ஒரு நரியும், ஒட்டகமும் நண்பர்களாக இருந்தன.ஒருநாள் ஒட்டகத்திடம் நரி சொல்லியது, "நண்பா..இந்த நதிக்கு அக்கரையில், ஒரு பெரிய கரும்புத் தோட்டம் உள்ளது.நாம் இருவரும் நதியைக் கடந்து அங்கே சென்றால் இனிப்பான கரும்பை சாப்பிட்டு வரலாம்"
அதைக் கேட்ட ஒட்டகம், "நரியே! நீ இனிப்பைச் சாப்பிட்டால் ஊளையிடுவாய்.அப்போது கரும்புத் தோட்டக்காரன் நம்மைப் பிடித்து அடித்து விடுவான்" என்றது.
நரி ,தான் ஊளை இடமாட்டேன் என வாக்குறுதி இட்டதால், இரண்டும் கிளம்பின.
ஒட்டகத்தின் மீது ஏறிக் கொண்டு நரி நதியைக் கடந்தது.
இரண்டும் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று இனிமையான கரும்பை சுவைத்தன.
மகிழ்ச்சியில் நரி ஊளையிடத் தொடங்கியது.அதைக் கேட்டு அங்கு வந்தான் கரும்புத் தோட்ட முதலாளி.நரி உடனே ஒடிப் போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.
ஒட்டகமோ அடியை வாங்கிக் கொண்டு, வலியுடன் நதிக்கரைக்கு வந்தது.அப்போது நரி புதரிலிருந்து ஓடி வந்து, "ஒட்டக நண்பா..எனக்கு மகிழ்ச்சி அதிகமானால் ஊளையிடுவேன்.அது என் வழக்கம்.வழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை." என்றது.
ஒட்டகத்தின் மீது ஏறிக்கொண்டு நதியைக் கடந்தது நரி.பாதி வழியில்,நதியின் ஆழமான பகுதி வந்ததும், ஒட்டகம் ஆற்றில் புரண்டது.
நரி தண்ணீரில் விழுந்து தத்தளித்தது.ஒட்டகம் நரியினிடம், "அதிகமாக யாரேனும் அடித்தால் உடல்வலி தீரநீரில் புரள்வது என் வழக்கம்" என்றது.
நரி தன் தவறை உணர்ந்து, தன்னைக் காப்பாற்றும் படி ஒட்டகத்திடம் கெஞ்சியது.
ஒட்டகமும், நரியின் தவறை மன்னித்து, அதை மீண்டும் முதுகினில் ஏற்றி இக்கரைக்குக் கொண்டு சேர்த்தது.
தவறு செய்தவர்,தவறை உணர்ந்து வருந்தினால் மன்னிக்க வேண்டும்
2 comments:
தவறை உணர்ந்து விட்டால் மன்னித்து விடுவது தான் முறை. நல்ல பகிர்வு.
வருகைக்கு நன்றி சார்
Post a Comment