Tuesday, March 11, 2014

131. ' யார் உயர்ந்தவர்.. (நீதிக்கதை)




ஒன்று முதல் ஒன்பது வரை ஒன்பது நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ' 0 ' மட்டும் தனியாக சோகமாக அமர்ந்துள்ளது.அவர்கள் விளையாட்டில் அதை சேர்க்கவில்லை.

ஆசிரியர்:  வகுப்பறைக்குள் நுழைய ....

ஒன்று :   ஆசிரியர் வந்துட்டார்...ஆசிரியர் வந்துட்டார்.....

எல்லோரும் எழுந்து நின்று: வணக்கம் சார்..

ஆசிரியர்: வணக்கம். எல்லோரும் உட்காருங்க.இப்ப attendance எடுக்கப் போறேன். வந்திருக்கிறவர்கள் present சொல்லவும்.ஒன்று..

ஒன்று:    Presnet Sir

ஆசிரியர்:  இரண்டு

இரண்டு:    Present Sir

ஆசிரியர்:   மூன்று

மூன்று:     Present Sir

(இப்படி ஒன்பது வரை கூப்பிட அனைத்து எண்களும் Present சொல்ல )

ஆசிரியர்:   சைஃபர்
(Present  சப்தம் வராததால் மீண்டும்) சைஃபர் இன்னிக்கு வரலியா.......

இரண்டு:  வந்திருக்கான் Sir.

ஆசிரியர்:  என்ன...சைஃபர் தூங்குகிறாயா?
          எழுந்து நில்
         (சைஃபர் சோகத்துடன் எழுந்து நிற்க)
         ஏன் Present சொல்லவில்லை....

         (சைஃபர் அழ ஆரம்பிக்க)

ஆசிரியர்: ஏன் அழற!

சைஃபர்:  நான் சைஃபர்.அதனால் எனக்கு மதிப்பு இல்லையாம்.ஒன்று முதல் ஒன்பது வரை எந்த நண்பனும்...என்னை அவர்களுடன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்  என்று சொல்கிறார்கள்.

ஆசிரியர்: அப்படியா...உட்கார்..நீ மதிப்புள்ளவன் என அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்.

          ஒன்று முதல் ஒன்பது வரை ஒவ்வொருவரும் தாங்கள் ஏன் மதிப்புள்ளவர்கள் என்று சொல்லவேண்டும்.

          முதலில்  ஒன்று நீ சொல்...

ஒன்று:    (எழுந்து நின்று ) ஐயா...நீங்களே நாங்கள் பத்து பேர் இருக்கும் போது ஒன்றான என்னையே முதலில் கூப்பிட்டீர்கள்.இது ஒன்றே நான் அவர்களை விட மதிப்பு வாய்ந்தவன் என்பதற்கான சான்று.

          தவிர ...படிப்பில் முதல் மாணவனாய் இருக்கவேண்டும்...முதல் மதிப்பெண் பெற வேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நினைக்கின்றனர்.ஆகவே    
           நானே அனைவரை விட உயர்ந்தவன்.

ஆசிரியர்:  சரி...இப்போது ....இரண்டு நீ சொல்....

இரண்டு:   ஐயா...இறைவனால் படைக்கப்பட்டுள்ள அனைத்திற்கும்,மனிதன் படைத்த அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள்தான்.  உதாரணமாக ஒரு இலையை எடுத்து கொண்டாலும்    
          இலையின் உள்புறம்,வெளிபுறம் என இரண்டு.ஆண்பெண்,இன்பம்,துன்பம், வலது,இடது என எல்லாமே இரண்டுதான். ஆகவே நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: o.k. ...மூன்று  நீ சொல்...


மூன்று:  ஐயா....தமிழ் என்றாலே மூன்று எழுத்து.தவிர்த்து இயற்றமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ் என தமிழை மூன்று வகைப் படுத்துவர்.
         அது போல தெய்வங்களிலும் பிரம்மா,விஷ்ணு,சிவன் என படைத்தல்,காத்தல்,அழித்தல் தொழில்களை புரியும் சுவாமிகளை மும்மூர்த்திகள் என்றே சொல்லுவார்கள்.ஆகவே மூன்றான நானே
         உயர்ந்தவன்.


