Tuesday, October 11, 2011

88. காரணமில்லாமல் ஏதும் படைப்பதில்லை (நீதிக்கதை)




ஒரு நாள் எலி ஒன்றைப் பூனை ஒன்று துரத்த ...தன் உயிரைக் காத்துக்கொள்ள எலி வேகமாக தன் வலைக்குள் புகுந்தது.எலியைக் காணாத பூனை திரும்பிச் சென்றது.வெளியே வந்த எலி நத்தை ஒன்று  மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தது.

நத்தையை கேலி செய்த எலி ....'நத்தையே உன் முதுகில் வீட்டை சுமந்து செல்கிறாயே ஏன்?நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன்.அதனால் ஆபத்திலிருந்து என்னால் தப்பிக்கமுடிகிறதுஆனால் அப்படி ஆகும்போது உன்னால் என்ன செய்ய முடியும் என்றது.

அதற்கு நத்தை ...'நீ உயிருக்கு பயந்து வேகமாக ஒடுகிறாய்..ஆனால் சமயத்தில் பூனையிடம் மாட்டிக்கொண்டால் உன் சாவு நிச்சயம்.ஆனால் நானோ....கூட்டை முதுகில் சுமந்து செல்வதால்...எப்போழுது ஆபத்து வந்தாலும் ...அந்த கூட்டுக்குள்ளையே பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வேன்..என்றது.

அப்போதுதான் எலிக்கு ஆண்டவன் காரணமில்லாமல் எதையும் படைப்பதில்லை என புரிந்தது.

Sunday, October 2, 2011

87. நரியின் புத்திசாலித்தனம் (நீதிக்கதை)




ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது.
அதனால் தனித்து அதற்கான உணவைத் தேடமுடியவில்லை.
அது தனக்கான உணவு தன்னை நாடி வர வேண்டும் என்பதற்காக ஒரு தந்திரம் செய்தது.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தியைப் பரப்பி..தன் குகையிலேயே இருந்தது.அதன் நலன் விசாரிக்க வரும் மிருகங்களை குகைக்குள்ளேயே அடித்துக் கொன்று உண்டு வந்தது.
ஒரு நாள் நரி ஒன்று சிங்கத்தின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க வந்தது.அது குகையின் வாயிலில் நின்று, 'சிங்க ராஜாவே! எப்படியிருக்கிறீர்கள்?" என வினவியது.
இந்த நரிதான் இன்றைய என் உணவு என்று தீர்மானித்த சிங்கம்,'நரியாரே!..என்னால் எழக் கூட முடியவில்லை..நீங்கள் குகைக்குள் வாருங்கள்' என்றது.
அதற்கு புத்திசாலியான நரி கூறியது,'சிங்க ராஜாவே! உங்கள் குகைக்குள் மிருகங்கள் வந்த தடயங்கள் தெரிகின்றது..ஆனால் அவை திரும்பிய தடயங்கள் இல்லை..அதனால் அம்மிருகங்களுக்கு என்ன ஆகியிருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.அதனால் நானும் உள்ளே வந்தால் திரும்ப முடியாது என உணர்கிறேன்'
இப்படிக் கூறிவிட்டு நரி அகன்றது.சிங்கம் தனது கெட்ட எண்ணம் நரியிடம் நடக்கவில்லையே என ஏமாந்தது.
இதற்கிடையே..நரியும் ,மற்ற மிருகங்களிடம் சென்று சிங்கத்தைப் பற்றி கூறி,'இனி யாரும் அதன் குகைக்குச் செல்ல வேண்டாம்' என்றது.

நம்மைச் சுற்றி நடைபெறுவதை உன்னிப்பாகக் கவனித்து...தீமைகளை உணர்ந்து, அதற்கேற்றார் போல புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டும்.

Friday, September 16, 2011

86. " கெடுவான் கேடு நினைப்பான்" (நீதிக்கதை)



ஒரு காட்டில் அரசன் ஒருவன் இருந்தான்.
அவன் நாட்டு மக்களிடம் கொடுமையாக நடந்து வந்தான்.
ஒரு நாள் அவன் வேட்டைக்கு காட்டிற்குப் போனான்.
அங்கு ஒரு நாய் நரி ஒன்றை துரத்தி ஒடியது.நரி அதனுடைய பொந்திற்குள் செல்வதற்குள் அதன் காலை நாய் கடித்து நரியை நொண்டியாக்கியது.

