Thursday, December 29, 2011

101. போதுமென்ற மனம்...(.நீதிக்கதை)



மோகன் படிக்கும் பள்ளியில் அவனுடைய நண்பனான கந்தனின் பிறந்த நாளுக்கு கந்தனின் தந்தை மாணவர்களுக்கு கொடுப்பதற்காக ஒரு கூடையில் நிறைய ஆப்பிள் பழங்களைக் கொண்டு வந்தார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் நின்று கொண்டிருந்த மோகனிடமும் அப்படியே ஒரு பழத்தைக் கொடுத்தார்..

கூடையில் மீதம் இரண்டு பழங்கள் இருப்பதைக் கண்ட மோகன் ..மேலும் கையை நீட்டினான்.

அவரும் இன்னொரு பழத்தை எடுத்து அவனிடம் தந்தார்.இன்னொரு கையில் அதை வாங்கினான் அவன்..அப்போதும் மோகனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

இரண்டு பழங்களையும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு ...அவன் மீண்டும் கையை நீட்டினான்.

அவர் கடைசியாக இருந்த பழத்தையும் அவனிடம் கொடுத்தார்.

அப்போது அவன் அணைத்திருந்த பழம் ஒன்று நழுவி தரையில் விழுந்தது. அதை எடுக்க குனிந்தான்.அப்போது மற்ற இரண்டு பழங்களும் கீழிருந்து உருண்டு ஓடி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தன.

மோகன் கிடைத்த ஆப்பிள் பழங்களை நழுவ விட்டோமே என்று வருந்தினான்.

அப்போது கந்தனின் தந்தை ...'தம்பி..நான் ஒரு ஆப்பிள் கொடுத்தேன்.மற்றவர்களைப்போல அதுவே போதும் என நீ நினைக்கவில்லை.ஆனால் மேலும் மேலும் ஆசைப்பட்டாய்...கடைசியில் மற்றவர்களுக்கு கிடைத்த ஒரு ஆப்பிள் கூட உனக்கு கிடைக்கவில்லை...இனிமேலும் ..அதிகம் ஆசைப்படாது கிடைத்தது போதும் என்று நினை...போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும் என்றார்.

பின்னர் தனது கைப்பையிலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து மோகனுக்கு கொடுத்தார்.  மோகன் வெட்கி தலை குனிந்தான்.

Saturday, December 24, 2011

100. நூற்றுக்கு நூறு




(ஒரு மாறுதலுக்காக ..பெற்றோருக்கான கதை இது)

கணக்கில் நூற்றுக்கு தொண்ணூற்றி ஏழு மதிப்பெண்கள் வாங்கிய கண்ணன் விடைத்தாளை சந்தோஷத்துடன் அப்பாவின் முன் நீட்டினான்.

பையனின் மகிழ்ச்சியில் தானும் கலந்து கொண்டு தன் மகனை தட்டிக்கொடுக்காமல்....நீ வாங்க முடியாத அந்த மூன்று மதிப்பெண்கள் என்ன என்றும் ..ஏன் அதை கோட்டை விட்டாய் என்றும் சற்று கோபத்துடன் கேட்டார் கண்ணனின் தந்தை சரவணன்.

மகிழ்ச்சியோடு வந்த கண்ணன் ....முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினான்.

கண்ணனின் தந்தைக்கு கணக்கு ஆசிரியராய் இருந்தவர் அரவாமுதன்...அவரே தன் மகனுக்கும் ஆசிரியராய் அமைந்து விட்டதால்....அடுத்த நாள் பள்ளியில் அவரை சந்தித்தார் கண்ணனின் தந்தை.

ஆசிரியர்,'  'சரவணா உன் மகன் மிகவும் புத்திசாலி...97 மதிப்பெண்கள் பெற்ற அவனை பாராட்டாமல் மூன்று மதிப்பெண்கள் எங்கே போயிற்று என்று கேட்கிறாய்...
ஆனால் நீ படிக்கும் போது எழுபது மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியதில்லை.. உன் தந்தை வந்து ...நீ வாங்காமல் விட்ட அந்த முப்பது மதிப்பெண்கள் பெரிது என எண்ணாமல் உன்னை பாராட்டினார்....அந்த புத்தி உனக்கு ஏன் இல்லாமல் போனது.....நீ மட்டுமல்ல ...உன்னைப்போல அனைத்து பெற்றோரும், .தங்கள் குழந்தைகள்
படிப்பதைக்கண்டு பெருமைப்படுங்கள். .குழந்தைகளுக்கு இன்றைய வயதில் உள்ள புத்திசாலித்தனம்...அந்த வயதில் உங்களுக்கு இருந்ததா என்று சிந்தியுங்கள்.' என்றார்.

ஆசிரியரின் கூற்றிலிருந்த உண்மை கண்ணனின் தந்தையை சுட்டது.

Monday, December 19, 2011

99. தகுதிக்கு மீறிய செயல் (நீதிக்கதை)




ஒரு காட்டில் சிற்றெறும்பு ஒன்று தன் கூட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தது.

அது காட்டில் விலங்குகள் தன்னைவிட வலிமை மிக்க விலங்குகளால் உணவிற்காக கொல்லப்படுவதைப் பார்த்ததும்...

அந்த விலங்குகளைப் போல தங்கள் இனமும் வலிமை அடையவேண்டும் என விரும்பியது.

