Friday, April 20, 2018

22- விட்டுக் கொடுத்தல்




காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.
அங்கு சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் வந்தன.இரண்டுமே மானைத் தின்ன ஆசைப்பட்டன.

சிங்கம் கரடியைப் பார்த்து,"கரடியே! நான் தான் இந்த மானை முதலில் பார்த்தேன்.ஆகவே நான் தான் அதைத் தின்பேன்.நீ போய்விடு என்றது.
ஆனால், கரடியோ சிங்கத்திடம், "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே மான் எனக்கெ உணவு.நீ போய்விடு" என்றது.

இரண்டிற்கும் வாக்குவாதம் முற்றி,  ஒன்றுக் கொன்று சண்டையிடத் தொடங்கின.நீண்ட நேரம்
சண்டையிட்டதால், இரண்டும் காயமடைந்து, சோர்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தன.

அவ்வேளையில் நரி ஒன்று அங்கு வந்தது.இறந்து கிடந்த மானையும், வீழ்ந்து கிடந்த கரடியையும், சிங்கத்தையும் பார்த்ததுசூழ்நிலையைப் பயன்படுத்தி , இறந்து கிடந்த மானைத் தின்று சென்றது.

சோர்வு நீங்கி, சிங்கமும், கரடியும் எழுந்து பார்த்த போது நரி மானைத் தின்றுவிட்டு சென்றதைப் பார்த்தன.

"நாம் இப்படி வீணாக சண்டையிட்டதால் ஏமாந்துவிட்டோமே!" என சொல்லி வருந்தின.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கிடைப்பதை பகிர்ந்து உண்ண வேண்டும் என உணர்ந்தன.

நாமும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும் 

Thursday, April 19, 2018

21- முடியாத செயலில் ஈடுபடக்கூடாது



ஒரு பாழடைந்த வீட்டில் ஏராளமான எலிகள் வாழ்ந்து வந்தன.ஒருநாள் பூனை ஒன்று அந்த வீட்டில் புகுந்தது.பூனை தினமும் எலிகளை வேட்டையாடித் தின்றது.எலிகள் மிகவும் பயந்தன.அவைகள் ஒன்றுகூடி இந்த அபாயத்திலிருந்து தப்புவது எப்படி? என யோசித்தன.

அப்போது ஒரு பெரிய எலி ஒரு பெரிய மணியைக் கொண்டு வந்து எலிகளை நோக்கி,"நண்பர்களே! நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புது யோசனையுடன் வந்துள்ளேன்.இந்த மணியை பூனையின் கழுத்தில் கட்டிவிட்டால், பூனை வரும்போது மணியோசை முன்னதாகக் கேட்கும்.அப்போது உடனே நாம் தப்பித்துவிடலாம்" என்றது.இதைக் கேட்ட எலைகள் அனைத்தும் மகிழ்ந்தன.மிகவும் அற்புதமான யோசனை என பெரிய எலியைப் பாராட்டின.

சிறிது நேரம் கழித்து ஒரு எலி, "இந்த மணியை யார் பூனையில் கழுத்தில் கட்டுவது?" என்றது
இதைக் கேட்டதும் அனைத்து எலிகளின் உற்சாகமும் குறைந்து போனது.யாரால் மணியை தைரியமாகச் சென்று பூனையின் கழுத்தில் கட்டமுடியும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே,"மியாவ்" என பூனை வரும் சப்தம் கேட்டது.அனைத்து எலிகளும் பயந்து எல்லா திசையிலும் ஒடி ஒளிந்தன.

இயலாத, முடியாத செயலில் நாம் இடுபடக்கூடாது என்பதே இக்கதையின் மூலம் நாம் அறியும் செய்தியாகும்  

Wednesday, April 18, 2018

20- பாத்திரமறிந்து உதவு



ஒரு ஆட்டு மந்தையினுள் புகுந்து ஆடுகளைஅடித்துக் கொல்ல முயன்றது ஓநாய் ஒன்று.

அந்த ஆட்டு மந்தையின் காவலாக இருந்த நாய்கள் ஓநாயைத் துரத்திப் பிடித்து நன்றாக அடித்துப் போட்டு விட்டன.

படுகாயம் அடைந்த ஓநாய் நடக்க முடியாமல் வேதனையுடன் ஓரிடத்தில் படுத்திருந்தது.அதற்குக் கடுமையான பசி வேறு.
அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு ஆடு சென்றுக் கொண்டிருந்தது.

ஓநாய் அந்த ஆட்டைக் கூப்பிட்டது.

அதனிடம், "நண்பா! எதிரிகளால் நான் காயப்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றேன்.தண்ணீர் தாகமாக உள்ளது.எனக்குக் கை கொடுத்து நீரோடை வரை அழைத்து செல்.நான் தாகத்தை தணித்துக் கொள்வேன்" என உருக்கமாகக் கேட்டது

ஓநாயின் கபட நாடகத்தை அறியாத ஆடு, அதன் மீது அனுதாபம் கொண்டு ,அது நடப்பதற்கு உதவ அதன் அருகே சென்றது.

கைக்கு எட்டும் தொலைவில் ஆடு வந்ததும் ஓநாய் அதன் மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்து கொண்டது

பிறர் துன்பப்படும் போது நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.

