ஓரு காட்டில் இருந்த மரத்தில் கிளி,குயில்,புறா,காகம் ஆகிய பறவைகள் வசித்து வந்தன.
அவர்களுக்குள் தங்களுக்குள் யார் அழகு? என்ற கேள்வி பிறந்தது.
அப்போது கிளி சொன்னது.."மனிதர்களில் கூட அழகாக இருக்கும் பெண்களை, கிளிபோல இருப்பதாக சொல்வார்கள்.ஆகவே நான்தான் அழகு" என்றது.
"எனது குரல் கேட்டு மயங்காதவர்கள் இல்லை.இனிய குரல் உள்ளவர்களை என்னோடுதான் ஒப்பிட்டு சொல்வார்கள்.ஆகவே நானே அழகு"என்றது குயில்.
புறாவோ, "அந்த நாளில் காதலர்களும், அரசர்களும் தூது சொல்ல என்னையே அனுப்பி வைப்பார்கள்.பெண்களை இன்றும் கொஞ்சும் புறா என சொல்வார்கள்.ஆகவே நானே அழகு "என்றது.
"நீங்கள் எல்லாம் உணவைத் தேடிச் செல்ல வேண்டும்.ஆனால் மக்கள் என்னை "காகா..காகா" என கூப்பிட்டு உணவளிப்பர்.ஆகவே நான்தான் அழகு" என்றது காகம்.
இவர்கள் சொல்வதையெல்லாம் மரத்தின் கீழே இருந்து கேட்டுக் கொண்டிருந்தது ஒரு முயல்.அதைக் கவனித்த பறவைகள் முயலிடம் தங்களில் யார் அழகு? எனக் கேட்டன.
"உங்களில் யார் அழகு என நான் நீதிபதியாய் இருந்து நாளை காலை 9மணிக்கு சொல்கிறேன்.அனைவரும் என் பொந்திற்கு காலை 9மணிக்கு வந்துவிடுங்கள் "ஏன்று கூறி தன் பொந்திற்கு தாவி ஓடிப் போயிற்று.
அடுத்தநாள் காலை எல்லாப் பறவைகளும் கிளம்பும் போது..ஒரு குருவிக் குஞ்சு அம்மரத்தில் இருந்த குருவிக் கூட்டிலிருந்து கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது.கீழே விழுந்த குருவியைப் பார்த்தும், நேரமாகிவிடப் போகிறதே..என அவை விரைந்தன.ஆனால் காகம் மட்டும்..அக்குருவிக் குஞ்சிற்கு சிறிது தண்ணீரைக் கொடுத்து விட்டு..அதைத் தன் அலகினால் பத்திரமாகக் கவ்வி ,அதன் கூட்டில் வைத்து விட்டு முயலைப் பார்க்கக் கிளம்பியது.
எல்லாப் பறவைகளும் சரியான நேரத்துக்கு வந்தும்..காகம் மட்டும் தாமதமாக வந்து முயலிடம்..நடந்ததை கூறி..தாமதமானதிற்கு மன்னிக்க வேண்டும் என்றது.
இப்போது முயல் கூற ஆரம்பித்தது..
"அழகு என்பது புற அழகு மட்டும் அல்ல.பிறருக்கு உதவி செய்வதும் அழகுதான்.நீங்கள் அனைவரும் அந்த குருவி அடிப்பட்டிருப்பதைப் பார்த்தும்,அதை சட்டை செய்யாமல் வந்து விட்டீர்கள்.ஆனால்..காகம் அதைக் காப்பாற்றி..கூட்டில் ஜாக்கிரதையாக வைத்து விட்டு வந்துள்ளது.ஆகவே பிறருக்கு உதவும் குணம் உள்ள காகமே அழகு"என தீர்ப்பளித்தது.
நாமும் பிறருக்கு நம்மால் முடிந்த உதவி செய்யும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2 comments:
அருமை...
நன்றி.
Post a Comment