Friday, December 18, 2020

36. இறைவனே காத்தான்....(நீதிக்கதை)

 


அந்த காட்டிற்குள் ....இரு அணில்கள் மரத்திற்கு மரம் ஆடி..ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.

அதில் ஒரு அணில் இறைவன் மீதி பக்தி அதிகம் கொண்ட அணில்.எது நடந்தாலும் ....அது தான் வணங்கும் இறைவனின் செயலாகும் என்றும்...தன்னை எப்போதும் எந்த விபத்து வந்தாலும் அவன் காப்பாற்றி விடுவான் என்றது.

ஆனால் மற்றொரு அணிலோ இதைக்கேட்டு சிரித்தது.'இறைவன் என்பவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை..' என்றது.

'உனக்கு ஒரு ஆபத்து வந்து அதிலிருந்து நீ தப்பினால் தான் ..உனக்கு புத்தி வரும் என்றது பக்தி அணில்.

பிறகு இரண்டும் ஒரு மரத்தில் ஏறி அதன் ஒரு கிளையில் அமர்ந்து தங்கள் முன் கால்களில் அம்மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறித்து த் தின்று கொண்டிருந்தன.அப்போது திடீரென அந்த கிளை முறிந்து கீழே விழுந்தது.அதனுடன் அணில்களும் விழுந்தன.

நம்மை அனைத்து கிளைகளும் தாங்குமே..இது எப்படி முறிந்தது' என வியந்தன.

அப்போது பக்தி அணில் மேலே பார்க்க அவை அமர்ந்திருந்த முறிந்த கிளையை ஒட்டி இருந்த கிளையில் ஒரு பாம்பு ஒன்று அமர்ந்திருந்தது.கிளை மட்டும் முறியாமல் இருந்திருந்தால் அந்த பாம்பு  அணில்களை விழுங்கியிருக்கும்.

பாம்பைக்காட்டி...மற்ற அணிலுக்கு இறைவனே கிளையை முறியவைத்து நம்மை காத்தான் இறைவன் என்றது பக்தி அணில்.

அதை உணர்ந்து கொண்ட மற்ற அணிலும் அன்று முதல் இறைவனை வணங்க ஆரம்பித்தது.

35. உன் வலிமையை உணர்...(நீதிக்கதை)

 


காலை நேரம்....நரி ஒன்று கிழக்கு திசையிலிருந்து  மேற்கு நோக்கி சென்றது.அப்போது  கிழக்கிலிருந்து வந்த சூர்யஒளியில் அதன் நிழல் வெகு நீளமாக பெரிதாகத் தெரிந்தது.

நரிக்கு ஒரே சந்தோஷம்.தான் மிகப்பெரியதாக வளர்ந்து விட்டதாகவும் இனி காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விட தான் பெரியவன் என எண்ணியது.

செல்லும் வழியில் எதிரில் சிங்கத்தை பார்த்தது.அது அப்போதுதான் இரை சாப்பிட்டுவிட்டு வந்ததால் .. நரியை கண்டும் காணாதது போல இருந்தது.

நரியோ சிங்கம் தன் உருவத்தை பார்த்து பயந்ததாக எண்ணியது.அதனால் சிங்கத்திடம் ' இனிமேல் காட்டுக்கு ராஜா நான் தான் 'என்றது.

சிங்கமோ கோபத்துடன் ,'நீ என்ன பிதற்றுகிறாய்.எனக்கு பல முறை இரைக்காக  விலங்குகளை ஏமாற்றி அழைத்து வந்திருக்காய் என்பதால் உன்னை மன்னிக்கிறேன்.இங்கிருந்து போய் விடு' என்றது.

அதற்குள் மதிய நேரம் வர உச்சி வெய்யிலில்  நரியின் நிழல் குறைந்து  அதன் உண்மையான அளவே தெரிந்தது.

அப்போதுதான் சூர்ய ஒளியால் தான் காலையில் தன் உருவம் பெரிதாக தெரிந்தது' என்பதைஉணர்ந்தது.

' நல்லவேளை  .. சிங்கம் நம்மை மன்னித்து விட்டது என ஓடி ஒளிந்தது,

முட்டாள்தனமாக நம்மை பற்றி தெரியாது நம்மைபெரிதாக எண்ணக்கூடாது என நரி உணர்ந்தது.




Thursday, December 17, 2020

34. பேராசை பெரு நஷ்டம் (நீதிக்கதை)

 ஓரு ஊரில் சோமசுந்தரம் என்ற பணக்காரன் ஒருவன் இருந்தான்.அவன் மளிகைக்கடை ஒன்று நடத்திவந்தான்.அவன் ஊர் மக்களை ஏமாற்றியும் ,எடை குறைவாகவும் சாமான்களைக் கொடுத்து பெரும் பணம் ஈட்டி வந்தான்.பேராசைக்காரனாகவும் இருந்தான்.