ஆனால், அதே நேரம், யாருக்கு உதவுகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

Monday, April 2, 2018

19- அச்சமின்மை


அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

நாம் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், அச்சத்தை மட்டும் நம்மை அணுக விடக்கூடாது

அச்சமின்மையே ஆரோக்கியம்!

Friday, March 23, 2018

18 - தெரியாத வேலையில் தலையிடாதே




ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.
கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
அத்துடனா?
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.
ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.
குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது

Monday, March 19, 2018

17 - அன்னதானம்

அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?
அனைவருக்கும் கேட்டவரம் அனைத்தையும்
அளித்த கொடையாளி கர்ணன். தன் வாழ்நாளின்
ஒருவரை அமர்வித்து உணவளித்து அன்னதானம்
செய்ததில்லை.
இறந்தபின் சொர்க்கம் அடைந்தான்.
அங்கு அனைவரும் பசி, தாகம் இன்றி சுகமாக
இருந்தனர். ஆனால் கர்ணனுக்கு மட்டும் கடும்
பசி எங்கு தேடியும், யாரை கேட்டும்
உணவு கிடைக்கவில்லை.
நாரதரை கண்டு, எனக்கு மட்டும் சொர்க்கத்தில்
ஏன் இந்த அவல நிலை? எனக் கேட்டான். நாரதர்,
கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில்
இட்டு சுவை என்றார். கர்ணனும்
அப்படியே செய்ய பசியும் தீர்ந்தது. ஆனால்
வாயிலிருந்து விரலை எடுத்தாலோ மீண்டும்
பசித்தது. காரணம் கேட்ட கர்ணனிடம் நாரதர் நீ
உனது வாழ்நாளில் ஒருவருக்காவது அன்னதானம் செய்ததில்லை.ஒரு சமயம் துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடைபெற்றது. பசியால் வாடிய ஒருவன் உன்னிடம் வந்து விசாரித்த போது, அன்னதானம் நடக்கும் இடத்தை நீ உனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த பெரும் புண்ணியம் உனது ஆள் காட்டி விரலில் தொற்றியுள்ளது. அந்த விரலைச் சுவைத்தவுடன்
பசி நீங்குகிறது. எனவே தான் தானத்தின்
சிறந்தது அன்னதானம் என்றார்.
எனவே தான் கர்ணன், அன்னதானம்
செய்வதற்காகவே மறுபிறவி எடுக்க விரும்பி,
சிவனிடம் வரம் கேட்டுப் பெற்றான். கர்ணனின்
மறுபிறவியே சிறுத்தொண்ட நாயனார்.
பக்தரின் அன்னதான அவசியத்தை உலகுக்
உணர்த்தவே சிவன் வீர சைவ அடியாராக
வந்து பிள்ளைக்கறி கேட்டு அருள் புரிந்தார்.
இக்கதையையே சீராளன் கதை என கிராமங்கள்
தோறும் பல நூற்றாண்டுகளாக சிவபக்தர்கள்
சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

Thursday, March 1, 2018

16. எல்லோரும் உயர்ந்தவர்களே



காகம்  ஒன்று தான் கருப்பு நிறத்தில் இருப்பதாக தாழ்வு மனப்பான்மை கொண்டு இருந்தபோது ஒரு அன்னத்தை பார்த்தது.

அது அன்னத்திடம் சென்று ' அன்னமே ! நான் உன்னைப்போல வெண்மையாக விரும்புகிறேன் என்றது.

அதற்கு அன்னம், "காகமே! உண்மையில் என்னை விட பச்சைக் கிளி தான் அழகு.நானே, பச்சைக்கிளியாக  விரும்புகிறேன்" என்றது.

அடுத்து காகம் , பச்சைக்கிளியிடம் சென்று, "பச்சைக்கிளியே! நான் உன்னைப்போல ஆக விரும்புகிறேன்" என்றது

அதற்குக்  கிளி, "காகமே! எனக்கு இரண்டு நிறங்களே உள்ளன.ஆனால், மயிலுக்கோ, பலநிறங்கள்.ஆகவே, நானே அழகாக மயிலாக இருக்க விரும்புகிறேன்" என்றது

உடன் காகம். மயிலிடம் சென்று, "மயிலே! நான் உங்களைப் போல ஆக விரும்புகிறேன்" என்றது.

அதற்கு, மயில், "காகமே! என்னைப் போல அழகாக இருந்தால் ஆபத்தும் உண்டு.என்னைக் கொண்டு சென்று, மிருகக் காட்சிச் சாலையில் கூண்டில் அடைத்துவிடுகிறார்கள்.எனக்குத் தெரிந்து, காகங்கள் மட்டுமே , யாருக்கும் பயப்படாமல், சுதந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் பறவை இனம் ஆகும்.ஆகவே நீ நீயாகவே இரு.அதுதான் நல்லது: என்றது.

அப்பொதுதான் காகத்திற்கு, தான் மட்டுமே, அபாயமின்றி சுதந்திரமாக பறக்கக் கூடிய இனம் என்று உணர்ந்தது.

மேலும், இறைவன் படைப்பில், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை.எல்லோரும் சமமானவர்களே என்றும் உணர்ந்தது