Wednesday, July 18, 2018

31 - எப்படி வாழவேண்டும்




ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,
குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,
நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..
உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..
அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..
நாட்கள் உருண்டன...
ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..
அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..
பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..
அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது

Tuesday, July 17, 2018

30.சமயோசிதப் புத்தி



ஒரு நாள் இடி மின்னலுடன் காட்டில் மழை பெய்து கொண்டிருந்தது.

ஒரு மான் தன் குட்டிகளுடன் எங்கு செல்வது எனத்தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு குகை  காலியாக இருப்பதைப் பார்த்தது.அது சிங்கத்தின் குகை.
வேறு வழி தெரியாத மான் அது சிங்கத்தின் குகை என்று அறிந்தும் காலியாக இருந்ததால் தன் குட்டிகளுடன் உள்ளே சென்றது.

வெளியே போயிருந்த சிங்கம் தூரத்தில் வருவதைப்பார்த்த  மான்,தன் குட்டிகளிடம் "எனக்கு சிங்கக் கறி வேண்டும்" என கத்துங்கள் என்றது.
குட்டிகளும் அது போல கத்த சிங்கம் குகைக்குள் தன்னைவிட  பலசாலியான மிருகங்கள் இருப்பதாக எண்ணி ஓடியது.

வழியில் நரி ஒன்றைப்பார்த்த சிங்கம் "என் குகையில் பலசாலியான மிருகங்கள் இருக்கின்றன,அவை என்னைக் கொல்ல காத்திருக்கிறன" என்றது.

ஆனால் குகைக்குள் மான் தன் குட்டிகளுடன் செல்வதை நரி பார்த்திருந்தது.அது சிங்கத்திடம் அதைக்கூறி "பயப்படாதீர்கள் நானும் உங்களுடன் வருகிறேன்.நீங்கள் பெரிய மானை சாப்பிடுங்கள்,நான் குட்டிகளை சாப்பிடுகிறேன் "என சிங்கத்தை மீண்டும் குகைக்குள் அழைத்து வந்தது

சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், உடனே தன் குட்டிகளிடம் "கவலைப்படாதீங்க.நரிமாமா சிங்கக்கறிக்காக கண்டிப்பாக சிங்கத்தை அழைத்துவருவதாகச் சொல்லியிருக்கார்" என் சிங்கத்தின் காதுகளில் விழுமாறு கத்தி சொன்னது.

அதைக் கேட்ட சிங்கம், நரி தன்னை ஏமாற்றி அழைத்து  வருவதாக எண்ணி நரியை அடித்துக் கொன்றது.பின் குகைக்குள் இருந்த மிருகங்களிடமிருந்துத் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு குகையைத் தேடி ஓடிவிட்டது

எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை, முயற்சியைக் கைவிடாததால் மானால், தன்னையும், தன் குட்டிகளையும் காப்பாற்றமுடிந்தது. மானின் சமயோசித புத்தியை நாமும் பாராட்டுவோம்

தன்னம்பிக்கை, முயற்சி இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றியடையலாம்

Saturday, June 2, 2018

தன்னம்பிக்கை


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது' பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்

Monday, April 30, 2018

28- யார் பலசாலி



நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது.
அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது.
இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.
அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது.
அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு.
அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.
பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.
நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.
மனிதன் அதைக் கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான்.
அந்தக் காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.
அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே.
"ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை
கடவுள் படைத்துள்ளார்"

27 - தவறை உணர்ந்தால் மன்னிப்பு உண்டு


ஒரு நரியும், ஒட்டகமும் நண்பர்களாக இருந்தன.ஒருநாள் ஒட்டகத்திடம் நரி சொல்லியது, "நண்பா..இந்த நதிக்கு அக்கரையில், ஒரு பெரிய கரும்புத் தோட்டம் உள்ளது.நாம் இருவரும் நதியைக் கடந்து அங்கே சென்றால் இனிப்பான கரும்பை சாப்பிட்டு வரலாம்"

அதைக் கேட்ட ஒட்டகம், "நரியே! நீ இனிப்பைச் சாப்பிட்டால் ஊளையிடுவாய்.அப்போது கரும்புத் தோட்டக்காரன் நம்மைப் பிடித்து அடித்து விடுவான்" என்றது.

நரி ,தான் ஊளை இடமாட்டேன் என வாக்குறுதி இட்டதால், இரண்டும் கிளம்பின.

ஒட்டகத்தின் மீது ஏறிக் கொண்டு நரி நதியைக் கடந்தது.

இரண்டும் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று இனிமையான கரும்பை சுவைத்தன.

