Monday, January 4, 2021

55. புத்தியில்லாத செயல்....(நீதிக்கதை)

 


ஓரு தோட்டக்காரன், தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான்.அவன் தண்ணீர் ஊற்றுவதை சில குரங்குகள் பாத்துக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தன.

இது தினசரி வழக்கமானது.

பல வருடங்கள் அப்படியே நடந்ததால் ...தோட்டக்காரனும்., குரங்குகளும் நண்பர்கள் ஆயினர்.தோட்டக்காரன் செய்யும் காரியங்களுக்கு அவனுக்கு உதவி புரிந்தன.

ஒரு முறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்கு போகவேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தை சொன்னான்.பின் தான் திரும்பி வரும்வரை செடி,கொடிகளுக்கு தண்ணீர் விடும் பொறுப்பை அவர்களுக்கு தந்தான்.

ஆனால் அவற்றுக்கு ஒரு பிரச்சனை...எந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

'அது ஒன்றும் பிரச்சனை இல்லை.வேர் பெரிதாக இருந்தால் அதிக  தண்ணீரும், சிறிய வேராக இருந்தால் குறைவான தண்ணீரும் ஊற்றுங்கள்' என் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினான்.

பின் ஊரிலிருந்து  அவன் திரும்பி வந்து தோட்டத்தைபார்த்தபோது.' அனைத்து செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன.'குரங்குகளிடம் ' என்ன ஆச்சு' என வினவினான்.

'வேர் பெரிசாக இருக்கா,சின்னதாக இருக்கா என்று பார்க்க செடிகளைப் பிடுங்கினோம்' என்றன அவை.

தோட்டக்காரனும் புத்தியில்லாதவகளிடம் பொறுப்பை கொடுப்பது புத்தியில்லாத செயல் என்று உணர்ந்தான்.

 

54 - வேடனும்..இரு பறவைகளும்

 


எப்பொழுதும் சேர்ந்தேத் திரியும் இரண்டு பறவைகள் மிகவும் நட்புடன் இருந்து வந்தன.

அந்தப் பறவைகளைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன் தரையில் வலையை விரித்து தானியங்களை வலையின் மீதுத் தூவி இருந்தான்.


தானியங்களைக் கொத்த வந்த இரு பறவைகளும் வலையில் சிக்கின.


தூரத்திலிருந்து பறவைகள் சிக்கிவிட்டதைக் கண்ட வேடன்..அவற்றைப் பிடிக்க வந்தான்.


எப்போதும்..எங்கும்..ஒன்றாய்ச் சுற்றித் திரிந்த பறவைகள்,வேடன் வருவதைப் பார்த்து விட்டன.அவை வலையுடன் சேர்ந்து பறக்கத் தொடங்கின.வேடன் திடுக்கிட்டு அந்தப் பறவைகளின் பின்னாலேயே துரத்திச் சென்றான்.


வழியில் ஒருவர்,"ஆகாயத்தில் பறவைகளைப் பிடிக்க தரையில் ஓடிக்கொண்டு இருக்கிறாயே..அவை எப்படி சிக்கும்?" என்றார்.


"அந்தப் பறவைகள் இரண்டும் என் வலையில் சிக்கி வலையுடன் ஒற்றுமையாகப் பறந்து கொண்டிருக்கின்றன.அவற்றின் ஒற்றுமை அழிந்து ,எப்போது விவாதம் தோன்றுமோ அப்போது என் கையில் அவை சிக்கி விடும்" என்றான் வேடன்.


ஒரு சில வினாடிகள் கைழ்ந்ததும்..பறவைகள் ஒற்றுமை இழந்தன.


"இந்தப் பக்கம் போகலாம்"என்றது ஒரு பறவை


"இல்லை..இல்லை..அந்தப் பக்கம் போகலாம் "என்றது மற்றது.


இரு பறவைகளும் இதில் ஒன்றுபடாது..ஒரு பறவை இந்தப் பக்கம் இழுக்க..மற்றொன்று அந்தப் பக்கம் இழுக்க..இரண்டும் வலையோடு கீழே விழுந்தன.வேடன்..இரு பறவைகளையும் வலையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டான்.


