Wednesday, August 7, 2013

127. ' தூற்றுவார் தூற்றட்டும் ' (நீதிக்கதை)



கௌதம புத்தர் துறவியானதும் தினமும் தனக்கு வேண்டிய உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் ஒரு வீட்டில் அவர் பிச்சை கேட்டபோது ...' போ..போ.. தடிமாடு மாதிரி இருந்துகொண்டு, ஏன் பிச்சை எடுக்கிறாய்' என விரட்டினார் அந்த வீட்டில் இருந்தவர்.

உடனே புத்தர் ' ஐயா' என அவரை அழைத்தார்'

அந்த வீட்டுக்காரரும் ' என்ன?' என்றார்.

நீங்கள் எனக்கு ஏதேனும் பிச்சை போட்டிருந்தால் அது யாருக்கு சொந்தம்' என கேட்டார்.

' போட்டிருந்தால் அது உனக்கு சொந்தம் ' என்றார் வீட்டுக்காரர்.

'நீங்கள் போடும் பிச்சையை நான் மறுத்துவிட்டால்' என வினவினார் புத்தர்
.
'எனக்குதான் சொந்தம்'  

'சற்று முன்பு என்னை விரட்டினீர்களே ...அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன்...எனவே...அது உங்களுக்கு சொந்தம் ' என்று கூறிச்சென்றார்.

நம்மை தூற்றுபவர்களைக்கண்டு ...பதிலுக்கு நாமும் தூற்றக்கூடாது.நாம் மௌனமாய் இருந்தால்....தூற்றப்பட்ட வார்த்தைகள் தூற்றுபவரைச் சாரும் என்பதை நாமும் உணர்வோம், நம்மை தூற்றுபவரும் உணர்வர்..

Tuesday, July 9, 2013

126. " தெரியாததை தெரியும் என வேண்டாம் " (நீதிக்கதை)



சரவணன் படிக்கும் பள்ளியில் அன்று கல்வி அதிகாரி வருவதாக இருந்தது.

சரவணன் வகுப்பு ஆசிரியருக்கு ஒரே பதட்டம்.அவர் மாணவர்களைப் பார்த்து,' அதிகாரி உங்களை ஏதேனும் கேளவிகள் கேட்கச் சொன்னால்,,நான் கேட்கிறேன்..அவ்வாறு கேட்கும்போது விடை தெரிந்தவர்கள் வலதுகையையும்,தெரியாதவர்கள் இடது கையையும்
தூக்குங்கள்.நான் உடனே வலது கையை தூக்கியவர்களிடம் விடை கேட்கிறேன். இப்படி செய்வது மூலம் நம் பள்ளிக்கும்,எனக்கும்,உங்களுக்கும் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்' என்றார்.
மாணவர்களும் ' சரி' என்றனர்.

கல்வி அதிகாரி வந்தார்.
ஆசிரியரை ஏதேனும் கேள்வி கேட்கச் சொன்னார்.
ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டதும்,சிலர் வலது கையையும்,சிலர் இடது கையையும் தூக்கினர்.
ஒரு மாணவன் மட்டும் எந்தக் கையையும் தூக்கவில்லை.

உடனே அதிகாரி, அந்த மாணவனிடம்,' உனக்கு விடை தெரியவில்லையா? நீ ஏன் கையை தூக்கவில்லை? என்றார்.
உடனே அந்த மாணவன் 'ஐயா..எனக்கு எது வலது கை...எது இடது கை என ஆசிரியர் சொல்லவில்லை..' என்றான்.

ஆசிரியர் விழிக்க..அதிகாரி நடந்ததை அறிந்து ,ஆசிரியரிடம் ' நல்போதனை செய்யவேண்டிய ஆசிரியர் இப்படி செய்யலாமா ?' என்று கடிந்துகொண்டு, மாணவர்களிடம், ' நமக்கு தெரியாததை ஒப்புக்கொண்டு,பின் அதைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,எல்லாம் தெரிந்தது போல நடந்துகொண்டு பிறரை ஏமாற்றினால் இறுதியில் ஏமாறுவது நாமாக இருக்கும்' என்றார்.

Monday, June 24, 2013

125. மூடரின் செயல் (நீதிக்கதை)



' மரம் நடு விழா ' ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது.

இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களது வேலை....

முதலாவது நபர் ... பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும்.
இரண்டாவது நபர்...அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும்.
மூன்றாவது நபர்...பள்ளத்தை மண் கொண்டு மூடவேண்டும்.

அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின் பத்து தெருக்களில் செய்து முடித்தனர்.
அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு.

அடுத்த நாள்.. பள்ளம் தோண்டுபவர் தோண்டிக்கொண்டு சென்றார்.
செடியை நட வேண்டிய இரண்டாவது நபர் வேலைக்கு வரவில்லை.
அது பற்றிக் கவலைப்படாத மூன்றாவது நபர் தோண்டிய பள்ளத்தை மூடிக்கொண்டே வந்தார்.

இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ...' ஏம்பா..நீ பள்ளம் தோண்டியதும் ...இவர் அதை மூடி விடுகிறாரே..என்ன விஷயம் ...' என்றார்.
அதற்கு முதல் நபர் ....' ஐயா..செடி நடு விழா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் என் வேலை பள்ளம் தோண்டுபவது...
செடி நடுவது இரண்டாம் நபர் வேலை....
இதோ நிற்கும் மூன்றாம் நபர் பள்ளத்தை மூடவேண்டும்.
செடி நடும் நபர் இன்று வரவில்லை.
அதனால் வேலை தடைபெறக்கூடாது என எங்கள் இருவர் வேலையை சரியாக செய்து விடுகிறோம்' என்றார்.

இந்த மூடர்களை என்ன செய்வது?

நம்மில் பலர் கூட ....என்ன வேலை செய்கிறோம் ...எதற்காக அதை செய்கிறோம் என்றெல்லாம் தெரியாமல் இயந்திரத்தனமாய் காரியங்களைச் செய்கிறோம்..
அதைவிடுத்து ...நாம் செய்யும் வேலையைப் பற்றி முழுவதும் அறிந்து செய்ய வேண்டும்.
இல்லையேல் இந்த மூடர்களின் கதிக்குத்தான் ஆளாவோம்.

Sunday, May 12, 2013

124.பெற்றோரைப் பேண்.....(நீதிக்கதை)





முன்னொருகாலத்தில் புண்டரிகன் என்று ஒருவன் இருந்தான்.

அவன் இறைவனை வேண்டுவதைவிட தன்னெய்பெற்ற தாய் தந்தையருக்கு பணிவிடை செய்வதையே பெறும் பேறாகச் செய்துக் கொண்டிருந்தான்.

அவனது செயல்களைக் கண்ட இறைவன் மனம் மகிழ்ந்து அவனுக்குக் காட்சியளித்தார்.

அந்த நேரம் அவன் தன் பெற்றொர்களை கவனித்துக் கொண்டிருந்தான். இறைவன், தான் வந்திருப்பதைச் சொல்லியும் அவன் மனம் மாறவில்லை.

" இறைவா...எனக்காக சற்றுப் பொறுங்கள்.பெற்றோர்களுக்கான என் கடமையை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்க வந்து விடுகிறேன்' என்றான்.

இறைவனும்....புண்டரிகன் மீது கோபம் கொள்ளாது...காத்திருந்து அவனைப் பார்த்துவிட்டு தன் நல்லாசிகளை வழங்கிச் சென்றார்.

ஒருவருக்கு இறைவன் வழிபாடு முக்கியம் ..அதைவிட முக்கியமானது....தன்னைப் பெற்றவர்களை பேணிக்காப்பது என்பதை நாம் உணரவேண்டும்.

Monday, April 8, 2013

123. உனக்கான கடமையைச் செய் (நீதிக்கதை)



ஒரு நாள் நல்ல வெயில்...

சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான்.

வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான்.

அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.' நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்' என்றது.

செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.

அடுத்த நாள் நல்ல மழை....வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட...குடை செருப்பைப் பார்த்து சிரித்தது..

உடன் செருப்பு சரவணனைப் பார்த்து,' சரவணா...உன் பாதங்களை வெயிலிருந்தும்....குப்பை...மணல்..கல் ஆகியவற்றிலிருந்தும் நான் காக்கிறேன் .. ஆனால்  என்னை வீட்டிற்கு வெளியே விட்டு விடுகிறாய்.. தலையை மட்டும் காக்கும் குடையை உள்ளே எடுத்து செல்கிறாயே? என வருந்தியது.

உடனே சரவணன்,' செருப்பே..இதோ பார்...மழையில் குடை நனைந்ததால் அதையும் இன்று வெளியில் வைத்துள்ளேன்.ஆண்டவன் படைப்பில் எந்தப்பொருளும் சரி...எந்த உயிரினங்களும் சரி...அவற்றில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை.ஒவ்வொன்றும் அதற்கான கடமையைச் செய்கிறது.இதை உணராது ..நீங்களும் சரி..மக்களும் சரி ஒருவருக்கொருவர்..இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசுகிறீர்கள்.உன் கடமையை ஒழுங்காக செய்வதை நினைத்து பார்.உனக்கு திருப்தி ஏற்படும். தவிர்த்து, குடை மனிதனுக்கு சில தினங்களுக்கு மட்டுமே பயன் படும்.ஆனால்,நீயோ மனிதர்கள் வெளியே கிளம்பும் போதெல்லாம் உன்னை வருத்திக் கொண்டு, அவர்களுக்காக உழைத்துத் தேய்கிறாய்.பிறருக்கு உதவுவதே நோக்கமாகக் கொண்ட நீ வருந்த வேண்டிய அவசியமே இல்லை.' என்றான்.

நாமும், பிறருக்கு பிரதிபலனை எதிர்பாராது உதவி செய்து, நம் கடமையை ஆற்ற வேண்டும்.தவிர்த்து..நமக்குள் நீ உயர்ந்தவன்..நான் உயர்ந்தவன் என்ற சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது.

ஒவ்வொருவரும்...ஒவ்வொரு விதத்தில் உயர்ந்தவர்களே!

