Friday, July 14, 2023

47.விழிப்புணர்வு

47- விழிப்புணர்வு 




குரு சிஷ்யர்களுக்கு பாடம்  நடத்திக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு சிஷ்யன் ஐயா, நாங்கள் எப்படி ‘விழிப்புணர்வு’ பெறுவது என்று கேட்டான்.

குரு உடனே நீங்கள் உங்களை"அறிவால்’ நிரப்பிக்கொள்ளுங்கள்' என்றார்.

சிஷ்யர்களுக்கு புரியவில்லை".சற்று விளக்கமாக கூறுங்கள்" என்றனர்.

குரு உடனே அவர்களிடம் ‘அறிவால் நிரப்பிக்கொள்வது  என்றால் ...பல நூறு ஓட்டைகளை கொண்ட சல்லடையில்   நீரை நிரப்புவதாகும்" என்றார்.

பின் சீடர்களிடம், " நீங்கள் போய் முயன்று பாருங்கள்" என்றார்.

சீடர்கள் வெளியே வந்து சல்லடையில் தண்ணீர் ஊற்ற அது முற்றிலும் ஓட்டைகள் வழியாக வெளியே வந்தன.

இன்னொரு சீடன் "ஐஸ் கட்டியை போடலாம்" என்று கூற அதையும் செய்து  பார்த்தனர்.அதுவும் சிறிது நேரத்தில் உருகிவிட்டது.

என்ன செய்வது என்று புரியாமல் குருவிடம் வந்து தங்களது இயலாமையக் கூறினர்.

குரு உடனே சீடர்களே "சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்" என்றார்.

சீடர்களும் அவர் பின்னால் சென்றனர்.

குரு சீடர்கள் குளிக்கும் பெரிய நீர் தொட்டியில் சல்லடையை போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.சீடர்களிடம் "இப்பொழுது சல்லடையில் நீர் நிரம்பியுள்ளது பார்த்தீர்களா"என்றார்.

"அதுபோல விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்களே அதை பெற அறிவு என்னும் கடலுக்குள் உங்களை தூக்கிப்போடுங்கள்.அறிவு உங்களை விட்டு விலகாது எ"ன்றார் குரு.

சீடர்களுக்கு தெளிவு பிறந்தது.

46.உருவ கேலி கூடாது

 

46- உருவ கேலி கூடாது




ஒரு மிருக காட்சி சாலையில் ஒட்டகம்,யானை ,மான் மூன்றும் நண்பர்களாக இருந்தனர்.

ஆனால் ஒட்டகம் மட்டும் எப்போதும் மானைப்பார்த்து ‘ உனக்கு நீண்ட காதுகளும்,பெரிய கொம்புகளும் சிறிய வயிறும் இருக்கு’. பார்க்க நன்றாக இல்லை' என்று கேலி செய்யும்.

யானையை பார்த்து ‘நீ பருமனானவன்.உன் தோல் மிகவும் தடிப்பானது.கால்களும் தூண்கள் போன்றவை.முறம் போன்ற காதுகள்,நீண்ட தும்பிக்கை,சம்பந்தமில்லாமல் தந்தம் வேறு’ என்று கேலி செய்யும்.

யானையும் மானும் ஒன்றும் சொல்லாமல் நம்மை இறைவன் இப்படி படைத்துவிட்டான் என்ன செய்வது.காரணமில்லாமல் இறைவன் எதையும் செய்யமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும்

ஒரு நாள் மிருக காட்சி சாலைக்கு ஒரு ஆளுயுர முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த நிறுவத்தினர் கொண்டு வைத்தனர்.அதைப்பார்க்க எல்லா மிருகங்களும் ஆவலோடு  ஓடி வந்தன.

ஒட்டகமும் வந்தது.தன் உருவத்தை பார்த்தது.

‘நீண்ட கால்கள்,முதுகின் பின்புறம் உள்ள திமில்பெரிய மற்றும் தட்டையான பாதங்கள், நீண்ட கண் இமைகள்,மெல்லியபிளவுபட்ட நாசித்துவாரங்கள்,மிக நீண்ட வயிறு’ இவ்வளவும் கொண்ட விகாரமான உருவம் யார் ?"என்று  யானையிடமும் மானிடமும் கேட்டது.