ஒரு நாள் தன் கடைக்கு மளிகைசாமானகள் வாங்கிவர அடுத்த ஊருக்கு   செல்லும்போதுகையில் பணம் ஐம்பதாயிரத்தை வழியில் எங்கோ தவறவிட்டான். அதை அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பத்து சதவிதம் அதாவது ரூபாய் ஐயாயிரம் பரிசளிப்பதாக ஊர் முழுவதும் தண்டோரா போட்டான்.

ராமன் என்ற ஒர் ஏழை விவசாயி தெருவில் நடந்துசென்றபோது அந்தப் பணப்பை கிடைத்தது.சோமசுந்தரத்தின் பை அது என்று தெரிந்து அவனிடம் கொடுத்தான்.

பேராசைக்காரனான சோமசுந்தரம் அறிவித்த பரிசுத்தொகையை கொடுக்காமல் ராமனைப் பார்த்து " பணம் சரியாக இருக்கிறது ஆனால் இதில் என் வைர மோதிரம் இருந்தது.அது எங்கே? என்றான்.

ராமனோ தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூற வழக்கு அந்த ஊர் அரசனிடம் சென்றது.

சோமசுந்தரத்தின் பேராசையை அறிந்த அரசன் "சோமாசுந்தரம் ...உன் பையில் பணத்துடன் வைர மோதிரம் இருந்ததா' என்று வினவ. சோமசுந்தரமும் 'ஆமாம் மன்னா' என்றான்,உடன் அரசன்; ராமன் கண்டெடுத்த பையில் பணம் இருந்தது ஆனால் மோதிரம் இல்லை.ஆகவே இது உன் பையாக இருக்கமுடியாது.யாருடையது என


தெரியாத நிலையில் பையைகண்டெடுத்த ராமனுக்கத் தான் சொந்தம் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றான்.

சோமசுந்தரம் தன் பேராசையால் மொத்த பணத்தையும் இழந்தான்.

Tuesday, December 15, 2020

34. மூத்தோர் சொல் கேள்..(நீதிக்கதை)


 தன்னுடைய ஆடுகள் அனைத்தையும் புல்வெளி ஒன்றில் மேயவிட்டுவிட்டு அங்கிருந்த மர நிழலில் சற்றே கண்ணயர்ந்தான் கண்ணன்.

அப்போது நரி ஒன்று அங்கு வந்தது.கொழுத்து இருந்த ஆடுகளப்பார்த்து அதன் நாக்கில் எச்சில் ஊறியது.இதில் ஒரு ஆட்டை சிங்கராஜாவிற்கு கொடுத்தால் அது நம்மை பாராட்டுவதோடு எஞ்சிய ஆட்டு இறைச்சியையும்  தான் சாப்பிடலாமே என நரி ஆசைப்பட்டது.

தனக்கு  உரிய தந்திர குணத்துடன் ...ஒரு கொழு கொழு ஆட்டுக்குட்டியிடம் சென்று" இந்தஇடத்து காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டு இருக்கிறாயே..என்னுடன் வா..இளம் புல் இருக்குமிடம் காட்டுகின்றேன் அதைத்தின்று அருகில் இருக்கும் ஓடைத்தண்ணீரை குடித்தால் எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்றது.

"நமக்கு முன்பின் தெரியாதவர்கள் அழைத்தால் அவர்களுடன் எங்கும் போகக்கூடாது என்று அம்மா அறிவுரை சொல்லியிருந்ததை மறந்து ஆட்டுக்குட்டி நரியுடன் சென்றது.

அப்போதுதான் கண் விழித்தக் கண்ணன்...நரியுடன் ஆட்டுக்குட்டி செல்வதைப்பார்த்து....நரியை அடித்து விரட்டினான்.

நடந்ததை அறிந்த ஆட்டுக்குட்டியின் தாய் "நல்ல வேளை...கண்ணன் பார்த்தான்....நான் சொன்னதை மறந்து நீ நரியுடன் சென்றிருந்தால் அது உன்னை அடித்து தின்றிருக்கும் என்று கூறி ' எப்போதும் அம்மா,அப்பா சொல்வதைக்கேட்டு அதன்படி நடந்து கொண்டால் யாருக்கும் துன்பம் வராது.நான் சொன்னபடி முன்பின் தெரியாத நரியுடன் நீ செல்லலாமா'என்றது.

ஆட்டுகுட்டியும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டது.