ஆசிரியர்: o.k. நான்கு  நீ சொல்  ....


நான்கு : ரிக்,யஜூர்,சாம,அதர்வணம் என வேதங்கள் நான்கு வகைப்படும்.எந்த ஒரு செயல்செய்தாலும் அதுபற்றி நாலு பேரை கேட்டு தெரிந்து கொள் என்பார்கள்.
         ஆகவே நான்கான நானே உய்ர்ந்தவன்.


ஆசிரியர்: ஐந்து


ஐந்து:    ஒவ்வொரு மனிதன் கைகளிலும் ஐந்துவிரல்கள்.கால்களில் ஐந்து விரல்கள்..தவிர...இந்த பூமியே பஞ்ச பூதங்களால் ஆனது...பூமி.காற்று,ஆகாயம்,நெருப்பு, நீர் என.தவிர மெய்,வாய்,கண்,மூக்கு
         செவி என மனித உடலும் ஐந்து ஆகும்.


ஆசிரியர்: ஆறு  நீ...
.

ஆறு:     சுவைகள்...இனிப்பு,காரம்,புளிப்பு,உப்பு,உவர்ப்பு.துவர்ப்பு என ஆறு வகைப்படும்.
         தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகனுக்கு ஆறு முகங்கள்..
         மனிதர்களுக்கு உணவு விளைவிப்பதற்கும்,குடிநீருக்கும் தண்ணீர் அவசியம், அது ' நதி ' எனப்படுகிறது
         அது ' ஆறு ' என எங்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
         ஆதலால் நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: ஏழு...


ஏழு:     ஐயா...வாரத்தின் நாட்கள் ஏழு.
         திருப்பதி பாலாஜி வீற்றிருக்கும் இடம் ஏழுமலைகளைக் கொண்டது.
         அதனால் ஏழு ஆகிய நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: எட்டு........
.

எட்டு:    திசைகள் எட்டு..மனிதன் எங்கு சென்றாலும் என்  எல்லைக்குள் தான் இருந்தாக வேண்டும். ஆதலால் நானே பெரியவன்..

ஆசிரியர்: ஒன்பது நீ என்ன சொல்லப்போகிறாய்?

ஒன்பது:  ஐயா நவக்கிரகங்கள் ஒன்பது.இன்பம்,நகைச்சுவை,கருணை,கோபம்.வீரம்.பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம் என நவரசங்கள்.நவராத்திரி,நவரத்தினம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
         ஆகவே ஒன்பதான நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: சைஃபர் ...இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டாயா? இப்போதும் நான் மதிப்பில்லாதவன் என்று நீ சொன்னதையே திரும்பச் சொல்லப்போகிறாயா..?

சைஃபர்:  ஆம் Sir.

ஆசிரியர்: சரி...உன் மதிப்பு உனக்கு தெரியவில்லை...நானே சொல்கிறேன் கேள்.  நீ எல்லாரையும் விட மதிப்பு அதிகம் வாய்ந்தவன். முதலில் உன்னை கண்டுபிடித்ததே இந்தியர்கள் என
         பெருமைப்படுவோம்.
         சைஃபர் நீ இங்கே வா.....வந்து நில்...
         (சைஃபர் வந்து நிற்கிறது)
         ஒன்று இங்கே வா.. சைஃபரின் அடுத்து நில்.....
         (ஒன்று வந்து நிற்கிறது)
         இப்பொழுது ஒன்றே உன் மதிப்பு என்ன?

ஒன்று:   ஒன்று.

ஆசிரியர்: சைஃபர்..நீ இப்போது ஒன்றின் அடுத்தபக்க்ம் இடம் மாறி நில்.
         ஒன்றே இப்போது உன் மதிப்பு என்ன?

ஒன்று:    பத்து...

