Sunday, November 18, 2012

114 .தேவையில்லாதது ஏதுமில்லை..... (நீதிக்கதை)





முனியனிடம் சில ஆடுகளும் ஒரு நாயும் இருந்தன. தினமும் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான்.கூடவே அவனது நாயும் செல்லும்.

மர நிழலில் முனியன் படுத்து உறங்க ...ஆடுகள் புல் மேயும்...அந்த ஆடுகளை ஓநாய் போன்றவை அணுகாமல் நாய் காக்கும்.

முனியன் தூங்கி எழுந்ததும்,தான் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும் சாப்பாடு அளிப்பான்.இது ஆடுகளுக்கு பிடிப்பதில்லை.

ஒரு நாள் ஆடுகள் முனியனிடம் ' நாங்கள் உனக்கு பால் தருகிறோம்...நீ உயிர் வாழ உதவுகிறோம்..ஆனால் நீயோ எங்களை நாங்களாகவே மேய விட்டுவிட்டு ...சும்மாயிருக்கும் நாய்க்கு உணவளிக்கிறாயே ' என்றன.

அப்போது முனியன் ஆடுகளிடம் ' நீங்க சொல்வது சரி..ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள் இந்த நாய் ...நீங்களெல்லாம் மேயும் போது உங்களைப் பார்த்துக் கொள்ளாவிட்டால் ஓநாய் வந்து தினசரி உங்களில் ஒருவரை கொண்டு சென்று உணவாக்கிக்கொள்ளும்.
அப்படி நேராமல் உங்கள் உயிரைக் காக்கிறது இந்த நாய்' என்றான்.

ஆடுகளும் சிந்தித்துப் பார்த்துவிட்டு நாயின் முக்கியத்துவத்தை உணர்ந்தன.

.தேவையில்லாதது என எதுவும் கிடையாது.சற்று சிந்தித்தால் தேவையில்லாதவை என நினைப்பவையின் தேவையும் அவசியமும் புரியும்.

Friday, November 9, 2012

113. உறுதி மொழியும் சிங்கமும் ...(நீதிக்கதை)





அருகிலிருந்த காட்டிலிருந்து சிங்கம் ஒன்று ஒரு கிராமத்திற்குள் புகுந்து விட்டது.மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பயத்தில் இருந்தனர்.

அப்போது அக்கிராமத்தில் இருந்த தைரியசாலி ஒருவன்..ஒரு இரும்பு கூண்டை தயார் செய்து ..அதனுள் ஒரு ஆட்டை கட்டி கிராம எல்லையில் வைத்திருந்தான்.  

கிராமத்திற்குள் அன்று வந்த சிங்கம் ஆட்டைப் பார்த்தது .கூண்டைப் பார்க்கவில்லை...ஆகவே ஆட்டை உண்ண எண்ணி கூண்டுக்குள் அது போக கூண்டு உடனே மூடிக் கொண்டது.

சிங்கம் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டதால் இப்போது அதன் எண்ணம் ஆட்டின் மீது செல்லாமல் தான் தப்பிக்கும் வழியை நாடியது.


கூண்டைப் பற்றி முன்னமே அறிந்திருந்த ஆடு...சிங்கத்திடம் ..' சிங்கமே..உன்னை நான் காப்பாற்றுகிறேன் ஆனால் நீ வெளியே வந்ததும் என்னைக் கொல்லக்கூடாது' என்றது. சிங்கமும் அவ்வாறே உறுதி அளித்தது...கட்டியிருந்த ஆட்டை விடுவித்தது.

ஆடு தாவித்தாவி ...கூண்டின் கதவைத்திறந்தது. வெளியே வந்தன சிங்கமும்..ஆடும்.

உடன் ...சிங்கம் ஆட்டைக் கொல்லப்பார்த்தது. ஆடோ ..'உன்னை நான் காப்பாற்றினேன்.அதற்காக நீ அளித்த உறுதி மொழியை மீறலாமா:,,என்றது.

'அப்போது என் உயிர் முக்கியம்..இப்போது என் உணவு முக்கியம்' என்றது சிங்கம்.

அப்போது அந்த வழியே வந்த நரியைப் பார்த்து ..ஆடு நரியை நீதி கேக்கலாமா...? என்றது.சிங்கமும் ஒப்புக்கொண்டது.
நடந்த விவரங்களை அறிந்த நரி ....'எனக்கு நீங்கள் சொல்வது சரிவர விளங்கவில்லை......முதலில் சிங்கம் கூண்டில்
எந்நிலையில் இருந்தது; என்றது.

சிங்கமும் கூண்டுக்குள் சென்று ' இந்நிலையில் தான் ' என்றது.