ஆகவே அது இறைவனை வேண்டி தவம் இருந்தது...

ஒரு நாள் இறைவன் அந்த எறும்பின் முன் தோன்றி "'எறும்பே உனக்கு என்ன வேண்டும் " என்றார்.

இறைவன் தன்முன்னே வந்ததுமே....மிகவும் மகிழ்ந்த எறும்பு... " நாங்கள் கடித்தால் சாக வேண்டும் ".அந்த வரம் வேண்டும்'. என்றது.

எறும்பு கேட்டதைக் கண்டு சிரித்த இறைவன் ' நன்கு யோசித்துத்தான், கேட்கிறாயா? என்றார்.எறும்பும் 'ஆம்.'.யோசித்துத்தான் கேட்கிறேன். என்றது

'அப்படியே ஆகட்டும்' என்று கூறி மறைந்தார் இறைவன்.

தங்கள் இனத்திற்கு வலிமை சேர்த்துவிட்டதால் மகிழ்ந்த சிற்றெறும்பு ....தனக்கு கிடைத்த வரத்தை சோதிக்க எண்ணி...காட்டில் வேட்டையாட வந்த வேடனின் காலைக் கடித்தது.

உடனே வேடன்...காலைக் கடித்த எறும்பை ' பட் ' என அடிக்க...அது இறந்தது.

பாவம் எறும்பு...அது இறைவனிடம் கேட்ட வரம்..' நாங்கள் கடித்தால் சாக வேண்டும்' என்பதே..யார் சாக வேண்டும் என கேட்கவில்லை..

தான் கேட்ட வரமே தங்கள் இனத்துக்கு எமனாக வந்துவிட்டதை அது உணரவில்லை.

எறும்பு தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதே அதன் மரணத்திற்கு காரணமாய் இருந்துவிட்டடது.

Monday, December 12, 2011

98. பெற்றோரே முதல் தெய்வம்..(நீதிக்கதை)




சரவணன்...எப்போதும் காலை எழுந்ததும் தன் பெற்றோர்களுக்குத் தேவையான பணிவிடைகளை செய்த பின்னரே மற்ற வேலைகளைக் கவனிப்பான்.அதே நேரத்தில் அவனுக்கு கடவுள் பக்தியும் அதிகமாக இருந்தது.

ஒரு நாள் இறைவன் அவனுக்குக் காட்சியளித்தார்......

அப்போது அவன் தன் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான்.அப்பணியை பாதியில் நிறுத்திவிட்டு இறைவனைக் காண விரும்பவில்லை..

' இறைவா....எனக்காக சற்றுநேரம் பொறுங்கள்..பெற்றோர்களுக்கான என் தினசரி கடமையை முடித்துவிட்டு வருகிறேன் என்றார்.

இறைவனும் வீட்டுத் திண்ணையில் அவனுக்காக அமர்ந்திருந்தார்.

பின்னர் அவன் இறைவனிடம் வந்து ' தங்களை தாமதப்படுத்தியதற்கு மன்னியுங்கள் ; என்றான்....

ஆனால் இறைவன் மன மகிழ்ச்சியோடு...'சரவணா...இறைவனே நேரில் வந்தும் ....பெற்றோர்கள் தான் முதல் கடவுள் என அவர்களுக்குப் பணிவிடை செய்த பின்னரே என்னைக் காணவந்த உன்னை பாராட்டுகிறேன்.அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை உணர்ந்தவன் நீ. வாழ்வில் எல்லா செல்வத்தையும் பெற்று வாழ்வாயாக...'என்று வாழ்த்திச் சென்றார்.

இதையே திருவள்ளுவரும் .....

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

              என்றுள்ளார்.
(எழுத்துக்கள் எல்லாவற்றிலும் முதலாக உள்ள எழுத்து ' அ'  அது போல ஒருவனுக்கு உலகில் முதல் முதலான தெய்வங்கள் 'தாய் தந்தையரே' )

Sunday, December 4, 2011

97. நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)




கந்தனும், முருகனும் நண்பர்கள்.

கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.

ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.

உடன் கந்தன்...' நான் புதையலைக் கண்டேன்' என்றான்.

அதற்கு முருகன் ...'இல்லை நண்பா..நான் என்று சொல்லாதே...நாம் புதையலைக் கண்டோம்..என்று சொல்' என்றான்.

தனக்கும் அதில் பங்கு உண்டு என்று மறைமுகமாக உணர்த்தினான்.

அவர்கள் சிறிது தூரம் சென்றதும்...அந்த மூட்டைக்கு உரியவன் ...கந்தனும்,முருகனும் தனக்கு சொந்தமான மூட்டையை எடுத்து செல்வதைப் பார்த்து அவர்களை நோக்கி
'திருடன்..திருடன்' என ஓடி வந்தான்.

உடன் கந்தன் முருகனிடம் ' நாம் ஒழிந்தோம்' என்றான்.

அதற்கு முருகன் 'இல்லை நண்பா...நீ முன்னால் சொல்லியபடியே சொல்..நீயே மூட்டையை கண்டெடுத்தாய். நாம்..இல்லை...என்று ஓடிவிட்டான்.

நமக்கு ஆதாயம் வரும்போது நம்முடனும்...ஆபத்து வரும்போது நம்மை விட்டு விலகி இருப்பவனையும் நாம் நண்பனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
அவர்கள் நம் விரோதியை விட கொடியவர்கள்/