Sunday, May 7, 2017

இயேசு கூறிய கதைகள் 1- இரக்கமற்ற பணியாளன்



(இயேசுபிரான் தன் போதனைகளின் போது கூறிய உவமானக்கதை இது.
இயேசுவின் சீடரான பேதுரு,' தன் சகோதரர், சகோதரிகளில் ஒருவர் தனக்கு எதிராக பாவம் செய்தால்,எத்தனை முறை அவரை மன்னிக்கலாம்' என்று கேட்டபோது சொன்னது இது.பாவமன்னிப்பை  பற்றியது.)


அரசர் ஒருவர் தன் பணியாளர்களிடம்  கணக்குக் கேட்க விரும்பினார்

அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய போது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன் பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்

அவன், பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தான்.

ஆனால், அரசரோ, அவனையும், அவன் மனைவி மக்களோடு உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்

உடன், அப்பணியாள், அவர் காலடிகளில் பணிந்து , "என்னைப் பொருத்தருள வேண்டும்.விரைவில் கடனைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றான்

அவன் மீது பரிதாபம் கொண்டு மன்னன், அவனை விடுவித்ததுடன், அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்

அப்பணியாள் வெளியே சென்றதும், அவனிடம் நூறு தெனரியம் கடன் பட்டிருந்த உடன் பணி புரியும் பணியாளரைக் கண்டான்,"என் கடனைத் திருப்பித் தா" என அவனைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்

அந்த பணியாளனும், இவன் கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்கும் படியும், விரைவில் அவன் கடனை அடைத்து விடுவதாகவும் கூறினான்.

ஆனால் அவன் அதற்கு  இசையாமல் அவனை சிறையெடுத்தான்

இதைப் பார்த்த மற்ற பணியாளர்கள் அர்சனிடம் சென்று முறையிட்டனர்

அரசன், அவனை வரவழைத்தான். "பொல்லாதவனே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுவதையும் நான் தள்ளுபடி செய்தேன்.ஆனால், நீயோ..உன் பணியாளரிடம் சற்றும் இரக்கம் காட்டவில்லை.ஆகவே, உன் கடன் அனைத்தையும் அடைக்கும் வரை தண்டனையை அனுபவித்தேத் தீர வேண்டும் என அவனை தண்டித்தான்

(பிறர் நம்மிடம் இரக்கமும், அன்பும் காட்ட  வேண்டும் என நினைக்கும் நாமும், பிறரிடம் அன்பாயும், இரக்கத்துடனும் இருக்க வேண்டும்)

(தாலந்து,தெனரியம் என்பதெல்லாம் கிரேக்கச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும், இவை, கிரேக்கம், ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன் படுத்தப்பட்ட நாணய அலகாகும்) 

இலக்கிய பரிசு


  நான்  எழுதிய "மயிலும் கொக்கும்" என்ற சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் புத்தகத்திற்கு கவிதை உறவின் இலக்கியப் பரிசுகளில், சிறுவர் நூல்களுக்கான வகையில் முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்






Thursday, October 20, 2016

158. வியாபாரிக்கு தண்டனை

ஒரு வியாபாரி நெய்யில் கலப்படம் செய்து விற்று வந்தான்.மக்கள் புகார் அளித்தனர். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்டான்.

நீதிபதி வழங்கிய தண்டனை:

1.அவன் விற்கும் நெய் முழுவதும் அவனே குடிக்கவேண்டும்.
       அல்லது
2.100 கசையடி
       அல்லது
3. 100 பவுன் அபராதம்

இவற்றில் அவன் விருப்பமான தண்டனையை ஏற்கவும் என்றார் நீதிபதி.

முதலில் அவன் நெய் குடிக்கவே விரும்பினான்.ஆனால் நாற்றம் வீசும் நெய்யை அவனால் குடிக்க முடியவில்லை.

சரி என கசையடிக்கு தயார் என்றான். ஆனால் இருபது கசையடிக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை.

அதனால் அபராதம் செலுத்திவிட்டு போவதாக கூறினான் நீதிபதியும் ஒப்புக்கொள்ள அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்தான்.

