Saturday, March 23, 2013

121.அறிவுக்கூர்மையும் ..வெளவாலும்..(நீதிக்கதை)




சண்முகத்தின் அப்பா தினமும் அவன் இரவு தூங்கப் போகும்போது நீதிக்கதைகளை அவனுக்கு சொல்வது வழக்கம்.

ஒரு நாள் அவர் அவனிடம் ' அறிவுக்கூர்மையிருந்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்' என்றார்..
அது எப்படி என்றான் சண்முகம்...
அப்பா அதற்கு அவனுக்கு ஒரு கதையைக் கூறினார்.

ஒரு காட்டில் இரு பூனைகள் இருந்தன.அதில் ஒரு பூனை எலிகளை மட்டுமே பிடித்து உண்ணும்.மற்றதோ பறவைகளை பிடித்து உண்ணும்.

ஒரு நாள் எலிகளைப் பிடிக்கும் பூனையிடம் வெளவால் ஒன்று மாட்டிக்கொண்டது.அது எலிகளை மட்டுமே உண்ணும் பூனை என்று வெளவாலுக்குத் தெரிந்தது..'உடனே அது....எலிகளை மட்டுமே உண்ணும் நீ...பறவையான என்னை உண்ணலாமா?' என்றது.
உடனே பூனை...' நீ பறவையா' என்று கேட்டது.' ஆம்...எனக்கு இறக்கைகள் இருக்கிறதே...நீ பார்க்கவில்லையா. நான் பறக்கும் பறவை தான்' என்றது.

பூனையும் வெளவாலை பறவை என நினைத்து விட்டுவிட்டது.

வேறொரு நாள்...அந்த வெளவால் பறந்து செல்லும்போது ..அதை பறவைகளை மட்டுமே உண்ணும் பூனை தாவிப்பிடித்தது.

உடனே வெளவால் அதனிடம் 'பூனையே....பறவைகளை மட்டும் உண்பவர் நீ...ஆனால் நான் பறவை இல்லையே," என்றது.

அதற்கு பூனை உனக்கு இறக்கைகள் உள்ளதே என்றது.

' அது இறக்கைகள் அல்ல...என்னுடைய மேல் தோல்...என் மீசையைப்பார்...நான் எலி தான் என்றது.

அதை எலி என நினைத்து அப்பூனை விட்டுவிட்டது

வௌவால் அறிவுக்கூர்மையாய் இருந்ததால் தான்..இரு பூனைகளிடமும் அவைகளுக்குத் தகுந்தார் போல பேசி..தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

Monday, February 25, 2013

120 - அவரவர் தொழில்..(நீதிக்கதை)

           


ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான்.அவன் தினந்தோறும் தன் கழுதையின் முதுகில் சுமைகளை ஏற்றி..குளத்திற்குச் சென்று துணிகளைத் துவைத்து...கழுதையின் மேல் வைத்து திரும்பி வருவான்.அவனுடன் அவனது செல்லப் பிராணியான நாயும் செல்லும்.

கழுதை, என்ன உழைத்தாலும்..அதை சலவைத் தொழிலாளி பாராட்டுவதில்லை.தேவையான உணவு மட்டும் அளித்து வந்தான்.

ஆனால், நாயுடன் அவன் கொஞ்சி விளையாடுவான்.தான் உண்ணுவதையெல்லாம் அதற்கும் கொடுப்பான்.நாயும் வாலை ஆட்டியவாறே..அவனிடம் பேசுவது போல குரைக்கும்.கழுதைக்கு இது ஆத்திரத்தைக் கிளப்பியது.

ஒருநாள் இரவு..

நாய் குரைப்பதைக் கேட்டு, எழுந்துவந்த சலவைத் தொழிலாளி, திருடன் ஒருவன் துணிகளைக் களவாட வந்ததையும், அவனை நாய் குரைத்து விரட்டியதையும் அறிந்து, நாயைத் தூக்கி கொஞ்சினான்.

இதையெல்லாம்..பார்த்துக் கொண்டிருந்த கழுதை, விவரம் அறியாது,  தானும் தன் முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க எண்ணியது.

