Thursday, February 18, 2021

6. பூட்டும்...சாவியும்.. (நீதிக்கதை)

 

ராமனாதன் தன் குடும்பத்துடன் சில மாதங்கள் வெளியூர் சென்றுவிட்டு  அன்றுதான் வீடு திரும்பினார்.

வீட்டின் வாசலில் நின்றிருந்த ராமனாதன் தன்மனைவியிடம் 'பூட்டைத் திறக்கும் சாவியைக் கொடு என்றார்'. ராமனாதனின் மனைவியோ சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்து தன் கைப்பையை நோண்டிக் கொண்டிருந்தாள்.

சாவி கிடைக்காததால்...பக்கத்தில் இருக்கிற வீட்டிலிருந்து ஒரு சுத்தியை வாங்கி பூட்டை உடைக்க ஆரம்பித்தார்.சுத்தியால் வாங்கிய அடி பூட்டிற்கு மிகவும் வலித்தது.அந்நேரம் சாவியை மனைவி கண்டுபிடித்து விட...அதனால் பூட்டை எளிதாக திறந்து விட்டார் ராமனாதன்.

அப்போது  சுத்தியல்  சாவியை பார்த்து கேட்டது.  பூட்டின்  தலையில் என்னால்  அவ்வளவு பலமாக அடித்தவர் உன்னை உபயோகித்து உடனே திறந்துவிட்டாரே.....அது எப்படி என்றது..

அதற்கு சாவி சொன்னது...' நீ பூட்டை திறக்க அன்புடன் செயல்படாது வ்ன்முறையை உபயோகித்து அதன் தலையில் அடித்தாய்,அதனால் அது திறக்கவில்லை,ஆனால் நானோ அன்பாக அதன் இதயத்தில் நுழைந்து திறக்க முயற்சித்தேன்,என்  அன்புக்கு கட்டுபட்டு அது திறந்தது.

எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும் ..தன் இதயப்பூர்வமான அன்பினைச் செலுத்தினால் ...அவர்களை மாற்றிவிட முடியும் என்பதை உணரவேண்டும்.

Tuesday, February 9, 2021

5. பேராசை... (நீதிக்கதை)

 ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால்  எப்படி நிற்காதோ..அது போல திருப்தியற்ற மனம் உள்ளவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காமல் அவர்கள் மனம் சோக மடமாகவே இருக்கும்.அதற்கான ஒரு கதை.

குமரனின் மாமா கந்தசாமி...குமரனுக்கு சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அதனால் மிகவும்  சோகமாக இருந்த குமரனிடம் ' உன் மாமாவிற்கு வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.வயது மூப்பின் காரணமாகவே இறந்துவிட்டார்.மரணம் இயற்கையல்லவா..ஆனால் அதேநேரம் அவர் அவரது சொத்துக்களை உனக்கு எழுதி வைத்ததற்காக சந்தோஷப்படு என்றான்ஒரு நண்பன்.

'என் சோகம் உனக்கு தெரியாது...இப்படித்தான் போன வாரம் என் சித்தப்பா பத்து லட்சம் சொத்தை என் பெயருக்குஎழுதி வைத்துவிட்டு அமரராகி விட்டார் என்றான்.' குமரன்.

'உன் சித்தப்பாவை எனக்கு தெரியும்.அவர் இறக்கும்போது அவருக்கு வயது85. பணம் வந்ததை நினைத்து சந்தோஷப்படு....முட்டாள் தனமாக அழாதே..என்றான் நண்பன்.

உனக்கு தெரியாது.' பணக்காரர்களக இருந்து என் மாமாவும் சித்தப்பாவும் இறந்துவிட்டார்கள்.இனிமேல் என் பேரில் சொத்துஎழுதிவைக்க உறவு யாருமில்லை' என்றான்

.ஆசைக்கு அளவு வேண்டும். பேராசை கொண்டவன் எப்போதும் திருப்தி அடையமாட்டான்.

எப்போதும் திருப்தி அடையாதவன் எந்நாளும் சந்தோஷமாக இருக்கமுடியாது.