முதலிலே அவன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அபராதத்துடன்  வெளியே வந்திருக்கலாம்.

நம்மில் பலரும் அப்படித்தான்.துன்பம் வரும்போது முதலிலே கடவுளை வேண்டி பயன்பெறாது....கடைசியில் இறைவனிடம் சரணடைகிறோம்.

ஆண்டவை என்றும் நம்புவோமாக.

Tuesday, June 14, 2016

157 -ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்

6  மனதை ஒருமுகப்படுத்து.

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்கத்தொடங்கினர்.

ஒரு நாள்....

அர்ச்சுனன் கையில் வில்லைக்கொடுத்து சற்றுத்தொலைவில் இருந்த பறவையை நோக்கி  அம்பு எய்தச்சொன்னார் துரோணர்.

' அர்ஜுனா...உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது பக்கத்திலுள்ள சகோதரர்கள் தெரிகிறார்களா?' என்றார்.

'இல்லை' என்றார் அர்ஜுனன்.

'நான் தெரிகிறேனா'

'இல்லை'

'மரத்தை பார்க்கிறாயா'

'இல்லை'

'மரத்தின் மீதுள்ள பறவையை பார்க்கிறாயா'

'இல்லை'

'வேறு என்ன பார்க்கிறாய்'

'பறவையின் கண்ணை மட்டும் பார்க்கிறேன்'

இப்படி செய்ததால் தான் பறவையின் மீது சரியாக அம்பெய்த முடிந்தது அர்ச்சுனனால்.

நாமும் நாம் அடைய எண்ணும் இலக்கை மட்டுமே பார்க்கவேண்டும்.மற்றவற்றை தவிர்த்திடவேண்டும். யார் தன் கண்ணையும் கருத்தையும் இலக்கில் வைக்கிறானோ அவனே வெற்றியடைவான்.

'


Thursday, June 2, 2016

156.ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்

5. ' பற்றற்றான் பற்று '


நடுத்தர வயது கணவன், மனைவி  அவர்கள்.
உலக வாழ்க்கையை வெறுத்து துறவு பூண்டனர். இறைவனை தரிசிக்கும் நோக்கத்துடன் பல புண்ணியத்தலங்களுக்கு சென்று வந்தனர்,

ஒரு நாள்,அவர்கள் நடந்து செல்லும்போது,மனைவி சற்று பின்னாக வந்து கொண்டிருந்தாள். முன்னால் சென்றுகொண்டிருந்த கணவனின் கால்களில்எதுவோ இடறியது.குனிந்து பார்த்தவன்  அது ஒரு வைரக்கல் என்பதை உணர்ந்தான்.அதைக்கண்டால் தன் மனைவிக்கு உலகப்பற்று ஏற்பட்டுவிடும் என்று ஐயம் கொண்டான்.ஆகவே,மனைவி வருவதற்கு முன்,அந்த வைரக்கல்லை  அவளது பார்வை படாது மறைக்க முயன்றான்.

ஆனால் மனைவிக்கு கணவன் எதையோ மறைக்க முயன்றது புரிந்துவிட்டது. அவனது மூடிய கையை பிரித்தாள்.அதில் வைரம் இருந்ததையும்,கணவன் மறைக்க முயன்ற நோக்கத்தையும் அறிந்தாள்.

கணவனைப் பார்த்து, ' வைரத்துக்கும், கூழாங்கல்லுக்கும் வேறுபாடு காண்பவன் எப்படித் துறவியாய் இருக்க முடியும்? என்று கேட்டாள்.

கணவன் வெட்கி தலை குனிந்தான்.ஆசை அதிகம் உள்ளவர்களுக்கு எல்லாவற்றிலும் விருப்பம்.ஆனால் இறைவன் மீது பற்று வைத்தவர்களோ,இறைவனை மட்டுமே மனதில் தேக்கிக் கொள்கிறார்கள்.மற்றவற்றின் மீதிருந்த நாட்டத்தை விடுகிறார்கள்.

