Friday, August 27, 2010

39. அளவிற்கு மிஞ்சக் கூடாது.- நீதிக்கதைகள்


மதன் வீட்டில் ஒரு வாய் குறுகலான ஜாடி ஒன்றில் அவனது அம்மா பாதாம் பருப்புகளை போட்டு வைத்திருந்தார்.

ஒரு நாள் அம்மா வெளியே செல்லும் போது மதனைப் பார்த்து ..மதன்..உனக்கு பசித்தால்..ஜாடியிலிருந்து கொஞ்சம் பாதாம்பருப்பை எடுத்து சாப்பிடு..',நான் வெளியே
போய் விட்டு சீக்கிரம் வந்து விடுவேன் 'என்று சொல்லிச் சென்றாள்.

பின் மதனும் ஜாடியினுள் கை விட்டு கையில் எவ்வளவு பாதம் பருப்பை எடுக்க முடியுமோ அதை எடுத்து ஜாடியினுள்ளிருந்து தன் கையை வெளியே எடுக்கப் பார்த்தான்.
ஜாடியின் வாய் குறுகலாக இருந்ததால் ..அவனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை...

கையில் இருக்கும் பாதாம் பருப்பை ஜாடியில் போட மனமில்லாமல் ...கையை வெளியே எடுக்கவும் முடியாமல் கண்ணீர் விட்டு புலம்பி அழுதான்...

அதற்குள் அவன் அம்மா வந்துவிட்டார்...அவர்..'மதன் உன் கையில் வைத்திருக்கும் பாதாம் பருப்பில் பாதியை ஜாடியில் போட்டுவிடு ..மீதி கொஞ்சம் பாதாம் பருப்புடன் கை சுலபத்தில்
வெளியே வந்துவிடும்' என்றார்.

எதையும் ஒரே சமயத்தில் அளவிற்கு அதிகமாக அடைய முயலக்கூடாது என்பதை உணர்ந்தான் மதன்.

Thursday, August 19, 2010

38.நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்


அருண் ஆறாம் வகுப்பு மாணவன்..அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர்.பிரகாஷிற்கு அவன் தந்தை
கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான்..தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான்.

கடவுள் அவன் முன்னால் தோன்றி ..'அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன்.ஆனால் யோசித்துக் கேள்'என்றார்.

அருண் உடனே..'இறைவா..நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும்' என்றான்.

அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார்.

உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது..அப்பா.அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.

அருணுக்கு பசி எடுக்க..அம்மா உணவு எடுத்து வந்தார்.அருண் உணவில் கை வைக்க அது பணமானது.தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அது பணமானது.பசியால் வாடிய அருண்.....
அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான்.

மீண்டும் இறைவனை வேண்டினான்.இறைவன் தோன்ற ,அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி ...தன்னை மன்னிக்கும்படியும் ..தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான்.

உடன் இறைவன் அருணைப்பார்த்து ..'அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும்..நோயற்ற வாழ்வும் தான் செல்வம்.அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது'
என்று கூறி..அவனுக்கு..அவ்விரண்டையும் அருளினார்.

Friday, August 13, 2010

37-தன் கையே தனக்கு உதவி (நீதிக்கதை)





ஒரு மாட்டு வண்டிக்காரன் தன் மாட்டு வண்டியை ஒரு குறுகலான தெருவில் ஓட்டிக் கொண்டுச் சென்றான்.அப்போது அருகில் இருந்த பள்ளம் ஒன்றை நோக்கி மாடுகள் செல்ல..வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் நன்கு சிக்கிக் கொண்டது.

பள்ளத்தில் மாட்டிக் கொண்ட வண்டியை மீண்டும் சரியாக சாலைக்குக் கொண்டு வர யாரேனும் வருகிறார்களா? எனறு பார்த்த வண்டிக்காரன்..யாரும் வராததால்..'ஆண்டவா! இந்த வண்டியை சரியான பாதைக்குக் கொண்டுவா.." என கடவுளை வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி' 'உன் தோள்களால் முட்டுக் கொடுத்து சக்கரத்தை பள்ளத்தில் இருந்துத் தூக்கி நிறுத்தி...மாடுகளையும் அதட்டி ஓட்டு..அதை விடுத்து..உன் அனைத்துக் காரியங்களுக்கும்..யாரேனும் வந்து உதவி செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்காதே!' என்று கூறி மறைந்தார்.

தன் கையே தனக்கு உதவி என உணர்ந்துக் கொண்ட வண்டிக்காரன்...வண்டியை மீண்டும் சாலைக்குக் கொண்டு வந்தான்.

பின்னர்..அவன் எந்த தன் வேலைக்கும் யாரையும்...ஏன்..ஆண்டவனையும் கூட அழைக்கவில்லை

Wednesday, August 4, 2010

36.நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.

தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.

ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு
அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அதனால் ...அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..

ஒரு நாரையை அது அணுகி ...அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும்..அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.

சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.

பின் நாரை ..ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது....

உடன் ஓநாய்'உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு ...அதை பத்திரமாக வெளியே எடுக்க
அனுமதித்தேனே,,அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்' என்று கூறிவிட்டது.

நாரை ஏமந்தது...

கொடியவர்களுக்கு உதவி செய்தால் ..பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும்.

ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.