Sunday, July 16, 2023

48.தகுதி

48.தகுதி




ராமன்,வாசுகி தம்பதியருக்கு கந்தன் ஒரே பையன்.

பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.படிப்பிலும் கெட்டிக்காரன்.விளையாட்டிலும் ஆர்வம் அதிகம்.

ஆனால் அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது,அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுவான்.வீட்டில் இனிப்பு ஏதும் இல்லாவிடில் சர்க்கரை டப்பாவை காலி செய்து விடுவான்.

கந்தனின் பெற்றோருக்கு கந்தனின் இந்த கெட்ட பழக்கம் மிகவும் கவலையை  உண்டு  பண்ணியது.பிற் காலத்தில் அவனது உடல் நலம் இதனால் கெட்டுவிடும் என்று அஞ்சினர்.

பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் கந்தனின்  தந்தையிடம் "பக்கத்து ஊரில் ஒரு வைத்தியர் உள்ளார்..அவர் மருத்துவர் மட்டுமல்லாது மன ரீதியான ஆலோசனைகளையும் கூறுவார்.அவரிடம் கந்தனை கூட்டிச்செல்லுங்கள்" என்றார்.

 அவனது பெற்றோர் அவனை பக்கத்து ஊர் மருத்துவரிடம்  காண்பித்தனர்.ம்ருத்துவர் கந்தனின் கெட்ட பழக்கத்தை கேட்டுவிட்டு," ஒரு வாரம் கழித்து வாருங்கள். நான் இதற்கு ஒரு தீர்வு சொல்கிறேன்" என்றார்.

கந்தனின் பெற்றோருக்கு ஒரே ஆச்சிரியம்,ஏன் மருத்துவர் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னார் என்று.ஒன்றும் புரியவில்லை  அவர்களுக்கு.

அடுத்த வாரம் வந்தது.கந்தனின் பெற்றோர் அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

அவரிடம் கந்தனின் தந்தை" எங்களை ஏன் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னீர்கள் "என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர்," ஒருவருக்கு அறிவுரை  கூறவேண்டுமென்றால் சொல்பவருக்கு ஒரு   தகுதி வேண்டும்..எனக்கு  அன்று அந்த தகுதியில்லை.ஏனென்றால்  நானும் நிறைய இனிப்பு சாப்பிடுவேன் உங்களது  குறையை கேட்டவுடன் நானும் ஒரு வாரமாக இனிப்பு சாப்பிடாமல்..அறிவுரை கூறுவதற்கான தகுதியினை உண்டாக்கி கொண்டேன். மேலும்இனிமேலும் இனிப்பை அதிகம் சாப்பிடமாட்டேன்.

கந்தன் நல்ல பையன்.நன்றாக படிக்கிறான்.நான்  சொல்வதைக்கேட்டு அவனும் கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி விடுவான்.நீங்கள் கவலைப்படாதீர்கள்.வீடு  போய் சேருங்கள்" என்றார்.

வீட்டுக்கு சென்றவுடன் கந்தனின் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் இனிப்பு சாப்பிடுவதை  நிறுத்தினான்.

நாம் யாருக்காவது அறிவுரை சொல்ல நேரிட்டால் முதலில் அதற்கான தகுதியை நாம்  உண்டாக்கிகொள்ளவேண்டும்..