Monday, August 22, 2011

83-தெரியாததில் ஈடுபடக்கூடாது (நீதிக்கதை)




ஒரு அழகிய கிராமம்.அந்தக் கிராமத்திற்கு வெளியே பெரிய ஏரி ஒன்று இருந்தது.ஏரியின் கரைகளில் பழ மரங்கள்.அவற்றுள் குரங்குகள்..கிளைக்குக் கிளை தாவி பழங்களைப் பறித்துத் தின்று தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தன.
அக்குரங்குகளில் குட்டிக் குரங்கு ஒன்றும் இருந்தது.போவோர் வருவோர் ..என அனைத்து பேருடன் அதனுடைய சேட்டை அதிகமாக இருந்தது.

ஒருநாள் மீனவன் ஒருவன் ..அந்த ஏரிக்கு வந்து மீன் பிடிக்க வலையை வீசினான்.நிறைய மீன்கள் வலையில் சிக்கின.அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, வலை ஈரமாய் இருந்ததால்...கரையில் அதைக் காயப்போட்டுவிட்டுச் சென்றான்
.
அந்தக் குட்டிக் குரங்கு அவன் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் சென்றதும்..அவன் உலர்த்திச் சென்ற அவ்வலையின் மையத்தில் அமர்ந்துக் கொண்டு..வலையை எடுத்து ஏரியில் வீசப் பார்த்தது.
ஆனால் வலை இறுகி..அதன் மையத்தில் அமர்ந்துக் கொண்டிருந்த குரங்குக் குட்டி வலையில் வசமாக சிக்கிக் கொண்டது.பயத்தால் அலற ஆரம்பித்தது.மற்ற குரங்குகள் வந்து அதைக் காப்பாற்றப் பார்த்தன.ஆனால் அது நைலான் வலையானதால் அவற்றால் அதைக் கடிப்பது கூட சிரமமாய் இருந்தது.
அப்போது வலையை எடுத்துப் போக மீனவன் வந்தான்.குரங்கு மாட்டிக் கொண்டு அவதிப்படுவதைக் கண்டு வருந்தி அதை விடுவித்தான்.பின் குட்டியிடமும், மற்ற குரங்குகளிடமும்  'தெரியாத காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் அவதிப்பட நேரிடும்.எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும்..அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஈடுபட வேண்டும்.அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்' என்று அறிவுரைச் சொன்னான்.

Wednesday, August 17, 2011

82. சிங்கமும்,மானும்,முயலும்....(நீதிக்கதை)



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காததால் மிகவும் பசியுடன் இருந்தது.

அப்போது...அருகில் இருந்த புதர் ஒன்றில் முயல் ஒன்று தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தது.அதை பிடித்து உண்ணலாம் என்று நினைத்தபோது ....
சிறிது தூரத்தில் கொழுத்த மான் குட்டி மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
உடனே முயலை பிடிப்பதை விட்டுவிட்டு ...மான் குட்டியை பிடிக்க விரைந்தது.முயலும் முழித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தது.
சிங்கம் ஓடி வந்த சப்தத்தைக்க்கேட்டு மான்குட்டி விரைந்து ஓடியது.
நெடுந்தூரம் ஓடியும் மானை பிடிக்க முடியாத சிங்கம் முயலையாவது சாப்பிடலாம் என எண்ணித் திரும்பியது.
முயலோ...சிங்கம் திரும்பி வந்தால் தான் இறப்பது உறுதி என அறிந்து அங்கிருந்து ஓடிவிட்டிருந்தது.

முயலும் போய்...மானும் போய் சிங்கம் பசியால் தவித்தது.
"கைப்பிடியில் இருந்த முயலை விட்டுவிட்டு ...பேராசையால் தூரத்தில் இருக்கும் மானை நாடிச் சென்றதால்....உள்ளதும் பறிபோனது' என வருந்தியது சிங்கம்.

நாமும் நம் கையில் உள்ளதை வைத்து திருப்திக் கொள்ளவேண்டும். கிடைக்காததற்கு ஆசைப்படக்கூடாது.

Sunday, August 14, 2011

81. " ஆண்டவன் யார்.." (நீதிக்கதை)



ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு ஒரு நாள் கடவுள் என்பது யார்? அவரது ஆற்றல் எஎன்ன? என்ற சந்தேகம் எழுந்தது
அந்த சந்தேகத்தை தீர்க்க அவனது அமைச்சர்கள் யாராலும் முடியவில்லை.
அதனால் கோபம் அடைந்த அரசன்,தன் தலைமை அமைச்சரிடம் " என் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு... நாளை வரை அவகாசம் தருகிறேன்'
என்றான்.
தலைமை அமைச்சரும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார்.அவர் வருத்தத்தை அறிந்த அவரது பத்து வயது மகள் 'நான் நாளை வந்து அரசரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் ' என்றாள்.
அடுத்த நாள் அரச சபையில் அரசனிடம் அவள் ' அரசே ஒரு குடுவையில் பால் வேண்டும்' என்றாள்.
பால் கொண்டு வந்து தரப்பட்டது.
பால் கொண்டு வந்தவனைப் பார்த்து அவள்...'இந்தப் பாலின் நிறம் என்ன ' என்றாள்.
'வெள்ளை நிறம்'  என்றான் அவன்.
'இப்பாலைக் கறந்த மாடு என்ன நிறம்' என்றாள்.
'கருப்பு நிறம்'
'அந்த கருப்பு நிற மாடு எதைத் தின்று இந்த பாலைத் தந்தது'
'பசும் புல்லை'
இப்போது அவள் அரசரைப் பார்த்து ...'யார் பச்சைப் புல்லை கருப்பு மாட்டிற்குத் தந்து வெள்ளைப் பாலை உருவாக்குகிறாரோ அவர் தான் கடவுள்....
ஆண்டவன் விந்தையன செயல்கள் அனைத்தும் செய்யும் ஆற்றல் பெற்றவர்' என்றாள்..
அரசனும் மனம் மகிழ்ந்தான்.

Sunday, July 31, 2011

80- நம்பினார் கெடுவதில்லை (நீதிக்கதை )







கந்தனின் தந்தையிடம் நூறு ஆடுகள் இருந்தன
.தினமும் காலையில் அவர் அவற்றை மேய்க்க ஓட்டிக்கொண்டு காட்டிற்கு செல்வார்.....மாலை ஆறு மணிக்கு பிறகு அவற்றை திரும்ப வீட்டிற்கு ஓட்டி வந்துவிடுவார்.
 அப்படி செல்கையில் ஒரு நாள் மாலை மேய்ந்துவிட்டு வந்ததும்
அவற்றை பட்டியலில் அடைக்கு முன் எண்ணிப் பார்த்தார். 99 ஆடுகளே இருந்தன.ஒரு ஆடு குறைந்தது.

எல்லா ஆடுகளையும் அடைத்துவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டைத் தேடி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றார்
.கந்தனின் தாயோ ' இரவு நேரத்தில் காட்டிற்குள் செல்லவேண்டாம்...ஒரு ஆடு தானே காணும் ....பரவாயில்லை...மீதி 99 ஆடுகள் இருக்கிறதே என்றாள்.'
 ஆனாலும் கந்தனின் தந்தை அந்த ஒரு ஆட்டைத் தேடிச் சென்றார்
காட்டிலும் மேட்டிலும் அந்த ஆட்டைத் தேடினார்.நீண்ட நேரத்திற்கு பின் ஒரு பாறையின் உச்சியில் கீழே இறங்க வழி தெரியாது அந்த ஆடு திணறிக்கொண்டிருப்பதை பார்த்தார்.
மெல்ல அந்த ஆட்டை பிடித்துக்கொண்டு திரும்பினார
.அந்த ஆடு நன்றியுடன் அவரைப் பார்த்தது.அதன் கண்களில் கண்ணீர் நன்றிப் பெருக்கில். பின் அவர் கந்தனின் தாயிடம்..".நீ ஒரு ஆடு தானே ....தேடப் போகவேண்டாம் என்றாய்...நான் அப்படிச் செல்லாதிருந்தால் இந்த ஒரு ஆட்டை இழந்திருப்போம்..".என்றார்



கந்தனும் ...'..ஆமாம் அம்மா' என்றான்



மேலும் அவனது தந்தைக் கூறினார்
, 'எண்ணிக்கை முக்கியமில்லை..காணாமல் போன அந்த ஆடும் என்னை நம்பியே மேய வந்தது.என்னை நம்பி வந்தது வழிதவறி தடுமாறி..திரும்பமுடியவில்லை.ஆயினும் நம்பிய அதை காக்க வேண்டியது என் கடமை.இது ஆட்டிற்கு மட்டுமல்ல..அனைவருக்குமே பொருந்தும்.நம்மை நம்பியவரை நாம் என்றும் கைவிடக்கூடாது.'

















.'

Thursday, July 7, 2011

79. ஒற்றுமை.... (நீதிக்கதை)


நாலு மாடுகள் மிகவும் நண்பர்களாய் இருந்தன.

அவை தினமும் காட்டுப்பகுதிக்குச் சென்று புல் மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

நன்கு கொழுத்துக் காணப்பட்ட அவற்றை அடித்து உண்ண சிங்கம் ஒன்று விரும்பியது.

அதற்காக அது ஒரு முறை முயன்றபோது ...நாலு மாடுகளும் சேர்ந்து சிங்கத்தைத் தாக்கி...அதற்கு காயத்தை
ஏற்படுத்த ....தப்பினால் போதும் என அவைகளிடமிருந்து சிங்கம் ஓடியது.