Friday, February 5, 2021

4.ஆணவம் வேண்டாம் ...(நீதிக்கதை)

 ஓரு ஊரில் மெத்தப்  படித்தவன் ஒருவன் இருந்தான்.மற்றவர்கள் எல்லாம் அவனைவிட ஏட்டுக்கல்வியினை குறைவாகவே படித்தவர்கள்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் உண்டு.அதனால் அவன் அனைவரையும் அலட்சியம் செய்து வந்தான்.அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு துறவி வந்தார்.ஊர் மக்கள் அவரை வரவேற்று..வணங்கி மகிழ்ந்தனர்.

அவரைக்காண அந்த அறிவாளியும் வந்தான்.அவனைப்பற்றி துறவி முன்னரே கேள்விபட்டிருந்தார். அவருக்கு  முன்னால் கால் மீதுகால் போட்டு அமர்ந்து ஆணவத்துடன் ...'உங்களை மக்கள் மதிக்கிறார்கள்' ஆனால் உண்மையில் உங்களை விட நான் அதிகம் அறிந்தவன்' என்றான்.

அதற்கு துறவி..' இந்த உலகில்  அனைத்தும் அறிந்தவன் எவனும் இல்லை.கற்றது கைமண் அளவு தான்.உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.நமது அறிவு என்பது ஓர் எறும்பு போல ...நமக்கு தெரியாத விஷயங்கள் யானையைப் போல....யானையின் காலுக்கு அடியில் கிடக்கும் எறும்பால்....என்றுமே யானையை முழுமையாக பார்த்து விட முடியாது.யானையின் ஒரு பகுதியைத் தான் பார்க்கமுடியும்.எறும்பின் பார்வையைப் போல உங்களது அறிவு கூர்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை யானையை போல . இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு என்று வருகிறதோ அன்று தான் உங்கள் ஆணவம் குறையும்' என்றார்.

சிறிது யோசித்த அறிவாளி,துறவி சொன்னது உண்மை என உணர்ந்து...அவரிடம் மன்னிப்பு க்கேட்டான். அன்று முதல் ' அனைத்தும் தனக்கு தெரியும்' என்ற ஆணவத்தைவிட்டான்.

உலகத்தில் எல்லாம் அறிந்தவன் என்று யாருமில்லை என்பதைஉணர்ந்தால் ..யாருக்கும் ஆணவம் ஏற்படாது.

Tuesday, February 2, 2021

3. பிரச்சனையை தீர்க்கும் வழி...(நீதிக்கதை) ஓரு நாட்டின் அரசன் தனக்கு சமயோசித புத்தியுள்ள முதலமைச்சர் ஒருவரை தேர்ந்தெடுக்க எண்ணினான்.

அவரது அமைச்சரவையில் நான் கு அமைச்சர்கள் இருந்தனர்.அவர்களை அழைத்து அரசன் 'என்னிடம் ஒரு பெரிய பூட்டு இருக்கிறது.கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட  அப்பூட்டை திறக்கவேண்டும்'. நாளை உங்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பு தரப்படும்.யார் பூட்டை  குறைவான நேரத்தில் பூட்டை திறக்கிறார்களோ அவரே முதலமைச்சர் ஆவார்.' என்றார்.

முதலமைச்சர் ஆகும் ஆசையில்,அவர்கள் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும்,கணிதம் பற்றிய எல்லா குறிப்புகளையும் தேடினார்கள்.எதுவும் கிடைக்கவில்லை.ஒரு அமைச்சர் மட்டும் ' இந்த அறிவிப்பில் ஒரு மர்மம் இருப்பதாக எண்ணினார்;. அதைப்பற்றி மட்டும் யோசிக்கலானார்.

அடுத்த நாள் அரசவையில் அந்த பூட்டை சேவகர்கள் தூக்கி வந்து மையப்பகுதியில் வைத்தனர்.பூட்டின் பிரம்மாண்டம் அமைச்சர்களுக்கு படபடப்பை அதிகரித்தது.ஆனால் மூன்று அமைச்சர்களுக்கு பூட்டை எப்படி திறப்பது என்று புலப்படவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

நான்காவது அமைச்சர் பூட்டின் அருகே வந்து பூட்டை பார்த்தார்.பூட்டு பூட்டப்படவில்லை. சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை திறந்தார். அரசர் அவரை அமைச்சர் ஆக்கினார்.