Friday, April 8, 2016

155. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



4.' ஆண்டவன் மீது நம்பிக்கை "

ஆற்றுக்கு மறுகரையில் வசித்து வந்த சன்னியாசி ஒருவருக்கு தினந்தோறும் படகில் பால் கொண்டு வந்து தருவாள் ஒரு பெண்,

ஒரு சமயம் படகு வர தாமதமானதால் குறித்த நேரத்தில் பால் கொண்டு வந்து தர முடியவில்லை.

இதனால் கோபமடைந்த சன்னியாசி,தாமதத்திற்கான காரணத்தைக் கேட்க.அந்தப் பெண்ணும் படகு கிடைக்காததைக் கூறினாள்.

உடன் சன்னியாசி ' ஆண்டவன் பெயரைச் சொன்னால் பிறவிப் பெருங்கடலையே கடக்கலாம், உன்னால் இந்த ஆற்றைக்கூட கடக்க முடியவில்லையே' என்றார்.

சன்னியாசி சொன்னதைக்கேட்ட அந்தப் பெண்..... தினமும் ஆண்டவன் பெயரை உச்சரித்தபடியே ஆற்றினைக் கடந்து வந்து பால் எடுத்து சென்று கொண்டிருந்தாள்.

தினசரி சரியான நேரத்துக்கு அவள் வருவதைக் கண்ட சன்னியாசி ' நீ எப்படி ஆற்றைக் கடக்கிறாய் ' என்றார்,

பகவான் நாமத்தை உச்சரித்தப்படியே ஆற்றில் நடந்து வருவேன்  என்றாள்.

"அப்படியா" என ஆச்சரியத்துடன் கேட்டவர் அதை தனக்கு காண்பிக்குமாறு கூறினார்.

' பால்காரப்பெண் ஆண்டவன் பெயரை கூறியபடியே ஆற்றில் நடக்க ஆரம்பித்தாள்'.

வியந்த குருவால் ..அவளைப்போல ஆற்றில் நடக்க முடியவில்லை.தனது ஆடை நனைந்துவிடுமே என்ற பயம்.

ஆண்டவனை நம்புகிறவர் .... துணி நனையுமே என ஏன் பயப்படுகிறீர்கள் என்றாள் பெண்.

அப்பொழுதுதான் சன்னியாசிக்கு ஆண்டவன் மீது தான் முழு நம்பிக்கை வைக்கவில்லை எனத் தெரிந்தது.

ஆண்டவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை ஆச்சிரியங்களை செய்ய வைக்கும் என உணர்ந்தார்.

நாமும் கடவுளை வேண்டிக்கொண்டால் மட்டும் போதாது கடவுளிடம் முழு நம்பிக்கையை வைக்கவேண்டும்.

Sunday, March 20, 2016

154. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



3. இராமபிரானும், தவளையும்

இராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்.ஒரு நாள் தன் வில்லையும் அம்பையும் தரையில் நட்டுவிட்டுப் பம்பை என்னும் குளத்தில் நீர் பருகுவதற்காக இறங்கினார்.

நீரை அருந்திவிட்டு..மீண்டும் கரையேறி வந்து தனது அம்பையும் வில்லையும் எடுக்கும் சமயத்தில் தமது வில் ஒரு தவளையைத் துளைத்திருப்பதைக் கண்டார். தவளையின் உடல் முழுவதும் ரத்தம். இதைக் கண்ட ராமர் மனம் வருந்தி ...தவளையிடம்,

" ஏ தவளையே! நான் வில்லை வைக்கும் சமயம் நீ சப்தம் செய்திருந்தால்..... உன்னை நான் காப்பாற்றியிருப்பேனே! உனக்கு இந்த கதி வந்திருக்காதே!" என்றார்.

அதற்கு தவளை ," பெருமானே " எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்....உன்னை சரணடைவேன் ,,ஆனால் அந்த ஆபத்து உன்னாலேயே வந்தால் என்னால் என்ன செய்யமுடியும்? யாரிடம் முறையிடமுடியும்" என்றது..

இதனால் நாம் அறியும் நீதி என்ன வெனில் ..." நீதி வழங்குபவரே அநீதியை இழைத்தால்...நீதி கிடைக்க வேறு வழியில்லை...எனவே நீதிமான்கள் தவறு ஏதும் இழைக்கக்கூடாது என்பதாம்.