ஒற்றுமையை இழந்ததால்..பறவைகள் வேடனிடம் சிக்கின.

வேடனின் விடாமுயற்சியால் அவன் வெற்றி அடைந்தான்.


இக்கதையினால் அறியப்படும் இரு நீதிகள்..

நாமும் ஒற்றுமையாய் இருந்தால் யாராலும் நம்மை அழிக்க முடியாது.

அடுத்து...வேடனைப் போல விடாமுயற்சி செய்தால் விரும்பியதைப் பெறலாம்.  

Sunday, January 3, 2021

53. 'எறும்பும் வெட்டுக்கிளியும் ..(நீதிக்கதை)



 மாலை நேரம் வெட்டுகிளை ஒன்று இங்கும் அங்கும் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை இழுத்துக் கொண்டு சென்றது.அதைப்பார்த்த வெட்டுக்கிளி....எப்போதும் அரிசி எங்கு கிடைக்கும்...அதுகிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு உன் இல்லத்தில் வைத்துக் கொள்கிறாயே..கொஞ்சம் என்னுடனும் விளையாடலாமே' என்று எறும்பை கேலி செய்தது.

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் வந்துவிடும்.அப்போது வெளியே செல்ல முடியாது.ஆகவே இப்போதே நான் அதற்காக சேமித்துக் கொள்கிறேன்' என்றது.

சில நாட்கள் கழித்து ..மழைக்காலமும் வந்தது. தான் சேகரித்த உணவை  உண்டு தன் வீட்டிலேயே எறும்பு இருந்தது.ஆனால் வெட்டுக்கிளியோ உணவு எதுவும் கிடைக்காமல் உணவைத் தேடி மழையில் சுற்றி திரிந்தது.

வெட்டுக்கிளிக்கு பசி அதிகமாக எறும்பைத்தேடி போய் ' எனக்கு மிகவும் பசிக்கிறது..ஏதாவது உணவு கிடைக்குமா/..என்று கேட்டது.

எறும்பும், தான் சேர்த்து வைத்திருந்த உணவில் சிறிது வெட்டுக்கிளிக்கு கொடுத்துவிட்டு...அன்று என்னை கேலி செய்தாயே...அப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று உனக்கும் உதவுகிறது.இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல் வெயில் காலத்திலேயே...மழைகாலத்திற்கு வேண்டியதை சேகரித்துக்கொள்.' என்றது.

காலம், நேரம் பார்க்காது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என வெட்டுக்கிளியும் உணர்ந்தது.

கடின உழைப்பு உடனடி பலனை தராதது போல இருக்கும்.பின்னாளில் கண்டிப்பாக பலன் தரும்.

52 - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை


 

பிரசாத் ஒரு சோம்பேறி.அவனை திருத்த நினைத்த அவனது தந்தை, அவனது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று, "இவன் சோம்பேறியாய் இருக்கிறான். நான் என்ன சொன்னாலும் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டேன் என சொல்கிறான்.நீங்கதான் அவனைத் திருத்தணும்" என்றார்.


ஆசிரியரும் அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்,அங்கு இருந்த ஒரு சிறு செடியை பிடுங்கச் சொன்னார்.மிகவும் எளிதாக பிரசாத் அச்ச்செடியைப் பிடுங்கி எறிந்தான்.


பின்னர், கொஞ்சம் வளர்ந்த பெரியச் செடி ஒன்றினைப் பிடுங்கச் சொன்னார்,சற்று முயற்சி செய்து அதைப் பிடுங்கினான்.


அதைவிடச் சற்று பெரியச் செடியிடம் அழைத்துப் போய்..:அதை பிடுங்க முடியுமா? எனப் பார்" என்றார்.அவனும் மிகவும் கஷ்டப்பட்டு அதைப் பிடுங்கினான்.


பிறகு, நன்கு வளர்ந்த ஒரு மரத்தைக் காட்டி ,அதையும் பிடுங்கி எறி என்றார்.