பிரச்சனையை தீர்க்கவேண்டுமானால் முதலில் பிரச்சனையை புரிந்துகொள்ளவேண்டும்.மனம் பதட்டமில்லாமல் ஆர அமர சிந்திக்கவேண்டும்.அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வானது கிடைக்கும்.


Friday, January 29, 2021

2. அறிவுடைமை (நீதிக்கதை)

 

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பூனை ஒன்று வகுப்பில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தது.

ஆனாலும் ....ஆசிரியர் அதைப்பற்றி கவலைப்படாது  பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.ஆனால் மாணவர்களின் கவனம் பாடத்தில் செல்லாமல்...பூனையின் மீதே இருந்தது.

அதனால் அவர்...அந்த பூனையை பிடித்து பக்கத்தில் இருந்த ஒரு தூணில் கட்டச்சொன்னார்.பூனையும் கட்டப்பட்டது.

அடுத்த நாள் முதல்..அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு செய்யக்கூடாது என பாடம் நடத்தும்போது தவறாமல் பூனை தூணில் கட்டப்பட்டது.

சில மாதங்கள் கழித்து ஆசிரியர் வெளியூர் சென்றுவிட   வேறு ஒரு ஆசிரியர் வந்தார்..ஆனாலும் மாணவர்கள்...வகுப்பு ஆரம்பிக்கும் முன் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.

புது ஆசிரியர் வந்து....மாணவர்களிடம் ....பூனையை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டார்.

மாணவர்களும்...முந்தைய ஆசிரியர் தினமும் பூனையை தூணில் கட்டிவிட்டுத் தான் வகுப்பில் பாடத்தை நடத்துவார், என்றனர்.

புது ஆசிரியருக்கோ இது ஆச்சிரியத்தை தந்தது.பின்னர் அவர் மாணவர்கள் சொன்னதிலிருந்து ,பூனை வகுப்பில் பாடம் நடக்கும் போது  இங்கும் அங்கும் நடந்தது தான் பூனையை கட்டி வைக்க காரணம் என்பதைபுரிந்து கொண்டார்.

பின் மாணவர்களிடம் அவர்களின் அறியாமையை விளக்கி...எந்த ஒரு செயலுக்கும்...அது ஏன் செய்யப்படுகிறது என்பதை அறிந்து செயல்படவேண்டும் எனவும்...அதை அறியாமல்....இயந்திரத்தனமாக...சிந்திக்காமல் நடக்ககூடாது என்று கூறினார்.

இதையே திருவள்ளுவர்'

எப்பொருள் யார்யார்வாய்க்  கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

என்றார்.

இதற்கானப் பொருள்...'எந்த ஒரு பொருள் குறித்தும் எவர் எதைச்சொன்னாலும் (செய்தாலும்)ஆதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல் உண்மை என்ன என்பதை ஆரய்ந்து தெளிவது தான் அறுவுடைமையாகும்.Wednesday, January 27, 2021

சிறுவர் உலகம் - பாகம் 4.

 1. ' இதுதான் உலகம் 

-------------------------------------------ஒரு அழகிய கிராமத்தில் ஏரிக்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ' என்னைக்காப்பாற்று...என்னை காப்பாற்று' என ஆற்றினுள் வலைக்குள் சிக்கிக்கொண்ட முதலை ஒன்று இவனைப்பார்த்து கதறியது.

' உன்னை வலையிலிருந்து காப்பாற்றினால் நீ என்னை விழுங்கிவிடுவாயே ' என்றான் சிறுவன்.

முதலையோ' உன்னை சத்தியமாக சாப்பிடமாட்டேன்' என்றது.

முதலையின் சத்தியத்தை நம்பி சிறுவன் வலையை அறுக்க ஆரம்பித்தான்.வலையிலிருந்து முதலில் முதலையின் தலை வெளியே வர..உடன் சிறுவனின் காலைப்பற்றியது முதலை.

'பார் முதலையே..இது நியாயமா' என சிறுவன் கதறிக்கொண்டு கேட்க.'இதுதான் உலகம்' என்றது முதலை.

