Saturday, May 30, 2015

146- ஒற்றுமையின் பயன்

                               

வியாபாரி ஒருவன், பொருட்கள் வாங்க மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தான்.அந்தப் பாதையின் நடுவில் ஒரு பெரிய பாறை ஒன்று வழியை அடைத்துக் கொண்டிருந்தது.மேலே நடக்கவும் வழி இல்லை.

அந்தப் பாறையை நகர்த்தி வழி உண்டாக்க முயன்றான்.ஆனால், அந்தப் பாறை சிறிதளவு கூட நகரவில்லை.

"அடடா! இரவு வந்து விட்டால்...கொடிய விலங்குகள் இங்கு வரலாமே! என்ன செய்வது?" என தனது விதியை நொந்தபடியே, சுற்றி நோட்டம் இட்டான்.

அப்போதுதான்...அவனைப்போல பலர் அந்தப் பாறையை அசைக்க முடியாமல் அங்கு அமர்ந்துள்ளதைக் கண்டான்.அனைவரின் முகத்திலும் சோகம்.

அப்போது அறிவாளி ஒருவன் அவ்விடம் வந்தான்.அவனாலும், பாறையை அகற்றி வழி உண்டாக்க இயலவில்லை.உடனே அவனுக்கு " தனிப்பட்ட ஒருவனால் பாறையை நகர்த்த முடியவில்லை.அதுவே, அனைவரும் ஒன்று கூடி   முயன்றால் பாறையை அகற்றலாம்" என்று யோசனை வந்தது.

அவன் அதை அனைவரிடமும் சொல்ல, அனைவரும் முயன்றனர்.இப்போது பாறை அசைந்து கொடுத்ததுடன், நகர்ந்து மலைச் சரிவில் உருண்டது.

பாதை தெரிந்தது.

அனைவரும் ஒன்றுபட்டு முயன்றதால்....வழி கிடைத்த மகிழ்ச்சியில், அவரவர் பயணத்தைத் தொடர்ந்தனர்.

Friday, May 29, 2015

145 - படிப்பின் அவசியம்

                     

ஒரு ஊரில் படிப்பறிவு இல்லாத, சிந்திக்கும் திறனற்ற மூடன் ஒருவன் வசித்து வந்தான்.

அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது.அது, அவன் தினமும் போடும் தவிட்டைத் தின்று..பால் தந்தது. அந்தப் பாலை விற்று மூடன் தன் வாழ்நாளை கழித்து வந்தான்.

ஒருநாள், பசுவிற்குப் போட தவிட்டுப் பானையைத் தூக்கி வரும் போது, அப்பானைத் தவறிக் கீழே விழுந்து, உடைந்தது.அதில் இருந்த தவிடு அனைத்தும் சாக்கடையில் விழுந்து கரைந்தது.

இதைக்கண்ட மூடன்..மனம் வருத்தப்பட்டு, இறைவனிடம் வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ கேள்.அதைத் தருகிறேன்' என்றார்.

சிந்திக்கும் திறனற்ற, மூடனான அவன் இறைவனிடம், "இறைவா...என் தவிட்டுப் பானை உடைந்து விட்டது.அதனால் தவிடு மொத்தமும் சாக்கடையில் கரைந்தது.ஆகவே எனக்கு உடனடியாக ஒரு பானையும், தவிடும் வேண்டும்" என்றான்.

அவனது முட்டாள் தனத்தைக் கண்டு சிரித்த இறைவன், பானையையும் தவிடையும் அளித்துவிட்டுச் சென்றார்.

அவன், படிக்காத மூளையற்ற மூடனாய் இருந்ததால், அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்தான்.

இதனால் நாம் அறியும் நீதி, ஒவ்வொருவருக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் எனத் தெரிந்து கொள்ளும் அதே நேரம்...நம் மூளையை உபயோகித்து சிந்திக்கும் திறனையும்  வளர்த்து கொள்ள வேண்டும்

Sunday, April 19, 2015

144, கெடுவான் கேடு நினைப்பான் (நீதிக்கதை)


நரி ஒன்று கொழுத்த மான் ஒன்றை பார்த்தது.