நாமும் நம்மை விட பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் நம்மை எந்த துன்பமும் எப்போதும் அண்டாது.

Monday, December 14, 2020

33. வேலைக்கேற்ற கூலி (நீதிக்கதை)

 கந்தன் என்பவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை மேய்ச்சலுக்குஅழைத்து சென்று இரவு கொட்டிலில் அடைப்பான்.


ஆனால்..சில நாட்களாக தினமும் ஒரு ஆடு காணாமல் போய்க் கொண்டிருந்தது.இரவு சரியான காவல் இல்லாததால் ஏதோ விலங்கு ஒன்று வந்து ஆட்டை அடித்து இழுத்து சென்று எங்கேயாவது போட்டு தின்றிருக்கலாம் என கந்தன் நினைத்தான்.

அதனால் ஒரு நாள் இரவு மறைந்திருந்து கவனித்தான்.அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆடு ஒன்றைக் கொன்று இழுத்துச் சென்றதை கவனித்தான்.

அடுத்த நாள் இரு வேட்டை நாய்களை வாங்கி இரவு காவல் காக்க வைத்தான்.ஆனால் அப்போதும் ஆடு காணாமல் போய்கொண்டிருந்தது.

முன்னர் செய்தது போல இம்முறையும் மறைந்திருந்து கவனித்தான்.

ஆனால் இம்முறை ஓநாய் வந்து ஆட்டை அடித்து இழுத்துச் சென்று...சாப்பிட்டுவிட்டு மிச்சம் கொஞ்சம் மாமிசத்தை வேட்டை நாய்களுக்கு கொடுத்ததை பார்த்தான்.

இதற்கு என்ன செய்வது என வருத்தத்துடன் இருந்தபோது..அடுத்த ஊரில் தன் சித்தப்பா..அவனைப்போலவே  பல ஆடுகளை வைத்து பராமரித்து வந்தது நினைவுக்கு வர ...அவரிடம் வந்து நடந்ததைக் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட சித்தப்பா..."காவலுக்காக நீ வைத்துள்ள வேட்டை நாய்கள் ஏன் உனக்கு எதிராக நடந்து கொள்கிறது என நீ யோசித்தாயா? நீ அவற்றுக்கு போடும் உணவு போதவில்லை.ஆகவே அவை தங்கள் பசியைப் போக்கிக் கொள்ள வழிதெரியாது ஓநாய்க்கு உதவி தங்கள் பசியை தீர்த்துக் கொண்டன.

நம்மிடம் நமக்காக வேலை செய்பவர்களுக்கு வயிறார சாப்பாடும் ..சம்பளமும்  கொடுக்கவேண்டும்.அப்பொழுதுதான் அவர்கள் நமக்கு உண்மையாக இருப்பார்கள் என்றர்.

அடுத்தநாள் கந்தன் வேட்டை நாய்களுக்கு தேவையான


உணவைக் கொடுக்க ..அவை ஓநாயை அங்கு மீண்டும் வராமல் ...தன் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தன.




Wednesday, October 14, 2020

ஆணவம்

 





 பல வண்ணங்கள் கொண்ட கிளி ஒன்றும் காகம் ஒன்றும் நட்புடன் இருந்தன.


ஆனாலும் கிளி அவ்வப்போது காக்கையை அதன் நிறத்தைச் சொல்லி கேலி செய்து வந்தது.


ஒருநாள், வேடன் ஒருவன் கையில் அக்கிளி சிக்கிக் கொண்டது.


அவன் அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதன் நாக்கை வழித்து வழித்து..மிளகாயினாலும்,பூண்டினாலும் வழித்து..தமிழில் பேசு..தமிழில் பேசு என துன்புறுத்திக் கொண்டிருந்தான்.


அதைக் கண்ட காகம் வருந்தியது.அப்போது வேடனின் மனைவி, சாத உருண்டை ஒன்றைக் கொண்டு வந்து வைத்து.."காகா..காகா" என இதைப் பார்த்துக் கூவினாள்.


காகம் ,கிளியைப் பார்த்துச் சொன்னது..


"பார்த்தியா..அவனது மொழியில் பேசச் சொல்லி அவன்  உன்னை துன்புறுத்துகிறான்.ஆனால், அவன் மனைவியோ என் பாஷையில் என்னைக் கூப்பிட்டு சோறு வைக்கிறாள்.காரணம் உனது அதீத அழகும், ஆணவமும்..சில நேரத்தில் அவை நமக்கே ஆபத்தாக அமையும்..என சொல்லி விட்டுப் பறந்தது.




Monday, March 30, 2020

32 - ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.
சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.
இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.