Monday, April 1, 2013

122. தீங்கு செய்யக்கூடாது ...(நீதிக்கதை)






பாஸ்கர் என்ற குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் இருந்தான்.அவன் பிறரை துன்புறுத்தி அவர்கள் படும் வேதனையைக் கண்டு மிகவும் சந்தோஷப்படுவான்.

அவனது வீட்டில் வளர்க்கும் பூனையைத் தூக்கி தூர எறிவான்...விழுந்த வலியுடன் சிறிது நேரம் எழுந்திருக்காது படுத்திருக்கும் பூனையின் வலியைக் கண்டு சிரிப்பான்.

அவனது வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.அந்தக் குளத்தில் அவன் வீட்டில் வளர்த்து வரும் ' டாமி ' என்ற நாயைத் தூக்கிப் போடுவான்.நாய் மூச்சிரைக்க நீந்தி கரைக்கு வரும்போது ...மீண்டும் தூக்கிப் போட்டு ...நாய் அல்லாடுவதைக் கண்டு சிரிப்பான்.

ஒரு நாள்...அப்படி செய்து கொண்டிருந்தபோது ...கால் வழுக்கி குளத்தில் அவன் வீழ்ந்து விட்டான்.அவனுக்கோ நீச்சல் தெரியாது...தண்ணீர் கால்களை இழுத்தது...'ஐயோ...யாரேனும் உதவுங்கள்' என கத்தினான்.

சுற்று வட்டாரத்தில் எந்த மனிதருமே இல்லை. ஆனால் பாஸ்கரின் குரலை எங்கேயோ இருந்த 'டாமி' கேட்டது...உடனே ஓடி வந்தது.அவன் இருக்கும் நிலை அறிந்து ...அதுவும் குளத்தில் குதித்து...பாஸ்கரின் சட்டையை பிடித்து இழுத்தவாறு...அவனையும் கரைக்கு இழுத்து வந்து அவனது உயிரைக் காப்பாற்றியது.

தான் நாயை துன்புறுத்தியிருந்தாலும் ...அது தன் உயிரைக் காத்தது நினைத்து ...பாஸ்கர் நாயை அன்புடன் அணைத்துக்கொண்டான். அது முதல் அவன் யாரையும், எதையும் துன்புறுத்துவதில்லை.

நாமும் பிறரை துன்புறுத்தக்கூடாது.அப்படி செய்தால் நமக்கே கேடு விளையும்.

இதையே திருவள்ளுவர்
     பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
     பிற்பகல் தாமே வரும்.
என்றார்.

Saturday, March 23, 2013

121.அறிவுக்கூர்மையும் ..வெளவாலும்..(நீதிக்கதை)




சண்முகத்தின் அப்பா தினமும் அவன் இரவு தூங்கப் போகும்போது நீதிக்கதைகளை அவனுக்கு சொல்வது வழக்கம்.

ஒரு நாள் அவர் அவனிடம் ' அறிவுக்கூர்மையிருந்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்' என்றார்..
அது எப்படி என்றான் சண்முகம்...
அப்பா அதற்கு அவனுக்கு ஒரு கதையைக் கூறினார்.

ஒரு காட்டில் இரு பூனைகள் இருந்தன.அதில் ஒரு பூனை எலிகளை மட்டுமே பிடித்து உண்ணும்.மற்றதோ பறவைகளை பிடித்து உண்ணும்.

ஒரு நாள் எலிகளைப் பிடிக்கும் பூனையிடம் வெளவால் ஒன்று மாட்டிக்கொண்டது.அது எலிகளை மட்டுமே உண்ணும் பூனை என்று வெளவாலுக்குத் தெரிந்தது..'உடனே அது....எலிகளை மட்டுமே உண்ணும் நீ...பறவையான என்னை உண்ணலாமா?' என்றது.
உடனே பூனை...' நீ பறவையா' என்று கேட்டது.' ஆம்...எனக்கு இறக்கைகள் இருக்கிறதே...நீ பார்க்கவில்லையா. நான் பறக்கும் பறவை தான்' என்றது.

பூனையும் வெளவாலை பறவை என நினைத்து விட்டுவிட்டது.

வேறொரு நாள்...அந்த வெளவால் பறந்து செல்லும்போது ..அதை பறவைகளை மட்டுமே உண்ணும் பூனை தாவிப்பிடித்தது.

உடனே வெளவால் அதனிடம் 'பூனையே....பறவைகளை மட்டும் உண்பவர் நீ...ஆனால் நான் பறவை இல்லையே," என்றது.

அதற்கு பூனை உனக்கு இறக்கைகள் உள்ளதே என்றது.

' அது இறக்கைகள் அல்ல...என்னுடைய மேல் தோல்...என் மீசையைப்பார்...நான் எலி தான் என்றது.

அதை எலி என நினைத்து அப்பூனை விட்டுவிட்டது

வௌவால் அறிவுக்கூர்மையாய் இருந்ததால் தான்..இரு பூனைகளிடமும் அவைகளுக்குத் தகுந்தார் போல பேசி..தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.