மின்னல் வேகத்தில் நரி கூண்டின் கதவை மூடியது.பின்னர் ஆட்டைப் பார்த்து ' உன்னை உண்ணும் சிங்கத்திற்கு உதவலாமா?'
என்றது.

ஆடு நரிக்கு நன்றி சொல்லிவிட்டு விரைந்தது.

நாமும் ஒருவருக்கு உதவும் முன் அவருடைய தராதரம் அறிந்து அதற்கேற்ப உதவவேண்டும்

அதுபோன்று ஒருவருக்கு நாம் கொடுக்கும் உறுதி மொழியையும் தவறக்கூடாது.சிங்கம் உறுதி மொழியை தவறியதால் தான் அவதிக்குள்ளானது.

Thursday, November 1, 2012

112 - கடவுளும் காற்றும் (நீதிக்கதை)





ஒரு நாள் மழையும் புயலுமாக இருந்தது. பலத்தக் காற்று வீசி பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மக்களும் அவதிக்குள்ளாயினர்.
அப்போது பலர் ' காற்று இப்படி வீசுகிறதே' என காற்றை சாடினர்.

இதனால் காற்று மனம் வருந்தி, கடவுளிடம் சென்று, ' இறைவா...நான் மனிதர்க்கு நன்மையே செய்கிறேன்.அவர்கள் உயிர் வாழும் மூச்சாகவும் உள்ளேன்.ஆனால் இதையெல்லாம் மறந்து மக்கள் என்னை ஏசுகின்றனரே ". என்றது.

அதற்கு கடவுள்... ' எப்போதும் மனிதர்க்கு உதவும் வரை புகழுண்டு.ஆனால் அவர்களுக்கு தீங்கிழைக்கும் போது திட்டு தான் கிடைக்கும்.உன்னை கோபமாகத்தான் பேசுவார்கள்' என்றார்.

அவர் மேலும் சொன்னார் ' நீயே புல்லாங்குழலில் நுழைந்து இசையாய் வெளியேறினால் மக்கள் மகிழ்கின்றனர். உதைப்பந்தில் அடைபட்டுக் கிடக்கும்போது அவர்களாலேயே உதைபடுகிறாய்.இதிலிருந்து என்ன தெரிகிறது...நீ மனிதனுக்கு பயன்படாமல் அடைத்துக் கிடந்தால் உதைபடுகிறாய்.அது போல் தான்...உன்னால் தீமை நிகழும்போது மனிதர்களின் ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளாகிறாய்' என்றார்.

அது முதல் காற்று தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவையே செய்வேன் என்று குளிர்ந்து வீச ஆரம்பித்தது.

நமக்கும் யாரேனும் தீங்கிழைத்தாலும், ஏசினாலும்,அவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும்.

Thursday, August 30, 2012

111. " பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் " (நீதிக்கதை)




முருகன் ஒரு கடவுள் பக்தன்.
தமக்கு என்ன வேண்டுமானாலும் அந்த இறைவனை வேண்டினால் போதும் என எண்ணுபவன்.

பல நாட்களாய் அவன் கடவுளை தன் வீட்டிற்கு விருந்து உண்ண வரும்படி வேண்டிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் கடவுள் அவன் முன் தோன்றி அன்று இரவு விருந்துண்ண அவன் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.

முருகனும் தடபுடலாய் விருந்து ஏற்பாடு செய்தான்.

அவன் இறைவனுக்காக காத்திருக்கையில்....ஒரு வயதான பிச்சைக்காரர்..' ஐயா பசிக்குது. உணவு கொடுங்கள் ' என்று கேட்டார்.

' கடவுள் என் வீட்டிற்கு வரும் நேரம்...நீ இங்கே இருக்காதே..போ..போ..' என பிச்சைக்காரரை விரட்டினான் முருகன்.

ஆனால் இரவு கடவுள் விருந்துண்ண முருகன் வீட்டிற்கு வரவில்லை.

அடுத்த நாள் முருகன் ...இறைவனிடம் " நேற்று ஏன் வரவில்லை" என வினவினான்.

இறைவனும் ...' நான் சொன்னபடி நேற்று வந்தேன்..பிச்கைக்காரர் உருவில்....நீ தான் விரட்டி விட்டாய்' என்றார்.

பின் ..மனிதர்களுக்கு நீ செய்யும் தொண்டே எனக்கு செய்யும் தொண்டு என்று உணர்ந்து கொள் என்றார் கடவுள்.

அன்று முதல் முருகனும் தன்னால் இயன்றவரை ஏழை மக்களுக்கு உதவி வந்தான்.

Wednesday, April 18, 2012

110. நம்பிக்கை துரோகம் கூடாது (நீதிக்கதை)




பணக்காரன் ஒருவன் வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்தது.அதனால் தன் சொத்துக்களை பாதுகாக்க தன் நண்பன் மாணிக்கம் என்பவனை நம்பி ஒப்படைத்துவிட்டு சென்றான்.

