Thursday, May 26, 2022

10. நம்பிக்கை

    10- நம்பிக்கை 






மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில்
முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம்
வேண்டும்.ஒரு சின்னக் கதை
இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால்
என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது
அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.
ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.
பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும்
அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க
ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத்
திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.
நம்பிக்கை இழக்காத தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி
பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.
பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.
பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.
நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும்
நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.




9.யானையும் பன்றியும்...

     9- யானையும்..பன்றியும் 




கோயில் யானை ஒன்று அந்த ஊரில் இருந்த நதி ஒன்றில் குளித்துவிட்டு ..நெற்றியில் திரு நீறு மணக்க சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு சிறிய பாலத்தை அது கடக்க முயன்றபோது ...அதன் எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது.

யானை பாலத்தின்  ஓரத்தில் ஒதுங்கி பன்றிக்கு வழிவிட்டது

அதைக்கண்ட பன்றி,,,தனக்கு பயந்து யானை வழி விட்டது என்று தன்னை பற்றி மி கவும் ஆணவம் கொண்டது,.

அத்துடன் நில்லாது ' யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது ' என்று ஊர் முழுவதும் சொல்லி விட்டது.

இதை கேட்ட மற்றொரு யானை ஒன்று கோயில் யானையிடம் சென்று, 'உண்மையிலே நீ பன்றியைப்பார்த்து பயந்து  விட்டாயா' என்று கேட்டது.

அதற்கு கோயில் யானை சொன்னது'நான் குளித்து சுத்தமாக இருந்தேன்,பன்றியின் சேறு என் மீதுவிழுந்துவிடக்கூடாதே என்று ஒதுங்கினேன்.'

'நான் பன்றியின் மீது ஏறி அதனை துவம்சம் பண்ண்யிருக்கலாம்.அதற்கு ஒரு நொடி கூட ஆகாது.ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும் 'என்றது.

ஆணவக்காரர்களைக்கண்டால் ஒதுங்கி விடவேண்டும் என  கேள்வி கேட்ட யானை உணர்ந்தது.

நாமும் ஆணவத்துடன் செயல் படக்கூடாது.அதே நேரம் ஆணவம் கொண்டவரிடம்  இருந்து விலகி விடவேண்டும்.

Sunday, May 22, 2022

8. ' முயன்றால் முடியாதது இல்லை'

8- முயன்றால் முடியாதது இல்லை


8-


 கந்தன் அனைத்துப் பாடங்களிலும்  எப்போதும் குறைந்த மதிப்பெண் பெற்று வந்தான்.

அந்த முறையும் அப்படித்தான்.

அதனால் அவனது அப்பா கோபித்துக்கொள்ள..அழுதுகொண்டே தன்  அறைக்குள் வந்து அமர்ந்தான்.

அப்போது அறையின் மூலையில் ஒரு சிலந்தி...வலை பின்னிக்கொண்டிருந்தது.அது அவனது கவனத்தை ஈர்க்க அதையே பார்த்துகொண்டிருந்தான்.

அது வட்டமாக சுவரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தன் எச்சிலால் வலை பின்னிக்கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் அறுந்தது. அதை சரி பண்ணிவிட்டு மேலும் தொடர்கையில் மற்றொரு முனை அறுந்தது.

இப்படி தொடர்ந்து அறுந்து கொண்டிருந்தாலும் தன் முயற்சியை விடாது அடுத்த 

அரை மணிநேரத்தில்  அது வலையை பின்னி முடித்து நடுவில் சென்று அமர்ந்தது.

அதை பார்த்ததும் மகிழ்ச்சியால் அவன் கை தட்டினான்.

அவன் பின்னால்..அவனுக்கே தெரியாமல் நின்றுகொண்டிருந்த அம்மா..'கந்தா..பார்த்தாயா..பல முறை வலைஅறுந்தும் ..தன்னால் முடியாது என்று விட்டுவிட்டு போகவில்லை சிலந்தி.நேரத்தை பற்றி கவலைப்படாமல் பல முறை முயன்று தன் வேலையை செவ்வனே முடித்துவிட்டது.அதற்கு காரணம் அதனுடைய விடாமுயற்சியே.கடவுள் ..அனைவருக்கும் மூளையை கொடுத்துள்ளான்..அதை சரியாக பயன்படுத்தி..விடாமல் முயன்று படித்தால் உன்னாலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கமுடியும்.

சிலந்தியின் விடாமுயற்சி உனக்கு ஒரு பாடமாக அமையும்' என்றாள்.

அடுத்து வந்த அனைத்து பாடங்களிலும் கந்தன் முதல் மதிப்பெண் பெற்றான் என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டுமா..என்ன?.



Friday, May 20, 2022

7 - அன்னமும்..காகமும்

7 - அன்னமும்...காகமும் -





அந்த ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரசமரம் இருந்தது.அதில்   அன்னம் ஒன்றும்...காக்கை ஒன்றும் நண்பர்களாக  வசித்து வந்தன.

ஒருநாள் கடும் வெயிலில்...வேடன் ஒருவன் களைப்புடன் அங்கு வந்து மர நிழலில்  தன் வில்..அம்பு  ஆகியவற்றை பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்து உறங்கினான்.

ஆனால்  சிறிது நேரத்தில் வெயில் ஏற.. வெயில்அவன் முகத்தில் விழுந்தது.

வாயைத்திறந்து கொண்டு அசதியில் தூங்கும் அவன் மீது வெயில் விழுவதைப்பார்த்து பரிதாபப் பட்ட அன்னம் தன் இறக்கைகளை நன்றாக விரித்து அவன் முகத்தில்  நிழல் விழுமாறு செய்தது.

அதேசமயம் பிறர் நலனை சற்றும் எண்ணாத குணம் கொண்ட காகம் அவனது திறந்த வாயில் எச்சத்தை விட்டு பறந்து சென்றது.

எழுந்து உட்கார்ந்த வேடன் ..தன் மேலே சிறகு விரித்துக் காணப்பட்ட அன்னம்தான் எச்சமிட்டுவிட்டது என எண்ணி ..சற்றும் சிந்திக்காது அம்பை எய்தி அதைக்கொன்றான்.

குணம் கெட்ட காகத்துடன் கூடா நட்பு கொண்டிருந்ததாலே அன்னம் உயிர் நீக்க நேர்ந்தது.

நாமும் நமது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

கூடா நட்பினை தவிர்க்கவேண்டும்.