Sunday, March 22, 2015

143. நல்லவனாக இரு ......(நீதிக்கதை)



ஒரு ஊரில் சீதாராமன் என்று ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் பிறருக்கு தீங்குகளையே இழைத்து வந்தான்.அதனால் அவ்வூர் மக்களும் அவனைக்கண்டால் பயந்து ஒதுங்கிச் சென்றனர்.

அவனது தந்தை பணக்காரராய் இருந்ததால்...அவன் எந்த வேலைக்கும் செல்லாமல் தன் கவனம் முழுவதையும் கெட்ட செயல்கள் செய்வதிலேயே கழித்து வந்தான்.

ஒரு நாள் திடீரென்று அவனுக்கு நல்லவனாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட கோவிலுக்குச் சென்று இறைவனிடம் 'ஆண்டவனே ..என்னை நல்லவனாக மாற்றிவிடு ' என்று வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி ' சீதாராமா..இன்றிலிருந்து இரண்டு மாதங்கள் என் கோவிலைச் சுற்றி சுத்தம் செய், .உழவாரப் பணி செய்  என்றார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தாகம் தணிய தண்ணீருக்கு ஏற்பாடு செய். இரண்டு மாதங்களுக்கு பின் நான் வந்து உன்னை நல்லவனாக ஆக்குகிறேன் என்றார்.

அவனும் அன்றிலிருந்து கடுமையாக உழைத்து கோவிலை அழகாக ஆக்கினான்.அவனது மனம் வேறு எந்த விஷயத்தையும் நினைக்கவில்லை. மக்கள் அவனை விரும்ப ஆரம்பித்தார்கள்.

இரண்டு மாதம் கழித்து இறைவன் மீண்டும் வந்து ' சீதாராமா...இப்போது சொல்....உனக்கு இப்போது பிறருக்கு தீங்கு இழைக்கவேண்டும் என்று தோன்றுகிறதா' என்றார், அவனும் ' இல்லை ' என்றான்.

' நீ எந்த வேலையும் செய்யாமல் சோம்பித் திரிந்ததால் ...உன் உள்ளத்தில் பிறருக்கு தீங்கிழைக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் இரண்டு மாதமாக ஓய்வின்றி உழைத்து பிற எண்ணங்கள் ஏதும் இல்லாமல் நல்ல காரியங்களையே செய்ததால்....உன் மனமும் மாறியது. நல்லவன் என்ற பெயரை எடுக்க ஆரம்பித்துள்ளாய்' என்றார்.

நாமும் நல்ல எண்ணங்களையும், நல்ல உழைப்பையும் வளர்த்துக் கொண்டால் நல்லவனாக போற்றப்படுவோம்.

Friday, January 9, 2015

142. இறைவனின் படைப்பில் ............. (நீதிக்கதை)




ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தது ஒருஆமை....
'நம்மால் ஏற்கனவே வேகமாக போகமுடியாது...இதில்,முதுகில் வேறு பாரமாக ஓடு.
முயலைப் பார்த்து பொறாமைப் படுவதில் பயன் இல்லை....ஆண்டவனைத்தான் என்னை இப்படிப் படைத்ததற்காக நொந்து கொள்ளவேண்டும்.' என எண்ணியது.
அப்போது ....அன்று இறை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம்,விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது.
முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது.ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது
சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட ....முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு விநாடியும்....மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில்,விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.அந்த தனித்தன்மையை உபயோகித்து ...ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம்.
இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை

Monday, November 24, 2014

141-சமாதானம் அவசியம் ( நீதிக்கதை),



காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன.

கரடி, "நான் தான் முதலில் மானைப் பார்த்தேன்..ஆகவே அது எனக்குச் சொந்தம் 'என்றது.

ஆனால் சிங்கமோ. "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம்' என்றது.

இரண்டும், செத்துக் கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன.அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின.அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும்.கரடியையும் பார்த்தது.இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன."நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப் போட்டு உண்டிருக்கலாம்.நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே" என வருந்தின.

நாமும் அவர்களைப் போல் இல்லாமல்..எல்லாரிடமும் போரிடும் குணத்தைவிட்டு சமாதானமாய்ச் சென்றால் இழப்பு .எதுவும் ஏற்படாது.