நள்ளிரவு நேரம்...எழுந்து கத்த ஆரம்பித்தது.அதனது நாராசக் குரலைக் கேட்ட தொழிலாளி ..வெளியே வந்து, தன் தூக்கத்தைக் கெடுத்த கழுதையை நையப் புடைத்தான்.

கழுதை வேதனையுடன் முணகியது.சலவைத் தொழிலாளி படுக்கச் சென்றதும்...நாய் ஆறுதலாக கழுதையிடம் வந்து அதை நக்கிக் கொடுத்தது.பின்னர் சொன்னது,'நான் என் வேலையைச் செய்தேன்..அதற்கு பாராட்டுக் கிடைத்தது.அதுபோல நீயும்..உன் வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்து வா..என்றேனும் பாராட்டுக் கிடைக்கும்.தவிர்த்து இன்னொருவர் போல நீயும் இருக்க எண்ணாதே.அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்.இல்லையேல் துன்பப் பட வேண்டியது தான்' என்றது.

நாமும்..நமக்கான வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே அல்லாது, பிறரது வேலையில் தலையிட்டால் துன்பமே அடைவோம்.

Friday, February 15, 2013

119 - மயிலும்..கொக்கும்.. (நீதிக்கதை)

               


ஒரு சோலையில் அழகான மயில் ஒன்று இருந்தது.அதற்கு தன் அழகுக் குறித்து மிகவும் கர்வம் இருந்தது.ஒருநாள் அந்த சோலைஅருகே இருந்த குளக்கரையில் அது தன் தோகையை விரித்து ஆட ஆரம்பித்தது.

அக்குளக்கரையில் கொக்கு ஒன்று...பெரிய மீன் வருமா..அதைக் கொத்திக் கொண்டு ஒடலாமா..? என்ற எண்ணத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தது.

கொக்கைப் பார்த்த மயில், 'கொக்கே! நீயும் நல்ல வெண்மை நிறத்தில் அழகாகத் தான் இருக்கிறாய்.ஆனாலும் அதனால் என்ன பயன்? என்னைப் போல உன்னால்..அழகாக ஆட முடியாது" என்றது.

அப்போது, பாம்பு ஒன்று, மயிலிடம் வர, விரித்த தோகையுடன் மயில் தப்பி ஓட பார்த்தது.உடன் கொக்கு மயிலிடம்.'மயிலே! பார்த்தாயா..உயிருக்கு பயந்து உன்னால் ஓடத்தான் முடிகிறது.ஆனால், என்னை யாரும் தாக்க முயன்றால்..நான் பறந்துடுவேன்.அதுபோல பறக்க உன்னால் முடியாது' என்றது.

மேலும் கொக்கு மயிலிடம்,'கடவுள் உயிரினங்களைப் படைக்கும் போது, ஒவ்வொரு உயிரினத்திற்கும் , ஒவ்வொரு திறமையைக் கொடுக்கிறார்,அதனால் உலகில், திறமை இல்லாதது என ஏதும் இல்லை.அதே நேரம், எல்லாத் திறமையைக் கொண்ட உயிரினமும் கிடையாது' என்று கூறியபடியே, கிடைத்த மீன் ஒன்றைக் கவ்விக் கொண்டு பறந்தது.

அதே நேரம், தன்னைக் கொத்த வந்த பாம்பை, கழுகு ஒன்று பறந்து வந்து கொத்திச் சென்றதையும் மயில் பார்த்தது.

Tuesday, February 5, 2013

118 -கடலின் பெருமை (நீதிக்கதை)




ஒருநாள் நதி ஒன்று, கிணறு ஒன்றிடம், 'நீயும் என்னைப் போல கடலில் கலந்துவிடு வா' என்றது.

அதற்கு கிணறு, 'நீ கடலில் கலப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீராகவும்,உணவு விளைய பாசனத்திற்கும் பயன்படுகிறாய்.ஆனால் கடலில் கலந்தபின்னர் உனது தனித்துவத்தை இழந்துவிடுகிறாய்.பயனில்லா உப்பு நீராகி விடுகிறாய்.அதுபோல ஆக நான் விரும்பவில்லை.என் காலம் முழுதும் மக்களுக்கு பயன்படவே விரும்புகிறேன்' என்றது.