ஆசிரியர்: சைஃபர் பார்த்தாயா...நீ ஒன்றின் பக்கத்தில் வந்து நின்றதும் ஒன்றின் மதிப்பு...பத்து மடங்கு உயர்ந்து விட்டது.அதாவது ஒன்று உன்னுடன் சேர்ந்ததும்தான் அதிக மதிப்பைப் பெற்றது,.
          இது போல ஒவ்வொரு எண்ணுடன் நீ சேரும்போது அவற்றின் மதிப்பை பத்து மடங்கு உயர்த்தி விடுகிறாய்.
         எண்களே ...இப்போது புரிந்து கொள்ளுங்கள் சைஃபர் உங்களுடன் இணைந்ததும் உங்கள் மதிப்பு உயர்கிறது.
         இனியாவது ' 0 ' ஐ உங்களுடன் விளையாட சேர்த்துக் கொள்வீர்களா...

ஒன்று   ஐயா..இதுவரை சைஃபரின் மதிப்பு தெரியாமல் அதை ஒதுக்கி வைத்தோம்.
முதல்    இனி நாங்கள் அனைவரும் சைஃபருடன் சேர்ந்து ஒன்றாக...ஒற்றுமையாக இருப்போம்.
ஒன்பது   இதை விளங்க வைத்த உங்களுக்கு நன்றி.
 வரை

சைஃபர்: என்னை எனக்கே புரிய வைத்த உங்களுக்கு நன்றி Sir.

ஆசிரியர்: உங்களுக்கெல்லாம் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,இறைவனால் படைக்கப்பட்ட,,மனிதனால் உருவாக்கப்பட்ட எதற்கும் மதிப்பில்லை என்பதே கிடையாது.எல்லாமே மதிப்பு
         வாய்ந்தவை அதனதன் உபயோகத்தில். இறைவன் அனைவருக்கும் ஒரே மூளையைத் தான் கொடுத்திருக்கிறான்.அதனால், யாரும் யாரையும் விட உயர்ந்தவர்க ள் அல்ல.
         இறைவன் அளித்த மூளையை சரியான வகையில் உபயோகிப்பவன் புத்திசாலியாகிறான்.
         இறைவன் படைத்த மூளையின் மதிப்பு உணர்ந்து படித்து ...நாமும் புத்திசாலி என பெயர் எடுப்போம்.
   
         அடுத்தது Play Time. என்ன செய்யப்போகிறீர்கள்.

எல்லா எண்களூம்:
        எல்லோரும் ஒன்றாக விளையாடப் போகிறோம்  Sir.

ஆசிரியர்: Good.



 

Thursday, November 21, 2013

130.புத்திக் கூர்மை ....(நீதிக்கதை)



அந்தக் காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அதற்கான உணவை நரி ஒன்று தினமும் ஏற்பாடு செய்துவந்தது.

அந்தக் காட்டில் ...கிடைக்கும் வளமிக்க இலைகளையும்,புல்லையும் உண்டு நன்கு கொழுத்திருந்த ஆடு ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த நரி...அதை சிங்கத்துக்கு உணவாக ஆக்கினால்...சிங்கம் உண்டது போக தானும் மீதியை உண்ணலாம் என திட்டம் போட்டது.

உடனே சிங்கத்திடம் சென்று "  சிங்கராஜாவே ....இந்தக்காட்டில் இதுவரை நான் பார்த்திராத கொழு கொழு ஆடு ஒன்று உள்ளது.அதை காட்டுகிறேன்...அதை நீங்கள் இன்று உணவாக்கிக் கொள்ளலாம் " என்றது.

சிங்கமும், நரியுடன் புறப்பட்டது.

தூரத்திலிருந்து... நரி,சிங்கத்தை அழைத்து வருவதைப் பார்த்த ஆடு...விஷயத்தை ஊகித்துக் கொண்டது.
உடன், தனது புத்தி கூர்மையால் ...அந்த இடத்தில் இருந்த சில எலும்புகள் முன் அமர்ந்து,' சிங்கத்தின் ஊண் ருசியே அலாதி...இன்று ஒரு சிங்கத்தை,நரி கூட்டி வரேன் என்று சொல்லியதே இன்னும் காணவில்லையே" என நரியுடன் வரும் சிங்கத்தின் காதில் விழுமாறு கூறியது.

இதைக் கேட்ட சிங்கம்...'  அனைவரும் பயப்படும்  சிங்கமான தன் இனத்தை உண்ணும் ஆடு போல தெரிகிறது...நல்ல வேளை, இந்த நரியின் பேச்சைக் கேட்டு உயிரை விடாமல் இருந்தோம்' என்று எண்ணியபடியே நரியை அடித்து போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு ஓடியது.