' ஆஹா...இதன் உடலில் எவ்வளவு கொழுத்த இறைச்சி இருக்கிறது...இதைத் தின்றால் எவ்வளவு சுவையாக இருக்கும்' என்று எண்ணியது.

; ஆனால் இதை எப்படிக் கொல்வது? தன்னால் அது முடியாதே....இதை சூழ்ச்சியால் தான் அடைய முடியும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு மானிடம் சென்று ' மானே நீ மிகவும் அழகாக இருக்கிறாய்...சிறிது  தூரத்தில் ஒரு புல்வெளி இருக்கின்றது.அங்குள்ள புற்களை தின்றால் நீ மேலும் அழகாவாய். நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.. நீ இந்த இடத்திலேயே இரு என்று சொல்லிவிட்டு சிங்கத்தைத் தேடி சென்றது.

அந்த சிங்கத்திடம் மானைக் காட்டினால்..அது அதை அடித்து தின்றது போக மீதத்தை தான் சாப்பிடலாம் என்று எண்ணி ' சிங்க ராஜாவே ...நான் இப்பொழுது ஒரு மானைப்பார்த்தேன். மிகவும் கொழுத்த மான்.கண்டிப்பாக அதன் இறைச்சி நன்றாக இருக்கும்.உங்களுக்காக ஒரு சிறு சூழ்ச்சி செய்து அதை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு வந்திருக்கிறேன்....நீங்கள் என்னுடன் வந்தால் அதைக்காட்டுகிறேன்' என்றது.

' அப்படியா மிகவும் நன்று' என்று சிங்கம் நரியுடன் செல்லத்தயாரானது.

நரியின் மீது சந்தேகம் கொண்டு ..அதைத் தொடர்ந்து வந்த மான்....நரி சிங்கத்திடம் பேசியதைக்கேட்டு ஓடி ஒளிந்தது.

மானைக் காண வந்த நரி ..அங்கே மான் இல்லாததைக் கண்டது.

' என்னிடம் பொய்யா சொன்னாய்' என்று கோபமுற்ற சிங்கம் ...நரியை அடித்துக்கொன்றது.

நாம் ஒருவருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் நம் செயலே நமக்கு கெடுதலை உண்டாக்கும்.

Sunday, March 22, 2015

143. நல்லவனாக இரு ......(நீதிக்கதை)



ஒரு ஊரில் சீதாராமன் என்று ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் பிறருக்கு தீங்குகளையே இழைத்து வந்தான்.அதனால் அவ்வூர் மக்களும் அவனைக்கண்டால் பயந்து ஒதுங்கிச் சென்றனர்.

அவனது தந்தை பணக்காரராய் இருந்ததால்...அவன் எந்த வேலைக்கும் செல்லாமல் தன் கவனம் முழுவதையும் கெட்ட செயல்கள் செய்வதிலேயே கழித்து வந்தான்.

ஒரு நாள் திடீரென்று அவனுக்கு நல்லவனாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட கோவிலுக்குச் சென்று இறைவனிடம் 'ஆண்டவனே ..என்னை நல்லவனாக மாற்றிவிடு ' என்று வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி ' சீதாராமா..இன்றிலிருந்து இரண்டு மாதங்கள் என் கோவிலைச் சுற்றி சுத்தம் செய், .உழவாரப் பணி செய்  என்றார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தாகம் தணிய தண்ணீருக்கு ஏற்பாடு செய். இரண்டு மாதங்களுக்கு பின் நான் வந்து உன்னை நல்லவனாக ஆக்குகிறேன் என்றார்.

அவனும் அன்றிலிருந்து கடுமையாக உழைத்து கோவிலை அழகாக ஆக்கினான்.அவனது மனம் வேறு எந்த விஷயத்தையும் நினைக்கவில்லை. மக்கள் அவனை விரும்ப ஆரம்பித்தார்கள்.

