Saturday, June 6, 2015

150- மூட நம்பிக்கை

                       

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர்.

அவர் ஒருநாள் தனது நண்பர் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் கரடி ஒன்றை வைத்துக் கொண்டு, அதன் முடி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்து கொண்டிருந்தால் பணக்காரராகிவிடலாம் என்று கரடியின் முடியை விற்று கொண்டிருந்தான்.

கரடியின் முடியை வாங்கக் கூட்டம் அலை மோதியது.அம்பேத்கரின் நண்பரும் முடியை வாங்கச்  சென்றார்.அவரை தடுத்து நிறுத்திய அம்பேத்கர், "நீ அந்த முடியை வாங்கினால் என்ன ஆவாய்?" என்றார்.

நண்பர், "நானும் பணக்காரனாக ஆவேன்" என்றார்.

உடன் அம்பேத்கர், :நீ கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரன் ஆவாய். சரி, நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் அந்த வியாபாரி அந்தக் கரடியையே வைத்திருக்கின்றானே...அவன் ஏன் பணக்காரன் ஆகாமல் இப்படித் தெருவில் அதன் முடியை விற்று பிழைத்துக் கொண்டிருக்கின்றான்?" என்றார்.

அப்போதுதான் நண்பரும் தான் அப்படி நினைத்தது மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தார்.

நாமும் , ஒருவர் சொல்வதைக் கெட்டு, அதைப் பற்றி சிந்திக்காமல் மூட நம்பிக்கையுடன் செயல் படக் கூடாது.நம் அறிவைப் பயன்படுத்தி அதற்கேற்ப நடக்க வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றார்.

(எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடமை ஆகும்.)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Kanchana Radhakrishnan said...

Thanks திண்டுக்கல் தனபாலன்

Mahesh said...

nalla kathai madam.