தன் புத்திக் கூர்மையால் ஆடு உயிர் பிழைத்தது. நாமும்....நமக்கு துன்பம் வரும்போது ....நமது மூளையை உபயோகித்து துன்பங்களிலிருந்து விடுபடவேண்டும். 

Wednesday, October 23, 2013

129 " உன் திறமையை உணர் "........ (நீதிக்கதை)



பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து ரமேஷ் அழுது கொண்டிருந்தான்.

அலுவலகத்திலிருந்து வந்த அப்பா ரமேஷிடம் அவன் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.

ரமேஷ், " அப்பா...நான் தொடர்ந்து காலாண்டு,அரையாண்டு தேர்வுகளில் கணக்கில் குறைவான மதிப்பெண்களே வாங்குகிறேன்..எனக்கு கணக்கு வராது...என்னால் அப்பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியாது.....' என்றான்.

அதற்கு அப்பா...'ரமேஷ்...உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள் ' என சொல்ல ஆரம்பித்தார்.

ஒருவனிடம் குட்டியானை ஒன்று இருந்தது.அது ஓடிவிடக்கூடாது என்பதற்காக ...ஒரு கயிற்றைக் கொண்டு அதன் காலில் கட்டி ...பக்கத்திலிருந்த தூணில் இணைத்துவிட்டான்.

யானை வளர்ந்து. பெரிய யானையானது.அது இப்போது நினைத்தால்...அந்த தூணுடன் சேர்ந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியிருக்க முடியும்.ஆனாலும் ...தான் குட்டியாயிருந்தபோது இருந்த பலமே இப்போதும் இருக்கிறது என யானை எண்ணியது.தன்னால் இப்போதும் தப்ப முடியாது என எண்ணியது. அது போல..உனக்கு கணக்கு வராமல் இருந்திருக்கலாம்..ஆனால் நீ முயன்றால் கணக்கில் புலி ஆகலாம்...

நீ செய்யவேண்டியதெல்லாம் ...'உன்னிடம் உள்ள திறமையை புரிந்து கொண்டு படிக்கவேண்டும்.நம்மால் முடியாது என நினைத்து சும்மா  இருந்தால், யானையின் நிலை தான் உனக்கும்.. முயற்சி திருவினையாக்கும் என்பதை நினைவில் கொள்.

பின்னர், ரமேஷ் தன் திறமையை உணர்ந்து படித்து, கணிதத்தில் வகுப்பில்  முதலிடத்தில் வந்தான்.

Tuesday, September 3, 2013

128. ' நம் ஆசிரியர்களை வணங்குவோம் ' (நீதிக்கதை)


   ( செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் )

ஆசிரியர் பரமானந்தத்திற்கு அதிர்ச்சி....

வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது தலைமை ஆசிரியர் அறையிலிருந்து ....அந்த ஊருக்கு புதிதாய் வந்துள்ள காவல் துறை அதிகாரி அவரை பார்க்க விரும்புவதாக அழைப்பு வந்தது.

தான் எதுவும் தவறிழைக்கவில்லையே ..இப்போதெல்லாம் மாணவர்கள் தவறிழைத்தாலும் அடிப்பதைக் கூட நிறுத்திவிட்டோமே ..
எதற்காக தன்னை காவல் துறை அதிகாரி தேடி வரவேண்டும் என்றெல்லாம். ...எண்ணியபடி தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார் ஆசிரியர் பரமானந்தம்.

அங்கே....இன்ஸ்பெக்டர் அருண் அவருக்காகக் காத்திருந்தார். பரமானந்தத்தைக் கண்டதும் எழுந்த அருண்..அவர் கால்களைத் தொட்டு வணங்கினார்.