மகிழ்ச்சியில் நரி ஊளையிடத் தொடங்கியது.அதைக் கேட்டு அங்கு வந்தான் கரும்புத் தோட்ட முதலாளி.நரி உடனே ஒடிப் போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.

ஒட்டகமோ அடியை வாங்கிக் கொண்டு, வலியுடன் நதிக்கரைக்கு வந்தது.அப்போது நரி புதரிலிருந்து ஓடி வந்து, "ஒட்டக நண்பா..எனக்கு மகிழ்ச்சி அதிகமானால் ஊளையிடுவேன்.அது என் வழக்கம்.வழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை." என்றது.

ஒட்டகத்தின் மீது ஏறிக்கொண்டு நதியைக் கடந்தது நரி.பாதி வழியில்,நதியின் ஆழமான பகுதி வந்ததும், ஒட்டகம் ஆற்றில் புரண்டது.

நரி தண்ணீரில் விழுந்து தத்தளித்தது.ஒட்டகம் நரியினிடம், "அதிகமாக யாரேனும் அடித்தால் உடல்வலி தீரநீரில் புரள்வது என் வழக்கம்" என்றது.

நரி தன் தவறை உணர்ந்து, தன்னைக் காப்பாற்றும் படி ஒட்டகத்திடம் கெஞ்சியது.

ஒட்டகமும், நரியின் தவறை மன்னித்து, அதை மீண்டும் முதுகினில் ஏற்றி இக்கரைக்குக் கொண்டு சேர்த்தது.

தவறு செய்தவர்,தவறை உணர்ந்து வருந்தினால் மன்னிக்க வேண்டும்   

Sunday, April 29, 2018

26 - நல்ல நண்பர்கள் வேண்டும்



வயல்களில் பறவைகள் வந்து தானியங்களை நாசம் செய்தன.அதனால், வயல்களுக்கு சொந்தக்காரனான விவசாயி பறவிகளைப் பிடிக்க வலையைக் கட்டினான்.

வலையில் பல பறவைகல் மாட்டிக்கொண்டன. அவற்றோடு ஒரு கொக்கும் மாட்டிக் கொண்டது.

விவசாயி வந்து, வலையில் அகப்பட்டிருந்த பறவைகளைப் பிடித்தான்.தன்னை விடுவிக்குமாறு கொக்கு மன்றாடியது.

" நீ பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டாய்.நான் பறவை அல்லவே! என்னை விடுவிப்பதுதானே நியாயம்?" என்றது

அதற்கு விவசாயி, "நீ சொல்வது முற்றிலும் உண்மை,ஆனால், நீ கெட்டவர்களோடு அகப்பட்டாய்,கெட்டவர்களின் கூட்டுறவு உனக்கு இருக்கிறபடியால் அவர்களுக்கு க் கிடைக்கிற தண்டனை உனக்கும் கிடைக்க வேண்டியதுதான்" என்று சொன்னான்

ஒவ்வொருவரும், அவர்கள் நண்பர்களைக் கொண்டே மதிப்பிடப்படுவார்கள்

Thursday, April 26, 2018

25 - மானும்..நரியும்



ஒரு நரி கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து விட்டது.
மேலே வர முடியாமல் தவித்தது.
அந்தப் பகக்மாக வந்த மான் ஒன்று, கிணற்றுக்குள் ஏதோ சப்தம் கேட்பதைக் கேட்டு, கிணற்றை எட்டிப் பார்த்தது.

அதனுள், நரி இருப்பதைப் பார்த்து விட்டு, "நரியாரே! கிணற்றினுள் என்ன செய்கிறீர்கள்? " என வினவியது.

மான் இப்படிக் கேட்டதும், தந்திரக்கார நரி, "இந்த கிணற்று நீர் இளநீர் போன்று மிகவும் சுவையானது.எனக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம், இக்கிணற்றினுள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வேன்" என்று பொய் சொல்லியது.

மானிற்கும், உடனே அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.உடனே, அதுவும் கிணற்றினுள் குதித்தது.

நல்ல சமயத்தை எதிர்ப்பார்த்திருந்த நரி, அந்த மானின் கொம்புகளைப் பிடித்து, அதன் மீது ஏறி வெளியே குதித்து தப்பி ஓடியது.

அப்போதுதான் நரியின் தந்திரத்தை உணர்ந்தது மான்.இப்போது கிணற்றினுள் இருந்து தன்னால்வெளியே
 வர முடியாது, "யாராவது என்னக் காப்பாற்றுங்கள்" எனக் கதற ஆரம்பித்தது.

நாம் யாருக்கு உதவி செய்தாலும், அந்த உதவிக்கு அந்த நபர் தகுதியானவர்தானா என யோசித்து செய்ய வேண்டும்.