Wednesday, April 27, 2011

71.சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

Tuesday, April 12, 2011

70. மூடருக்கு அறிவுரை கூறலாமா!! (நீதிக்கதை)



ஒரு காட்டில்...ஒரு நாள் ...நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது.
ஒரு குரங்கு குளிர் தாங்காமலும்..மழையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு மரத்தினடியில் ஒதுங்கிக்கொண்டது.
மரத்தில் பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு அடக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
குரங்கைப் பார்த்து பறவை மனம் பொறுக்காமல் ' குரங்காரே..என்னைப்பாரும்...வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.அதனால் தான் இந்த மழையிலும் சுகமாய் இருக்கிறேன்.நீரும் அப்படி செய்திருக்கலாமே என்றது...
குரங்கிற்கு கோபம் தலைக்கேறியது..'உன்னைவிட வலுவானவன் நான்..எனக்கு நீ புத்தி சொல்கிறாயோ....
இப்போது உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
பறவைக்கு அப்போதுதான் புரிந்தது' அறிவுரைகளைக்கூட.....அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்
என்று.
நாமும்...ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதன்படி நடப்பாரா என்று புரிந்துகொண்டபின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

Tuesday, April 5, 2011

69. உப்புமூட்டை வியாபாரியும்...இறைவனும்.(நீதிக்கதை)




ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான்...அவனுக்கு முன்னைப்போல வியாபாரம் ஆகாததால் வறுமையில் வாடினான்.

அவன் இறைவனை நோக்கி "ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை குடுக்கிற" என்று கேட்டுவிட்டு தன் கழுதையின்மேல் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றான்.ஆனால் வழியில் பெரிய மழை பெய்து உப்பு முழுவதும் கரைந்து போனது..." உன்னை அவ்வளவு வேண்டியும்,,ஏழையான என் வயிற்றில் இப்படி அடித்துவிட்டாயே' என இறைவனைத் திட்டினான்.

பின் மழை சற்றே நிற்க ஊர் திரும்பினான்.வழியில் சில திருடர்கள் ..வியாபாரிகள் தன் பொருளை சந்தையில் விற்றுவிட்டு பணத்துடன் வருவார்கள் என எண்ணி வெடி மருந்து கொண்டு வெடிக்கும் துப்பாக்கியுடன் நின்றார்கள்.

வியாபாரி திரும்பி வரும்போது வெடிமருந்து மழையால் நனைந்திருந்ததால் துப்பாக்கி வெடிக்கவில்லை..உடனே திருடர்கள் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போதுதான் உப்பு வியாபாரி நினைத்தான்,"மழை வந்ததால் உப்பு தான் போச்சு....மழை வராதிருந்தால் என் உயிர் அல்லவா போயிருக்கும்...ஆண்டவன் கருணையே கருணை...அது புரியாமல் ஆண்டவனை திட்டினேனே" என உருகினான்.


நமக்கு எந்த ஒரு துன்பம் வந்தாலும் ..அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்பதை அறிய வேண்டும்.அதுபோல் துன்பம் விலகவும் ஒரு வழி இருக்கும் என்றும் உணரவேண்டும்.