இரண்டு மாதம் கழித்து இறைவன் மீண்டும் வந்து ' சீதாராமா...இப்போது சொல்....உனக்கு இப்போது பிறருக்கு தீங்கு இழைக்கவேண்டும் என்று தோன்றுகிறதா' என்றார், அவனும் ' இல்லை ' என்றான்.

' நீ எந்த வேலையும் செய்யாமல் சோம்பித் திரிந்ததால் ...உன் உள்ளத்தில் பிறருக்கு தீங்கிழைக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் இரண்டு மாதமாக ஓய்வின்றி உழைத்து பிற எண்ணங்கள் ஏதும் இல்லாமல் நல்ல காரியங்களையே செய்ததால்....உன் மனமும் மாறியது. நல்லவன் என்ற பெயரை எடுக்க ஆரம்பித்துள்ளாய்' என்றார்.

நாமும் நல்ல எண்ணங்களையும், நல்ல உழைப்பையும் வளர்த்துக் கொண்டால் நல்லவனாக போற்றப்படுவோம்.

Friday, January 9, 2015

142. இறைவனின் படைப்பில் ............. (நீதிக்கதை)




ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தது ஒருஆமை....
'நம்மால் ஏற்கனவே வேகமாக போகமுடியாது...இதில்,முதுகில் வேறு பாரமாக ஓடு.
முயலைப் பார்த்து பொறாமைப் படுவதில் பயன் இல்லை....ஆண்டவனைத்தான் என்னை இப்படிப் படைத்ததற்காக நொந்து கொள்ளவேண்டும்.' என எண்ணியது.
அப்போது ....அன்று இறை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம்,விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது.
முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது.ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது
சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட ....முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு விநாடியும்....மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில்,விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.அந்த தனித்தன்மையை உபயோகித்து ...ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம்.
இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை

Monday, November 24, 2014

141-சமாதானம் அவசியம் ( நீதிக்கதை),



காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன.

கரடி, "நான் தான் முதலில் மானைப் பார்த்தேன்..ஆகவே அது எனக்குச் சொந்தம் 'என்றது.

ஆனால் சிங்கமோ. "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம்' என்றது.

இரண்டும், செத்துக் கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன.அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின.அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும்.கரடியையும் பார்த்தது.இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன."நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப் போட்டு உண்டிருக்கலாம்.நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே" என வருந்தின.

நாமும் அவர்களைப் போல் இல்லாமல்..எல்லாரிடமும் போரிடும் குணத்தைவிட்டு சமாதானமாய்ச் சென்றால் இழப்பு .எதுவும் ஏற்படாது.

Friday, November 21, 2014

140-நமது மகிழ்ச்சி பிறருக்கு துன்பம் ஆகலாமா? (நீதிக்கதை)




அன்று பள்ளி விடுமுறை என்றதால் சில சிறுவர்கள் சேர்ந்து, அந்த ஊரில் இருந்த ஒரு குளக்கரைக்கு வந்தனர்.

அந்தக் குளத்தில் பல தவளைகள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அதைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சி மேலிட..அந்தத் தவளைகள் மீது யார் அதிகம் கல் எறிகிறார்கள் பார்க்கலாம் என்று போட்டி போட்டுக் கொண்டு, கரையில் இருந்த கற்களை எடுத்து தவளைகள் மீது வீச ஆரம்பித்தார்கள்.இதனால் பல தவளைகள் காயம் அடைந்தன.அப்போது, தைரியமாக ஒரு தவளை..அவர்களிடம் வந்து..

"கல்லெறிவதை நிறுத்துங்கள்.உங்கள் விளையாட்டால் சற்று முன் வரை மகிழ்வோடு விளையாடிக் கொண்டிருந்த எங்களில் பலர் காயமடைந்து வேதனையில் உள்ளனர்.நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென..எங்களை வேதனைப் படுத்தலாமா?:"என்றது.

சிறுவர்களும் தங்களது தவறை உணர்ந்து தவளையிடம் மன்னிப்புக் கேட்டனர்.

நமது மகிழ்ச்சி..இன்னொருவர் வேதனையால் ஏற்படக்கூடாது