அவர்கள் இருவரும் "நீ தான் இத்தகைய அம்சங்களைக்கொண்டவன்." என்றன

"நீ எப்பொழுதும் எங்கள் உருவத்தை கேலி செய்து கொண்டிருக்கிறாய்.உன் உருவத்தை பற்றி உனக்கு தெரியவில்லை.ஆண்டவ்னின் படைப்பில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.அவை எல்லாம் நன்மைக்குத்தான்.நீ பாலைவனங்களில் அதிகமாக் காணப்படுவ்தால் இந்த மாதிரி உருவம் இறைவன் உனக்கு கொடுத்திருக்கிறார்.அதை புரிந்துகொண்டு நீ இனிமேல் யாரையும் ஏளனமாக உருவக்கேலி செய்யாதே!" என்றன.

ஒட்டகமும் தன் தவறை உண்ர்ந்து அன்று முதல்அவர்களுடன் நண்பனாக இருந்தது.

..

Friday, July 7, 2023

45. திட்டமிடுதல்

 
  45 - திட்டமிடுதல்


முருகனின் தந்தை ஒரு விவசாயி. அவரிடம் சிறு விவசாய நிலம் ஒன்று இருந்தது.அதில் நான் கு தென்னை மரங்களும் உண்டு.

முருகனின் தகப்பனார் இதில் வரும் சொற்ப வருமானத்தைக்கொண்டு முருகனை பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தார். அவன் எட்டாவது படித்துக்கொண்டிருந்தான்.முருகன் படிப்பிலும் நல்ல புத்திசாலி.அவனுக்கு விவசாயத்திலும் ஈடுபாடு அதிகம்.

விடுமுறை நாட்களில் தந்தையுடன் விவசாய நிலத்தை அவன் பார்வையிடுவது வழக்கம்.

ஒரு நாள் அப்படி  செல்லும்போது பக்கத்து நிலத்தில் அந்த விவசாயிக்கு மூன்று கருவேலமரங்கள் உள்ளன.அதை வெட்டுவதற்கு  அவர் மூன்று பேரை அழைத்து ' நீங்கள் மூன்று மணிநேரத்தில் யார் வேகமாக மரத்தை  வெட்டுகிறார்களோ அவர்களுக்கு சன்மானம் அதிகம்'என்று கூறினார்.

அதில் இரண்டு பேர் கோடாரியை வாங்கியவுடன் மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.மூன்றாமவர் இரண்டு மணிநேரம் கோடாரியை கூர்மையாக்கிவிட்டு மரத்தை வெட்ட களத்தில் குதித்தார்.அவரே சவாலில் ஜெயித்தார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த முருகனிடம் அவனது தந்தை "அந்த மூன்றாம் நபர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை கவனித்தாயா? அவரது வெற்றியில் ஒரு திட்டமிடுதல் இருந்தது.எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு திட்டமிடுதலும்,புத்திசாலித்தனமும் அவசியம்.ஓட்ட பந்தயத்தில் ஓடுபவர்கள் கூட முதலில் மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகத்தை கூட்டுவார்கள்.அதுபோல் நீயும் எந்த பாடத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு திட்டமிடுதல் வேண்டும்.அதுவே உனக்கு வெற்றி க்கு வழி தரும்.உன்  புத்திசாலிதனத்தால் நீ அடைய வேண்டியதை அடையலாம்" என்றார்.

Thursday, June 15, 2023

44.பிறர் மனம் புண்படவேண்டாம்



44- பிறர் மனம் புண்பட பேசக்கூடாது 




ஒரு குளத்தில் ஒரு தங்க நிற மீனும் ஒரு கெளத்தி மீனும் வசித்து வந்தன. தங்க நிற  மீன் தங்கம் போல் பள பள வென்று இருக்கும். கெளத்தி மீன் கருப்பாக இருக்கும்.

அந்த குளத்தருகில் ஒரு மரத்தில் ஒரு காகம் இருந்தது.அது அவ்வப்பொழுது இந்த மீன்களுடன் பேசிக்கொண்டு பொழுதைக் கழிக்கும்.

தங்க நிற மீனுக்கு தான் பள பளவென்று இருப்பது பெருமை.அதனால் அது கெளத்தி மீனையும் காகத்தையும் எப்பொழுதும் ‘நீங்கள் இருவரும் கருப்பாக இருக்கிறீர்கள்’என்று கேலி செய்து கொண்டிருக்கும்

கெளத்தி மீன் இதைக்கேட்டு ஒன்றும் சொல்லாமல் இறைவன்  தன்னை இப்படி படைத்திருக்கிறான் என்ன செய்வது என்று அமைதியாக இருந்து விடும்.