பின், ' ஐயா...என்னைத் தெரியவில்லையா..நான் தங்களிடம் எட்டாம் வகுப்பில் படித்த மாணவன் .ஒரு நாள் பக்கத்து மாணவனின் பையிலிருந்து பத்து ரூபாய் திருடிவிட்டேன்...இதைப் பார்த்த நீங்கள் ..என்னைக் கண்டித்து ...உங்களை நீங்களே பிரம்பால் அடித்துக் கொண்டீர்கள். பின்னர் கண்களில் கண்ணீர் மேலிட ....' என் மாணவன்...நாட்டில் சிறந்தவனாகத் திகழவேண்டும்...அவன் ஒரு திருடனாக ஆகக்கூடாது. நீ இன்று செய்த தவறு ...உன் தவறாகவே இருந்தாலும் .....உன்னை நல் புத்தி புகட்டாதது என் தவறு... ஆகவே தான் என்னை நானே தண்டித்துக்கொண்டேன். இது நீ எந்த ஒரு தவறிழைத்தாலும் ...இந்த நிகழ்ச்சி உன் ஞாபகத்திற்கு வரவேண்டும். அப்போது தான்.....நீ எந்த தவறும் செய்யமாட்டாய், என்றீர்கள்' என்றார் அருண்.

பின் மேலும் அவர் கூறுகையில்...'உங்களது அந்த சொல் தான்...என்னை இன்று ஒரு நேர்மையான அதிகாரியாய் ஆக்கியுள்ளது' என்றார்.

' ஆசிரியர் பணியின் சிறப்பே ....ஒரு கல்லை...செதுக்கி அழகான சிலையாய் ஆக்கும் சிற்பியின் செயலுக்கு சமமானது' என்றார்
தலைமையாசிரியரும்.'

' இவ்வளவு ஆண்டுகாலமாக...தான் ஆற்றிவந்த ஆசிரியர் பணி..அருணைப் போல பல நேர்மையான  மனிதர்களை உருவாக்கியிருக்கும் இந்த சமுதாயத்தில்' என பரமானந்தம் தான் பிறவிப்பயன் அடைந்தாற்போல மகிழ்ந்தார்.

நம் கல்வி எனும் கண்களைத் திறக்கும் ஆசிரியர்கள் வாழ்க என இந்நாளில் வேண்டுவோம்.

(புகைப்படம்- நன்றி இணையம்).

Wednesday, August 7, 2013

127. ' தூற்றுவார் தூற்றட்டும் ' (நீதிக்கதை)



கௌதம புத்தர் துறவியானதும் தினமும் தனக்கு வேண்டிய உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் ஒரு வீட்டில் அவர் பிச்சை கேட்டபோது ...' போ..போ.. தடிமாடு மாதிரி இருந்துகொண்டு, ஏன் பிச்சை எடுக்கிறாய்' என விரட்டினார் அந்த வீட்டில் இருந்தவர்.

உடனே புத்தர் ' ஐயா' என அவரை அழைத்தார்'

அந்த வீட்டுக்காரரும் ' என்ன?' என்றார்.

நீங்கள் எனக்கு ஏதேனும் பிச்சை போட்டிருந்தால் அது யாருக்கு சொந்தம்' என கேட்டார்.

' போட்டிருந்தால் அது உனக்கு சொந்தம் ' என்றார் வீட்டுக்காரர்.

'நீங்கள் போடும் பிச்சையை நான் மறுத்துவிட்டால்' என வினவினார் புத்தர்
.
'எனக்குதான் சொந்தம்'  

'சற்று முன்பு என்னை விரட்டினீர்களே ...அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன்...எனவே...அது உங்களுக்கு சொந்தம் ' என்று கூறிச்சென்றார்.

நம்மை தூற்றுபவர்களைக்கண்டு ...பதிலுக்கு நாமும் தூற்றக்கூடாது.நாம் மௌனமாய் இருந்தால்....தூற்றப்பட்ட வார்த்தைகள் தூற்றுபவரைச் சாரும் என்பதை நாமும் உணர்வோம், நம்மை தூற்றுபவரும் உணர்வர்..

Tuesday, July 9, 2013

126. " தெரியாததை தெரியும் என வேண்டாம் " (நீதிக்கதை)



சரவணன் படிக்கும் பள்ளியில் அன்று கல்வி அதிகாரி வருவதாக இருந்தது.

