Sunday, November 18, 2012

114 .தேவையில்லாதது ஏதுமில்லை..... (நீதிக்கதை)





முனியனிடம் சில ஆடுகளும் ஒரு நாயும் இருந்தன. தினமும் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான்.கூடவே அவனது நாயும் செல்லும்.

மர நிழலில் முனியன் படுத்து உறங்க ...ஆடுகள் புல் மேயும்...அந்த ஆடுகளை ஓநாய் போன்றவை அணுகாமல் நாய் காக்கும்.

முனியன் தூங்கி எழுந்ததும்,தான் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும் சாப்பாடு அளிப்பான்.இது ஆடுகளுக்கு பிடிப்பதில்லை.

ஒரு நாள் ஆடுகள் முனியனிடம் ' நாங்கள் உனக்கு பால் தருகிறோம்...நீ உயிர் வாழ உதவுகிறோம்..ஆனால் நீயோ எங்களை நாங்களாகவே மேய விட்டுவிட்டு ...சும்மாயிருக்கும் நாய்க்கு உணவளிக்கிறாயே ' என்றன.

அப்போது முனியன் ஆடுகளிடம் ' நீங்க சொல்வது சரி..ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள் இந்த நாய் ...நீங்களெல்லாம் மேயும் போது உங்களைப் பார்த்துக் கொள்ளாவிட்டால் ஓநாய் வந்து தினசரி உங்களில் ஒருவரை கொண்டு சென்று உணவாக்கிக்கொள்ளும்.
அப்படி நேராமல் உங்கள் உயிரைக் காக்கிறது இந்த நாய்' என்றான்.

ஆடுகளும் சிந்தித்துப் பார்த்துவிட்டு நாயின் முக்கியத்துவத்தை உணர்ந்தன.

.தேவையில்லாதது என எதுவும் கிடையாது.சற்று சிந்தித்தால் தேவையில்லாதவை என நினைப்பவையின் தேவையும் அவசியமும் புரியும்.

Friday, November 9, 2012

113. உறுதி மொழியும் சிங்கமும் ...(நீதிக்கதை)





அருகிலிருந்த காட்டிலிருந்து சிங்கம் ஒன்று ஒரு கிராமத்திற்குள் புகுந்து விட்டது.மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பயத்தில் இருந்தனர்.

அப்போது அக்கிராமத்தில் இருந்த தைரியசாலி ஒருவன்..ஒரு இரும்பு கூண்டை தயார் செய்து ..அதனுள் ஒரு ஆட்டை கட்டி கிராம எல்லையில் வைத்திருந்தான்.  

கிராமத்திற்குள் அன்று வந்த சிங்கம் ஆட்டைப் பார்த்தது .கூண்டைப் பார்க்கவில்லை...ஆகவே ஆட்டை உண்ண எண்ணி கூண்டுக்குள் அது போக கூண்டு உடனே மூடிக் கொண்டது.

சிங்கம் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டதால் இப்போது அதன் எண்ணம் ஆட்டின் மீது செல்லாமல் தான் தப்பிக்கும் வழியை நாடியது.


கூண்டைப் பற்றி முன்னமே அறிந்திருந்த ஆடு...சிங்கத்திடம் ..' சிங்கமே..உன்னை நான் காப்பாற்றுகிறேன் ஆனால் நீ வெளியே வந்ததும் என்னைக் கொல்லக்கூடாது' என்றது. சிங்கமும் அவ்வாறே உறுதி அளித்தது...கட்டியிருந்த ஆட்டை விடுவித்தது.

ஆடு தாவித்தாவி ...கூண்டின் கதவைத்திறந்தது. வெளியே வந்தன சிங்கமும்..ஆடும்.

உடன் ...சிங்கம் ஆட்டைக் கொல்லப்பார்த்தது. ஆடோ ..'உன்னை நான் காப்பாற்றினேன்.அதற்காக நீ அளித்த உறுதி மொழியை மீறலாமா:,,என்றது.

'அப்போது என் உயிர் முக்கியம்..இப்போது என் உணவு முக்கியம்' என்றது சிங்கம்.

அப்போது அந்த வழியே வந்த நரியைப் பார்த்து ..ஆடு நரியை நீதி கேக்கலாமா...? என்றது.சிங்கமும் ஒப்புக்கொண்டது.
நடந்த விவரங்களை அறிந்த நரி ....'எனக்கு நீங்கள் சொல்வது சரிவர விளங்கவில்லை......முதலில் சிங்கம் கூண்டில்
எந்நிலையில் இருந்தது; என்றது.

சிங்கமும் கூண்டுக்குள் சென்று ' இந்நிலையில் தான் ' என்றது.

மின்னல் வேகத்தில் நரி கூண்டின் கதவை மூடியது.பின்னர் ஆட்டைப் பார்த்து ' உன்னை உண்ணும் சிங்கத்திற்கு உதவலாமா?'
என்றது.

ஆடு நரிக்கு நன்றி சொல்லிவிட்டு விரைந்தது.

நாமும் ஒருவருக்கு உதவும் முன் அவருடைய தராதரம் அறிந்து அதற்கேற்ப உதவவேண்டும்

அதுபோன்று ஒருவருக்கு நாம் கொடுக்கும் உறுதி மொழியையும் தவறக்கூடாது.சிங்கம் உறுதி மொழியை தவறியதால் தான் அவதிக்குள்ளானது.

Thursday, November 1, 2012

112 - கடவுளும் காற்றும் (நீதிக்கதை)





ஒரு நாள் மழையும் புயலுமாக இருந்தது. பலத்தக் காற்று வீசி பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மக்களும் அவதிக்குள்ளாயினர்.
அப்போது பலர் ' காற்று இப்படி வீசுகிறதே' என காற்றை சாடினர்.

இதனால் காற்று மனம் வருந்தி, கடவுளிடம் சென்று, ' இறைவா...நான் மனிதர்க்கு நன்மையே செய்கிறேன்.அவர்கள் உயிர் வாழும் மூச்சாகவும் உள்ளேன்.ஆனால் இதையெல்லாம் மறந்து மக்கள் என்னை ஏசுகின்றனரே ". என்றது.

அதற்கு கடவுள்... ' எப்போதும் மனிதர்க்கு உதவும் வரை புகழுண்டு.ஆனால் அவர்களுக்கு தீங்கிழைக்கும் போது திட்டு தான் கிடைக்கும்.உன்னை கோபமாகத்தான் பேசுவார்கள்' என்றார்.

அவர் மேலும் சொன்னார் ' நீயே புல்லாங்குழலில் நுழைந்து இசையாய் வெளியேறினால் மக்கள் மகிழ்கின்றனர். உதைப்பந்தில் அடைபட்டுக் கிடக்கும்போது அவர்களாலேயே உதைபடுகிறாய்.இதிலிருந்து என்ன தெரிகிறது...நீ மனிதனுக்கு பயன்படாமல் அடைத்துக் கிடந்தால் உதைபடுகிறாய்.அது போல் தான்...உன்னால் தீமை நிகழும்போது மனிதர்களின் ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளாகிறாய்' என்றார்.

அது முதல் காற்று தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவையே செய்வேன் என்று குளிர்ந்து வீச ஆரம்பித்தது.

நமக்கும் யாரேனும் தீங்கிழைத்தாலும், ஏசினாலும்,அவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும்.