Saturday, April 15, 2023

29. புத்தி கூர்மை

   29- புத்தி கூர்மை



 கிராமம் ஒன்றில் புலவர் ஒருவர் வறுமையில் வாடினார்.

இதைப்பார்த்த அந்த ஊர் கிராமத்தலைவர் ..'நம் நாட்டு அரசரைப் பாடி அரசரிடமிருந்து பரிசினைப் பெற நீர் முயற்ச்சிக்கலாமே…’என்றார்.

புலவரும் அரசனைத் தேடி சென்றவர்,மன்னனை கண்டு புகழ்ந்து பாடியதும்,மன்னர் மகிழ்ந்து 'உங்களுக்கு என்ன அன்பளிப்பு வேண்டும் ?’ என்று கேட்டார்.

புலவரும், இனி வறுமையில் பாதிக்ககூடாது  என்று எண்ணினார்.பின் அங்கு பல  கட்டங்கள் கொண்ட சதுரங்க பலகை ஒன்று இருப்பதை  கண்டார்."உடன் அரசரிடம், எனக்கு பெரிதாக ஒன்றும் வேண்டாம்..அந்த சதுரங்க பலகையில் பல கட்டங்கள்  இருக்கின்றன  அல்லவா? அதில் முதல் கட்டத்தில் ஒரு நெல் மணியை வைத்து பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அதை இரட்டிப்பாக்கினால் அதை பரிசாக ஏற்றுக்கொள்வேன் ’ என்றார்.

புலவர் இப்படி கேட்பதைக்கண்டு அவரை எள்ளி நகையாடிய அரசனும் ‘ சரி’ என்றார்.

பின் அரசன்’ அரண்மனை சேவகர்களிடம் புலவர் கேட்டபடி நெல்மணிகளை எடுத்து வாருங்கள்’ என்றார்.

முதல் கட்டத்தில் ஒன்று,இரண்டாம் கட்டத்தில் இரண்டு,மூன்றாம் கட்டத்தில் 4,நான்காம் கட்டத்தில்8 என நெல்மணிகளை  அடுக்கினர்.

பத்தாம்  கட்டம் வந்தபோது நெல்மணிகள் 512 ம், இருபதாம் கட்டம் வந்தபோது எண்ணிக்கை 

5,24,288 ஆயிற்று. 32ம் கட்டம் வந்தபோது அதாவது சதுரங்க பட்டையின் பாதிதூரம் வந்தபோதுஎண்ணிக்கை 214,74,83,648  (214 கோடிகளுக்கும் மேலே).

அது பெருகியது.

விரைவில் எண்ணிக்கை கோடான கோடிகளைத்தாண்டி அரசனின் ராஜ்ஜியம் முழுவதும் புலவனிடம் இழக்கும் நிலைமை ஏற்பட்டது.

புலவரின் சாதூர்யத்தையும் அது புரியாது அவரை எள்ளி நகையாடியதையும் உணர்ந்த அரசன் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

பின் புலவருக்கு தேவையான பரிசுகளைக் கொடுத்து அவரை வறுமையிலிருந்து விடுவித்தார்.

கூட்டு-பெருக்கும் சக்தி என்றும் பெரிது என்று நாமும் உணரவேண்டும்.