Friday, November 21, 2014

140-நமது மகிழ்ச்சி பிறருக்கு துன்பம் ஆகலாமா? (நீதிக்கதை)




அன்று பள்ளி விடுமுறை என்றதால் சில சிறுவர்கள் சேர்ந்து, அந்த ஊரில் இருந்த ஒரு குளக்கரைக்கு வந்தனர்.

அந்தக் குளத்தில் பல தவளைகள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அதைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சி மேலிட..அந்தத் தவளைகள் மீது யார் அதிகம் கல் எறிகிறார்கள் பார்க்கலாம் என்று போட்டி போட்டுக் கொண்டு, கரையில் இருந்த கற்களை எடுத்து தவளைகள் மீது வீச ஆரம்பித்தார்கள்.இதனால் பல தவளைகள் காயம் அடைந்தன.அப்போது, தைரியமாக ஒரு தவளை..அவர்களிடம் வந்து..

"கல்லெறிவதை நிறுத்துங்கள்.உங்கள் விளையாட்டால் சற்று முன் வரை மகிழ்வோடு விளையாடிக் கொண்டிருந்த எங்களில் பலர் காயமடைந்து வேதனையில் உள்ளனர்.நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென..எங்களை வேதனைப் படுத்தலாமா?:"என்றது.

சிறுவர்களும் தங்களது தவறை உணர்ந்து தவளையிடம் மன்னிப்புக் கேட்டனர்.

நமது மகிழ்ச்சி..இன்னொருவர் வேதனையால் ஏற்படக்கூடாது

Tuesday, November 18, 2014

139.இறைவனுக்கு நன்றி சொல்வோம் (நீதிக்கதை)



ஒரு ஊரில் காகமொன்று இருந்தது.அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது.

ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது.

அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்த காகம்' அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே' என வருந்தியது.
அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே....அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது.தன் இறகுகளை தேய்த்து ..தேய்த்து பார்த்தது.அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் ' இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம்,நிறம் பெற்றவை.அதை மாற்ற நினைத்தால் நடக்காது' என அறிவுரை கூறியது.மேலும்,' கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்.' என்றது.

ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு.அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.

Sunday, November 16, 2014

138- செய்நன்றி மறவேல்!

                 

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது.அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது.சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது.
மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில்..புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது.

அப்போது அச்செடி, "மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ..எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய்.தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும்" என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான்..செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது.அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான்.அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது.

நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

Friday, November 14, 2014

137- அன்னை சொல் கேள்! ( நீதிக்கதை,)

                               


எலி ஒன்று குட்டி போட்டிருந்தது.

இரவு நேரம்.தாய் எலி குட்டி எலியிடம், "இந்த பொந்தை விட்டு வெளியே வராதே! நான் வெளியே சென்று, யார் வீட்டிலிருந்தாவது நமக்கான உணவை கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டுச் சென்றது...

தாய் எலி சென்றதும், குட்டி எலி வெளியே வந்து..வெளியுலகைக் காண ஆசைப்பட்டது.

அது பொந்தை விட்டு வெளியே வந்து, சிறிது தூரம் ஓடியது.அங்கு இருந்த வீடுகளை எல்லாம் பார்த்து வியந்தது.

அப்போது சற்று பெரிய நாலுகால் பிராணி ஒன்றைப் பார்த்து.அது குட்டி எலியைக் கவ்வ ஓடியது.பயந்த குட்டி எலி படுவேகமாக ஓடி வந்து பொந்திற்குள் நுழைந்தது.

சிறிது நேரம் கழித்து, தாய் எலி வந்ததும், குட்டி எலி" அம்மா! உன் சொல்லைக் கேட்காமல் நான் வெளியே சென்றேன்.அப்போது நாலு கால் பிராணி ஒன்று என்னைக் கவ்வ வந்தது" என்றது.

அதற்கு தாய் எலி,"அந்த பிராணியின் பெயர்தான் பூனை.நமது எதிரி அது.அதற்காகத்தான் உன்னை வெளியே வர வேண்டாம் என்றேன்.தாயான என் அறிவுரையைக் கேட்காமல் வெளியே சென்றதால் ஆபத்தில் மாட்ட இருந்தாய்.இனியாகிலும் பெரியவர்கள் சொல்படிக் கேட்டால், நமக்கு எந்த ஆபத்தும் வராது..என அறிந்து கொள்" என்றது

நாமும், நம்மை பெற்றவர்கள், பெரியோர்கள் கூறும் அறிவுரையை மதித்து நடக்க வேண்டும்.