல் கேட்டு வந்தான்.
தன் கழுதை சிங்கத்தின் தோலை போர்த்தியிருப்பதைக் கண்டு அதை நீக்கிவிட்டு கழுதையை பலமாக அடிக்க ஆரம்பித்தான்.

நாமும் நம்மைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
பிறர் போல நடிக்க ஆசைப்பட்டால் ஒருநாள் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்.