Tuesday, April 18, 2023

32. குறையில்லாதவர் யாருமில்லை…

 32- குறையில்லாதவர் யாருமில்லை



மாதவனும்,கல்யாணியும் அரசு  அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.மாதவன் அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் செல்வது வழக்கம்கல்யாணி பஸ்ஸில் செல்வாள்.அவர்களது மகள் நேத்ரா வீட்டு பக்கத்திலுள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.மாதவன் மாலை அலுவலகத்திலிருந்து பள்ளி சென்று அவளை அழைத்து வருவது வழக்கம்.

ஒரு நாள் மாதவன் ஸ்கூட்டர் பழுது அடைந்த்து. அதனால் அவன் பஸ்ஸில் அலுவலகத்துக்கு சென்றான்.மாலை வரும்போது மகளை   பள்ளிக்கூடத்திலிருந்து  ஆட்டோவில் அழைத்து கொண்டு வந்தான்.

வீட்டிற்கு வந்தவுடன் நேத்ரா ‘ அப்பா எனக்கு மிகவும் பசிக்கிறது  ஏதாவது செய்து கொடுங்கள்' என்றாள்.மாதவனும் கல்யாணி வர லேட்டாகும் என்பதால் மகளிடம் ‘கண்ணா, நான் உனக்கு தோசை வார்த்து தருகிறன் ‘ என்றான்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி தோசை வார்க்கலானான்.முதல் இரண்டு தோசை தீய்ந்துவிட்டது. மூன்றாம் தோசை சுமாராக வந்தது.நேத்ராவும் பசியால் அதனை சாப்பிட்டாள்.

அம்மா வந்தவுடன் நேத்ரா அம்மா ‘ அப்பா எனக்கு தோசை வார்த்து கொடுத்தார்’ஆனால்  எல்லாம் தீய்ந்துவிட்டது..உன்னை போல் முறுகலாக அப்பாவுக்கு  வார்க்க தெரியவில்லை  என்றாள்.

அம்மா சொன்னாள் 'நேத்ரா அப்பாவும் இன்று பஸ்ஸில் களைப்புடன் வந்திருப்பார்.வந்தவுடன் நீ பசி என்று கூறியதும் தனக்கு சரியாக வார்க்க தெரியாவிட்டாலும் பரவாயில்லை என்று தோசை வார்த்தார். முதல் தடவை செய்ததால் அவருக்கு தெரியவில்லை.

அதனால் அதை நாம் சுட்டிக்காட்டக்கூடாது.தவறுகள் எல்லோருக்கும் சகஜம்.அடுத்தடுத்த தோசை கண்டிப்பாக நன்றாக வரும்.

இதுபோல் பள்ளியிலும் நீ நண்பர்கள் யாரிடமும் எந்த குறையும் கண்டுபிடிக்கக்கூடாது.குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை.. குறைகள் விரைவில் நிறைகளாக மாறும் "என்றாள்.