Monday, April 17, 2023

31.அவனின்றி ஓர் அணுவும் அசையாது

31- அவனின்றி ஓர் அணுவும் அசையாது





 மகத நாட்டு மகளுக்கு கல்யாணம்.ஊரே ஒரே கொண்டாட்டத்தில் உள்ளது.அரசன் மகளின் கல்யாணத்துக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து அன்னதானம்  வழங்க ஏற்பாடு செய்திருந்தான்.

முருகன் ஒரு ஏழை.அவனுக்கு உடுத்துவதற்கு உடை கூட ஒழுங்காக இல்லை.இந்த கிழிந்த உடையுடன் அரண்மனைக்கு எவ்வாறு  செல்வது, அன்னதானத்தில் எவ்வாறு  கலந்து கொள்வது என்று அவனுக்கு ஒரே கவலையாக இருந்தது.

இருப்பினும் தன்னிடமுள்ள ஒரு ஆடையை தோய்த்து அணிந்து கொண்டு அரண்மனையில் அன்னதான வரிசையில்  நின்று கொண்டான். அவனுக்கு முன்னால்  பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது..அவனுடைய நேரம் வந்த போது அரண்மனை சேவகன்  அவனை தள்ளிவிட்டு அடுத்தவனுக்கு உணவு கொடுத்தான்.மனது மிகவும் வருத்தப்பட்டு முருகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

முருகன் அப்படியே பசியால்  நடந்துகொண்டு குளத்தங்கரைக்கு வந்தவன் அதிலுள்ள தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு தன்னைத்தானே நொந்துகொண்டு இறைவா ‘என்னை ஏன் இப்படி படைத்தாய் ? நான் என்ன தவறு செய்தேன்? ஏழையாய் பிறந்தது என் தவறா?" என்று  புலம்பினான்.

திடீரென்று பின்புறம் ஒரு குரல் கேட்டது.திரும்பி பார்த்த முருகன் ஆச்சிரியப்பட்டுப் போனான்.நின்றது அரசன்.

அரசன்,அவனிடம் "உன்னை சேவகர்கள் தள்ளிவிட்டதை நான்  பார்த்தேன்.அதனால் உன் பின்னால் வந்தேன்.என்னுடன் வா "என்று கூறி அவனுக்கு நல்ல உடைகளை அணிவித்து அவனை தன்னுடன் அமர்ந்து சாப்பிட வைத்தார்.அவனுக்கு தேவையான பொருள் உதவியும் செய்தார்.அவனது அரசாங்கத்தில் ஒரு வேலையையும் போட்டுக் கொடுத்தார்.

இறைவன் எப்பொழுதும் நம்மை கைவிடுவதில்லை.நாம் கேட்பதை அவன் கொடுப்பதில்லை என்று வருந்தவே வேண்டாம்,

அவனுக்குத்தெரியும்  நமக்கு வேண்டியதை எந்த அளவு எப்போது தருவது என..ஆனால் ஒருநாள் கண்டிப்பாக அள்ளித்தருவான்.

“அவனின்றி ஓர் அணுவும் அசையாது.”


 


\