ஆனால் காகம் வந்த சண்டையை விடாது.தங்க மீனிடம் நீ தங்க நிறமாக இருப்பது  உனக்கு ஆபத்து..அந்த நிறம் தான் உனக்கு பெரிய கெடுதலை கொடுக்கும் பார் என்று கூறும்.

ஒரு நாள் இரண்டு மீன்களும் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தன.மரத்தின் மேலே காகம் உட்கார்ந்துகொண்டு இரண்டு மீன்களும் விளையாடுவதை  பார்த்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு கொக்கு ஒன்று வந்து தங்க மீனிடம் 'தூரத்தில் நான் வந்து கொண்டிருந்தபோது உனது தங்க நிறம் என் கண்களை பறித்தது.அதனால் நீ தான் எனக்கு இன்றைய உணவு என்று கூறி அதனை கவ்வியது.தங்க மீன் அலற மேலே பார்த்துக்கொண்டிருந்த காகம் கொக்கின் தலையை கொத்த வலி தாங்காமல் கொக்கு தங்க மீனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.

பின்னர் காகம் கீழே வந்து தங்க மீனிடம் "நீ எப்பொழுதும் என்னையும் கெளத்தி மீனையும் கேவலமாக மனது புண்படும்படி பேசுவாய்.அதனால் தான் நீ இன்று ஆபத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாய்.இனிமேல் இப்படி மற்றவர்கள் மனது புண்படும்படி நடக்காதே" என்று அறிவுரை கூறியது.தங்க மீனும் தன் தவறை உணர்ந்தது.

நாமும் பிறர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது.



Friday, June 2, 2023

43.எதுவும் நம்மால் முடியும்

 43- எதுவும் நம்மால் முடியும்


சந்திரன்,பரசுராம்,வனஜா தம்பதியருக்கு ஒரே பையன்.அவனுக்கு பத்து வயதாகிறது.அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறன்.

 சந்திரன்  படிப்பிலும் சுமார் தான்.எப்பொழுதும் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுப்பான்.கேட்டால்  எனக்கு கணக்கு வராது என்று கூறுவான்.

வீட்டில் அப்பா அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார்.அதையும் அவனுக்கு ஓட்டுவதற்கு தைரியமில்லை.இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் அவன் இருந்தது பெற்றோர்களுக்கு மனதுக்கு வருத்தமாக   இருந்தது.

தாய்,தந்தை இருவரும் அவனை எப்படியாவது நம்பிக்கையுள்ள பையனாக மாற்றவேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்டனர்.

ஒரு நாள்  விடுமுறையன்று மூவரும் அந்த ஊருக்கு வந்துள்ள மிருககாட்சிசாலைக்கு போனார்கள்.சந்திரனுக்கு அங்குள்ள மிருகங்களை பார்த்ததில் மிகவும்சந்தோஷம்.ஒவ்வொரு மிருகத்தையும் பார்த்து ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டு வந்தான்.கடைசியில் ஒரு யானையை பார்த்தான்.அதன் காலை சங்கிலி போட்டு கட்டியிருந்தனர்.சந்திரன் அப்பாவிடம் அப்பா, " ஏன் இந்த யானை சங்கிலியுடன்  இருக்கிறது. யானை பலமுள்ளதுதானே,அது சங்கிலியை தன் காலால் உதைத்து எறிந்து விட்டு வரலாமே" என்று கேட்டான்.

அதற்கு தந்தை, " யானைக்கு பிறந்தவுடன் சங்கிலியை காலில் கட்டியுள்ளார்கள்.இப்பொழுது வளர்ந்தபிறகும் அந்த சங்கிலி அப்படியே உள்ளது.யானை மிகவும் பலம் வாய்ந்தது ஆனால் யானைக்கு மனதளவில் தன்னால் இந்த சங்கிலியைஅறுத்து வெளியே வரமுடியும் என்ற நம்பிக்கை  அதற்கு இல்லை. அதனால் தான் அப்படியே இருக்கிறது." என்றார்

மேலும், "அதுபோல இல்லாமல் நீ நம்பிக்கையுடன் எந்த வேலையையும் செய்யவேண்டும்.தன்னால் முடியும் என்ற எண்ணம் உனக்கு வரவேண்டும்" என்றார்.

தந்தை சொன்னதைகேட்ட சந்திரனுக்கு தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது.வீட்டுக்கு  வந்தவுடன் தன்னால் முடியும் என்று பள்ளியில்  கொடுத்த கணக்குகளை  போட்டான்.சரியாக  இருந்தது.