முதலையின் வாய்க்குள் போய் கொண்டிருந்த சிறுவன்.' மரத்தில் இருந்த பறவைகளிடம் கேட்டான்,' முதலையை காப்பாற்றியதற்கு எனக்கு இந்த தண்டனையா.' என கேட்டான்.பறவைகளும் உடனே' இதுதான் உலகம்' என்றன.

இப்படி யாரைக்கேட்டாலும் சிறுவனுக்கு உதவாது' இதுதான் உலகம்'..இதுதான் உலகம்' என்றனர்.

அப்போது அங்கு ஒரு முயல் வந்தது.அது முதலையைப் பார்த்து உனக்கு உதவியவனை நீ இப்படி செய்வது தர்மமா? என்று கேட்டது.முதலைக்கு கோபம் ஏறியது.சிறுவனின் காலை பிடித்தபடியே ....முயலிடம் ஏதோ சொல்ல ..முயல் ' நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை..சரியாக வாயைத்திறந்து சொல்'.

முதலை உடனே,'நான் வாயைதிறந்து சொன்னால் சிறுவன் ஓடி விடுவானே' என்று ஒரு மாதிரி வாயை கோணி சொல்லி முடித்தது.

உடன் முயல்,' உன் வாலை மறந்து விட்டாயா.நீ வாயை திறந்ததும் சிறுவன் தப்ப முயன்றால்...வாலால் அடித்து வீழ்த்தலாமே'.

அப்போதுதான் தன் வாலின் திறமையை அறிந்த முதலை சிறுவனை விட்டது.உடன் முயல் சிறுவனை நோக்கி ' தம்பி ஓடி விடு..ஓடி விடு' என்றது.

சிறுவன் ஓட ...முதலை அவனை தன் வாலால் அடிக்க முயன்றது.அப்போதுதான் தன் வால் பகுதி இன்னமும் வலைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை முதலை உணர்ந்தது. அப்போது முதலை முயலிடம் 'நீ செய்தது நியாயமா?' என்றது.

அதற்கு முயல் ' இது தான் உலகம்' என்று சொல்லியபடியே தாவி ஓடி மறைந்தது.


Monday, January 11, 2021

61- முட்டாளுக்கு புத்தி சொல்லி பயன் இல்லை

 
குளிர் காலம்.ஒருநாள் மிகவும் குளிராக இருந்தது.காட்டில் இருந்த குரங்கிகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.


கொஞ்சம் நெருப்புக் கிடைத்தால் சருகுகளைப் போட்டு தீமூட்டி குளிர் காயலாம் என குரங்குகள் எண்ணின.நெருப்புக்கு என்ன செய்யலாம் என அவை யோசித்த போது..சில மின் மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டன.உடனே குரங்குகள் மரத்திலிருந்து தவைத்தாவி அப்பூச்சிகளியப் பிடித்தன.


மற்ற குரங்குகள் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களைச் சேகரித்தன.அக்குப்பையில் பிடித்த  மின்மினிப் பூச்சிகளைப் போட்டன. பின்..நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.


குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடு பட்டன.மரத்தின் மீது அமர்ந்து அந்தக் குரங்குகளின் கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பறவை சிரித்தபடி கீழே வந்து அமர்ந்தது.


பின் பறவை குரங்குகளைப் பார்த்து "நண்பர்களே! மின்மினிப் பூச்சியை நெருப்பு என எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீணாக முயலுகிறீர்கள்.மின்மினிப் பூச்சியிலிருந்து நீங்கள் எவ்வளவு ஊதினாலும் நெருப்பு வரவே வராது.வீண் வேலையை விடுங்கள்" என புத்தி சொல்லியது.


"உனக்கு ஒன்றும் தெரியாது ..நீ உன் வேலையைப் பார்"   எனக் கூறிவிட்டு குரங்குகள் மீண்டும் தீ மூட்ட ஊதத் தொடங்கின.


பறவை ,குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணி..மீண்டும் புத்திமதி சொன்னது.இதனால் கோபமடைந்த குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைத் தரையில் மோதிக் கொன்றன.


முட்டள்களுக்கு புத்தி சொல்வது வீண்..