Saturday, May 30, 2015

146- ஒற்றுமையின் பயன்

                               

வியாபாரி ஒருவன், பொருட்கள் வாங்க மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தான்.அந்தப் பாதையின் நடுவில் ஒரு பெரிய பாறை ஒன்று வழியை அடைத்துக் கொண்டிருந்தது.மேலே நடக்கவும் வழி இல்லை.

அந்தப் பாறையை நகர்த்தி வழி உண்டாக்க முயன்றான்.ஆனால், அந்தப் பாறை சிறிதளவு கூட நகரவில்லை.

"அடடா! இரவு வந்து விட்டால்...கொடிய விலங்குகள் இங்கு வரலாமே! என்ன செய்வது?" என தனது விதியை நொந்தபடியே, சுற்றி நோட்டம் இட்டான்.

அப்போதுதான்...அவனைப்போல பலர் அந்தப் பாறையை அசைக்க முடியாமல் அங்கு அமர்ந்துள்ளதைக் கண்டான்.அனைவரின் முகத்திலும் சோகம்.

அப்போது அறிவாளி ஒருவன் அவ்விடம் வந்தான்.அவனாலும், பாறையை அகற்றி வழி உண்டாக்க இயலவில்லை.உடனே அவனுக்கு " தனிப்பட்ட ஒருவனால் பாறையை நகர்த்த முடியவில்லை.அதுவே, அனைவரும் ஒன்று கூடி   முயன்றால் பாறையை அகற்றலாம்" என்று யோசனை வந்தது.

அவன் அதை அனைவரிடமும் சொல்ல, அனைவரும் முயன்றனர்.இப்போது பாறை அசைந்து கொடுத்ததுடன், நகர்ந்து மலைச் சரிவில் உருண்டது.

பாதை தெரிந்தது.

அனைவரும் ஒன்றுபட்டு முயன்றதால்....வழி கிடைத்த மகிழ்ச்சியில், அவரவர் பயணத்தைத் தொடர்ந்தனர்.

Friday, May 29, 2015

145 - படிப்பின் அவசியம்

                     

ஒரு ஊரில் படிப்பறிவு இல்லாத, சிந்திக்கும் திறனற்ற மூடன் ஒருவன் வசித்து வந்தான்.

அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது.அது, அவன் தினமும் போடும் தவிட்டைத் தின்று..பால் தந்தது. அந்தப் பாலை விற்று மூடன் தன் வாழ்நாளை கழித்து வந்தான்.

ஒருநாள், பசுவிற்குப் போட தவிட்டுப் பானையைத் தூக்கி வரும் போது, அப்பானைத் தவறிக் கீழே விழுந்து, உடைந்தது.அதில் இருந்த தவிடு அனைத்தும் சாக்கடையில் விழுந்து கரைந்தது.

இதைக்கண்ட மூடன்..மனம் வருத்தப்பட்டு, இறைவனிடம் வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ கேள்.அதைத் தருகிறேன்' என்றார்.

சிந்திக்கும் திறனற்ற, மூடனான அவன் இறைவனிடம், "இறைவா...என் தவிட்டுப் பானை உடைந்து விட்டது.அதனால் தவிடு மொத்தமும் சாக்கடையில் கரைந்தது.ஆகவே எனக்கு உடனடியாக ஒரு பானையும், தவிடும் வேண்டும்" என்றான்.

அவனது முட்டாள் தனத்தைக் கண்டு சிரித்த இறைவன், பானையையும் தவிடையும் அளித்துவிட்டுச் சென்றார்.

அவன், படிக்காத மூளையற்ற மூடனாய் இருந்ததால், அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்தான்.

இதனால் நாம் அறியும் நீதி, ஒவ்வொருவருக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் எனத் தெரிந்து கொள்ளும் அதே நேரம்...நம் மூளையை உபயோகித்து சிந்திக்கும் திறனையும்  வளர்த்து கொள்ள வேண்டும்