Showing posts with label . நீதிக்கதைகள்.. Show all posts
Showing posts with label . நீதிக்கதைகள்.. Show all posts

Wednesday, October 18, 2017

2 -முயற்சி



கடவுளின் மீது பக்தி கொண்ட  கழுகு ஒன்று இருந்தது.தினமும் இறைவனை தியானம் செய்யும்.

அது வானில் பறந்தபடியே  கீழே மேய்ந்துகொண்டிருக்கும்  கோழிக்குஞ்சுகள்,ஓடி ஒளியும் எலி போன்றவற்றை பார்த்து சரேலென இறங்கி.அவற்றை கொத்திக்கொண்டு போய் பசி ஆறும்.

கடந்த சில தினங்களாக அதற்கு வயதானதால் வெளியே சுற்ற முடியவில்லை.உணவுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என பார்த்தது.எதுவும் கிட்டவில்லை.

ஆகவே இறைவனை தியானித்து "ஆண்டவா" என்னால்  இன்று வெளியே போக முடியவில்லை.பசி வாட்டுகிறது.எனக்கு உண்ண ஏதாவது அளியுங்கள்,என வேண்டியது.

காலை,மாலை போய் இரவும் வந்தது.அதற்கு எதுவும் கிட்டவில்லை அதனால் இறைவன் மீது கோபமுற்று "இவ்வளவு நாள் உன்னை வேண்டிய உன் பக்தனுக்கு ஒரு வேளை உணவைக்கூட அளிக்காத இரக்கமற்றவனா நீ" என அரற்றியது.

இறைவன் அதன் முன் தோன்றி." கழுகே நீ காலையில் என்னை வேண்டியபோதே உனக்கான உணவைக் கொடுத்துவிட்டேன்,சற்று திரும்பிப்பார்" என்றார்.

கழுகு திரும்பி பார்க்க ஒரு செத்த எலி  கிடந்தது.' நான் உனக்கு உணவினை கொடுத்தாலும் அதற்கான சிறு முயற்சியாவது நீ செய்யவேண்டும்.நீ அப்படி முயலாதது உன் தவறு' என்று கூறி மறைந்தார்.

நமக்கு எல்லாமே இறைவன் என்றாலும்...நமக்கு வேண்டியதை அவர் அளித்தாலும் அதற்கான நம் முயற்சியும் சிறிதளவாவது இருக்கவேண்டும் என்பதே இக்கதையின் நீதி.

Friday, May 29, 2015

145 - படிப்பின் அவசியம்

                     

ஒரு ஊரில் படிப்பறிவு இல்லாத, சிந்திக்கும் திறனற்ற மூடன் ஒருவன் வசித்து வந்தான்.

அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது.அது, அவன் தினமும் போடும் தவிட்டைத் தின்று..பால் தந்தது. அந்தப் பாலை விற்று மூடன் தன் வாழ்நாளை கழித்து வந்தான்.

ஒருநாள், பசுவிற்குப் போட தவிட்டுப் பானையைத் தூக்கி வரும் போது, அப்பானைத் தவறிக் கீழே விழுந்து, உடைந்தது.அதில் இருந்த தவிடு அனைத்தும் சாக்கடையில் விழுந்து கரைந்தது.

இதைக்கண்ட மூடன்..மனம் வருத்தப்பட்டு, இறைவனிடம் வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ கேள்.அதைத் தருகிறேன்' என்றார்.

சிந்திக்கும் திறனற்ற, மூடனான அவன் இறைவனிடம், "இறைவா...என் தவிட்டுப் பானை உடைந்து விட்டது.அதனால் தவிடு மொத்தமும் சாக்கடையில் கரைந்தது.ஆகவே எனக்கு உடனடியாக ஒரு பானையும், தவிடும் வேண்டும்" என்றான்.

அவனது முட்டாள் தனத்தைக் கண்டு சிரித்த இறைவன், பானையையும் தவிடையும் அளித்துவிட்டுச் சென்றார்.

அவன், படிக்காத மூளையற்ற மூடனாய் இருந்ததால், அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்தான்.

இதனால் நாம் அறியும் நீதி, ஒவ்வொருவருக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் எனத் தெரிந்து கொள்ளும் அதே நேரம்...நம் மூளையை உபயோகித்து சிந்திக்கும் திறனையும்  வளர்த்து கொள்ள வேண்டும்

Wednesday, November 12, 2014

136- காட்டெருமையின் முன்னேற்பாடு (நீதிக்கதை)

                 

ஒரு காட்டில், காட்டு எருமை ஒன்று தன் கொம்புகளை மரத்தில் உரசியபடியே தீட்டிக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட நரி , "எதற்கு தேவையில்லாமல் இப்போது கொம்புகளை கூராக்க தீட்டிக் கொண்டிருக்கிறாய்" என்றது.

"திடீரென சிங்கமோ, புலியோ என்னைத் தாக்க வந்தால், அதனிடமிருந்து தப்பிக்கலாம் அல்லவா? ஆகவேதான் கூர் தீட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றது எருமை.

"வேலையற்ற வேலை செய்கிறாய்.அதற்கு நொண்டிச் சாக்கு ஒன்றும் சொல்கிறாய்" என நரி கிண்டல் செய்தது.

