Thursday, June 15, 2023

44.பிறர் மனம் புண்படவேண்டாம்



44- பிறர் மனம் புண்பட பேசக்கூடாது 




ஒரு குளத்தில் ஒரு தங்க நிற மீனும் ஒரு கெளத்தி மீனும் வசித்து வந்தன. தங்க நிற  மீன் தங்கம் போல் பள பள வென்று இருக்கும். கெளத்தி மீன் கருப்பாக இருக்கும்.

அந்த குளத்தருகில் ஒரு மரத்தில் ஒரு காகம் இருந்தது.அது அவ்வப்பொழுது இந்த மீன்களுடன் பேசிக்கொண்டு பொழுதைக் கழிக்கும்.

தங்க நிற மீனுக்கு தான் பள பளவென்று இருப்பது பெருமை.அதனால் அது கெளத்தி மீனையும் காகத்தையும் எப்பொழுதும் ‘நீங்கள் இருவரும் கருப்பாக இருக்கிறீர்கள்’என்று கேலி செய்து கொண்டிருக்கும்

கெளத்தி மீன் இதைக்கேட்டு ஒன்றும் சொல்லாமல் இறைவன்  தன்னை இப்படி படைத்திருக்கிறான் என்ன செய்வது என்று அமைதியாக இருந்து விடும்.

ஆனால் காகம் வந்த சண்டையை விடாது.தங்க மீனிடம் நீ தங்க நிறமாக இருப்பது  உனக்கு ஆபத்து..அந்த நிறம் தான் உனக்கு பெரிய கெடுதலை கொடுக்கும் பார் என்று கூறும்.

ஒரு நாள் இரண்டு மீன்களும் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தன.மரத்தின் மேலே காகம் உட்கார்ந்துகொண்டு இரண்டு மீன்களும் விளையாடுவதை  பார்த்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு கொக்கு ஒன்று வந்து தங்க மீனிடம் 'தூரத்தில் நான் வந்து கொண்டிருந்தபோது உனது தங்க நிறம் என் கண்களை பறித்தது.அதனால் நீ தான் எனக்கு இன்றைய உணவு என்று கூறி அதனை கவ்வியது.தங்க மீன் அலற மேலே பார்த்துக்கொண்டிருந்த காகம் கொக்கின் தலையை கொத்த வலி தாங்காமல் கொக்கு தங்க மீனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.

பின்னர் காகம் கீழே வந்து தங்க மீனிடம் "நீ எப்பொழுதும் என்னையும் கெளத்தி மீனையும் கேவலமாக மனது புண்படும்படி பேசுவாய்.அதனால் தான் நீ இன்று ஆபத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாய்.இனிமேல் இப்படி மற்றவர்கள் மனது புண்படும்படி நடக்காதே" என்று அறிவுரை கூறியது.தங்க மீனும் தன் தவறை உணர்ந்தது.

நாமும் பிறர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது.



Friday, June 2, 2023

43.எதுவும் நம்மால் முடியும்

 43- எதுவும் நம்மால் முடியும்


சந்திரன்,பரசுராம்,வனஜா தம்பதியருக்கு ஒரே பையன்.அவனுக்கு பத்து வயதாகிறது.அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறன்.

 சந்திரன்  படிப்பிலும் சுமார் தான்.எப்பொழுதும் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுப்பான்.கேட்டால்  எனக்கு கணக்கு வராது என்று கூறுவான்.

வீட்டில் அப்பா அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார்.அதையும் அவனுக்கு ஓட்டுவதற்கு தைரியமில்லை.இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் அவன் இருந்தது பெற்றோர்களுக்கு மனதுக்கு வருத்தமாக   இருந்தது.

தாய்,தந்தை இருவரும் அவனை எப்படியாவது நம்பிக்கையுள்ள பையனாக மாற்றவேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்டனர்.

ஒரு நாள்  விடுமுறையன்று மூவரும் அந்த ஊருக்கு வந்துள்ள மிருககாட்சிசாலைக்கு போனார்கள்.சந்திரனுக்கு அங்குள்ள மிருகங்களை பார்த்ததில் மிகவும்சந்தோஷம்.ஒவ்வொரு மிருகத்தையும் பார்த்து ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டு வந்தான்.கடைசியில் ஒரு யானையை பார்த்தான்.அதன் காலை சங்கிலி போட்டு கட்டியிருந்தனர்.சந்திரன் அப்பாவிடம் அப்பா, " ஏன் இந்த யானை சங்கிலியுடன்  இருக்கிறது. யானை பலமுள்ளதுதானே,அது சங்கிலியை தன் காலால் உதைத்து எறிந்து விட்டு வரலாமே" என்று கேட்டான்.

அதற்கு தந்தை, " யானைக்கு பிறந்தவுடன் சங்கிலியை காலில் கட்டியுள்ளார்கள்.இப்பொழுது வளர்ந்தபிறகும் அந்த சங்கிலி அப்படியே உள்ளது.யானை மிகவும் பலம் வாய்ந்தது ஆனால் யானைக்கு மனதளவில் தன்னால் இந்த சங்கிலியைஅறுத்து வெளியே வரமுடியும் என்ற நம்பிக்கை  அதற்கு இல்லை. அதனால் தான் அப்படியே இருக்கிறது." என்றார்

மேலும், "அதுபோல இல்லாமல் நீ நம்பிக்கையுடன் எந்த வேலையையும் செய்யவேண்டும்.தன்னால் முடியும் என்ற எண்ணம் உனக்கு வரவேண்டும்" என்றார்.

தந்தை சொன்னதைகேட்ட சந்திரனுக்கு தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது.வீட்டுக்கு  வந்தவுடன் தன்னால் முடியும் என்று பள்ளியில்  கொடுத்த கணக்குகளை  போட்டான்.சரியாக  இருந்தது.

காலையில் நான் தைரியமாக பள்ளிக்கு cycle ல் செல்வேன் என்று கிளம்பினான்.அவனது பெற்றோர்களுக்கு  மிகவும் சந்தோஷம்.

குழந்தைகளே நீங்களும் எதுவும் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கவேண்டும்.