"மரததை எப்படி பிடுங்க முடியும்?" என்றான் பிரசாத்.


அப்போது ஆசிரியர் சொன்னார், "அது போலத்தான்..நம் பழக்க..வழக்கமும்.நீ சின்னப் பையனாய் இருக்கும் இப்போது உன் சோம்பேறித்தனத்தையும், கெட்ட பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.இப்போது முயன்றால் சின்ன செடியை பிடுங்கியது போல எளிதாக உன்னால் முடியும்.இல்லையேல்..நீ பெரியவனானதும் அப்பழக்கங்களை..பெரிய மரத்தை எப்படி பிடுங்க முடியாதோ.அது போல உன்னால் அவற்றை மாற்றமுடியாது.உன் அப்பா சொல்வதைக் கேள்.நீ சுறுசுறுப்பாய் மாறி நன்றாக இருப்பாய்"என்றார்.


பிரசாத்தும், ஆசிரியர் அறிவுரைப்படி..தந்தையின் சொல்படி சுறுசுறுப்பானவனாக மாறினான்.


தந்தை சொல்  மிக்க  மந்திரமில்லை என்பதை நாமும் உணர்ந்து நம் பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும்.

Saturday, January 2, 2021

51. கெடுவான் கேடு நினைப்பான்..(நீதிக்கதை)

 



ஓரு அழகிய காட்டில் தேள் ஒன்று இருந்தது.அந்த காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்த தேளுக்கு இக்கரையிலிருந்து அக்கரைக்கு போய் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.

அந்த நீரோடையில் இருந்த தவளையை நண்பனாக்கிக்கொண்டு தன் ஆசையைக் கூறியது.பின் ஒருநாள் ' தவளையாரே'நான் அக்கரை செல்ல வேண்டும்.என்னை கொண்டுபோய் விடுகிறீர்ககளா' என்றது.

தவளையும்,' என் முதுகில் ஏறிக்கொள்,நான் அக்கரையில் விட்டு விடுகிறேன்' என்றது.

தேளும்,தவளையின் முதுகில் ஏறிக்கொள்ள, தவளை நீரில் நீந்திச் செல்ல ஆரம்பித்தது.அப்போது தேள்,' நான் நிறைய பேரை கொட்டியிருக்கிறேன்,அவர்கள் வலியால் துடித்ததைக்கண்டு ரசித்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு தவளையைக் கூட கொட்டியதில்லை.இப்போது கொட்டிப்பார்த்தால் என்ன? என்று எண்ணி  தவளயின் முதுகில் கொட்டியது.ஆனால் தவளை பேசாமல் சென்றது.

உடனே தேள்,தவளையாரே...உனது உடலில் வலியே வராதா?' என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தை புரிந்துகொண்ட தவளை ; என் முதுகு வழவழப்பானது.அதனால் எனக்கு வலி தெரியாது.என் கழுத்து மென்மையானது,அங்கு வலி தெரியும்' என்றது.

முதுகில் இருந்து தவளையின் கழுத்துக்கு வந்தது தேள்.தேள் கொட்ட வந்ததை அறிந்த தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது.தேள் தண்ணீருக்குள் விழுந்து இறந்தது.

தனக்கு உதவிய தவளைக்கு கேடு நினைத்த தேள் அழிந்தது.

'கெடுவான் கேடு நினப்பான்' அதாவது ஒருவருக்கு தீங்கு செய்ய எண்ணுபவர்கள் தாங்களே அழிந்து போவார்கள்.

50 - ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

 



மாடசாமி என்பவன் தன் மனைவியுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.


அந்த ஏக்கத்தைப் போக்க ஒரு கீரிப்பிள்ளையை வளர்த்து வந்தனர்.


சிறிது காலம் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.குழந்தையைச் செல்லமாக வளர்த்து வந்தனர்.


ஒருநாள் மாடசாமி வேலைக்குக் கிளம்பியதும், அவன் மனைவி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவர குடத்துடன் புறப்பட்டாள்.கீரிப்பிள்ளை தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்துடன்.