அதே நாய் ஊரில் ஒரு மனிதனைப் பார்த்து குரைக்க மனிதன் கல் எடுத்து அதன் மேல் எறிந்தான்,கல் நாயின் காலை தாக்கி அதை நொண்டியாக்கியது.
பின் அந்த மனிதன் ஒரு குதிரையில் ஏறி ஊருக்குச் சென்றான்.ஒரு பள்ளத்தில் குதிரை ஏறி இறங்கியபோது அந்த மனிதன் கீழே விழுந்து ...காலில் அடிபட்டு நொண்டியானான்.

இதையெல்லாம் பார்த்த அரசனுக்கு ...ஒருவருக்கு தீமை புரிந்தால் ..அவர்களுக்கு வேறொருவர் தீமை செய்வர் என்று புரிந்தது.

நாட்டிற்கு வந்த அவன் திருந்தி ....குடி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

நாமும் ஒருவருக்கு கேடு இழைத்தால்...நாளை நமக்கு ஒருவர் கேடிழைப்பர்..என்பதை உணரவேண்டும்.

Friday, September 9, 2011

85 'விட்டுக் கொடுக்கும் தன்மை' (நீதிக்கதை)




ஒரு காட்டின் நடுவில் ஒரு நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்ல நதியின் மேல் ஒரு குறுகிய பாலம் மட்டுமே இருந்தது.ஒருவர் போனால் ஒருவர் எதிரே வரமுடியாது அந்த அளவு குறுகிய பாலம்.
காட்டில் இருந்த விலங்குகள் இந்த பாலத்தைக் கடந்தே நதியைக் கடந்தன.
ஒரு நாள் இரண்டு நரிகள்.ஒவ்வொன்றும் வேறு வேறு முனையில் இருந்து நதியைக் கடக்க வந்தன.
ஒரு கட்டத்தில் இரண்டும் எதிர் எதிரே நின்று மற்றதை வழி விடச் சொன்னது.
மற்ற நரிக்கு ஒரு நரி வழி விடவேண்டுமென்றால் திரும்பி கிளம்பிய முனைக்கேச் செல்லவேண்டும்.
ஆதலால்...இரண்டு நரிகளும் அதற்கு இணங்காமல் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் போட்டி இட்டு...சண்டை செய்து ...நதியில் விழுந்து மடிந்தன.
இவற்றை அடுத்தடுத்த முனைகளில் இருந்த ஆடுகள் பார்த்தன.
ஆதலால்....ஒரு ஆடு குரல் கொடுத்து மற்ற முனையிலிருந்த ஆட்டை முதலில் கடந்து வரச்செய்தது.பின்னர் குரல் கொடுத்த ஆடு அடுத்த முனைக்கு கடந்து சென்றது.
ஒற்றுமை,விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் நரிகள் உயிர்விட்டன....ஆனால் அந்த தன்மைகள் இருந்ததால் ஆடுகள் உயிர் பிழைத்தன.

Monday, August 22, 2011

83-தெரியாததில் ஈடுபடக்கூடாது (நீதிக்கதை)




ஒரு அழகிய கிராமம்.அந்தக் கிராமத்திற்கு வெளியே பெரிய ஏரி ஒன்று இருந்தது.ஏரியின் கரைகளில் பழ மரங்கள்.அவற்றுள் குரங்குகள்..கிளைக்குக் கிளை தாவி பழங்களைப் பறித்துத் தின்று தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தன.
அக்குரங்குகளில் குட்டிக் குரங்கு ஒன்றும் இருந்தது.போவோர் வருவோர் ..என அனைத்து பேருடன் அதனுடைய சேட்டை அதிகமாக இருந்தது.

ஒருநாள் மீனவன் ஒருவன் ..அந்த ஏரிக்கு வந்து மீன் பிடிக்க வலையை வீசினான்.நிறைய மீன்கள் வலையில் சிக்கின.அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, வலை ஈரமாய் இருந்ததால்...கரையில் அதைக் காயப்போட்டுவிட்டுச் சென்றான்
.
அந்தக் குட்டிக் குரங்கு அவன் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் சென்றதும்..அவன் உலர்த்திச் சென்ற அவ்வலையின் மையத்தில் அமர்ந்துக் கொண்டு..வலையை எடுத்து ஏரியில் வீசப் பார்த்தது.
ஆனால் வலை இறுகி..அதன் மையத்தில் அமர்ந்துக் கொண்டிருந்த குரங்குக் குட்டி வலையில் வசமாக சிக்கிக் கொண்டது.பயத்தால் அலற ஆரம்பித்தது.மற்ற குரங்குகள் வந்து அதைக் காப்பாற்றப் பார்த்தன.ஆனால் அது நைலான் வலையானதால் அவற்றால் அதைக் கடிப்பது கூட சிரமமாய் இருந்தது.
அப்போது வலையை எடுத்துப் போக மீனவன் வந்தான்.குரங்கு மாட்டிக் கொண்டு அவதிப்படுவதைக் கண்டு வருந்தி அதை விடுவித்தான்.பின் குட்டியிடமும், மற்ற குரங்குகளிடமும்  'தெரியாத காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் அவதிப்பட நேரிடும்.எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும்..அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஈடுபட வேண்டும்.அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்' என்று அறிவுரைச் சொன்னான்.

