Tuesday, April 18, 2023

33.புத்திசாலியும் மூடனும்


33- புத்திசாலியும்..மூடனும்




 தாமோதரன் ஒரு ஆசிரியர்.எல்லோரிடத்திலும் அன்பானவர்.இலவச பாடசாலை ஒன்று ஆரம்பித்து எல்லோருக்கும் இலவசமாக கல்வி கற்று தந்தார்.அதனால் அந்த கிராம மக்களுக்கு அவர் மேல் ஒரு மரியாதை உண்டு.சிறுவர்,சிறுமிகளிடம் மிகவும் கண்டிப்பாக இல்லாமல் அன்பாக இருந்ததால் எல்ல சிறுவர் சிறுமிகளும் அவரிடம் பாடம் கற்க விருப்பபட்டனர்.

அந்த ஊரில் ராமு என்ற செல்வந்தன் இருந்தான்.படிப்பறிவு கிடையாது.அவனது வீட்டில் அவனது பெற்றோர் எவ்வளவு கெஞ்சியும்  பள்ளிக்கூடம் பக்கம் சென்றதில்லை.அவனுக்கு ஆசிரியரிடம் மரியாதை கிடையாது.அவரை எங்கு கண்டாலும் வம்புக்கு இழுப்பான்.

ஒரு நாள் மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை ராமு வழிமறித்தான்.

அவன் கையில் ஒரு பெரிய பூசணிக்காய் ஒன்று இருந்தது.அவன் ஆசிரியரைப் பார்த்து உங்களை ஊரில் எல்லோரும் ‘அறிவாளி’ என்று கூறுகின்றனர்.உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை என்கின்றனர். நான்  உங்களுக்கு ஒரு கணக்கு போடுகிறேன்.அதில் நீங்கள் தோற்று விட்டால்  உங்களை ‘முட்டாள்” என்று நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லி கணக்கை கூறினான்.

‘ இந்த பூசணிக்காயின் எடை என்ன? என்றான்.

அதைக்கேட்ட ஆசிரியர் ஒரு நிமிடம் யோசித்தார்.இவன் ஒரு மூடன்,இவனுக்கு சரியான  பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.

அவனிடம் ‘உன் தலையின் எடை எவ்வளவோ அவ்வளவு தான் பூசணிக்காயின் எடையும். வேண்டுமென்றால் உன் தலையைக் கொய்து விட்டு இரண்டையும் அளந்து பார்க்கலாம் என்றார்.

தன்னுடைய ஆணவத்தை அடக்கிய  ஆசிரியர் ‘ புத்திசாலி;' என்று உணர்ந்த ராமு அவரிடம் தன் செயலுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டான்.அதற்கு பின் அவரிடம்  வம்பு செய்வதில்லை,மரியாதையுடன் நடந்து கொள்ள ஆரம்பித்தான்..