பணக்காரனின் நிலங்களின் நடுவே ஒரு குளம் இருந்தது.அக்குளத்தில் பலவகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் ...மீனுக்கு ஆசைப்பட்ட மாணிக்கம்..வலைவீசி மீன்களைப் பிடித்தான்.அச்சமயம் ஊருக்கு சென்றிருந்த பணக்காரன் திரும்பி வந்தான்.

தன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டி அமர்த்தப்பட்ட தன் நண்பன் மாணிக்கம் குளத்தில் மீன்களைபிடிப்பதைக்கண்டு " மற்றவர்கள் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நீயே தவறு செய்கிறாயே?" என்று கேட்டுவிட்டு அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.

மாணிக்கம் ..தன்னை நம்பிய பணக்காரனுக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணி பின்னர் வெட்கமடைந்தான்.

நாமும்...நம்மை நம்பி பிறர் ஒப்படைக்கும் காரியங்களை நம் காரியங்களைப்போல செய்யவேண்டும்.

நம்மை நம்பியவர்களை ஏமாற்றக்கூடாது.

Thursday, April 5, 2012

109. உள்ளதும் போய்விடும்...(நீதிக்கதை)




ஒரு கொக்கு ஒன்று நதிக்கரையில் நின்றபடியே...நீரில் மீன் வரும்போது கொத்தித்தின்ன காத்திருந்தது.

பல சிறிய மீன்கள் நதியில் கொக்கின் கண்ணில் பட்டாலும்....அது பேராசையுடன் பெரிய மீன் வருகைக்குக் காத்திருந்தது.

அப்போது பெரிய மீன் ஒன்று ஆற்றில் வர ...அதைக் கொத்தி விழுங்கியது கொக்கு...ஆனால் கொக்கின் தொண்டை சிறியதாய் இருந்ததாலும் ....மீன் பெரியதாய் இருந்ததாலும் மீன் கொக்கின் தொண்டையில் அகப்பட்டுக்கொண்டது.

மீனை துப்பவும் முடியாமல்......விழுங்கவும் முடியாமல் ...மூச்சுத் திணறிக் கொக்கு மயங்கி விழுந்தது,

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு கொக்கு ..' என்னைப் போல சின்ன மீன்கள் ஒன்றிரண்டை கொத்தி சாப்பிடாமல் பேராசையுடன் .....பெரிய மீனை விழுங்கின உனக்கு
இந்த தண்டனை தேவை தான்' என்றது.

நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.


Saturday, March 17, 2012

108. இறைவனின் பரிசு (நீதிக்கதை )




குமரனும்,சரவணனும் நண்பர்கள்...குமரன் வகுப்பில் படு சுட்டி....எதிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்ததுடன் ...அனைவரிடமும் நல்ல பெயரையும் எடுத்தவன்.

சரவணனோ..நேர் எதிர்.படிப்பிலும் சுமார்...அவ்வப்போது...சிறு சிறு திருடுகளிலும் ஈடுபட்டு வந்தான்.

ஒரு நாள் சரவணனின் தந்தை குமரனிடம்..' உன் நண்பன் சரவணனை திருத்த வேண்டியது உன் கடமை அல்லவா.....' என்றார்.

அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான் குமரன்.

ஒரு நாள் வகுப்பில்...பக்கத்து நண்பன் ஒருவன் பையிலிருந்து ...பணத்தை சரவணன் திருடுவதை...குமரன் பார்த்துவிட்டான்.
சரவணன் உடன் குமரனிடம் ' குமரா...இதை நீ ஒருவன் பார்த்துவிட்டாய்...இதை யாரிடமும் சொல்லிவிடாதே...இதுவரை நான் திருடுவதை யாரும் பார்த்ததில்லை...
இன்று இத்திருட்டு நம் இருவருக்கு மட்டுமே தெரியும்' என்றான்.

உடன் குமரன்..'சரவணா..நீ அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்.இதுவரை நீ செய்த திருட்டுகள் உனக்கு மட்டுமே தெரியும் என்று.
நீ செய்வதை,சொல்வதை ..இன்னொருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதை மறந்துவிடாதே...இன்று..இத்திருட்டு ..என்னையும் சேர்த்து மூவருக்குத் தெரியும்" என்றார்.

' யார்....யார்...; என பயத்துடன் கேட்டான் சரவணன்.'

 "நாம் செய்யும் நல்லது..கெட்டது எல்லாவற்றையும் அவன் நம்முடன் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்....
அவன் நம் செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான். அவன் தான் இறைவன் "' என்றான். குமரன்.

குமரன் சொல்வதுபோல ....நாம் செய்யும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதற்கான பயனை நமக்கு பரிசாக அளிக்கிறான்.