Wednesday, August 17, 2011

82. சிங்கமும்,மானும்,முயலும்....(நீதிக்கதை)



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காததால் மிகவும் பசியுடன் இருந்தது.

அப்போது...அருகில் இருந்த புதர் ஒன்றில் முயல் ஒன்று தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தது.அதை பிடித்து உண்ணலாம் என்று நினைத்தபோது ....
சிறிது தூரத்தில் கொழுத்த மான் குட்டி மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
உடனே முயலை பிடிப்பதை விட்டுவிட்டு ...மான் குட்டியை பிடிக்க விரைந்தது.முயலும் முழித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தது.
சிங்கம் ஓடி வந்த சப்தத்தைக்க்கேட்டு மான்குட்டி விரைந்து ஓடியது.
நெடுந்தூரம் ஓடியும் மானை பிடிக்க முடியாத சிங்கம் முயலையாவது சாப்பிடலாம் என எண்ணித் திரும்பியது.
முயலோ...சிங்கம் திரும்பி வந்தால் தான் இறப்பது உறுதி என அறிந்து அங்கிருந்து ஓடிவிட்டிருந்தது.

முயலும் போய்...மானும் போய் சிங்கம் பசியால் தவித்தது.
"கைப்பிடியில் இருந்த முயலை விட்டுவிட்டு ...பேராசையால் தூரத்தில் இருக்கும் மானை நாடிச் சென்றதால்....உள்ளதும் பறிபோனது' என வருந்தியது சிங்கம்.

நாமும் நம் கையில் உள்ளதை வைத்து திருப்திக் கொள்ளவேண்டும். கிடைக்காததற்கு ஆசைப்படக்கூடாது.

Sunday, August 14, 2011

81. " ஆண்டவன் யார்.." (நீதிக்கதை)



ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு ஒரு நாள் கடவுள் என்பது யார்? அவரது ஆற்றல் எஎன்ன? என்ற சந்தேகம் எழுந்தது
அந்த சந்தேகத்தை தீர்க்க அவனது அமைச்சர்கள் யாராலும் முடியவில்லை.
அதனால் கோபம் அடைந்த அரசன்,தன் தலைமை அமைச்சரிடம் " என் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு... நாளை வரை அவகாசம் தருகிறேன்'
என்றான்.
தலைமை அமைச்சரும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார்.அவர் வருத்தத்தை அறிந்த அவரது பத்து வயது மகள் 'நான் நாளை வந்து அரசரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் ' என்றாள்.
அடுத்த நாள் அரச சபையில் அரசனிடம் அவள் ' அரசே ஒரு குடுவையில் பால் வேண்டும்' என்றாள்.
பால் கொண்டு வந்து தரப்பட்டது.
பால் கொண்டு வந்தவனைப் பார்த்து அவள்...'இந்தப் பாலின் நிறம் என்ன ' என்றாள்.
'வெள்ளை நிறம்'  என்றான் அவன்.
'இப்பாலைக் கறந்த மாடு என்ன நிறம்' என்றாள்.
'கருப்பு நிறம்'
'அந்த கருப்பு நிற மாடு எதைத் தின்று இந்த பாலைத் தந்தது'
'பசும் புல்லை'
இப்போது அவள் அரசரைப் பார்த்து ...'யார் பச்சைப் புல்லை கருப்பு மாட்டிற்குத் தந்து வெள்ளைப் பாலை உருவாக்குகிறாரோ அவர் தான் கடவுள்....
ஆண்டவன் விந்தையன செயல்கள் அனைத்தும் செய்யும் ஆற்றல் பெற்றவர்' என்றாள்..
அரசனும் மனம் மகிழ்ந்தான்.