இதைக் கேட்ட நதி, 'கிணறே..நீ தவறாகப் பேசுகிறாய்.நாம் தனித்துவத்துடன் இருப்பதற்குக் காரணமே கடல் தான்.அது பார்க்க ஆரவாரமாய் இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் தன் பணியைச் செய்து வருகிறது.கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மழைமேகமாக மாறி மழைத் தருகிறது. மக்கள் வாழ்வில் வறட்சியைப் போக்க பெரும் பங்கு வகிக்கிறது.நாட்டின் வெப்பதட்ப நிலையை நிர்ணயிக்கிறது ..மழையில்லையேல், ஒருநாள்..நீ, நான் எல்லாம் வறண்டுவிடுவோம்.' என்றது.

அப்போதுதான் கிணற்றிற்கு கடலின் முக்கியத்துவம் புரிந்தது.ஒருசிலருக்கு பயன் படும் தான் செருக்குடன் இருக்கும் போது..உலகிற்கே பயன்படும் கடலின்..விளம்பரமின்மைக் கண்டு வியந்தது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்..கடல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தது.

நாமும்..நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும்போது..அதற்கான விளம்பரத்தை எதிர்ப்பார்க்காது...நம் மனநிறைவை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.

Thursday, January 31, 2013

117.செய் நன்றி மறவாமை (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.

ஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது,உச்சாணிக் கொம்பில் இருந்து தவறி விழுந்து படு காயமடைந்தது.
அதனால் எழுந்து நடக்க முடியவில்லை.உணவு தேடவும் வழியில்லை.மரத்தின் அடியிலே  படுத்துக் கிடந்தது.

அம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்தக் குரங்கைப்பார்த்து மனம் வருந்தி அதை தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண  உணவும் கொடுத்தான்.

நாளடைவில் குரங்கு குணமானது.அப்போதுதான் அந்த குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது.அதன் வழியே வெய்யிலும்,மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழுவது தெரிந்தது.

குரங்கு உடனே வெளியே வந்து,மரத்தில் ஏறி,இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து,குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது,

இப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை,வெய்யிலோ,அல்லது மழையின் பாதிப்போ இல்லை.

அந்த ஏழை தனக்கு செய்த உதவியை குரங்கு எண்ணி,தன்னால் முடிந்த பிரதியுபகாரத்தை செய்தது பாராட்டுக்குரியது.

நாமும் நமக்கு யாரேனும் சிறு உதவி செய்தாலும் அதை மறக்காமல் பெரிதாக எண்ணி ,நம்மால் முடிந்த நல்ல காரியங்களை
உதவியவர்களுக்கு செய்ய வேண்டும்

Monday, January 21, 2013

116. ஒன்று படுவோம்..(நீதிக்கதை)




காடு ஒன்றில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தினமும் மற்ற மிருகங்களைக் கொன்று பசியாறி வந்தது.நாளாக ஆக அதற்கும் வயதாகி, வலுவிழந்தது.அதனால் தனக்குத் தேவையான உணவை வேட்டையாட அதனால் அலைய முடியவில்லை.

ஒருநாள் அது நரி ஒன்றைக் கூப்பிட்டு, தனக்கு அன்றாடம் தேவைக்கான உணவிற்கான மிருகத்தை, நயமாகப் பேசி அழைத்து வருமாறும், அப்படி அது அழைத்து வரும் மிருகத்தை அடித்து தான் தின்றது போக , மீதத்தை நரி உண்ணலாம் என்றும் கூறியது. நரியும், அதற்கு ஒப்புக் கொண்டது.

காட்டை ஒட்டி இருந்த நகரில் நான்கு பசுக்கள் தினமும் ஒற்றுமையாய் புல் மேய்ந்து வந்தன.அவற்றைப் பார்த்த நரிக்கு நாவில் எச்சில் ஊறியது.இப்பசுக்களை சிங்கத்திடம் அழைத்துச் சென்றால் தினமும் தனக்கு உணவு கிடைக்கும் என எண்ணி அவற்றிடம் சென்று பேசியது.ஆனால் ஒற்றுமையாய் இருந்த பசுக்கள் நரியை விரட்டி அடித்தன.

