Tuesday, September 3, 2013

128. ' நம் ஆசிரியர்களை வணங்குவோம் ' (நீதிக்கதை)


   ( செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் )

ஆசிரியர் பரமானந்தத்திற்கு அதிர்ச்சி....

வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது தலைமை ஆசிரியர் அறையிலிருந்து ....அந்த ஊருக்கு புதிதாய் வந்துள்ள காவல் துறை அதிகாரி அவரை பார்க்க விரும்புவதாக அழைப்பு வந்தது.

தான் எதுவும் தவறிழைக்கவில்லையே ..இப்போதெல்லாம் மாணவர்கள் தவறிழைத்தாலும் அடிப்பதைக் கூட நிறுத்திவிட்டோமே ..
எதற்காக தன்னை காவல் துறை அதிகாரி தேடி வரவேண்டும் என்றெல்லாம். ...எண்ணியபடி தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார் ஆசிரியர் பரமானந்தம்.

அங்கே....இன்ஸ்பெக்டர் அருண் அவருக்காகக் காத்திருந்தார். பரமானந்தத்தைக் கண்டதும் எழுந்த அருண்..அவர் கால்களைத் தொட்டு வணங்கினார்.

பின், ' ஐயா...என்னைத் தெரியவில்லையா..நான் தங்களிடம் எட்டாம் வகுப்பில் படித்த மாணவன் .ஒரு நாள் பக்கத்து மாணவனின் பையிலிருந்து பத்து ரூபாய் திருடிவிட்டேன்...இதைப் பார்த்த நீங்கள் ..என்னைக் கண்டித்து ...உங்களை நீங்களே பிரம்பால் அடித்துக் கொண்டீர்கள். பின்னர் கண்களில் கண்ணீர் மேலிட ....' என் மாணவன்...நாட்டில் சிறந்தவனாகத் திகழவேண்டும்...அவன் ஒரு திருடனாக ஆகக்கூடாது. நீ இன்று செய்த தவறு ...உன் தவறாகவே இருந்தாலும் .....உன்னை நல் புத்தி புகட்டாதது என் தவறு... ஆகவே தான் என்னை நானே தண்டித்துக்கொண்டேன். இது நீ எந்த ஒரு தவறிழைத்தாலும் ...இந்த நிகழ்ச்சி உன் ஞாபகத்திற்கு வரவேண்டும். அப்போது தான்.....நீ எந்த தவறும் செய்யமாட்டாய், என்றீர்கள்' என்றார் அருண்.

பின் மேலும் அவர் கூறுகையில்...'உங்களது அந்த சொல் தான்...என்னை இன்று ஒரு நேர்மையான அதிகாரியாய் ஆக்கியுள்ளது' என்றார்.

' ஆசிரியர் பணியின் சிறப்பே ....ஒரு கல்லை...செதுக்கி அழகான சிலையாய் ஆக்கும் சிற்பியின் செயலுக்கு சமமானது' என்றார்
தலைமையாசிரியரும்.'

' இவ்வளவு ஆண்டுகாலமாக...தான் ஆற்றிவந்த ஆசிரியர் பணி..அருணைப் போல பல நேர்மையான  மனிதர்களை உருவாக்கியிருக்கும் இந்த சமுதாயத்தில்' என பரமானந்தம் தான் பிறவிப்பயன் அடைந்தாற்போல மகிழ்ந்தார்.

நம் கல்வி எனும் கண்களைத் திறக்கும் ஆசிரியர்கள் வாழ்க என இந்நாளில் வேண்டுவோம்.

(புகைப்படம்- நன்றி இணையம்).