Thursday, September 30, 2010

44-எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. (நீதிக்கதை)









Posted by Picasa



அசோக் என்பவன் தான் இருக்கும் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது.



நான்கு மைல் நடந்துதான் அவ்வூருக்கு செல்ல முடியும்,



அவன் காலை கிளம்பினான்.



செல்லும் வழியில் வயலில் பூசணிக்கொடிகள் பரவியிருந்தன.ஒவ்வொன்றிலும் அவற்றில் பல பூசணிக்காய்கள் காய்த்திருந்தன..அதைப் பார்த்தவாறு நடந்தான்.

சிறிது நேரத்தில்..வெயிலின் கொடுமை அதிகமாயிற்று.அசோக்கிற்கு வேர்வை வழிந்தோடியது..அவன் களைப்பானான்.சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு செல்ல தீர்மானித்தான்.



அப்போது..சற்றுத் தொலைவில் அரசமரம் ஒன்றிருப்பதைக் கண்டான்.அம்மரத்தின் அடியில் சென்று அமர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.

மரத்தில் சிறு சிறு காய்கள் நிறைய இருந்தன.

உடனே ..'கடவுள் ஏன் அறியாமல் சிறிய பூசணிக்கொடிக்கு பெரிய காயையும்..பெரிய இந்த மரத்திற்கு சிறிய காய்களையும் படைத்துள்ளார் ' என்று நினைத்தான்.



அப்போது மரத்திலிருந்து சிறிய காய் ஒன்று உதிர்ந்து அவன் தலையில் விழுந்து..அவனுக்கு சற்று வலியை ஏற்படுத்தியது.

உடனே..'கடவுள் காரணமில்லாமல் இப்படி படைக்கவில்லை.இந்த மரத்தில் பூசணி அளவு காய்கள் இருந்திருந்தால்..இவ்வளவு நேரம் என் தலை போயிருக்குமே' என உணர்ந்தான்.

தனது அறிவீனத்திற்கு வெட்கமடைந்தான்.

இறைவன் காரணமில்லாமல் எந்த ஒன்றையும்   செய்வதில்லை..படைப்பதில்லை

Monday, September 20, 2010

43- காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)


ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.

அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.

மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.

அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.

அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.

காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.

காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியது.

Tuesday, September 14, 2010

42-குரங்கும்..குருவியும் (நீதிக்கதை)



நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது...

குளிரில் நடுங்கியபடி குரங்கு ஒன்று மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

மரத்தில் கூடுகட்டிக் கொண்டு , அதில் இருந்த தூக்கணாங்குருவி தலையை வெளியே நீட்டி குரங்கைப் பார்த்து..'குரங்காரே! இப்படி மழை காலத்தில் மழையில் நனைகிறீர்...வெயில் காலத்தில் வெயிலில் வாடுகிறீர்..இதையெல்லாம் தடுக்க..ஒரு வீடு கட்டிக் கொள்ளக் கூடாதா.? கைகள் இல்லாத நானே கூடு கட்டிக் கொண்டுள்ளேன்..இரு கைகள் உள்ள நீங்கள் ஏன் சோம்பித் திரிந்து, பின் அவதிப் படுகிறீர் கள்' என்றது.

குருவியின் அறிவுரையைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. உடனே மரத்தில் ஏறி குருவியின் கூட்டைக் கலைத்தது. 'எனக்கு வீடு கட்டிக் கொள்ள சோம்பேறித்தனம் தான்..ஆனால் கூட்டை பிய்ப்பதற்கு அல்ல..இப்போது கூடின்றி நீயும் அல்லல் படு' என்று சொல்லிச் சென்றது.

முட்டாள்களுக்கு புத்தி சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால்..நமக்குத்தான் தீங்கு வரும்.

Tuesday, September 7, 2010

41."நாம் வெற்றி பெற".- (நீதிக்கதை)


இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன...அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.

தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை...
இது மிகவும் அவநம்பிக்கை கொண்டது.

ஆதலால்..தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாது ..பாலிற்கு அடியில் போய் உயிரை விட்டது...

மற்ற குட்டித் தவளையோ நம்பிக்கை உள்ளது.
பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்து உதைத்தது.
நீச்சல் போட்டது...உந்தி..உந்தி கலக்கியது.

பால் கலங்க ஆரம்பித்து அதில் ஆடை படர்ந்தது...மேலும்..மேலும் .. அதை தவளை உதைக்க..சிறிது..சிறிதாக வெண்ணைய் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.

நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறி...பின் வெளியே தாவிப் பாய்ந்தது...

எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்காதவன் தோல்வியை சந்திக்கமாட்டான்...

நாம் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் அக்காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்

Thursday, September 2, 2010

40.புலி...குரங்கு...மனிதன்.(நீதிக்கதை)




அருண் ஒரு நாள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான்.கிட்டதட்ட இருட்டும் சமயம்.

அந்த சமயம் புலி ஒன்று அவனை பார்த்து துரத்த ஆரம்பித்தது...

அவன் உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.வந்தவனுக்கு அந்த மரத்தில் வசித்த குரங்கு ஒன்று இடமளித்து..அவன் பசியையும் தீர்க்க
பழங்களைப் பறித்து கொடுத்தது.

மரத்தின் கீழே பசியோடு இருந்த புலி குரங்கிடம் ' குரங்கே அந்த மனிதனை நீ கீழே தள்ளு ...எனக்கு பசி ' என்றது.

ஆனால் குரங்கோ ..'இவன் என்னை நம்பி வந்தவன்.அதனால் தள்ள மாட்டேன்.நம்மை நம்பியவர்க்கு துரோகம் செய்யக்கூடாது' என மறுத்தது.

பிறகு குரங்கு தூங்க ஆரம்பித்தது...அப்போது புலி..'மனிதனே...எவ்வளவு நேரமானாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் ..எனக்கு கொள்ளைப் பசி.
அந்த குரங்கையாவது தள்ளி விடு ..நான் சாப்பிட்டுவிட்டு செல்கிறேன் ' என்றது.

உடனே அருண் .. தூங்கும் குரங்கை தள்ளி விட ..புலி அதை தின்று விட்டு மறைந்தது.

தன்னை நம்பியவனை காப்பாற்றியது குரங்கு ..தனக்கு உதவிய குரங்கை தன்னை காத்துக்கொள்ள தள்ளிவிட்டு ..நம்பிக்கை துரோகம் செய்தான் அருண்.

நாம்..இந்த கதை மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது - நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது.ஆபத்துக்கு நமக்கு உதவியவர்களின் நற்செயலை மறக்கக் கூடாது.