நரி ஒரு தந்திரம் செய்தது..பசுக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடிவெடுத்தது.

முதலில் ஒரு பசுவிடம் சென்று..'எனக்குத் தெரிந்து..மற்ற பசுக்களை விட நீ இளைத்து இருக்கிறாய்.உனக்குத் தேவையான புல் கிடைக்கவில்லை என எண்ணுகிறேன்.அருகிலேயே..ஒரு புல்வெளி உள்ளது.பசுமையான புற்கள்.நீ தனியே வந்தால் அவற்றை உண்டு ருசிக்கலாம்.ஆனால் உன் நண்பர்கள் உன்னுடன் வந்தால், உன் பங்கு சிறிதாகிவிடும்' என்றது.

பச்சைப் பசேல் என்றிருக்கும் புல்லைத் தின்ன ஆசைப்பட்ட அந்த பசு..மற்ற மூன்று பசுக்களிடமும் சொல்லாது, நரியுடன் சென்றது.நரி அப்பசுவை, சிங்கம் இருக்குமிடம் அழைத்துச் சென்றது.சிங்கமும், தனியே வந்த அப்பசுவைக் கொன்று உண்டது.

அப்படியே, மற்ற பசுக்களையும் பிரித்து நரி அழைத்துச் சென்று சிங்கத்திற்கு உணவாக்கியது.

பசுக்கள் ஒற்றுமையாய் இருந்தவரை அவற்றை அணுக முடியாத நரி, அந்த ஒற்றுமையைக் குலைத்து, அவற்றைப் பிரித்து அழித்துவிட்டது.

நாமும், நம் குடும்பம், சுற்றம், சூழலுடன் ஒற்றுமையாய் இருந்தால்..நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

Thursday, December 27, 2012

115 எல்லாம் நன்மைக்கே.. (நீதிக்கதை)



மகத நாட்டு மன்னன் ஒருவன் தனது அமைச்சருடன் வேட்டைக்குச் சென்றான்...வில்லை  எடுத்து..அம்பைப் பொருத்தி நாணை இழுக்கையில்..அவன் கட்டை விரல் துண்டாகிக்  கீழே வீழ்ந்தது.

இதைக் கண்ட அமைச்சர், 'மன்னா..கவலை வேண்டாம்.எல்லாம் நன்மைக்கே' என்றார்.

தன் விரல் போனதை, அமைச்சர் 'நன்மைக்கே' என்றதால் கோபமுற்ற மன்னன், அந்த அமைச்சரை சிறையில் அடைத்தான்.

சில நாட்கள் சென்றன..

இம்முறை மன்னன்..தனியாக வேட்டைக்குச் சென்றான்.அப்போது அங்கு இருந்த காட்டுவாசிகளிடம் சிக்கினான்.அவர்கள் தங்களது எல்லை சாமிக்கு நரபலி கொடுக்க ஒரு மனிதனைத் தேடிக் கொண்டு இருந்தார்கள்.மன்னனைக் கண்டதும், அவரை, நரபலி கொடுக்க சிறை பிடித்தனர்.

மன்னனை, குளிப்பாட்டி, சந்தனம் பூசி, பலி பீடத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது..அக் காட்டுவாசிகளின் தலைவன், மன்னனுக்கு, கட்டை விரல் இல்லாததைப் பார்த்து, "ஊனமுள்ளவரை பலி கொடுப்பது வீண்' என்று கூறி மன்னனை விடுவித்தான்.

அப்போது மன்னனுக்கு அமைச்சர் சொன்னது நினைவிற்கு வந்தது..'எல்லாம் நன்மைக்கே'

ஆம்..அன்று விரல் போனது, நல்லதற்கே.இல்லையேல், இன்று உயிர் போயிருக்குமே..என எண்ணியவன்..ஊருக்கு வந்ததும் , அமைச்சரை விடுவித்தான்.

நாமும், நமக்கு ஏதேனும் துன்பம் வந்தால், உடனே, வாடிவிடாது..'எல்லாம் நன்மைக்கே' என்று எண்ண வேண்டும்.

அப்போதுதான்..நாளடைவில் துன்பம் அகலும்..துன்பத்தின் வலி அதிகம் தெரியாது.