காலையில் நான் தைரியமாக பள்ளிக்கு cycle ல் செல்வேன் என்று கிளம்பினான்.அவனது பெற்றோர்களுக்கு  மிகவும் சந்தோஷம்.

குழந்தைகளே நீங்களும் எதுவும் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கவேண்டும்.




Monday, May 29, 2023

42. நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு

 42 - நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு


திண்டுக்கல் பக்கத்தில் ஒரு கிராமத்தில் விவசாய தோட்டங்கள் இருந்தன..அதில் வேலாயுதம் என்ற விவசாயி க்கு சொந்தமான  இரண்டு தோட்டங்கள் உள்ளன.வேலாயுதம் தினமும் வந்து தோட்ட்த்திற்கு தண்ணீர்  விட்டு குப்பைகளையெல்லாம் அகற்றிவிட்டு செல்வ்து வழக்கம்.

அந்த தோட்டத்திற்கு ஒரு மானும்,ஒரு காகமும் வேலாயுதம் இல்லாத பொழுது வந்து மான் புற்களையும்,காகம் பழங்கள்,கொட்டைகள் முதலியவைகளை உண்டுவிட்டு செல்வது வழக்கம்.

மானும், காகமும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.இரவில் அவர்கள் ஒரு மரத்தடியில்  மானும் ,மரத்தின் கிளையில் காகமும் வசிப்பது  வழக்கம்.

அந்த தோட்டத்தில் ஒரு நரி அவ்வப்போது வருவது வழக்கம்.மானும் காகமும் சிறந்த நண்பர்களாக இருப்பது நரிக்கு பிடிக்கவில்லை.எப்படியாவது அவர்களை பிரிக்கவேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் மானிடம் நரி ,"நண்பா அடுத்த தோட்டத்தில் நிறைய பச்சைபசேலென்று புல்வெளிகள் நிறைய உள்ளன.நீ என்னுடன் வந்தால் அதை நீ உண்டு மகிழலாம் "என ஆசைக்காட்டியது.

மானும்  வருவதாக கூறியது.மரத்தின் மேலிருந்த காகம் அதைக்கேட்டு மானிடம் நண்பா’ முன் பின் தெரியாதவர்களிடம் நாம் நட்புடன் பழகக்கூடாது.நீ நரியுடன் செல்ல வேண்டாம்" என்றது.

மான் கேட்கவில்லை.அடுத்த நாள் மான் நரியுடன் சென்றது.

மானுக்கு அந்த புல்வெளியை பார்த்ததும் மிகவும்மகிழ்ச்சி.துள்ளி துள்ளி  குதித்து ஓடியது.வேண்டிய அளவு புற்களை  சாப்பிட்டது.இதை தூரத்திலிருந்து பார்த்த வேலாயுதம்." இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்,நாளைக்கு மான் வரட்டும் பிடித்து விடுகிறேன் "என்று மனதில் சொல்லிக்கொண்டு இரவு ஒரு வலையை மான் வரும் டத்தில்  போட்டான்.

அடுத்த நாள் மான் வந்தபோது வலைக்குள் சிக்கிக்கொண்டது. நரியிடம், "என்னை காப்பாத்து" என்று கூற நரியோ 'நான் இன்று விரதம் எதையும் கடிக்கமாட்டேன்" என்று கூறி தப்பியது.

நரியிம் எண்ணம் மானை இரவு அடித்து சாப்பிடலாம் என்பதே.

அப்பொழுது காகம் நண்பனை தேடிக்கொண்டுவர, மான் வலையில் மாட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து "நான் சொல்வதை நீ கேட்கவில்லை,இப்பொழுது மாட்டிக்கொண்டாய்.சரி இப்பொழுது நான் சொல்வதைக்கேள் ..அந்த விவசாயி தூரத்தில்  வந்துகொண்டிருக்கிறான்.நீ இறந்தது போல் நடி.நான் உன்னை மெதுவாக கொத்திக்கொண்டிருக்கிறேன்.விவசாயி நீ இறந்து விட்டாய் என்று நினைத்து வலையை எடுத்துக்கொண்டு போய்விடுவான்.நாமும் தப்பிக்கலாம்" என்றது.

 அது போல் மானும் இறந்தது போல் மூச்சை அடக்க வேலாயுதம் மான் இறந்து விட்டது என்று நினைத்து வலையை எடுத்து விட்டான்.இரண்டும் தப்பி ஓடின.

