Sunday, February 26, 2023

14.நாவினால் சுட்ட வடு


    14- நாவினால் சுட்ட வடு



சுரேஷ் மிகவும் கோபக்கார பையன்.எடுத்ததெற்கெல்லாம்  அவனுக்கு கோபம் வரும்.

கோபம் வந்தால் எல்லாரையும் கண்டபடி திட்டிவிடுவான்.பின்னால் அவர்களிடம் சென்று வருத்தப்படுவான்.நாளடைவில் அவனுக்கு சுற்றுவட்டாரத்தில் நண்பர்களே இல்லாமல் போயிற்று..எல்லோரும் அவனை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

அவனது தந்தைக்கு அவனை பற்றி ரொம்ப கவலை.எப்படி அவனை திருத்துவது என்று எண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு யோசனை தோன்றியது.

ஒரு நாள் ஒரு பையில் சில ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.ஒவ்வொருமுறை ஆத்திரப்படும்போதும் சம்பந்தபட்ட நண்பனை திட்டாமல் அதற்கு பதில் ஒரு ஆணியை அருகில் உள்ள மரத்தில் அடிக்கவேண்டும்.அவனும் இதற்கு ஒப்புக்கொண்டான்.

நாளடைவில் மரத்தில்  50 ஆணிகள் வரை அடித்து விட்டான்.இவன் கோபப்படாததால் இவன் நண்பர்கள் இவனிடம் நல்ல-படியாக  பேச ஆரம்பித்தனர்.

நடந்ததை அப்பாவுடன் போய் கூற அவர் ஒரு சுத்தியலைக் கொடுத்து ஒவ்வொரு ஆணியாக பிடுங்கச் சொன்னார்.எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு பார்த்தால் ஆணி இருந்த இடத்தில் வடுக்கள் இருந்தன.

"இந்த ஆணியை போலத்தான் நீ திட்டிய ஒவ்வொரு சொல்லும் இன்னொருவர் மனதில் ஆழமாக பதிந்து வடுக்களை உண்டாயிருக்கும் அல்லவா?’ அந்த வடு நீ மன்னிப்பு கேட்ட பின்பும் இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைபோல் மறைவது மிகவும் கடினம்.ஆகவே இனி எதைப் பேசும்போதும் யோசித்து பேசு" என்றார் அப்பா..

சுரேஷும் அவனுடைய தவறை உணர்ந்து அது முதல் யார்மீதும் கோபப்படுவதில்லை.