அந்த சமயம், சிங்கம் ஒன்று பெரும் கர்ஜனை செய்தபடியே காட்டெருமையின் மீது பாய்ந்தது.நரி சிங்கத்தைக் கண்டதும் ஓடி ஒளிந்தது.

தன் மீது பாய்ந்த சிங்கத்தை காட்டெருமை கூரிய தனது கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது.காயமுற்ற சிங்கம் ஓடிவிட்டது.

திரும்பி வந்த நரி எருமையைப் பார்த்து, "ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ள நீ செய்த முன்னேற்பாடு போற்றுதலுக்குரியது" என பாராட்டியது.

நாமும் எந்த ஒரு வேலையையும், பிறகு செய்து கொள்ளலாம் என தள்ளிப் போட்டால், அதனால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆகவே, எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடக்கூடாது. 

Tuesday, July 9, 2013

126. " தெரியாததை தெரியும் என வேண்டாம் " (நீதிக்கதை)



சரவணன் படிக்கும் பள்ளியில் அன்று கல்வி அதிகாரி வருவதாக இருந்தது.

சரவணன் வகுப்பு ஆசிரியருக்கு ஒரே பதட்டம்.அவர் மாணவர்களைப் பார்த்து,' அதிகாரி உங்களை ஏதேனும் கேளவிகள் கேட்கச் சொன்னால்,,நான் கேட்கிறேன்..அவ்வாறு கேட்கும்போது விடை தெரிந்தவர்கள் வலதுகையையும்,தெரியாதவர்கள் இடது கையையும்
தூக்குங்கள்.நான் உடனே வலது கையை தூக்கியவர்களிடம் விடை கேட்கிறேன். இப்படி செய்வது மூலம் நம் பள்ளிக்கும்,எனக்கும்,உங்களுக்கும் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்' என்றார்.
மாணவர்களும் ' சரி' என்றனர்.

கல்வி அதிகாரி வந்தார்.
ஆசிரியரை ஏதேனும் கேள்வி கேட்கச் சொன்னார்.
ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டதும்,சிலர் வலது கையையும்,சிலர் இடது கையையும் தூக்கினர்.
ஒரு மாணவன் மட்டும் எந்தக் கையையும் தூக்கவில்லை.

உடனே அதிகாரி, அந்த மாணவனிடம்,' உனக்கு விடை தெரியவில்லையா? நீ ஏன் கையை தூக்கவில்லை? என்றார்.
உடனே அந்த மாணவன் 'ஐயா..எனக்கு எது வலது கை...எது இடது கை என ஆசிரியர் சொல்லவில்லை..' என்றான்.

ஆசிரியர் விழிக்க..அதிகாரி நடந்ததை அறிந்து ,ஆசிரியரிடம் ' நல்போதனை செய்யவேண்டிய ஆசிரியர் இப்படி செய்யலாமா ?' என்று கடிந்துகொண்டு, மாணவர்களிடம், ' நமக்கு தெரியாததை ஒப்புக்கொண்டு,பின் அதைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,எல்லாம் தெரிந்தது போல நடந்துகொண்டு பிறரை ஏமாற்றினால் இறுதியில் ஏமாறுவது நாமாக இருக்கும்' என்றார்.

Tuesday, February 5, 2013

118 -கடலின் பெருமை (நீதிக்கதை)




ஒருநாள் நதி ஒன்று, கிணறு ஒன்றிடம், 'நீயும் என்னைப் போல கடலில் கலந்துவிடு வா' என்றது.

அதற்கு கிணறு, 'நீ கடலில் கலப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீராகவும்,உணவு விளைய பாசனத்திற்கும் பயன்படுகிறாய்.ஆனால் கடலில் கலந்தபின்னர் உனது தனித்துவத்தை இழந்துவிடுகிறாய்.பயனில்லா உப்பு நீராகி விடுகிறாய்.அதுபோல ஆக நான் விரும்பவில்லை.என் காலம் முழுதும் மக்களுக்கு பயன்படவே விரும்புகிறேன்' என்றது.

இதைக் கேட்ட நதி, 'கிணறே..நீ தவறாகப் பேசுகிறாய்.நாம் தனித்துவத்துடன் இருப்பதற்குக் காரணமே கடல் தான்.அது பார்க்க ஆரவாரமாய் இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் தன் பணியைச் செய்து வருகிறது.கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மழைமேகமாக மாறி மழைத் தருகிறது. மக்கள் வாழ்வில் வறட்சியைப் போக்க பெரும் பங்கு வகிக்கிறது.நாட்டின் வெப்பதட்ப நிலையை நிர்ணயிக்கிறது ..மழையில்லையேல், ஒருநாள்..நீ, நான் எல்லாம் வறண்டுவிடுவோம்.' என்றது.

அப்போதுதான் கிணற்றிற்கு கடலின் முக்கியத்துவம் புரிந்தது.ஒருசிலருக்கு பயன் படும் தான் செருக்குடன் இருக்கும் போது..உலகிற்கே பயன்படும் கடலின்..விளம்பரமின்மைக் கண்டு வியந்தது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்..கடல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தது.

நாமும்..நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும்போது..அதற்கான விளம்பரத்தை எதிர்ப்பார்க்காது...நம் மனநிறைவை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.