இதை பார்த்த அவன் தன் கையில் இருந்த கம்பால் மானை நோக்கி வீசினான்.கம்பு தவறி புதருக்குள் இருந்த நரியின் தலையின் மேல் பட்டு அது இறந்தது.

நட்பை தேர்ந்தெடுக்கும் முன்பு ஆராய்ந்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காகம் கூறியபடியே மானுடன் சென்றது.

Monday, May 1, 2023

41. பிறன் பொருள் விரும்பாதே


41- பிறன் பொருள் விரும்பாதே



 வயலூர் என்ற ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ராஜனும்,சிங்காரமும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.ராஜனுடைய அப்பா பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். ராஜனும் நன்றாகப் படிப்பான்.நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவன்.எல்லோரிடமும் மரியாதையாக இருப்பான்.

அவனுக்கு நேர்மாறாக சிங்காரம் இருப்பான்.படிப்பில் ஆர்வம் கிடையாது.பள்ளிக்கும் சரியாக வருவதில்லை.

இருவரும் அடுத்தடுத்த வீட்டில் இருப்பதால் நன்றாகபேசிக்கொள்வார்கள்.சேர்ந்து விளையாடுவார்கள்.சிங்காரத்திற்கு ராஜன் தன்னை விட இரண்டு வயது சிறியவன் என்பதால் அவனிடம் மட்டும் அன்பாக நடந்து கொள்வான்.

ஒரு நாள் ராஜனுக்கு அவனுடைய அப்பா புஸ்தகம் வாங்குவதற்கு ஐம்பது ரூபாய் கொடுத்தார்.அதை எடுத்துக்கொண்டு வந்தவன் வழியில் சிங்காரத்தை பார்த்து "சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டபின் கடைக்கு போய் ஒரு புஸ்தகம் வாங்கவேண்டும்,நீயும் கூட வருகிறயா என்று கேட்டான்.

"வருகிறேன்" என்றான் சிங்காரம்.

ராஜன் பையில் ஐம்பது  ரூபாயை பார்த்த சிங்காரம் இடைவேளையின் போது அவனுடைய பையிலிருந்து அதை எடுத்து விட்டான். சாயங்கால்ம் இதை வைத்துக்கொண்டு சினிமாவுக்கு செல்லலாம் என்பது அவனது எண்ணம்.

இடைவேளை முடிந்து ராஜன் பையைப் பார்க்க அதில் ஐம்பதுரூபாய் இல்லை.

அவன் உடனே ஆசிரியரிடம் முறையிட்டான்.

ஆசிரியர் உடனே  “மாணவர்களே எல்லோரும் நான் உட்பட கண்ணை இரண்டு நிமிடம் மூடியிருப்போம்.திருடியவன் யாராக இருந்தாலும் மெதுவாக வந்து ராஜன் பையில் பணத்தை வைத்து விடுங்கள். இதனால் யார் எடுத்தார் என்று யாருக்கும் தெரியாது,எடுத்தவனும் திருந்தி விடலாம்"என்றார்.

அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர்

இரண்டு நிமிடம் கழித்து எல்லோரும் கண் திறந்துபார்த்தபோது, ராஜன் பையில் பணம் இருந்தது.

"யார் வைத்தார்கள்" என்று தெரியவில்லை.

மாலை பள்ளி விட்டபின் ஆசிரியர் தனியாக அமர்ந்திருக்க சிங்காரம் வந்தான்."சார், நான் தான் பணத்தை எடுத்தேன்ஆனால் பணத்தை திருப்பி வைக்கவில்லை.மனசு உறுத்தலாக இருக்க உங்களிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டு பணத்தை கொடுத்து  விட  வந்தேன் "என்றான்.

அதைக்கேட்டு ஆசிரியர் எ"னக்கு தெரியும் இப்படி நடக்குமென்று.நான் தான் அந்த ஐம்பது ரூபாயை வைத்தேன்.எடுத்தவன் எப்படியும் திருந்தி என்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் இதை செய்தேன் "என்றார்.

"மேலும் நீயும் திருந்திவிட்டாய் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி.இனிமேல் நீயும்  பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ராஜனைப்போல நன்றாகப்படித்து சிறந்த மாணவனாக வ்ரவேண்டும்" என்றார். 

சிங்காரமும் தவறை உண்ர்ந்து அன்று முதல் நன்றாக படித்து நல்ல மாணவனான்.