Monday, October 23, 2017

3. - தீமை செய்தால் தீமையே வரும்




ஒரு கிராமத்தில் கந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார்,
அவருடைய தோட்டத்தில் வெண்டைக்காய் நிறைய காய்த்திருக்கும்.
வாரம் ஒரு முறை அவற்றை பறித்து பையில் நிரப்பி தோளில்  வைத்துக்கொண்டு நான்கு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை/காய்கறி கடையில் விற்று விட்டு வருவது வழக்கம். வெண்டைக்காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசிபருப்பு,சர்க்கரை போன்ற  வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம்.

கந்தன் கொண்டு வரும் வெண்டைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம். இதை பயன்படுத்தி மளிகைக் கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்துவிடுவார்.

பல வருடமாக கந்தன் காயைக்கொண்டுவருவதால்  மளிகைக் கடைக்காரர் அதை எடை போட்டு பார்ப்பதில்லை,
கந்தன் சொல்லுகின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு
 ஈடான மளிகைப் பொருட்களை கொடுத்து அனுப்புவார்..
காரணம் கந்தனின் நேர்மையும் நாணயமும்  எல்லோரும் அறிந்ததே.

ஒரு நாள் கந்தன் பத்து கிலோ வெண்டைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான் பொருட்களை வாங்கிச் சென்றார்.
சிறிது நேரத்தில் பத்து கிலோ வெண்டைக்காயும்  மொத்தமாய் வேண்டும்
என்று ஒரு சமையல்காரர் வந்து  கேட்க அவருக்காக மளிகைகடைக்காரர் கந்தன் கொடுத்த வெண்டைக்காய்களை எடை போட ஒன்பது கிலோ தான் இருந்தது.

அன்று முழுவதும் மளிகைக்காரருக்கு தூக்கமே வரவில்லை..கந்தன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டாரே1
இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான வெண்டைக்காய்களை வாங்கி ஏமாந்துவிட்டோமே என்று புலம்பினார்.

அடுத்த முறை கந்தன் வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.

நான்கு நாட்கள் கழித்து கந்தன் மிகவும் சந்தோஷமாக வந்தார்.
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய காய்கறிகளைக் கொண்டு வந்திருந்தார்.

'கையும் களவுமாக பிடிக்கவேண்டுமென்று எத்தனை கிலோ என்று மளிகைக்கடைக்காரர் கேட்க பத்து கிலோ  என்றார் கந்தன்.
அவர் முன்னாலே எடையை போட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் பளார் என்று கந்தன் கன்னத்தில் அறைந்தார்.
இத்தனை வருடங்களாக இப்படித்தான் ஏமாத்திகிட்டு இருக்கியா?
கிராமத்துக் காரங்க ஏமாத்தமாட்டங்கன்னு நம்பித்தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்.இப்படி துரோகம் பண்ணிட்டியே "சீ" என துப்ப,நிலை குலைந்து போனார் கந்தன்.

அய்யா....என்னை மன்னிச்சிடுங்க.நான் ரொம்ப ஏழை.
எடைக்கல்லு வாங்கிற அளவுக்கு என் கிட்டே காசு இல்லீங்க,
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற  ஒரு கிலோ சர்க்கரையை ஒரு தட்டுலேயும் இன்னொருட்தட்டிலே  காயயும் வைச்சுத்தான் கொண்டு வருவேன்.
இதைத்தவிர் வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலைப் பிடித்து அழ மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.

'தான் செய்த துரோகம்  தனக்கே வந்ததை உணர்ந்தார்1

இத்தனை வருடங்களாக கந்தனை ஏமாற்றிய  மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது
தெளிவானது..

நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு  திரும்ப வரும்
நல்லதை தந்தால் நல்லது வரும்
தீமையை தந்தால் தீமை வரும்.
ஆகவே
 நல்லதை மட்டுமே செய்வோம்,நல்லதை மட்டுமே விதைப்போம்.

Wednesday, October 18, 2017

2 -முயற்சி



கடவுளின் மீது பக்தி கொண்ட  கழுகு ஒன்று இருந்தது.தினமும் இறைவனை தியானம் செய்யும்.

அது வானில் பறந்தபடியே  கீழே மேய்ந்துகொண்டிருக்கும்  கோழிக்குஞ்சுகள்,ஓடி ஒளியும் எலி போன்றவற்றை பார்த்து சரேலென இறங்கி.அவற்றை கொத்திக்கொண்டு போய் பசி ஆறும்.

கடந்த சில தினங்களாக அதற்கு வயதானதால் வெளியே சுற்ற முடியவில்லை.உணவுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என பார்த்தது.எதுவும் கிட்டவில்லை.

ஆகவே இறைவனை தியானித்து "ஆண்டவா" என்னால்  இன்று வெளியே போக முடியவில்லை.பசி வாட்டுகிறது.எனக்கு உண்ண ஏதாவது அளியுங்கள்,என வேண்டியது.

காலை,மாலை போய் இரவும் வந்தது.அதற்கு எதுவும் கிட்டவில்லை அதனால் இறைவன் மீது கோபமுற்று "இவ்வளவு நாள் உன்னை வேண்டிய உன் பக்தனுக்கு ஒரு வேளை உணவைக்கூட அளிக்காத இரக்கமற்றவனா நீ" என அரற்றியது.

இறைவன் அதன் முன் தோன்றி." கழுகே நீ காலையில் என்னை வேண்டியபோதே உனக்கான உணவைக் கொடுத்துவிட்டேன்,சற்று திரும்பிப்பார்" என்றார்.

கழுகு திரும்பி பார்க்க ஒரு செத்த எலி  கிடந்தது.' நான் உனக்கு உணவினை கொடுத்தாலும் அதற்கான சிறு முயற்சியாவது நீ செய்யவேண்டும்.நீ அப்படி முயலாதது உன் தவறு' என்று கூறி மறைந்தார்.

நமக்கு எல்லாமே இறைவன் என்றாலும்...நமக்கு வேண்டியதை அவர் அளித்தாலும் அதற்கான நம் முயற்சியும் சிறிதளவாவது இருக்கவேண்டும் என்பதே இக்கதையின் நீதி.