Thursday, June 15, 2023

44.பிறர் மனம் புண்படவேண்டாம்



44- பிறர் மனம் புண்பட பேசக்கூடாது 




ஒரு குளத்தில் ஒரு தங்க நிற மீனும் ஒரு கெளத்தி மீனும் வசித்து வந்தன. தங்க நிற  மீன் தங்கம் போல் பள பள வென்று இருக்கும். கெளத்தி மீன் கருப்பாக இருக்கும்.

அந்த குளத்தருகில் ஒரு மரத்தில் ஒரு காகம் இருந்தது.அது அவ்வப்பொழுது இந்த மீன்களுடன் பேசிக்கொண்டு பொழுதைக் கழிக்கும்.

தங்க நிற மீனுக்கு தான் பள பளவென்று இருப்பது பெருமை.அதனால் அது கெளத்தி மீனையும் காகத்தையும் எப்பொழுதும் ‘நீங்கள் இருவரும் கருப்பாக இருக்கிறீர்கள்’என்று கேலி செய்து கொண்டிருக்கும்

கெளத்தி மீன் இதைக்கேட்டு ஒன்றும் சொல்லாமல் இறைவன்  தன்னை இப்படி படைத்திருக்கிறான் என்ன செய்வது என்று அமைதியாக இருந்து விடும்.

ஆனால் காகம் வந்த சண்டையை விடாது.தங்க மீனிடம் நீ தங்க நிறமாக இருப்பது  உனக்கு ஆபத்து..அந்த நிறம் தான் உனக்கு பெரிய கெடுதலை கொடுக்கும் பார் என்று கூறும்.

ஒரு நாள் இரண்டு மீன்களும் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தன.மரத்தின் மேலே காகம் உட்கார்ந்துகொண்டு இரண்டு மீன்களும் விளையாடுவதை  பார்த்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு கொக்கு ஒன்று வந்து தங்க மீனிடம் 'தூரத்தில் நான் வந்து கொண்டிருந்தபோது உனது தங்க நிறம் என் கண்களை பறித்தது.அதனால் நீ தான் எனக்கு இன்றைய உணவு என்று கூறி அதனை கவ்வியது.தங்க மீன் அலற மேலே பார்த்துக்கொண்டிருந்த காகம் கொக்கின் தலையை கொத்த வலி தாங்காமல் கொக்கு தங்க மீனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.

பின்னர் காகம் கீழே வந்து தங்க மீனிடம் "நீ எப்பொழுதும் என்னையும் கெளத்தி மீனையும் கேவலமாக மனது புண்படும்படி பேசுவாய்.அதனால் தான் நீ இன்று ஆபத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாய்.இனிமேல் இப்படி மற்றவர்கள் மனது புண்படும்படி நடக்காதே" என்று அறிவுரை கூறியது.தங்க மீனும் தன் தவறை உணர்ந்தது.

நாமும் பிறர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது.



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கருத்து...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.