சரவணன் வகுப்பு ஆசிரியருக்கு ஒரே பதட்டம்.அவர் மாணவர்களைப் பார்த்து,' அதிகாரி உங்களை ஏதேனும் கேளவிகள் கேட்கச் சொன்னால்,,நான் கேட்கிறேன்..அவ்வாறு கேட்கும்போது விடை தெரிந்தவர்கள் வலதுகையையும்,தெரியாதவர்கள் இடது கையையும்
தூக்குங்கள்.நான் உடனே வலது கையை தூக்கியவர்களிடம் விடை கேட்கிறேன். இப்படி செய்வது மூலம் நம் பள்ளிக்கும்,எனக்கும்,உங்களுக்கும் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்' என்றார்.
மாணவர்களும் ' சரி' என்றனர்.

கல்வி அதிகாரி வந்தார்.
ஆசிரியரை ஏதேனும் கேள்வி கேட்கச் சொன்னார்.
ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டதும்,சிலர் வலது கையையும்,சிலர் இடது கையையும் தூக்கினர்.
ஒரு மாணவன் மட்டும் எந்தக் கையையும் தூக்கவில்லை.

உடனே அதிகாரி, அந்த மாணவனிடம்,' உனக்கு விடை தெரியவில்லையா? நீ ஏன் கையை தூக்கவில்லை? என்றார்.
உடனே அந்த மாணவன் 'ஐயா..எனக்கு எது வலது கை...எது இடது கை என ஆசிரியர் சொல்லவில்லை..' என்றான்.

ஆசிரியர் விழிக்க..அதிகாரி நடந்ததை அறிந்து ,ஆசிரியரிடம் ' நல்போதனை செய்யவேண்டிய ஆசிரியர் இப்படி செய்யலாமா ?' என்று கடிந்துகொண்டு, மாணவர்களிடம், ' நமக்கு தெரியாததை ஒப்புக்கொண்டு,பின் அதைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,எல்லாம் தெரிந்தது போல நடந்துகொண்டு பிறரை ஏமாற்றினால் இறுதியில் ஏமாறுவது நாமாக இருக்கும்' என்றார்.

Monday, June 24, 2013

125. மூடரின் செயல் (நீதிக்கதை)



' மரம் நடு விழா ' ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது.

இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களது வேலை....

முதலாவது நபர் ... பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும்.
இரண்டாவது நபர்...அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும்.
மூன்றாவது நபர்...பள்ளத்தை மண் கொண்டு மூடவேண்டும்.

அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின் பத்து தெருக்களில் செய்து முடித்தனர்.
அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு.

அடுத்த நாள்.. பள்ளம் தோண்டுபவர் தோண்டிக்கொண்டு சென்றார்.
செடியை நட வேண்டிய இரண்டாவது நபர் வேலைக்கு வரவில்லை.
அது பற்றிக் கவலைப்படாத மூன்றாவது நபர் தோண்டிய பள்ளத்தை மூடிக்கொண்டே வந்தார்.

இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ...' ஏம்பா..நீ பள்ளம் தோண்டியதும் ...இவர் அதை மூடி விடுகிறாரே..என்ன விஷயம் ...' என்றார்.
அதற்கு முதல் நபர் ....' ஐயா..செடி நடு விழா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் என் வேலை பள்ளம் தோண்டுபவது...
செடி நடுவது இரண்டாம் நபர் வேலை....
இதோ நிற்கும் மூன்றாம் நபர் பள்ளத்தை மூடவேண்டும்.
செடி நடும் நபர் இன்று வரவில்லை.
அதனால் வேலை தடைபெறக்கூடாது என எங்கள் இருவர் வேலையை சரியாக செய்து விடுகிறோம்' என்றார்.

இந்த மூடர்களை என்ன செய்வது?

நம்மில் பலர் கூட ....என்ன வேலை செய்கிறோம் ...எதற்காக அதை செய்கிறோம் என்றெல்லாம் தெரியாமல் இயந்திரத்தனமாய் காரியங்களைச் செய்கிறோம்..
அதைவிடுத்து ...நாம் செய்யும் வேலையைப் பற்றி முழுவதும் அறிந்து செய்ய வேண்டும்.
இல்லையேல் இந்த மூடர்களின் கதிக்குத்தான் ஆளாவோம்.