Monday, January 11, 2021

61- முட்டாளுக்கு புத்தி சொல்லி பயன் இல்லை

 




குளிர் காலம்.ஒருநாள் மிகவும் குளிராக இருந்தது.காட்டில் இருந்த குரங்கிகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.


கொஞ்சம் நெருப்புக் கிடைத்தால் சருகுகளைப் போட்டு தீமூட்டி குளிர் காயலாம் என குரங்குகள் எண்ணின.நெருப்புக்கு என்ன செய்யலாம் என அவை யோசித்த போது..சில மின் மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டன.உடனே குரங்குகள் மரத்திலிருந்து தவைத்தாவி அப்பூச்சிகளியப் பிடித்தன.


மற்ற குரங்குகள் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களைச் சேகரித்தன.அக்குப்பையில் பிடித்த  மின்மினிப் பூச்சிகளைப் போட்டன. பின்..நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.


குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடு பட்டன.மரத்தின் மீது அமர்ந்து அந்தக் குரங்குகளின் கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பறவை சிரித்தபடி கீழே வந்து அமர்ந்தது.


பின் பறவை குரங்குகளைப் பார்த்து "நண்பர்களே! மின்மினிப் பூச்சியை நெருப்பு என எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீணாக முயலுகிறீர்கள்.மின்மினிப் பூச்சியிலிருந்து நீங்கள் எவ்வளவு ஊதினாலும் நெருப்பு வரவே வராது.வீண் வேலையை விடுங்கள்" என புத்தி சொல்லியது.


"உனக்கு ஒன்றும் தெரியாது ..நீ உன் வேலையைப் பார்"   எனக் கூறிவிட்டு குரங்குகள் மீண்டும் தீ மூட்ட ஊதத் தொடங்கின.


பறவை ,குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணி..மீண்டும் புத்திமதி சொன்னது.இதனால் கோபமடைந்த குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைத் தரையில் மோதிக் கொன்றன.


முட்டள்களுக்கு புத்தி சொல்வது வீண்..