குழந்தையின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தது கீரி.அப்போது ஒரு கருநாகம் குழந்தையின் தொட்டிலில் ஏறியது.அதைக் கண்ட கீரி பாய்ந்து..அந்த கருநாகத்தைக் கடித்து துண்டுத் துண்டாக்கியது.


பின் வாசலில்..தன் செயலை மாடசாமியின் மனைவி பாராட்டுவாள் என வந்து காத்திருந்தது.தண்ணீர்க் குடத்துடன் வந்த மாடசாமியின் மனைவி.. வாயில் ரத்தத்துடன் காத்துக் கொண்டிருந்த கீரியைப் பார்த்தாள்.தன் குழந்தையைத்தான் அந்தக் கீரி கடித்து விட்டது என்ற எண்ணத்தில் அழுகையும், கோபமும் மீறிட தண்ணீர்க் குடத்தைக் கீரியின் தலையில் போட்டாள்.கீரியும் வலி தாங்காமல் கத்தியவாறே உயிர் நீத்தது.


உள்ளே வந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி.துண்டாகிக் கிடந்த பாம்பைப் பார்த்ததும்..தன் குழந்தையைக் கடிக்க வந்த பாம்பைக் கொன்ற கீரியைத் தவறாக எண்ணிக் கொன்று விட்டோமே என வருந்தி அழுதாள்.


எந்தப் பிரச்னையையும் தீர ஆராயாது அவசப் புத்தியில் முடிவெடுத்தால் தவறாகிவிடும் என உணர்ந்தாள்.


அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. 



Friday, January 1, 2021

49 - கொக்கும் ..ஆமையும்..(நீதிக்கதை)

 


ஏரி ஒன்றில் ஆமை ஒன்று தன் இரு கொக்கு நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது.


பல வருடங்களாக மழை இல்லாததால், ஏரி வறண்டு வந்தது.அப்போது அந்த கொக்குகள் ஆமையைப் பார்த்து,"இன்னமும் சில நாட்களில் நீர் முற்றிலும் வற்றி விடும்.ஆகவே நாங்கள் இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஏரிக்கு சென்று விடலாம் என்று இருக்கிறோம்.அங்கு தண்ணீர் இருப்பதால், மீன்களும் இருக்கும்..எங்களுக்கு உணவும் கிடைக்கும்" என்றன. 


"என்னை விட்டுச் செல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது?என் மீது அன்பு இருக்குமானால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்" என்றது ஆமை.

உன்னால் பறக்கமுடியாதே' உன்னை எப்படி அழைத்து போகமுடியும்?' எனச்சொன்ன கொக்குகள் சிறிது நேர யோசனைக்கு பின்'ஒரு நீண்ட குச்சியை எடுத்துக்கொண்டு நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கிக்கொள்கிறோம்,நீ குச்சியின் நடுவில் குச்சியை பற்களால் கெட்டியாய் பிடித்துக்கொள்.ஆனால் நாங்கள் உயர பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்றன.'

நீங்கள் பறக்கும்போது ' நான் வாய் பேசாமல் இருக்கிறேன்' என்றது ஆமை.

அடுத்து இரு கொக்குகளும் இரு பக்கமும் குச்சியை பிடித்து பறக்க ஆமை குச்சியின் நடுவில் பற்றிக்கொண்டு அதுவும் பறந்தது.

வழியில் கொக்குகளுடன் ஆமையும் பறந்து   செல்வதை ப் பார்த்த மக்கள் .. சந்தோஷத்தால் கூச்சல் போட்டனர்.அவர்களின் கூச்சல் ஆமையின் காதுகளில் விழ ' மக்கள் ஏன்  இப்படி கூச்சலிடுகிறார்கள்' என கேட்க வாயைத்திறந்த ஆமை பிடி விட்டு கீழே விழுந்து உடல்  சிதறி இறந்தது.

கீழே விழுவோம்  என தெரிந்தும் அறிவில்லாத ஆமை வாயைத் திறந்து தன் உயிரை இழந்தது.

அறிவில்லாத செயல்களைச் செய்தால் இழப்பினை சந்திக்க நேரிடும்.