பின் ஒரு நாள்..தனக்கு ஆலோசனைகள் கூறும் நரியைப் பார்த்து சிங்கம் அந்த மாடுகள் பற்றிக் கூறியது.

அதற்கு நரி...'சிங்க ராஜாவே....அவைகள் ஒற்றுமையாய் இருப்பதாலேயே பலமுள்ளதாய் தெரிகிறது. அவற்றை பிரித்தால் ...தனித்தனியாக அவற்றை அடித்து உண்ணலாம்' என்று தெரிவித்ததோடு ...அவற்றை பிரிக்கும் பணியையும் ஏற்றது.

ஒரு நாள் நான்கு மாடுகளில் ஒன்று சற்று தனியாக இருந்தபோது ...நரி அதைப் பார்த்து ' உங்கள் நால்வரில் நீயே பலசாலி...ஆகவே நீ தனித்து புல் மேயப்போனால் உனக்கு அதிக புற்கள் கிடைக்கும் ....மேலும் உன்னுடைய பலமும் அப்போதுதான் மூன்று பேருக்கும் புரியும்' என்றது.

அப்படியே மற்ற மூன்று மாடுகளிடமும் சொன்னது.

நரி சொல்வதை உண்மை என்று நம்பிய மாடுகள்...அடுத்த நாள் தனித்தனியாக புல் மேய தனி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தது.

தினமும் ஒன்றாக...அவற்றை சிங்கம் அடித்து உண்டது.

மாடுகள் ஒற்றுமையாய் பிரியாமல் இருந்தால் பலமுள்ளதாக இருந்திருக்கும். பிரிந்ததால் பலமற்றுப் போய் மடிந்தன.

ஒற்றுமையாய் இருந்தால் நம்மால் பல சாதனைகளை சாதிக்கமுடியும்.ஒற்றுமையின்மையால் நாம் செயலற்று போவோம்.

Monday, June 27, 2011

78.வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)




ஒரு வெயில் நாளில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து ஆடிக்கொண்டிருந்தது.


அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் புற்றுக்குச் சென்றுகொண்டிருந்தது.அதைப் பார்த்த வெட்டுக்கிளி ...'இப்போது என்ன அவசரம்...சிறிது நேரம் என்னைப்போல நீ வெயிலில் விளையாடலாமே' என்றது.

அதற்கு எறும்பு...மழைக்காலத்தில் வெளியே எவரும் செல்லமுடியாது...அதனால் அந்நேரம் தேவையான உணவை இப்போதே நான் என் புற்றில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்' என்றது.

'மழைக்காலம் வர இன்னும் நாள் இருக்கிறது'என்று கூறிக்கொண்டே...வெட்டுக்கிளி நடனமாட ஆரம்பித்தது.

மழைக்காலமும் வந்தது.

'தான் சேகரித்த உணவை உண்டு ..தன் புற்றுக்குள்ளேயே இருந்தது எறும்பு....

அப்போது உணவு ஏதும் கிடைக்காததால் எறும்பிடம் வெட்டுக்கிளி வந்து ..சிறிது உணவளிக்க வேண்டியது.

தன்னிடமிருந்த அரிசியில் சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு ....'அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. அப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று எனக்கும் ஏன் இன்று உனக்கும் உதவியது...இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல்..வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்' என்றது.

சோம்பலில்லாமல் கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

Tuesday, June 21, 2011

77. நாமே முடிவு செய்யவேண்டும். (நீதிக்கதை)



ராமன் தனது மனைவியுடனும்,அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனது நண்பன் முருகன்...நீயாவது...மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான்.

உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான்.

அப்போது ராமனின் மற்றொரு நண்பன் கணேசன் வந்தான்....ராமா..உன் மனைவியை விட நீ வயதானவன்..ஆகவே நீ குதிரையின் மீதேறிச் செல்லலாமே என்றான்.உடன் மனைவியை குதிரையிலிருந்து இறக்கிவிட்டு விட்டு ராமன் குதிரை மீதேறி அமர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும்..கந்தன் வந்தான்...அவன் ராமனைப் பார்த்து..'குதிரை இரண்டு பேரையுமே சுமக்குமே..இருவரும் குதிரையில் ஏறிச் செல்லலாமே' என்று சொல்ல ராமன் தன் மனைவியையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

அப்போது அவன் மற்றொரு நண்பன் சரவணன் வந்தான்.'ராமா..உனக்கு மூளை இருக்கா..குதிரை வாயில்லா மிருகம்.அதில் இருவர் ஏறி அதன் சுமையை ஏற்றலாமோ ..என்றான்.'

எப்படிச் செய்தாலும் யாரேனும் ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்..ஆகவே நாம் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் மதிப்பளித்தால் முட்டாள் பட்டம் தான் கிடைக்கும்.
ஆகவே மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு நம் மூளையை உபயோகித்து நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யவேண்டும் என ராமன் உணர்ந்தான்